புதன், 8 ஆகஸ்ட், 2018

ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!
நெஞ்சம் நிறைந்த தலைவா…! ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!கலைத்தாய் ஈன்றெடுத்த 
கலைஞரே!
தட்சிணாமூர்த்தி முன்னிலை…
தட்சிணாமூர்த்தி முன் இலையே…!
ஆமாம்… மு. கருணாநிதி என்கிற
தட்சிணாமூர்த்தி முன் இ(ல்)லையே…!
உன் கீர்த்தியை ஒரு –
குவளைக்குள்ளா அடக்க முடியும்?… திருக்
குவளையில் உதயமான சூரியனே…!
குவலயம் முழுக்க அல்லவா
உனது புகழ் பரந்து விரிந்தது!

சுடரொளித் தலைவரே! – உன்
சுடரொளியால்தான் தமிழ்த்தாய்ச்
செம்மொழியாய்ப் புன்னகைக்கிறாள்…! 

அய்யாவின் பகுத்தறிவால்
‘பெரியார் சமத்துவபுரம்’ கண்டாய்…!
அண்ணாவின் பட்டறிவால்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண
அனைவரையும் அர்ச்சகராக ஆக்கினாய்…!

அய்யா துரையின் குருகுல
‘மாணவ நேசனே…!’
‘இளமைப் பலி’ கொடுத்து
‘முரசொலி’த்த முத்துவேலரின்
‘நெஞ்சுக்கு நீதி’யே…! – எங்கள்
நெஞ்சமெல்லாம் நிறைந்தவரே!

அஞ்சுகத்தின் அருந்தவப் புதல்வா…
‘பராசக்தி’யைப் படைத்து
திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த
உன்னை ‘மறக்க முடியுமா…?’

‘குறளோவியம்’ வரைந்து
குறளனைத்திற்கும்  உரையெழுதிச்
‘சங்கத் தமிழ்’ தந்தவரே!
குமரிக்கடலில் –
அய்யன் வள்ளுவனுக்கு
133 அடியில் சிலைவைத்த
உலக அதிசயமே!
சென்னையில் வள்ளுவர் கோட்டம் கண்டு
1330 குறளையும் கல்வெட்டாக்கி
வான்புகழ் கொண்ட ஆண்டவனே…!
எங்களை-
அய்ந்துமுறை ஆண்டவனே…!
எங்கள் காலத்தில் வாழ்ந்த வள்ளுவன்…!
என்றும் வள்ளுவனை வாழவைத்த
வள்ளல் பெருமகனும் நீயே…!

‘தொல்காப்பியப் பூங்கா’ வில்
இலக்கணத்தேன் குடிக்க வைத்த
தமிழ்ப்பூவே…! – எங்கள் கோவே…!

‘மானமுள்ள சுயமரியாதைக்காரனே!’
தமிழன் மானமுடன் வாழ
வழிகாட்டிய கைகாட்டியே…!
‘பெண்களுக்குச் சொத்தில் பங்குண்டு’-என்று
பெண்ணினத்தையே பெருமையுடன்
வாழவைத்த பெருமைக்குரியவனே…!

ஊனமுற்றவனை ’மாற்றுத்திறனாளி’ யென்றும்
அரவாணியை ‘திருநங்கை’ யென்றும்
பொட்டில்லா விதவையை
ஒரு பொட்டல்ல  இரண்டாம் பொட்டையும்
‘கைம்பெண்’ யென்றால் வைக்கலாமென்றே
கருணையோடு கண்ணித்தமிழில்
அழைத்து அழகுபார்த்த அற்புதமே!

கலைத்தாய் ஈன்றெடுத்த 
கலைஞரே!
95-ஆம் வயதில்-
உன் சரித்திர சாதனைகளின்
உயரத்தை யாராலும் தொடமுடியாது...!

7- 8 – 2018 அன்று
உயரச் சென்ற இதயசூரியனே…!
தமிழன்னை கண்கள் நெருப்பாய்…
கடலன்னையின் மடியில் பொறுப்பாய்…
அண்ணனின் காலடியில் இருப்பாய்
உனது விருப்பாய் சிறப்பாய் - என
எண்ணிய பொழுது…
ஆளும் அரசு இடம்தர மறுப்பால்
உடன்பிறப்பெல்லாம் துடித்த துடிப்பால்
உதிரமெல்லாம் கொதித்த கொதிப்பால்
ஆழிசூழ் அகிலமும் ஆர்ப்ரித்து அழுதது…!
நீ-
தமிழினம் வாழ
இடஒதுக்கீடு தந்தாயே!
இறந்த பிறகு உனக்கா
அண்ணாவிற்கருகில் இடமில்லை?


கோடான கோடித் தமிழர்களின்
இதய சிம்மாசனத்தில்
இடம் பிடித்த உனக்கா
அண்ணாவிற்கருகில் இடமில்லை?

அண்ணாவின் பெயரைச்சொல்லி…
பெயரளவில் ஆட்சிநடத்தும்
ஆட்சியாளருக்கு வேண்டுமானால்
இதயம் இல்லாமல் இருக்கலாம்…
இதிலொன்றும் ஆச்சரியம் இல்லை…!

உன் தளபதி-
கடமையாற்றக் கண்ணியம் காத்துக்
கட்டுப்பாட்டுடன் பொறுமையும் காத்து
நீதிமன்றம் சென்று பெருமை சேர்த்தார்.

‘தந்தை பெற்ற கடன்
பிள்ளையைச் சேரும்…’
இடைப்பட்ட தடையை உடைத்து
நீ பட்ட கடனைப்
நின் பிள்ளை அடைத்து விட்டார்.

நீதிக்குத் தலைவணங்கும்
கருணையின் நிதியே!
உனக்கு-
நீதியே தலைவணங்கி
நித்திரை கொள்ள
நியாயம் வழங்கியிருக்கிறது.

அண்ணாவின்-
இதயத்தை இரவலாகப் பெற்று
‘நான் வரும்போது உன் காலடியில் வைப்பேன்’ - என்று
வாக்கு கொடுத்தாயே…!
உன் வாக்குப் பொய்க்குமோ…?

ஓய்வில்லாச் சூரியனே!
தமிழினத்திற்காக-
ஓய்வில்லாமல் உழைத்தது போதும்…
தலைவா ஓய்வெடு…!

நீ விட்டுச் சென்ற பணியை
நீ விட்டுச் சென்ற…
உன் தளபதி- இனி
தலைவராய்த் தொய்வின்றித் தொடரட்டும்…!
ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!
                                                 -மாறாத அன்புடன்,
                                                    மணவை ஜேம்ஸ்.Related Posts Plugin for WordPress, Blogger...