புதன், 9 மார்ச், 2022

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 5

 



பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 5




மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்??


தமிழ் எழுத்துகளில் -


ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!


மூனுசுழி "ண" என்பதும் தவறு!


"ண" இதன் பெயர் "டண்ணகரம்",


"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.


மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு"டண்ணகரம்" னு பேரு.


தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர'ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும்.

இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு.


இது ரெண்டும் என்றுமே மாறி வராது..


இதுல கூட பாருங்களேன்…

பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாதல்லவா…??


வேற மாதிரி சொன்னா


இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!


வர்க்க எழுத்து-ன்னா,


சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.


இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்") 

இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்


எழுத்துப் பிழையும் குறையும்.


எப்படி???


மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...


பக்கத்துல ட இருக்கா,


அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.


ஏன்னா அது "டண்ணகரம்".


கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...


பக்கத்துல 'ற' இருக்கா


அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.


ஏன்னா அது "றன்னகரம்".


இதே மாதிரிதான் 

"ந' கரம்" என்பதை,"தந்நகரம்" னு சொல்லனும்.


ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து


வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. 

(பந்து, வெந்தயம், மந்தை…)




தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.


தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.

இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். 



உதாரணமாக-


க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – 

எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!


இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.


உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்


இதை எல்லாரும் படித்திருப்போம்-


வல்லின எழுத்துகள் –

க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)


மெல்லின எழுத்துகள்–

ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)


இடையினஎழுத்துகள்–

ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)

இதுவும் தெரிஞ்சதுதான்.


எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

வல்லினம்  மெல்லினம்   இடையினம்

                            ங

                            ஞ

                            ண

                            ந

                            ம

                                                                    ய

                                                                    ர

                                                                    ல

                                                                    வ

                                                                    ழ

                                                                    ள

                ன



   கசடதபற ஙஞணநமன யரலவழள –

18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் "கஙசஞடண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.


சொற்களில், மெல்லினத்தை அடுத்து


வல்லின எழுத்துகள் வரும்.


(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)


க ங – எங்கே – ங் க


ச ஞ – மஞ்சள் – ஞ் ச


ட ண – துண்டு – ண் ட


த ந - வந்தது – ந் த


ப ம – பம்பரம் – ம் ப


இடையின ஆறெழுத்தும் 

அவற்றின் பெயருக்கேற்ப 

(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 

மென்மையாகவும் இன்றி இடையினமாக) 

செருகப்பட்டு, கடைசியாக


ற ன – சென்றது – ன் ற


அவ்வளவு தாங்க...



இதே மாதிரித்தான் -


சின்ன "ர" என்பதும் தவறு!


பெரிய "ற" என்பதும் தவறு!


ர - இதனை, இடையின 'ரகரம்' என்பதே சரியானது


- மரம், கரம், உரம்


ற - இதனை வல்லின 'றகரம்' என்பதுதான் சரி.


- மறம், அறம், முறம்


இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய 'ற" வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய 'ர" வருது!


வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்


இடையில வருவது இடையினம்.



இதுல வல்லின ஒற்றெழுத்துகள் ரெண்டும் எந்தத் தமிழ்ச் சொல்லிலும்  சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

 'முயற்சி'தான் !



-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...