திங்கள், 15 ஆகஸ்ட், 2016

நா.முத்துக்குமார் மரணத்திற்கு முன் தன் மகனுக்கு எழுதிய கடிதம்!

அஞ்சலி

நா.முத்துக்குமார் 

மரணத்திற்கு முன் தன் மகனுக்கு 
எழுதிய கடிதம்!


   

அன்புள்ள மகனுக்கு,
அப்பா எழுதுவது......,
இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம்.

இதைப் படித்துப் புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை.

மொழியின் விரல் பிடித்து
நடக்கப் பழகிக் கொண்டு இருக்கிறாய்….

வயதின் பேராற்றாங்கரை
உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும்.
சிறகு முளைத்த தேவதைகள்
உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள்.
பெண் உடல் புதிராகும்.

என்தகப்பன்
என்னிடமிருந்து ஒளித்து வைத்த
ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை
நான் தேட முற்பட்டதைப் போல
நீயும் தேடத் தொடங்குவாய்.

பத்திரமாகவும் பக்குவமாகவும்
இருக்க வேண்டிய பருவம் அது. 
உனக்குத் தெரியாதது இல்லை. 
பார்த்து நடந்து கொள்.

நிறைய பயணப்படு.
பயணங்களின் ஜன்னல்களே
முதுகுக்குப் பின்னாலும்
இரண்டு கண்களைத் திறக்கின்றன.

புத்தகங்களை நேசி.  
ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது
நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். 
உன் பாட்டனும் தகப்பனும்
புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள்.
உன் உதிரத்திலும்
அந்தக் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையை விட
பிடித்த வேலையைச் செய்.  
இனிய இல்லறம் தொடங்கு.

யாராவது கேட்டால்
இல்லை எனினும்
கடன் வாங்கியாவது உதவி செய்.
அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

உறவுகளிடம்
நெருங்கியும் இரு. 
விலகியும் இரு.  
இந்த உலகில்
எல்லா உறவுகளையும்விட மேன்மையானது
நட்பு மட்டுமே.  
நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள்.
உன் வாழ்க்கை நேராகும்.

இவையெல்லாம்
என் தகப்பன்
எனக்குச் சொல்லாமல் சொன்னவை.
நான் உனக்குச் சொல்ல நினைத்துச் சொல்பவை.

என் சந்தோஷமே
நீ பிறந்த பிறகுதான்.
என் தகப்பனின் அன்பையும் அருமையையும்
நான் அடிக்கடி உணர்கிறேன். 
நாளை உனக்கொரு மகன் பிறக்கையில்
என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை
நீ உன் பேரன் பேத்திகளுடன்
ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி
விளையாடிக்கொண்டு இருக்கையில்
என் ஞாபகம் வந்தால், 

இந்தக் கடிதத்தை எடுத்துப்படித்துப்பார்.

உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில்
வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.இப்படிக்கு,

உன் அப்பா

நா.முத்துக்குமார்


****************************************************************************************************************************************************


                                பட்டாம்பூச்சி விற்றவன்!


பாடலாசிரியர் என்கிற நிழல் விழுவதற்கு முன்பே கவிஞராக கண்டறியப்பட்டவர் நா.முத்துக்குமார்.
41 வயதுதான் ஆகிறது நா.முத்துக் குமாருக்கு. அதற்குள் இயற்கை மடித்து வைத்துக்கொண்டுவிட்டது. ‘மெய் என்று மேனியை யார் சொன்னது?’ என்று கவிஞர் வாலி பாடியதுதான் ஞாபகத்தில் மின்னி மறைகிறது.

1989-ல் நா.முத்துக்குமாரின் ‘உறுத்தல்’ என்கிற முதல் கவிதை ஏர்வாடி ராதா கிருஷ்ணன் நடத்திவரும் ‘கவிதை உறவு’ இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து இவரது ‘தூர்’ என்கிற கவிதையை எழுத்தாளர் சுஜாதா ஒரு மேடையில் சிலாகித்துப் பேச, அந்தத் தேன் தேதியில் இருந்து நா.முத்துக்குமாரின் மீது பலரது கவனம் குவியத் தொடங்கியது.

கல்லூரியில் இவர் படித்ததென்னவோ இயற்பியல்தான். ஆனால் நிமிடந்தோறும் இலக்கியம் நுகர்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்’ என்று உரக்கச் சொல்லி பல மேடைகளில் உலா வந்தவர்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோருடனும் சிநேகிதம் போற்றியவர். வயதுக்கு ஏற்றவாறு அண்ணன் என்றோ, தம்பி என்றோ முறை கொண்டாடியவர். நல்ல இன்பன்!
‘நியூட்டனின் மூன்றாம் விதி’, ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ ஆகிய இவரது ஆரம்பகால கவிதைத் தொகுப்புகள் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் பாராட்டுப் பெற்ற படைப்புகள். இதைத் தொடர்ந்து ‘கிராமம் நகரம் மாநகரம்’, ‘ஆனா ஆவன்னா’, ‘பாலகாண்டம்’, ‘அணிலாடும் முன்றில்’, ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’, ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ போன்ற அத்தனைத் தொகுப்புகளும் தமிழுக்கு புதிய வெளிச்சங்களை வழங்கின.

இலக்கியச் சிறகணிந்து திரைவானில் பறந்து திரிந்த தனிப் பறவையாகவே நா.முத்துக்குமார் திகழ்ந்தார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் திரையிசை உலகில் அதிகம் பாடல் எழுதும் பாடலாசிரியராகவே இருந்தார். 1,500 திரைப் பாடல்களுக்கு மேல் எழுதிய இவர், ‘தங்கமீன்கள்’, ‘சைவம்’ ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர்.

நா.முத்துக்குமாரின் பாடல்கள் தனித்த அடையாளமாகத் தெரிய முதல் காரணம், அவரது பாடல்கள் புதுக்கவிதையை உள்வாங்கிக்கொண்டு மிளிர்வதுதான்.

‘கஜினி’ படத்தில் இவர் எழுதிய
‘மழை அழகா
வெயில் அழகா
நீ கொஞ்சும்போது மழை அழகு
நீ கோபப்பட்டால் வெயில் அழகு’
- என்ற வரிகள் பழைய தம்பதிகளைக்கூட குல்மொஹர் மரத்துக்கு கீழே காதலர் களாக்கியது.

‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தில் இடம்பெற்ற பாடலில்
‘மரங்களின்
நிழலும்
உன்னைக் கேட்கும்
எப்படி சொல்வேன்’
என்கிற முத்துவரிகளை கேட்கிறபொழு தெல்லாம் மழை வந்து குடை கேட்குமே!

‘சைவம்’ படத்தில் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடும்
‘அழகே அழகே எதுவும் அழகே
மலர் மட்டுமா அழகு
விழும் இலைகூட ஒரு அழகு’
- என்கிற மல்லிகை வரிகள் தென்றலை அழைத்துக் கொண்டு நம் நெஞ்சுக்குள் நுழையும்.

‘சூரியனோ சந்திரனோ’ என்று கோரஸில் ஆரம்பிக்கும் ‘பல்லேலக்கா பல்லேலக்கா’ பாடலில்...
‘கிராமத்துக் குடிசையிலே
கொஞ்சம் காலம் தங்கிப் பாருலே...
கூரை ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே...
ஆலமரத்துக்கு ஜடை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊர் ஓரம் அய்யனாரிடம்
கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே’
- என்கிற வரிகளில் தமிழும், நா.முத்துக் குமாரும் என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்!

ஓவியம்: ஆர்.ராஜேஷ்
‘காதலித்து கெட்டு போ
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனானாலும் நகர்ந்து செல்’
* * *

‘இவர் பேரு புத்தர்
இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்’
என்றேன் மகனிடம்.
கோபமாக சொன்னான்
‘அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!’
* * *

அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்குகின்றன!
- இதுபோன்ற கவிதைகளை நா.முத்துக்குமாரின் நேற்றைய அடை யாளங்களாகச் சொல்லலாம்.

                                                 நன்றி: மானா பாஸ்கரன். தி இந்து 15.08.2016.

                                             

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ - தங்கமீன்கள் 

                     ந      
அழகே அழகே - சைவம்

‘அழகே அழகே’-சைவம் 
  ம-ம
-


-மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ்.
Related Posts Plugin for WordPress, Blogger...