வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

கவியரசு கண்ணதாசன்...!


                   
                           

கவியரசு கண்ணதாசன்...!

          (மணவை ஜேம்ஸ்)

சாத்தப்பன் என்ற அழகப்பன்
சட்டையணியா விசாலாட்சியின்
கூ(ட்)டலில்
ஆழக்கடலில் தேடிய முத்து...
ஆசைச் சுகத்தில் தோன்றிய முத்து...
1927 சூன் 24 -இல்   தோன்றிய
முத்தையா எனும் கவிமுத்து!

எட்டாவது பிள்ளைக்கு-
எட்டாம் வகுப்புதான்
எட்டமுடிந்தது.


பெத்து எடுத்தவர்கள்
தத்து கொடுத்தார்கள்
22-ஆவது அகவையில்
பிள்ளைப்பேறு இல்லாத
தெய்வானை ஆச்சிக்கு
ஏழாயிரத்திற்கு...!

ஒருத்தி மகனாய் பிறந்து-
ஒருத்தி மகனாய் வளர்ந்த...
கண்ணனுக்குத் தாசனான
கண்ணதாசன்!.

‘கலங்காதிரு மனமே-நீ
கலங்காதிரு  மனமே-உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே ’
கன்னியின் காதலியில்
1948-இல் முதல் பாடல்
நூறு ரூபாய் சன்மானம்!.


அய்யாயிரத்திற்கும் மேல் பாடல்...
‘கண்ணே கலைமானே  ’
கடைசிப் பாடல்
‘மூன்றாம் பிறை’யில்...

பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல
கண்ணதாசன்  -  கருணாநிதி...
‘அபிமன்யு’ திரைப்படத்தை தொடர்ந்து
ஆறுநாள் பார்த்து
கலைஞரின் தமிழால்
அவர்மீது காதல்...
‘மருதநாட்டு இளவரசி’-யின் போது
சக்ரபாணி கலைஞரிடன்
‘இவர்தான் உங்கள் காதலி’
அறிமுகப்படுத்தினார்.

பாசமாக-
பசுமையாக நட்பு வளர்ந்தது...
ஒருவரை ஒருவர்
ஒருநாள் பார்க்கவில்லையென்றால்-ஏதோ
ஒன்றைப் பறிகொடுத்தது போல...
ஓகோ... இதுதான்-
ஓரினச்சேர்க்கையோ?
ஆமார்...
தமிழின்பால் ஓரினச்சேர்க்கை!
தமிழினம் என்ற ஓரினச்சேர்க்கை!.

இவர்களுக்குத்தான்
எத்தனை ஒற்றுமை...?
முதலெழுத்து ‘க’ தான்
கண்ணதாசன் - கருணாநிதி


ஒரே காலத்தில் எழுதத்தொடங்கியது...
கல்லக்குடியில் போராடியது...
கவிஞருக்கு மூன்று மனைவிகள்
பார்வதி - பொன்னம்மை - வள்ளியம்மை
கலைஞருக்கு மூன்று மனைவிகள்
பத்மா - தயாளு - இராஜாத்தி.
இருவரும் இணைந்தே
பல இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்...!
பலான இடத்திற்கும் சென்றிருக்கிறார்கள்...!

1949-இல் பொள்ளாச்சியில்
திராவிட இயக்க மேடையில்
‘கவிஞர்’ என்ற பட்டத்தை
கலைஞர் கொடுத்தார்.
அப்பொழுது எழுதியிருந்தது...
அய்ந்தே பாடல்தான்!

கலைஞரிடம் முரண்பட்ட பொழுது-
‘தென்றலாக வீசியவன் நீ - என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ - அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!  ’
-என்றார் கலைஞர்.

காங்கிரஸ் உணர்வில்-
கலந்திருந்த பொழுது ஆத்திகர்...
தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட பொழுது
தன்னை இணைத்து... நாத்திகர்...!
மீண்டும் ஆத்திகர்...!

                                                                 
மாறி மாறி யோசித்து
மாற்றி மாற்றி யோசித்து-
பாட்டில் வாழ்ந்தார்...
பாட்டிலில் வாழ்ந்தார்!


காமராசரை கவிஞர் நேரில் ‘அய்யா’
பிறரிடம் பேசும் போது ‘பெரியவர்’ என்பார்...
தாயாக - தந்தையாக - தெய்வமாகப் பார்த்தார்
காமராசரை..

‘காட்டுக்கு ராஜா சிங்கம்
பாட்டுக்கு  ராஜா கண்ணதாசன்’
-என்றார் காமராசர்.

காமராசரின் வாழ்க்கையை...
படமாக எடுத்தார்...
படம் பாதியிலே நின்றது...!


உங்கள் பெயரை
‘காமதாசன்’ மாற்றலாமா?
என்றார் ஒருவர்...
நல்லது....இடையில் ‘ராஜா’
என்ற வார்த்தையும்
சேர்த்துக் கொள்ளுங்கள்...
‘காமராஜதாசன்’ என்றார்.

‘காமராசர் வீடு-
நிமிர்ந்தால் தரையிடிக்கும்...
நிற்பதற்கே இடமிருக்கும்...
ஆண்டி கையில் ஓடு இருக்கும்
அதுவும் உனக்கில்லையே’
-என்றார் கவிஞர்.


எம்.ஜி.ஆர். அவர்கள்...
கவி அரசை-                                                              
அரசு கவியாக்கினார்...                                                
‘யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் சரியாசனம்...’
‘கடலளவு கிடைத்தாலும்
மயங்கமாட்டேன்- அது
கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்’

பதினாறும் பெற்று அல்ல...
அவற்றில் ஒன்று குறைவாக
பதினைந்து மக்களைப் பெற்ற மகராசன்.

‘கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றிய செந்தீயே - நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு! ’
1969-இல் தன் இறப்பிற்கு...
தானே எழுதிய இரங்கற்பா...
1981 அக்டோபர் 17 இல்
அந்தக் குயில் பாட்டு பாடப்பட்டது.


எப்படி கவிஞன் வாழ வேண்டும்...
எப்படி மனிதன் வாழக்கூடாது...
என்பதற்கு இவனே
எடுத்துக்காட்டு...!
                                                                       
உன் பாடலைக் கேட்காமல்                  
ஒரு பொழுதும் விடியாது...!
ஒரு பொழுதும் முடியாது...!


                                                                                           -மாறாத அன்புடன்,
                                                                               
                                                                                             மணவை ஜேம்ஸ்.
                                                         
                                                                               


                                                                                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...