இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2022

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 5

 



பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 5




மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்??


தமிழ் எழுத்துகளில் -


ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!


மூனுசுழி "ண" என்பதும் தவறு!


"ண" இதன் பெயர் "டண்ணகரம்",


"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.


மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு"டண்ணகரம்" னு பேரு.


தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர'ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும்.

இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு.


இது ரெண்டும் என்றுமே மாறி வராது..


இதுல கூட பாருங்களேன்…

பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாதல்லவா…??


வேற மாதிரி சொன்னா


இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!


வர்க்க எழுத்து-ன்னா,


சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.


இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்") 

இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்


எழுத்துப் பிழையும் குறையும்.


எப்படி???


மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...


பக்கத்துல ட இருக்கா,


அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.


ஏன்னா அது "டண்ணகரம்".


கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...


பக்கத்துல 'ற' இருக்கா


அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.


ஏன்னா அது "றன்னகரம்".


இதே மாதிரிதான் 

"ந' கரம்" என்பதை,"தந்நகரம்" னு சொல்லனும்.


ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து


வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. 

(பந்து, வெந்தயம், மந்தை…)




தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.


தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.

இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். 



உதாரணமாக-


க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – 

எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!


இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.


உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்


இதை எல்லாரும் படித்திருப்போம்-


வல்லின எழுத்துகள் –

க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)


மெல்லின எழுத்துகள்–

ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)


இடையினஎழுத்துகள்–

ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)

இதுவும் தெரிஞ்சதுதான்.


எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

வல்லினம்  மெல்லினம்   இடையினம்

                            ங

                            ஞ

                            ண

                            ந

                            ம

                                                                    ய

                                                                    ர

                                                                    ல

                                                                    வ

                                                                    ழ

                                                                    ள

                ன



   கசடதபற ஙஞணநமன யரலவழள –

18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் "கஙசஞடண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.


சொற்களில், மெல்லினத்தை அடுத்து


வல்லின எழுத்துகள் வரும்.


(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)


க ங – எங்கே – ங் க


ச ஞ – மஞ்சள் – ஞ் ச


ட ண – துண்டு – ண் ட


த ந - வந்தது – ந் த


ப ம – பம்பரம் – ம் ப


இடையின ஆறெழுத்தும் 

அவற்றின் பெயருக்கேற்ப 

(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 

மென்மையாகவும் இன்றி இடையினமாக) 

செருகப்பட்டு, கடைசியாக


ற ன – சென்றது – ன் ற


அவ்வளவு தாங்க...



இதே மாதிரித்தான் -


சின்ன "ர" என்பதும் தவறு!


பெரிய "ற" என்பதும் தவறு!


ர - இதனை, இடையின 'ரகரம்' என்பதே சரியானது


- மரம், கரம், உரம்


ற - இதனை வல்லின 'றகரம்' என்பதுதான் சரி.


- மறம், அறம், முறம்


இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய 'ற" வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய 'ர" வருது!


வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்


இடையில வருவது இடையினம்.



இதுல வல்லின ஒற்றெழுத்துகள் ரெண்டும் எந்தத் தமிழ்ச் சொல்லிலும்  சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

 'முயற்சி'தான் !



-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

செவ்வாய், 14 ஜூன், 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 4


பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 4

பிழையான சொல் சிவப்பு வண்ணத்திலும்...

     பிழை திருத்தம் பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


1. நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்காது.




அஃறிணைப் பன்மையில் ‘இரா என்று முடிய வேண்டும்.

நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இரா.


2. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் ‘காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்று எழுதுகிறார்கள்.
                               
                 
‘சித்திரிக்கப்பட்டவை என்று எழுதுதல் வேண்டும்.

‘சித்திரமும் கைப்பழக்கம் என்பது நினைவு கூரத்தக்கது.


3. மேசையின் மேல் உள்ள அந்தப் பழங்கள் நல்லவை இல்லை.

பழங்கள் இருக்கின்றன.  ஆனால் அவை நல்லவை அல்ல.  எனவே
‘அந்தப் பழங்கள் நல்லவை அல்ல.
தன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

4. வாழ்த்துகள்வாழ்த்துக்கள்




இரண்டு சொற்கள் இணையுமிடத்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துகளை முதலாக உடைய சொற்கள் வந்தால் அவ்வெழுத்துகள் ஒற்றுகள் மிகுதலும் உண்டு.  மிகாமல் இயல்பாதலும் உண்டு.

இங்கே ‘கள் என்பது பன்மை விகுதி.  அதனால் மிகாது.  தனிச் சொல் அன்று.  (கள் பெயர்ச்சொல் ஆயின் வேறு பொருள்)

வாழ்த்துகள் – எழுத்துகள் – படைப்புகள் என இயல்பாக நிற்றலே சரியானது.

‘கள் என்னும் விகுதி – ஒரு சொல்லில் அடங்கியதேயன்றித் தனிச்சொல் இல்லையாதலின் புணர்ச்சி விதிகளுக்கு இடமில்லை.

இனிப்புக்கள்இனிப்புச் சுவையுடைய கள் என்ற பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இனிப்புகள் – என்றெழுதுவதே சரியானது.

அவ்வாறே கருத்துகள், தலைப்புகள் என்பனவுமாம்.
                           
                         





5. பசும்பாலா?  பசுப்பாலா?
                                             
         

வாழை மரத்தினுடைய பழம் – வாழைப்பழம் என்பது போன்றே

பசுவினுடைய பால் – பசுப்பால் ஆகும்.

பசும்பால் – பசுமையான பால், பச்சையான பால் என்ற பொருளாகி விடும்.

(ஆனால் பேச்சு வழக்கில் ‘பசும்பால்  என்றே குறிப்பிடப்படுகிறது)


6. தேனீரா?  தேநீரா?
                                       
தேன்+ நீர் – தேனீர் – தேன்போன்று இனிக்கும் ‘நீர்என்று பொருள் தரும்.
                         
தேநீர் – தே+நீர் – தேயிலைத் தூளிலிருந்து எடுக்கப்படும் நீர்.  ஆதலின் ‘தேநீர் என்பதே சரியானது.


7. குடக்கூலியா?  குடிக்கூலியா?
                                     
குடக்கூலி – குடம்+கூலி – எனப்பிரித்து குடம் செய்தவர்க்குக் கூலி
                          எனப் பொருள் தரும்.

குடி+கூலி குடியிருப்பதற்கான கூலி – என்பதே சரியானது.


8. மென்மேலும்மேன்மேலும்
                                                 
மேலும் மேலும்- அடுக்குத் தொடர்.
மேலும் மேலும் என்ற சொல் மேன்மேலும் என்ற மாறியுள்ளது.  ஆதலின் மென்மேலும் என்பது பிழையானது.
‘மேன்மேலும் என்பது சரியானது.

பிழையான சொல் சிவப்பு வண்ணத்திலும்...

பிழை திருத்தம் பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

9. ‘என்று – என்னும் சொற்கள் பயன்படுத்தும் விதம்

இவனுக்கு முருகன் என்று பெயர்.

இவனுக்கு முருகன் என்பது பெயர்.

இந்தியாவின் அருகில் நேபாளம் என்ற நாடு இருக்கிறது.


இந்தியாவின் அருகில் நேபாளம் என்னும் நாடு இருக்கிறது.

என்ற – இறந்த காலப் பெயரெச்சமென்பதால் தவறாகிறது.

பெயர்ச் சொல்லிற்கும் பெயர்ப் பதிலிக்கும் இடையே ‘என்று என்னும் சொல் வரலாம்.

(எ.கா) பாரியென்று ஒருவன் உளன்.




                                               (தொடரும்...

நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.

 -மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.


வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! -3


பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 3



பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்...

     பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



1.  எனக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.



     ‘பலஎன்பது அஃறிணைப் பன்மை.  பலர் என்பதே உயர்திணைப் பன்மை.

எனக்கு நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.


 2.  எங்கள் பள்ளி மாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது.











     அருகு மை – எனப் பிரித்தால் அருகில் இல்லாமை என எதிர்மறைப் பொருள் தரும்.

எங்கள் பள்ளி மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.

3.  பறவைகள் வானில் பறக்கிறது.



     பறவைகள் – அஃறிணைப் பன்மை.  பறக்கின்றன  என்று அஃறிணைப் பன்மை வினையில்தான் முடிய வேண்டும்.

பறவைகள் வானில் பறக்கின்றன.

4.  நாளைக்குப் பள்ளிகள் இயங்காது.



இயங்காது – அஃறிணை ஒருமை வினை முடிவு.  பள்ளிகள் – அஃறிணைப் பன்மை.  எனவே வினை முடிவும் பன்மையிலேயே இருக்க வேண்டும்.

நாளைக்குப் பள்ளிகள் இயங்கா.

5.  சின்னத்திரையில் நாடகம் பார்த்தேன்.


                                                                           
     சிறிய பெரிய என்னும் சொற்களுடன் பிற சொல் இணையும்போது வல்லினம் மிகாது.  சிறியதிரை, பெரியதிரை -  சிறிய என்பதன் திரிபு சின்ன என்பது.  எனவே சின்னதிரை என்பதே சரியானது.

சின்னதிரையில் நாடகம் பார்த்தேன்.

6.  நிதியமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் .



     மாண்புமிகு என்னும் அடைமொழி ஒருவர் வகிக்கும் மேலான பதவி கருதி பதவிப் பெயரோடு ஒட்டி வருவதாகும்.  பதவி போனால் அடைமொழியும் போய்விடும். 

மாண்புமிகு நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம்.

7.  இன்று மாலை சரியாக ஏழு மணியளவில் விழா நடைபெறும்.



     சரியாக என்று சொல்லியபின் ‘அளவில்என்று சொல்வதன் பொருள் சரியில்லை.

     சரியாக ஏழு மணிக்கு விழா நடைபெறும்.

8.  பஞ்ச பாண்டவர்களில் பீமனே உடல் வலிமை வாய்ந்தவன்.



     பாண்டவர்களுள் ஒருவனைப் பிரித்துக் காட்டுவதற்கு ‘உள் விகுதியைப் பயன்படுத்த வேண்டும்.

பஞ்ச பாண்டவர்களுள் பீமனே உடல் வலிமை வாய்ந்தவன்.

9.  பத்து நாடுகளுக்கு மேல் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.


     நாடுகள் என்ற எழுவாயை முதலில் இட்டு எண்ணிக்கையை அடுத்ததாகக் குறிப்பிட வேண்டும். 

நாடுகள் பத்திற்கு மேல் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.

10.  முகர்ந்து பார்க்கலாமா?



     ‘முகர்ந்து என்று தமிழில் இல்லை.  நுகர்ந்து – நுகர்ச்சி – அனுபவம் அனுபவித்து என்ற பொருள் வருவதால்

நுகர்ந்து பார்க்கலாமா?

                                                (தொடரும்...

நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.

 -மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.











    
    
















    
    



















சனி, 6 பிப்ரவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 2


பிழையின்றித் தமிழில் எழுதலாம்! 


பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்...

பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



1.நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் புதுமையாக உள்ளன.








(‘ஒவ்வொன்றும்  என்னும் ஒருமைச் சொல் ‘உள்ளன என்னும் பன்மை வினை கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘புதுமையாக உள்ளதுஎன ஒருமையில் தொடர் முடிதல் வேண்டும்.)

நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் புதுமையாக உள்ளது.

2.ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.



(‘ஒவ்வொரு’  என்னும் ஒருமைச் சொல்லைத் தொடர்ந்து ‘கிராமங்கள்என்னும் பன்மைச் சொல் வருவது பிழையாகும்.  எனவே ‘ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன எனத் தொடர் அமைதல் வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

3. அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தன.



(இரண்டாவதாக வரும் ‘சந்தேகமே எழுவாய். ஆதலால் ஒருமை முடிவு பெற வேண்டும்.)

அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தது.

4. காய்கள் பெரியதாய் இருக்கும்.


(காய்கள் என்னும் பன்மைப்பெயர் ‘பெரியதாய் இருக்கும்என்னும் ஒருமை வினை கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே, ‘பெரியனவாய் இருக்கும்எனத் தொடர் பன்மை வினை கொண்டு முடிதல் வேண்டும்.

காய்கள் பெரியனவாய் இருக்கும்.

5.  பிரபாகரன் கொடுத்த புத்தகம் இது அல்ல.




‘இது என்னும் அஃறிணை ஒருமைப் பெயர் ‘அல்ல என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘இதுவன்றுஎனத் தொடர் முடிதல் வேண்டும்.

பிரபாகரன் கொடுத்த புத்தகம் இதுவன்று.

6.  பரிசு பெற்றவள் அவள் அல்ல.




‘பரிசு பெற்றவள்என்னும் உயர்திணைப் பெண்பாற் ஒருமைப் பெயர், ‘அல்ல‘ என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘அவள் அல்லள் எனத் தொடர் முடிதல் வேண்டும்.

ரிசு பெற்றவள் அவள் அல்லள்.

7.  வைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி தண்ணீரும் இருக்கின்றன.











(தண்ணீருக்குப் பன்மையில்லை ஆதலால் ஒருமையில் இருக்கிறது எனத் தொடரை முடிக்க வேண்டும்.)

வைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி தண்ணீரும் இருக்கிறது.

8.  யானைகள் போர்க்களம் சென்றது.



(‘யானைகள்’  என்னும்அஃறிணைப் பன்மைப்பெயர் ‘சென்றது’  என்னும் அஃறிணைப் ஒருமை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே ‘சென்றன எனப் பன்மையில் தொடர் முடிதல் வேண்டும்.

யானைகள் போர்க்களம் சென்றன.


9.  தமிழ்நாடு முப்புறமும் பறவையால் சூழப்பட்டுள்ளது.



(பறவை – காக்கை குருவி போன்ற பறவைபரவை – கடல்)

தமிழ்நாடு முப்புறமும் பரவையால் சூழப்பட்டுள்ளது.

10.  கடலில் கப்பல்கள் முழ்கியது.



‘கப்பல்கள் என்னும் அஃறிணைப் பன்மைப் பெயர்ச்சொல் மூழ்கியது என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும்.  எனவே மூழ்கின எனப் பன்மையில் தொடர் முடிதல் வேண்டும்.

கடலில் கப்பல்கள் மூழ்கின.


                                             (தொடரும்...
-மாறாத அன்புடன்,


மணவை ஜேம்ஸ்.

நன்றி:பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி?

Related Posts Plugin for WordPress, Blogger...