புதன், 30 செப்டம்பர், 2015

கணினியில் தமிழ் வளர்ச்சி

இணையத் தமிழை எளிதாக்குவோம்!

கணினி:
               மனிதனின் மூளையால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி,  மூளையையும் விஞ்சி விட்டது.  1983 ஆம் ஆண்டு்த்  தமிழ்க் கணினி வல்லுநர்கள் ,  தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.  “தேமதுரத் தமிழோசை  உலகமெலாம் பரவும் வகை  செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை   இன்று ‘கணினி’  நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்றால்  அது  மிகையில்லை.
தமிழில் மென்பொருள்:
                சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்,  கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி  கிடையாது.     தமிழ் எழுத்துருக்கவிசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை.  தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து,  அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது
               1984ஆம் ஆண்டு   கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் தமிழில் முதலில் மென்பொருட்களில்  ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) உருவாக்கப்பட்டது.  இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக ‘ஆதவின்’ என்ற மென்பொருளும் MS  Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாகப்  பின்னாளில் உருவாக்கம் பெற்றது.தமிழ்த் தட்டச்சுப்பலகை:
               தமிழ் எழுத்துகளை ஒருங்குறிமுறையில் கணினியில் என்.எச்.எம்., அழகி போன்ற மென்பொருள்களின்  வழி தட்டச்சு  செய்தாலும்,  தட்டச்சுப் பலகை வடிவமைக்கப்பட்டு  பயன்பாட்டுக்குக்  கொண்டு வரவேண்டும்.  தமிழில் தட்டச்சு செய்வோர் தமிழ்த் தட்டச்சு முறையிலோ,   தமிங்கில முறையிலோ, ஆங்கில முறையிலோ தம் கருத்துகளை வெளியிடுகின்றனர்.  அதற்கேற்ப அரசே தமிழ்த் தட்டச்சுப் பலகைகள் வெளியிட ஆவண செய்ய வேண்டும்.
இணையம்:
                   1990 ஆம் ஆண்டுகளில் இணைய யுகம் (Internet era)  இணையத்தில், வைய விரி வலை (world wide web)  தளங்கள் உருவாகி வலைக் கணினிகள் அபிவிருத்தி அடைந்து ‘ஆகா எழுந்தது பார் யுகப்புரட்சி’ என்றானே பாரதி அதுபோல இணைய யுகப் புரட்சிக்கு  வித்திட்டது.
இணையத் தமிழ் முன்னோடி:
                  1995 ஆம் ஆண்டுச் சிங்கப்பூரைச் சேர்ந்த திருவாளர்  நா.கோவிந்தசாமி அவர்களுக்குத்தான்  முதலில் தமிழை இணையத்தில் ஏற்றி வைத்த பெருமை   சேரும்.
தமிழில் வலைப்பூக்கள்:
                    2000 ஆண்டுத் தொடக்கத்தில் வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன.  ஒருங்குறி குறியேற்றம் (யூனிகோட் என்கோடிங்)  பன்னாட்டுக் கணினி நிறுவனங்களின் வணிக முயற்சிகளினால் அறிமுகப்படுத்தப்பட்டன.  தமிழுக்குத் தனியே ஒருங்குறிக் குறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன.  தமிழ் விக்கிபீடியா, இணையதளங்கள், வலைப்பூக்கள் இவையெல்லாம் வரவேற்கத்தக்க தமிழ்ப்பணிகள் என்றாலும் கணினித்தமிழ் வளர்ச்சியின் முதல்கட்டமே ஆகும்.
கணினியில்  தமிழில் பிழை  ஏற்படுதல்:
                கணினியில் தமிழில் எழுதுவோர் தங்களை அறியாமலே அல்லது தெரியாமலே சில பிழைகளைச் செய்வது இயல்பே.  ஆங்கிலத்தில் எழுதும்போது பிழை வரின் அடியில் சிவப்புக் கோடிட்டுக் காட்டித்  திருத்தம் செய்து கொள்ள வழிகாட்டும் சொற்களையும் காட்டும் பதிவு  Microsoft word-இல் உள்ளது.  இது போன்று  தமிழில் பிழை திருத்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தமிழர்களிடம் நெடுங்காலமாக இருக்கிறது.
                தமிழ்திருத்தியை  உருவாக்கப்  பலர் முயற்சி செய்தாலும் சிலர்தான் ஓரளவு வெற்றி கண்டனர்.  உழைப்புக்கேற்ற ஊதியத்தை எதிர்பார்த்து அவர்கள் அதனை விற்பனை செய்கின்றனர்.
நீச்சல்காரன்’ என்கிற ராஜாராமன்:                  
          ராஜாராமன் தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இவருக்கு வயது இருபத்தியெட்டு.   ‘.நாவி’ என்னும்  தமிழ்ச் சந்திப் பிழை திருத்தியை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் இலவசமாக வெளியிட்டார்;  சமீபத்தில் வாணி என்னும் தமிழ் எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்கியிருக்கிறார்.  இது வார்த்தைகளைத் திருத்துவதற்காகவும் மேலும்  இது முந்நூறுக்கு மேற்பட்ட பிறமொழிச் சொற்களைகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். அந்தப் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் இந்தத் திருத்தி பரிந்துரைக்கின்றன.   இந்தியாவில் இருக்கும் எல்லா மொழிகளின் வரிவடிங்களையும் (Scripts) தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கி வருகிறார்.  
தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கலாம்: 
        பிற மொழியில் நடைமுறையில் எழுதப்படும் வாக்கியத்தைக் கணினியில் பதிவு செய்தால், அஃது அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது.  இந்தியாவில் இந்தி உட்பட பல மொழிகளின் மொழிபெயர்ப்புக்குக் கணினியை ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுத்தி விட்டனர்.  ஆனால், தமிழ் மொழியில் நாம் எழுகிற தமிழை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் நிலை இப்போது இல்லை.
தமிழைக் கணினி மொழிபெயர்க்கும்:
              சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் திரு.ந.தெய்வசுந்தரம்,  நாம் எழுகிற தமிழைக் கணினி தானாகவே மொழி பெயர்க்கும் திறன் கொண்ட மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
சென்னை மாணவி உமாதேவி:                 
              நாம் எழுதிகிற தமிழை அப்படியே பொருள் மாறாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது குறித்து இலக்கண அடிப்படையில் மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து, இதற்காக சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ் வாக்கியத்தை அப்படியே இலக்கணப் பிழையில்லாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பயன்படும் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டும்.  அதைக் கணினியில் சாத்தியமாக்க வேண்டும் என்பதே  இவரின் வாழ்நாள் இலட்சியம்.
தமிழில் இலக்கணச் சொற்கள்:
               தமிழில் இலக்கணச் சொற்கள் ஏராளமாக இணைக்கப்படுகிறது.  ஆங்கிலத்தில் அவ்வாறு இல்லை.  ‘Write’ என்ற வார்த்தைக்கு write, writes, wrote, written, writing, to write ஆகிய 6 வடிவங்கள்தான் இருக்கின்றன.  ஆனால், ‘எழுது’ என்ற தமிழ் வேர்ச் சொல்லுக்கு எழுத வேண்டும், எழுதியிருக்கலாம், எழுதியாக வேண்டும் என்பன போன்ற சுமார் 8 ஆயிரம் வடிவங்கள் இருக்கின்றன.  எனது ஆய்வுக் கட்டுரையில் 400-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கணச் சொற்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.
             மேலும் தமிழ் - ஆங்கிலம் அகராதியில் இலக்கணச் சொற்கள் சேராத தமிழ் அடிச்சொல்லுக்கு மட்டுமே இணையான ஆங்கிலச் சொல் - மொழிபெயர்ப்பு இருக்கும்.  உதாரணத்துக்கு ‘சொல்’ என்ற வார்த்தையை அகராதியில் பார்த்தால் ‘tell’ என்ற மொழிபெயர்ப்பு இருக்கும்.  ஆனால், நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிற இலக்கணச் சொற்கள் சேர்ந்த தமிழ்ச்சொல்லுக்கு மொழிபெயர்ப்பு இருக்காது.  எடுத்துக்காட்டாக ‘சொல்லப்பட்டிருக்கலாம்’ , ‘சொல்லியாக வேண்டும்’ என்பது போன்ற பல்வேறு வார்த்தைகளுக்கு ஆங்கில அகராதியில் மொழிபெயர்ப்பு இருக்காது.  இதைச் சரியாக மொழி பெயர்க்க வேண்டும் என்றால், முதலில் தமிழ்ச் சொல்லை இலக்கணப்படி முறையாகப் பிரிக்க வேண்டும்.  பின்னர் அதற்கு இணையாக ஆங்கில இலக்கணச் சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அவ்வாறு செய்தால்தான், தமிழ்ச் சொல்லுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பு மிகச் சரியாக இருக்கும்.
               ஒரு சொல்லை மொழிபெயர்ப்பதற்கும்,  ஒரு வாக்கியத்தை மொழிபெயர்ப்பதற்கும் இடைப்பட்ட நிலையே அவரது ஆய்வு நூல். வாக்கிய மொழிபெயர்ப்புக்கான ஆய்வு மேற்கொள்ள இந்த நூல் பயன்படும்.  கணினியில் தட்டச்சு  செய்தால் அதற்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கும் திறன்கொண்ட மென்பொருளை உருவாக்கவும் இந்த ஆய்வு அடிப்படையாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.  
                தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கி மகிழும் நாள் விரைவில் வரவேண்டும்;  வரும் என நம்புவோம்.
தமிழ் இணையத்தில் ஆதிக்கம்:
                இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள் வரிசையில் இப்போது தமிழ் இல்லை என்ற ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும் அதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ள மொழியாகத் தமிழ் விளங்குகிறது.  இப்போதுள்ள இயங்குதளங்கள் தமிழ் மொழியை ஏற்றுக்கொள்கின்றன என்றாலும் இயங்குதளங்களுக்கான துறையில் நாம் இன்னும் குழந்தை நிலையில்தான் இருக்கிறோம்.  இணையத் தமிழால் இளையோரை  இணைத்து;  இணையத் தமிழை இன்னும் எளிதாக்கி வளர்வோம்!  வாழ்வோம்!  
**********************  
உறுதிமொழி:

இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதிகூறுகிறேன்.

மேற்கண்ட படைப்பு வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்றுமுடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.


 .


18 கருத்துகள்:

 1. அன்பினிய திரு மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கம்.
  தங்கள் படைப்பை நமது தளத்தில்,
  “போட்டிக்கு வந்த படைப்புகள்“ பகுதியில் இணைத்திருக்கிறோம்.

  பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
  வகை – (1 )

  மற்ற தலைப்புகளிலும் தாங்கள் பங்குபெற்று
  இன்னும் பல படைப்புகளை எழுதி
  இன்று இரவுக்குள் அனுப்பலாமே?

  நன்றி வணக்கம்.
  அன்புடன்,
  நா.முத்துநிலவன்,
  ஒருங்கிணைப்பாளர்-விழாக்குழு,
  கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள அய்யா,

  வணக்கம். எனது படைப்பை ‘போட்டிக்கு வந்த படைப்புகள்‘ பகுதியில் இணைத்தது கண்டு மகிழ்ச்சி. நன்கு திட்டமிட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்களுக்கும் விழாக் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன் வலைப்பூவிற்கும் புதியவன் ! தமிழ் வளர்ச்சி கட்டூரை அருமை! பல தகவல்களை தெரிந்து கொண்டேன்! இனி தொடர்வேன்! நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. தொடருங்கள்... தொடர்வோம்.

   நீக்கு
 4. அன்பு மணவையாரே பல அறிய விடயங்களை அறியத்து அருமையான கட்டுரை பதிந்தீர்கள் போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகல்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பொக்கிசமாய்க் காக்கவேண்டிய கட்டுரை ஐயா!
  மிக அருமை!
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சிந்திக்க வைக்கும் கட்டுரை வாழ்த்துக்கள் ஐயா போட்டியில் வெற்றி கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம்
  அருமையான கட்டுரை குறிப்பாக கோவிந்தசாமிதான் இணையத்தில் தமிழை முதன் முதலில் கொணர்ந்தது என்கிற செய்தி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. வணக்கம் ஐயா,
  அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள்,
  வெற்றிபெற வாழ்த்துக்கள்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. இது என்னுடைய முதல் வருகை. பயனுள்ள கட்டுரையை தந்திருக்கிறீர்கள்.

  ‘சொல்லப்பட்டிருக்கலாம்’ , ‘சொல்லியாக வேண்டும்’ போன்ற சொற்களிலிருந்து வேர்ச்சொல்லை பிரித்தெடுக்க Hunspell என்கிற மென்பொருள் உதவுகிறது. இது வேர்ச்சொல் அகராதிகளை தொகுக்கும் தொழில்நுட்பம். பல மொழிகளுக்கும் இருக்கும் இந்த மென்பொருளை தமிழுக்கு ஏற்றார்போல் பயன்படுத்த மென்பொருள் துறையை சேர்ந்த பல தன்னார்வலர்கள் உழைத்து வருகின்றனர். தமிழ் இலக்கணம் கசடறக் கற்றவர்களும், மென்பொருள் துறையும் ஒன்று சேரும் போது நல்ல மாற்றங்கள் நிகழும். அவை மெல்ல மெல்ல ஆங்காங்கே நடந்து வருவது நம்பிக்கையளிக்கிறது.

  தமிழ் மென்பொருள் உருவாக்கும் தன்னார்வர்களின் குழும விவரம்: https://github.com/thamizha

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். என்னுடைய தளத்திற்குத் தங்களின் முதல் வருகைக்காக மிகுந்த மகிழ்ச்சி. வேர்ச்சொல்லைப் பிரித்தெடுக்க உதவும் மென்பொருள் பற்றிய பயனுல்ல தகவலைத் தந்தீர்கள்; மேலும் மென்பொருள் உருவாக்கும் குழுமத்தைப் பற்றியும் விவரம் கொடுத்தீர்கள். அவர்களின் தன்னார்வத் தொண்டு வெற்றி பெற வாழ்த்துகள். தங்களின் பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...