கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 அக்டோபர், 2023

புலவர் மனுவேல்ராஜ் அய்யா பணி நிறைவு பாராட்டு மடல்



பணி நிறைவு பாராட்டு மடல்











 

நொடிக்குள் நூறுகவி படைத்தவா!

        நோகுந் தடைபலவும் உடைத்தவா!

படிக்க மனச்சிறையுள் அடைத்தவா!

          பழகும் உறவினுக் கினித்தவா!

வெடிக்கும் எரிமலைகள் அணைத்தவா!

          விதிக்கும் தமிழெழுதி விதித்தவா

முடிக்கும் பணியினிது முடித்தவா!

       மனுவே லெனமனதுள் துடித்தவா!

 

 

சொல்லி னேர்பூட்டி உழுதவா!

           செவிகள் பாராட்டித் தொழுதவா!

புல்லில் பனியாக விழுந்தவா!

        புவியின் கவியாக எழுந்தவா!

செல்லும் இடமெங்கும் சிறந்தவா!

        சேரும் புகழ்சேர்க்க மறந்தவா!

வெல்லுந் தமிழ்கொண்டு திரிந்தவா!

        வீழ்த்தி பகைக்கருளும் புரிந்தவா!

 

                                               

வகுப்பி னறைகளிலே வாழ்ந்தவா!

        வணங்கு தமிழழகில் ஆழ்ந்தவா!

மிகுத்த சொல்வளங்கள் சூழ்ந்தவா!

      மேவு நட்பதனில் வீழ்ந்தவா!

பகுத்துப் பொழிலுரைக்க வல்லவா!

       பாட லுனக்கடங்கு மல்லவா?

மிகுத்து யானுமெதுஞ் சொல்லவா?

       மனுவேல் தமிழ்ப்பகழி வில்லவா!

 

                                                (வேறு)

 

சங்கத் தமிழ்ப்பெண்ணின்  சீரே  போய்வா!

      சபைகள் விரும்புதமிழ்ச் சாறே போய்வா!

எங்கள் தமிழ்த்துறையி னேறே போய்வா!

     எரியு  மனந்தணிக்கும் நீரே போய்வா!

பொங்கு கவியருவிப் பேறே போய்வா!

      புகழின் புதியவர லாறே  போய்வா!

மங்கு  மனத்துயரி னூறே போய்வா!

      மனுவே லெம்பள்ளி வேரே  போய்வா!

 

 

நீயும் நானும் சேர்ந்து இருந்தோம்

இருந்தோம் ஆர்.சி. பள்ளி தேன்கூட்டில்

தேன்கூட்டில் நீதானே ஒற்றை இராணித்தேனி

இராணித்தேனியைச் சுற்றியே நாங்கள் நாளும்

நாளும் போனதே முப்பத்துநான்கு ஆண்டுகள்

முப்பத்துநான்கு ஆண்டுகள் நேற்றுபோல இருக்கிறதே!

 

இருக்கிறதே என்றாலும் இனிக்கிறதே எந்நாளும்

எந்நாளும் இனிவரும் காலங்கள் இனிதாகட்டும்

இனிதாகட்டும் கவியரங்கத்தில் உந்தன் கவிதை

கவிதையுடன் பாடலும் பட்டிமன்றமும் உனதாகட்டும்

உனதாகட்டும் கலைகள் எல்லாம் உன்வசமாகட்டும்

உன்வசமாகி எங்கும் நடமாடட்டும் தமிழ்ச்சங்கம்!

 

தமிழ்ச்சங்கம் வைத்து வளர்த்த மதுரைமண்

மதுரைமண்னோடு அருட்தந்தை சூசைராஜால் வளர்ந்தவர்

வளர்ந்தவர் மனுவேல்ராஜ் வெண்கலமணியாய் ஒலிக்குமே

ஒலிக்குமே  என்றும் உந்தன் குரலோசை

குரலோசைக் கேட்க புதுக்கவிதை தவமிருக்குமே

தவமிருக்குமே ஆர்.சி.பள்ளி இனியுன் இனியோசைக்கு!

 

                                               

இனியோசையை இனியாம் என்று கேட்போமோ?

கேட்போமோ என்று கேட்டாலுமிது கட்டாயம்

கட்டாயம் ஓய்வென்பது காலத்தின் பிடி!

பிடிசுசிலாவைக் காதலித்து கரம்பிடித்த தமிழ்வேழமே!

தமிழ்வேழம் ஈன்றெடுத்த சகாயகாவியத் தங்கங்களே!

தங்கங்களே தந்திடுமே இனிவாழ்வில் இன்பங்களே!

 

இன்பங்களே என்றும் காண்பாய் முத்தமிழில்

முத்தமிழில் இயற்றமிழில் இசையுடன் வாழ்வாய்!

வாழ்வாய் நாடகத்திலும் சிறந்த நடிகராய்

நடிகராய் அன்றுமென்றும் சிறந்தே வாழ்கவே!

வாழ்கவே தமிழ்போல் வாழ்வாங்கு வாழ்கவே!

வாழ்கவே நூறாண்டுகண்டு நாடுபோற்ற வாழ்க!

 

 



பாராட்டு மடலைக் கேட்க மேலே 'கிளிக்' செய்க

 




 ஆர்.சி. மேனிலைப்பள்ளி,

திருச்சிராப்பள்ளி                                 -மாறாத அன்புடன்,

21.05.2023                                         மணவை ஜேம்ஸ்.


புதன், 30 ஜூன், 2021

புதிரானவன்...!

 


            புதிரானவன்…!

(‘ஊமைக்கனவுகள்’ திருமிகு.விஜு அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றார்.)

 


          

கொரோனாவின்

கொடிய காலகட்டத்தில்

பள்ளி மாணவர் ஆசிரியர்

பள்ளியை விட்டு

விலகியிருக்கச் சொன்னது

என்னமோ உண்மைதான்

நீ பள்ளியிலிருந்தே

விலகியிருக்க முடிவு செய்ததேனோ?!

 

அன்று -

நீ வேலை வேண்டி

வேட்டி சட்டையுடன்

நின்ற காட்சியைக் கண்டவன்

 

நீ காதலானவன்

நீ காதலால் ஆனவன்

உமையாளைக் கைப்பற்றி

இனிய இனியா அரும்பாகி... மலராகி... 

இல்லறம் இனிதாக உனதாக்கினாய்.

 

நீ வித்தியாசமானவன்

இருபத்து மூன்றாண்டு ஆசிரியப்பணியை

இருபத்து எட்டாக்கி

விருப்பத்துடன் ஓய்வை

விரும்பி எட்டிய

ஆர்.சி. பள்ளியின் முதலான

நீ வித்தியாசமானவன்.

 

நீ பணியாற்றிய பல ஆண்டுகளில்

சில ஆண்டுகளே பழகியவன்

நீ அலையில்லா

கடலைப் போன்றவன்

உனக்குள் புதைந்து இருக்கும்

பல்லாயிரம் திறமைகளை

வெளியில் காட்டாத

அதிசயச் சுரங்கம்

நீ அலையில்லா

கடலைப் போன்றவன்

பொங்கினால் சுனாமி போன்றவன்.

 

எனக்கு -

வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி

எனது படைப்புகளை அழியாமல்

வளப்படுத்திய உலைக்களம் நீ!

உனக்குத் தெரியுமா?

உந்தன் திறமை...!

இரு மொழிப் புலமை பெற்ற

புலமைப்பித்தன் நீ.

 

நீ மண்ணுக்குள் புதைந்திருக்கும் தங்கம்

வெளியில் தெரியவேயில்லை

உன்னை எடுத்து உரசிப் பார்த்தால் தெரியும்

சொக்கத்தங்கம் என்று…!

நீ பட்டை தீட்டிய வைரம்

யாரும் பார்க்க ஜொலிக்கவேயில்லை…!

கூழாங்கற்களுக்கு வைரத்தைப் பற்றிய

அருமை தெரிய வாய்ப்பில்லை.

 

நீ புரிந்து கொள்ள முடியாத

புதிரானவன்

எதிரிகளை நடுங்கவைத்து

சதிராடுபவன்

மாணவரைக் கண்டிப்புடன் கலங்கடித்தாலும்

அன்பானவன்

உதவி என்று வந்துவிட்டால் கருணையுடன்

கர்ணனானவன்

பழகிய நாட்களை அழகிய நாட்களாக்கி

தோழனானவன்

தேசிய மாணவர் படைக்குப் போட்டி என்றால்

முதலானவன்…!

உந்தன் படையை -

ஆணையிட்டு வழி நடத்தும்

அருளாளர் குணாளன் குணசேகர்...

உன் பணி சிறக்க

நல்வழிகாட்டும் கைகாட்டி!

பணியில் சிறந்த அலுவலர்...

பழகுவதில் பாசமுள்ள தமயனான

அன்புள்ளமுள்ள பண்பாளர்.


நீ -

அசாத்திய நம்பிக்கையுடன்

எதையும் சாதிக்கும் மனத்திட்பத்துடன்

எதையும் சாத்தியமாக்கும் துணிவுடன்

எண்ணிய எண்ணம்  எல்லாம்

நிச்சயம் நிறைவேற்றுபவன்.

 

வண்ணமயமாகும்  வாழ்க்கை - நாளும்

வளம்பெறும்... மென்மேலும் 

வாழ்ந்திரு...!  வளர்ந்திரு...!!

உயர்ந்த மனிதனான நீ

உயர்ந்து சிறந்திடுசிகரம் தொடு!

 


 










இன்று

நீ வேலை வேண்டாமென்று

செல்லும் காட்சியையும்

கனத்த இதயத்தோடு 

கண்டு கலங்கியது நெஞ்சம் …!

 

நீ புரிந்து கொள்ள முடியாத

புதிரானவன்…!

 


 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்  

30.06.2021                             

 


 

 

 

  

 


 


ஞாயிறு, 10 மே, 2020

ஒழிக நீ எம்மண்…!





ஒழிக நீ எம்மண்…!

  

கொரோனா – நீ
வந்துதான் உணர்த்தினாய்…!

மண்டிக்கடையையுடைய பெரியார்-
மக்களிடம்…
மண்டிக்கிடந்த மூடப்பழக்கமொழிய
பகுத்தறிவு மருந்துக்கடை விரித்தார்…
கொள்வாரில்லை!

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
ஆந்திராவிலுள்ள சித்தூர்
திருப்பதி வைணவத்தலமாகட்டும்
கேரளத்தில் பத்தனம் திட்டாவிலுள்ள
சபரிமலை அய்யப்பன்  கோவிலாகட்டும்
தமிழகத்தில் மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலாகட்டும்
இன்னும் உள்ள
அனைத்து கோவில்களில்-
தெய்வங்கள் காப்பதாய்ப்
பூசாரிகள் ஓதுவதும்…

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
இத்தாலி ரோம் நகரிலுள்ள
வாடிகன் புனித பீட்டர் சர்ச் முதல்
தேவாலயங்களில்-
தேவமைந்தன் காப்பதாய்ப்
பாதிரிகள் பாடுவதும்…

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
சவுதி அரேபியாவின்
மக்கா முதல்
மற்றுமுள்ள பள்ளிவாசல்களில்
இறைதூதர் காப்பதாய்
உலமாக்கள் உரைப்பதும் என
இன்னும் எத்தனை எத்தனை?
அத்தனை பேரும்
உண்மைக்குப் புறம்பானவற்றையே
உணர்த்திக் கொண்டிருக்கும்…
உண்மையை உணர்த்தி
அத்தனையும்  இழுத்து மூடச்செய்து விட்டாயே…!

‘ஆட்டம்காலி… படுதாகாலி…’ என்று
கொரோனா – நீ
வந்துதான் உணர்த்தினாய்!

கண்ணுக்குத் தெரியாத
கடவுள் இல்லை என்பதை…
கண்ணுக்குத் தெரியாத – நீ
வந்து உணர்த்தி விட்டாயே…!

உண்மையை உலகினுக்கு
உணர்த்தினாலும்…
நீ வாழ்கயென்று…
வாழ்த்த வழியில்லை…
உண்மையைச் சொல்ல
உனக்கு இத்தனை உயிர்ப்பலிகளா…?!

நாங்கள் வாழ…
ஒழிக நீ எம்மண்…!

 -மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.



Related Posts Plugin for WordPress, Blogger...