தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஏப்ரல், 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்! (16)


நீங்க நினைக்காத நெஞ்சம்! (16)


ரோஸி மனம் தக்கை போல லேசாக இருப்பதாக உணர்ந்தாள்.




   தமிழினியனிடம் அவனின் அம்மா எழுந்தவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள். 
                        
வெளியில் சென்ற சிறிது நேரத்திலேயே அரக்கப்பரக்க வேகமாக வீட்டிற்குள்  கையில் செய்தித்தாளுடன் வேகமாக வந்தாள்.

“என்னாச்சு... ஏன் பதட்டம்...?தமிழினியனும் பதட்டத்துடன் கேட்டான்.

“டீக்கடையில வால் போஸ்டர பார்த்தேன்... ‘ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் தீ  29 பேர் உடல்கருகிச் சாவுங்கிறத பார்த்து... பேப்பர வாங்கி பார்த்தேன்.   மாப்பிள்ளையும் செத்துப் போயிட்டாருன்னு செய்தியை படிச்சிட்டு ஓடி வர்றேன்...!” - என்று அந்தப் பேப்பரை ரோஸி வேகமாக நீட்டினாள்.

தமிழினியன் அந்தச் செய்த்தாளை வாங்கிப் படித்தான்.  திருமண மண்டபத்தில் சசிரேகாவின் கல்யாணத்தில் நடந்த அந்த விபத்து பற்றி படங்களுடன் இருந்த செய்தியைப் பார்த்தவுடனே மயங்கிச் சரிந்தான்.

ரோஸி வேகமாகத் தண்ணீரைத் முகத்தில் தெளித்து மயக்கம் போக்கினாள்.

தமிழினியன் மீண்டும் செய்தித்தாளைப் படித்தான்;  தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.  ரோஸி அவனைத் தேற்றினாள்.

“கெளம்புங்க... நாம சசியோட வீட்டுக்குப் போகலாம்...”  ரோஸி அழைத்தவுடன் தமிழினியன் எழுந்தான்.  தமிழினியன் அம்மாவை எழுப்பி தாங்கள் அவசரமாக வெளியே செல்வதால் சாப்பாட்டை எடுத்துப் போட்டு சாப்பிடச் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.

இதைக் கேட்டு கண்விழித்த தங்கம்மாளுக்கு ஒன்றும் புரியாமல் அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..   திருமண விசயமாக முடிவெடுத்து அதை என்னிடம் சொல்லாமல் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று செல்கிறார்கள் போல என்று தங்கம்மாள் மனதில் நினைத்துக் கொண்டு சந்தோசப்பட்டாள்.

நகரப் பேருந்து வரும்வரை காத்திருந்து, அது வந்தவுடன் அதில் ஏறினர்.

‘சசி எப்படி இருக்கிறாளோ...?  ஏன் அவளின் வாழ்வில் இந்தக் கொடுமை...?இந்த அகோர விபத்தினால் அவளின் வாழ்க்கை சிக்கிச் சின்னாபின்னமாக ஆகிவிட்டதே...!’  தமிழினியனுக்கு நினைக்க நினைக்க அழுகை அழுகையாக வந்தது.  கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்தான்.
            
பேருந்திலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக சசியின் வீட்டை அடைந்தனர். 
 
வீட்டில் ஒரே மயான அமைதி;  சசிரேகாவின் அப்பா ரெங்கராஜ் சுவரில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தார்.  இவர்கள் இருவரையும் பார்த்தார்.  ‘வாங்கஎன்றோ இல்லை ஏன் வந்தீர்கள்?எனறோ எதுவும் சொல்லாமல் இருந்தார்.

தமிழியனும் ரோஸியும் மெதுவாக  சசிரேகாவின் அறைக்குள் சென்றனர்.

சசிரேகா தலைமுடியெல்லாம் கலைந்து முகத்தை அது மூடிக்கொண்டு கிடக்க கட்டிலில் குத்திட்டு அமர்ந்திருந்தாள்.
                           
ரோஸி சசிரேகாவின் அருகில் போய் முகத்தை மூடி இருந்த முடியை விளக்கி எடுத்துப் பின்புறம் போட்டாள்.  சசிரேகா குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். 
                              
ரோஸி சசிரேகாவின் முகத்தைத் தன் கைகளால் உயர்த்திப் பிடித்தாள். 

“சசி... நா... தமிழ்... வந்திருக்கேன்...”  தமிழினியன் வார்த்தை வெளிவரத் தடுமாறி வந்து விழுந்தது.

சசிரேகா அவர்களைப் பார்த்தாள்.  அவளின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லைமீண்டும் தலையை அதேபோலத் தொங்கப் போட்டுக் கொண்டு விட்டாள்.

“சசி... நா... தமிழ்... வந்திருக்கேன்...” - தமிழினியன் சொல்வதைத் காதில் கேட்டுக் கொண்டவளாகத் தெரியவில்லை.  தமிழினியன் கேவிக் கேவி அழுதான்.

“நா ரோஸி... வந்திருக்கேன்... இங்க பாருங்க...”  என்று ரோஸி தலையை  நிமிர்த்திச் சொன்னாள்.

“எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்...சொன்ன இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.   அவர்களைப் பார்த்து ‘ஹி...ஹி...’வெனச் சிரித்தாள்.

வந்திருப்பது யாரென்‘று அவள் உணர்ந்த்தாகத் தெரியவில்லை.

“எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்...’ -என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் டிரஸ்ஸிங் டேபிளைக் கீழே தள்ளிவிட,  அதிலிருந்த கண்ணாடி உடைந்து சுக்குநூறானது.
                                  
ரெங்கராஜ் சத்தம் கேட்டு அறைக்குள்ளே ஓடி வந்து திகைத்து நின்றார்.

“மண்டபத்தில நடந்த விபத்தப் பார்த்ததுல இருந்து... புத்தி சுவாதீனமில்லாம... பைத்தியம் பிடிச்சவமாதிரி நடந்துக்கிறா...?  பச்சத் தண்ணீகூட குடிக்கமாட்டேங்கிறா... எதுவும் இதுவரைக்கும் சாப்பிடல... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... இவளோட வாழ்க்கையக் கெடுத்த பாவியாயிட்டேன்...”  என்று சொல்லி ரெங்கராஜ் கதறிக் கதறி அழுதார்.

ரோஸி சமையலறைக்குள் சென்று வேலைக்காரப் பெண்ணிடம் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்து சசிரேகாவின் அருகில் அமர்ந்தாள்.

தட்டிலில் இருந்த சாப்பாட்டை எடுத்து சசிரேகாவிற்கு தமிழினியன் ஊட்டிவிட,  பயங்கரப் பசியில் இருந்தவள் போல அதைச் சாப்பிட்டாள்.

“நீங்களும் சாப்பிடுங்க...!என்று சொல்லிக் கொண்டே தமிழினியனுக்கும் ரோஸிக்கும் சாப்பாட்டை எடுத்து சசிரேகா ஊட்டிவிட்டுக் கொண்டே...  
அவள் மெல்லச் சிரித்தாள்..  
....................
                                                                            

படிக்க  ‘கிளிக்’ செய்க 















                                                                                                

                                                
                                                         
                                                                                                                                                            







        



புதன், 6 ஏப்ரல், 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (15)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (15)




  இருட்டு இன்னும் விலகாத வைகறைப் பொழுது.       தமிழினியன் எப்போது தூங்கினான்;  எப்போது விழித்தான் என்றே தெரியவில்லை.  அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அறிந்து கொண்டு  ரோஸி கேட்டாள்.


என்ன... ஒரே சிந்தனை...?”  ரோஸி அருகில் நிற்பதை அப்பொழுதுதான் தமிழினியன் பார்த்தான்.

பதிலேதும் சொல்லாமல் அமைதியாக ரோஸியைப் பார்த்தான்.

என்ன தூக்கம் வரலையா...?” 

ஆமாம்என்பது போலத் தலையை அசைத்தான்.

எனக்குந்தான்...!ரோஸி சொன்னவுடனே தூக்கிவாரிப் போட்டதைப் போல எழுந்து உட்கார்ந்தான்.

என்ன சொல்றீங்க...?  அப்ப நீங்களும் தூங்கலையா...?”  ரோஸியைப் பார்த்து தமிழினியன் கேட்டான்.

ஆமாம்என்று தலையை ஆட்டினாள் ரோஸி.


“ஏன்...?” என்று  கேட்டு ரோஸியைப் பார்த்தான் தமிழினியன்;  அவளின் முகம் அந்த வேளையிலும் பளிச்செனத் தெரிந்தது.

நான் தூங்கலைங்கிறது எப்படித் தெரியும்...?”

அப்ப... நீங்களும் தூங்கலையான்னா...?  நீங்களும்... அந்த உம்க்கு என்ன அர்த்தமாம்...?  சொல்லிவிட்டுச் ரோஸி சிரித்தாள்.

சரி... சரி... ஏன் தூங்கல...?

நீங்க ஏன் தூங்கலையாம்...?”

அம்மா சொன்னத நினச்சு நினச்சு... எனக்குத் தூக்கம் வரலை...?”  தமிழினியனின் பெருமூச்சு ரோஸியைச் சுட்டது.

என்ன...?  முடிவு எடுத்தீங்க...?”

ஒரே குழப்பமா இருக்கு...!

குழம்பிய குட்டையில மீன் பிடிச்சாச்சா... இல்லையா...?”

“ ‘மயக்கமா கலக்கமா... மனதிலே குழப்பமா... ’இந்தப் பாட்டுதான்  என்னோட மனசில மாறி மாறி வருது...

ஏழை மனதை மாளிகை ஆக்கி... இரவும் பகலும் காவியம் பாட ஆரம்பிச்சுடுவீங்க போல இருக்கே... என்ன இருந்தாலும் கவிஞர்தானே...!

நான் கவிஞனும் இல்லை... நல்ல ரசிகனும் இல்லை... காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை... ஆனா அம்மா எதையும் என்னிட்ட இதுவரைக்கும் கேட்டதே இல்ல... எதையுமே எதிர்பாத்ததும் இல்லை...  அம்மாவோட  ஆசையை நெனச்சா...!

ஒங்க அம்மா ஆசை... பாவம்... அவுங்களுக்கு என்ன தெரியும்...?”

சரி... அத விடுங்க... அம்மா சொன்னதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க...?” ரோஸியிடம் கேட்டான்.

நீங்க என்ன நினைக்கிறீங்க...?”

எனக்கு  குழப்பமா இருக்கு...!

எனக்கு எந்தக் குழப்பமும் இல்ல...!

அப்படின்னா...?”  

அப்படித்தான்...!

கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்...!

மொதல்ல இந்த வாங்க... போங்கன்னு ரொம்ப மரியாதையா சொல்றத விடுங்க...

சரிங்க...

பாத்திங்களா... இன்னும்  உங்கள மாத்திக்கல...!

சரி... மாத்திக்கிறேன்... ம்...ம்... சொல்லுங்க...

நீங்கதான் சொல்லனும்...!

இருவரும் நீண்ட நேரம் மௌனமாக இருந்தனர்.  தமிழினியன்தான் மௌனம் கலைந்தான்.

அம்மாவுக்கு... நா சசியை காதலிக்கிறது தெரியாதில்ல...!

“ஆமாம்... நீங்க ஆசைப்பட்டது அம்மாவுக்குத் தெரியாதில்ல...!

இனி தெரிஞ்சுதான் என்ன ஆகப் போவுது...   எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை... இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடுமுன்னு...கண்ணதாசன் பாடிட்டு போயிட்டாரு...

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடுமுன்னு அவரேதான் பாடியிருக்கிறாரு... இந்தக் கவிஞர பிடிச்சதுக்குக் காரணமே கவிதைதான்...!





             “என்னோட ஆசையும் என் அம்மாவோட ஆசையும் நிராசையா ஆயிடுச்சு...!”

ஒங்க அம்மா நிம்மதிக்காக...  நீங்க நிம்மதியில்லாம வாழமுடியுமா...?   யாருக்காகவும்... ஒங்கள நீங்க மாத்திக்காதிங்க... நீங்க நீங்களா இருங்க... அனாதையா இருந்த எனக்கு ஒங்களோட புனிதமான நட்பு கிடைச்சதே நா செஞ்ச புண்ணியம்...!  அது போதும் எனக்கு...!  அம்மாட்ட  நடந்ததச் சொல்லிப் புரிய வைப்போம்....

தமிழினியன் குழப்பத்திலிருந்து விடுபட்டவனாக புன்னகையுடன் ரோஸியைப் பார்த்து வணங்கினான்.  ரோஸியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தமிழினியனின் காலில் விழுந்தது;  கண்கள் குளமாயின. 

                                                                                                       வ(ள)ரும்...












வியாழன், 7 ஜனவரி, 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (14)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (14)


   தீயணைப்புத் துறையினர்   உயிருடன் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களை எல்லாம்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.   திருமண மண்டபத்தில்  இறந்து கிடந்தவர்களின் உடலைப் பார்த்ததும்   இதற்கு முன்பு இதுபோலக்  கோர விபத்தைக் கண்டதேயில்லை என்று மிகுந்த துயரப்பட்டனர்.
                                                                       

   ஸ்ரீரங்கம்  போலிஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட காவல் நிலையமே அங்கு வந்து இருந்தது.  போக்குவரத்தை மாற்றிவிட்டு  மக்களின்  கூட்டத்தைக்  கட்டுப்படுத்திக் கொண்டும்,  ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் காயம்பட்டவர்களை மீட்டு அனுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர்.
                                                                     

   சிறிது நேரத்திலே எஸ்.பி.யும்  வேகமாகத் தனது வண்டியில் வந்து இறங்கினார்;   இன்ஸ்பெக்டரிடம் விசாரணை செய்தார்.



   எஸ்.பி. வந்த சிறிது நேரத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவரும் சம்பவ இடத்திற்கு   வந்தார்.  
  
       எஸ்.பி.யிடமும் தீயணைப்பு அதிகாரியிடமும்  மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்தவற்றைக் கேட்டார்.  பத்திரிக்கை நிருபர் எல்லாம் கேமராவும் கையுமாகப் புகைப்படம் எடுப்பதிலும் செய்தி சேகரிப்பதிலேயுமே  மும்முரம் காட்டினர்.

   “காயம் பட்டவர்களையெல்லாம் மீட்டு  ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியாச்சில்ல...” மாவட்ட ஆட்சியர் கேட்க, தீயணைப்பு அதிகாரி பதில் சொன்னார்.

   “பாதிக்கப்பட்ட எல்லாத்தையும்  ஜி.எச்., பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியாச்சுங்க அய்யா...”

   “ஏ பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்புனீங்க...?” மாவட்ட ஆட்சியர் சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.

   “இல்லீங்க அய்யா... தீயில வெந்து காயம்பட்டவங்க நெறையப் பேரு... அதுனாலதான்... அதான் உடனே ஒங்களுக்குத் தகவல் கொடுத்தோம் ...”

   “எத்தனை  பேரு தீக்காயம் பட்டவங்க...?”

   “நூறு பேருக்கு மேல இருக்குங்கய்யா...”

   “யோவ்... என்னய்யா சொல்றா...?  ஆமா... யாரும் இறந்திருக்காங்களா...?”
பதட்டத்துடன் ஆட்சியர் கேட்டார்.  தீயணைப்பு  அதிகாரி  ஒன்றும் கூறாமல் இருந்தார்.

   “என்ன  கேக்கிறேன்ல்ல... யாரும் இறந்திருக்காங்களா...?”

   ”ஆமாங்கய்யா...”தயங்கித் தயங்கிப் பதில் சொன்னார் தீயணைப்பு அதிகாரி.

   “எத்தனை பேருய்யா...?”

   ”இனிமேல்தான் எண்ணணும்...” 

   “மொதல்ல அதப் பாருங்க... அதுக்குள்ள மேல இருந்து விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க... வந்திடுச்சு... சீக்கிரம் போங்க...  கவர்மண்ட்கு என்னய்யா பதில் சொல்லுவேன்... போங்கய்யா... போங்க...” என்று சொல்லி விட்டுத் தீயணைப்பு அதிகாரியை அவசரப்படுத்தினார்.

   “சரிங்கய்யா...” தீயணைப்பு அதிகாரி வேகமாக மாடியில் ஏறினார்.  

    தீயில் பலர் கருகிக்கிடப்பதைப் பார்த்து,  யாருக்காவது உயிர் இருக்கிறதா என்று அருகில் சென்று பார்த்தனர்.    ஆங்காங்கே பல உடல்கள் கரிக்கட்டையாகிக் பார்ப்பதற்கே அகோரமாகச் சகிக்க முடியாமல்  கிடந்தன. 

   தீயணைப்பு வீரர்கள் இறந்தவர்களின் உடல்களை எண்ணி, கணக்கெடுக்கும் வேளையில் ஈடுபட்டனர்.  இருபத்தியாறு பேர் பெண்கள், ஒரு சிறுமி, இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம்  இருபத்தொன்பது பேர் உடல்கருகி இறந்து கிடந்தனர். 

   ரெங்கராஜ்  மாடிக்குச் சென்று மாப்பிள்ளையைத் தேடினார்.  மாப்பிள்ளையோட  அப்பாவைத் தூக்கியபடியே  இறந்து  பிணமாகக்  கிடப்பதைப் பார்த்தும் மண்டபமே அதிரும்படிச் சத்தம் போட்டுக் கத்தினார்.  அவரின் அலறலைக் கேட்டு மிரண்டுபோய்த் தீயணைப்பு வீரர்கள் ஓடி வந்தனர்.

   “மாப்பிள்ளை...மாப்பிள்ளை...”  கையை நீட்டியவர் அதற்கு மேல் பேச்சு வரமால் மாப்பிள்ளையின் உடல் மீதே மயக்கிச் சாய்ந்தார்.  ரெங்கராஜின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர்.  அவரை மெதுவாகக் கீழே அழைத்து வந்தனர்.

   மாப்பிள்ளையின் அம்மா,  இறந்துகிடந்த கணவரையும் மனமகன் கோலத்தில் கிடந்த மகனின் உடலையும் மாப்பிள்ளையின் உடலையும் பார்த்துத் தரையில் உருண்டு புரண்டு அழுதாள்.

        “இவ்வளவு குறுகலான இடத்தில மண்டபம் இருக்கே... கல்யாண மண்டபத்துக்கு அனுமதி  வாங்கி இருக்காங்களா...மொதல்ல ஓனரைக் கூப்பிடுங்க...?”  எஸ்.பி.யிடம் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார்.


    இதையெல்லாம் பார்த்துக் கொண்டு  இருந்த சசிரேகா ‘நம்முடைய திருமணத்தில் இத்தகைய கோர நிகழ்வு நடந்து விட்டதே’  என்று எண்ணியபடி மயங்கிக் கீழே பொத்தென ரோட்டிலேயே விழுந்தாள்.


      மிழினியன் கைககள்  கட்டப்பட்டு,  பங்களாவில் அடைக்கப்பட்டிருந்தவனுக்குப்   பசிக்கு உணவு  மட்டும்  கொடுக்கப்பட்டது. அந்த இருவரும் அவனைப்  பார்த்துக்  கொண்டே இருந்தனர்.    ஞாயிற்றுக் கிழமை மதியத்திற்கு மேல்  தமிழினியனை  விட்டுவிடலாம் என்று  ரெங்கராஜ் சொல்லி இருந்தார்.  மதியம்  பன்னிரண்டைத் தாண்டவே  தமிழினியனை விடுவிக்க எண்ணிக் காரில் ஏற்றி அவனுடன் இருவரும் அமர்ந்து கொள்ள மூவரை ஏற்றிக் கொண்டு கார் திருச்சியை நோக்கிப்  பறந்தது.

   “டே... ஒ காதலிக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு... புத்தியா  பொழைக்கிற வழியப்பாருடா...  என்னா?”  இருவரில் ஒருவன் புத்தி சொல்வது போல் சொன்னான்.

   “வேற ஏதாவது செய்யணுமுன்னு நெனைச்சா...  நீ இருக்க மாட்டாய்... ஏதோ ஒனக்கு ஆயுசு கெட்டின்னு நெனக்கிறேன்...  எல்லாம் ஒ நல்லதுக்குத்தான் சொல்றேன்”  மற்றொருவன் சொல்லிக் கொண்டே தமிழினியனின் கைக்கட்டை அவிழ்த்து விட்டான்.

   தமிழினியன் மறுப்பேதும் சொல்லாமல்  அமைதியாக இருந்தான்.

   “ஒன்னப்பாத்தா பாவமா இருக்கு...  வீடு எங்கே இருக்கு...  அங்கேயே இறக்கி விட்டிடுறோம்... ஒனக்கு எங்கடா வீடு...?”

   “கருமண்டபம்...” என்று  தமிழினியன் சொல்லிய பொழுது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் குரல் இருந்தது.

    காரை வேகமாக ஓட்டச்சொல்லி கருமண்டபம் வந்தவுடன் பஸ்ஸ்டாப்பில் தமிழினியனை இறக்கிவிட்டுக்  கார் சென்றது.

   தமிழினியனால் நடக்க முடியவில்லை;  மிகுந்த சிரமப்பட்டு நடந்து ரோஸியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

   ரோஸி தமிழினியன் வந்ததை அறிந்து  வெளியில் ஓடி வந்து  ”என்ன நடந்தது?  ஏன் தனியாக வருகிறீர்கள்?  சசிரேகா எங்கே?” கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.  தமிழினியன் நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விவரித்துச் சொல்லி முடிப்பதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டது.  அவன் சொல்லியதைக் கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதாள் ரோஸி.

   “சரி... அம்மா எப்படி இருக்காங்க...?”  தமிழினியன் கேட்டான்.

   அம்மா  எதுவும் சாப்பிட முடியாமல் வலியால் துடித்ததையும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையும்,  டாக்டர் சொன்னதையும் எல்லாம் அழுகையைத் துடைத்துக் கொண்டே சொல்லி முடித்தாள்.

   “ரோஸி... நல்லா கேட்டியா... இன்னும் ஆறு மாசம்தான் அம்மா உயிரோட இருப்பாங்களா...?”

   “.  ஒங்க அம்மாவுக்கு கேன்ஸர் போர்த் ஸ்டேஜ்ங்கிறத... ஒங்கள்ட்ட     அதச் சொன்னா நீங்க ரொம்ப கவலைப்படுவீங்கன்னு...  டாக்டர் ஒங்கள்ட்ட சொல்லலையாம்...”  இதைக் கேட்ட தமிழினியன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

   “சரி... அழாதிங்க... அழுது என்ன ஆகப் போகுது...?” ரோஸி  தமிழினியனின் கண்ணீரை அவளின் விரல்களால்  துடைத்து விட்டாள்.

   “அம்மா... எப்படி இருக்காங்க...?”

   “ஒங்களத்தான் எப்ப வருவீங்க...  எப்ப வருவீங்கன்னு...  சரியா சாப்பிடாமக்கூட   கேட்டுக்கிட்டே  இருக்காங்க...!”  என்று  ரோஸி சொல்லிக் கொண்டிருக்கம் பொழுதே அம்மாவைப் பார்க்க வீட்டிற்குள் தமிழினியன் நுழைந்தான்.  அவனைத் தொடர்ந்து ரோஸியும் வந்தாள்.

   தமிழினியனைப் பார்த்ததும் தங்கம்மாள் படுக்கையில் படுத்திருந்தவள் வேகமாக எழுந்து உட்கார்ந்து,  தாய்ப்பாசம் பொங்கக் கேட்டாள் , “வாப்பா... எ ராசா...  இந்த அம்மாவ விட்டுட்டு எங்கப்பா போயிருந்தா...?”

   “இல்லம்மா...  படிக்கிறது சம்மந்தமா  ஒரு அவசர   வேலை...  அதான் வெளியூர் போக வேண்டியதாச்சு...  இனிமே இதுபோல போக மாட்டேம்மா...!”  தங்கம்மாளின் அருகில் அமர்ந்தான்.

   “எங்கே ஒன்ன பாக்காமலே இந்த உசுரு போயிடுமோன்னுகூட நெனச்சேன்...”

   “ஏம்மா... பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க...?  அதெல்லாம் ஒங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா...”

   “ஒனக்கு தெரியாதுப்பா... நீ போனப்ப எனக்கு ரொம்ப முடியாமப் போயி... இந்தப் பொண்ணுதான்  எ உசிரக் காப்பாத்துச்சு...  எனக்குத் தெரியுதுப்பா இன்னும் ரொம்ப நாளைக்கு நா இருக்கே மாட்டேம்ப்பா...”

   “அதெல்லாம் ஒன்னுமில்ல... சும்மா மனசப்போட்டு குழப்பிக்காதிங்க...”

   “இல்லடா... குழப்பமெல்லாம் ஒன்னும் இல்ல... தெளிவாத்தான் இருக்கு... ஆமா...  நமக்குன்னு யாரு இருக்கா...  ரோஸிக்கும்  நம்பள விட்டா யாரு இருக்கா...  நீ ரோஸிய கண்ணாலம் கட்டிக்கப்பா...!”

தமிழினியன் அம்மாவை அதிர்ச்சியுடன் பார்க்க  “நீ ஒன்னும் பேசாதே...” என்றாள் தங்கம்மாள்.

                                                                                                                       வ(ள)ரும்...


படிக்க  ‘கிளிக்’ செய்க 

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!(12)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.




















                                                                                                                               

வியாழன், 31 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


   அன்று ஞாயிற்றுக்கிழமை  சீக்கிரம்   பொழுது  புலர்ந்தது போலவே  தெரிந்தது.
                                         
                                                                           
                                                                                                           


   ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகே ரங்கராஜபுரம் கே.வி.எஸ். தெருவில் உள்ள கலைப்பிரியா திருமண மண்டபத்தில் இரவில் எரிந்த சீரியல் லைட் இன்னும் எரிந்து கொண்டே இருந்தது.  நகரப் பேருந்துகளிலிருந்தும் இருசக்கர வாகனங்களில் இருந்தும் உறவினர்களும் நண்பர்களும்  சுற்றம் சூழ வருகை புரிய ஆரம்பித்தனர்.

           கல்யாண மண்டபத்தில் காலை டிபன் இட்லி, பொங்கல், கேசரி ரெடியாகி இருந்ததால் வருகைபுரிந்த நெருங்கிய உறவினர்களெல்லாம்  சாப்பிட்டுவிட்டு காபி குடிக்க ஆரம்பித்தனர்.

            திருமணம் முடிந்தவுடன் சாப்பிடுவதற்காகச்  சைவச் சாப்பாடு சமையல் கூடத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை  அதன் சாம்பார் வாசனை சாப்பிட்டவர்களைச் சுண்டி இழுத்தது. 


                                   

   மணமகன் கல்யாணராமனும் மணமகள் சசிரேகாவும் அலங்கரிக்கப்பட்ட காரில் வந்து இறங்கினர்.  காருக்குள் இருந்து மணமகனின் அம்மாவும் அப்பாவும் இறங்கினர்.

   “ஒம்பது முப்பதில இருந்து பத்து முப்பதுக்குள் முகூர்த்த நேரம்... இப்பவே மணி எட்டரையத்தாண்டுது... சீக்கிரம் போயி டெர்ஸ் பண்ணிட்டு ரெடியாகுங்கோ...!” என்று அவசரப் படுத்தினார் திருமண மண்டபத்தில் வரவேற்பில் நின்று கொண்டு வருகின்றவர்களையெல்லாம்  வரவேற்றுக் கொண்டு இருந்த ரெங்கராஜ்.
                                                       
   “அம்மா... நீ அப்பாவ மாடிக்குக் கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்க... பார்வை மட்டுங்கிறதுனால படி தெரியாம விழுந்திடப் போறாரு... கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்கம்மா...” என்று கல்யாணராமன் சொல்லிவிட்டுக் கீழ்த்தளத்தில் இருக்கும் மணமகன் அறைக்குச் சென்றான்.  அவனுடன் அவனது நண்பர்களும் உள்ளே சென்றனர்.

       “பட்டு வேட்டிய மட்டும் கட்டப் போறாய்... சட்டை கிடையாது...!”
நண்பன் நடராஜன் சொல்லிக்கொண்டே பட்டு வேட்டியை நீட்டினான்.

       “ஒன்னோட கட்டு மேனிய பட்டு வேட்டியோட எல்லோரும் இன்னக்கிப் பாக்கப்போறாங்க...” உடனிருந்த மற்றொருவன் கூறினான்.

        “எனக்கே அத நெனச்சா வெக்கமாத்தான் இருக்க... என்னா வழக்கம்டா... சட்டை போடாம...!” என்று மாப்பிள்ளை கல்யாணராமன் கேட்டான்.

         “கேட்டா... அதுக்கு ஏதோ ஒரு காரணம் சொல்லுவாங்கா...!  இதெல்லாம் நம்ம மரபு... அப்படி  இப்படின்னு கதை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க... ஊரோட ஒத்துக் போக வேண்டியதுதான்...பேண்ட் சட்டையை கழட்டிட்டு பேசாம வேட்டியக் கட்டுடா...!” என்று நண்பன் நடராஜன் சொன்னான்.

          கல்யாணராமன் பட்டு வேட்டியக் கட்டிக்கொண்டு தலையைச் சீப்பால் சீவினான்.  முகத்திற்குப் பவுடர் போட்டுத் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மும்முரம் காட்டினான்.  

   சிரேகாவை மணமகள் அறைக்குள் அலங்கரிப்பதற்காக உறவுப் பெண்கள் அழைத்துச் சென்றனர்.  

        “சிரிச்ச முகமா இரும்மா... மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்காத... இன்னக்கித்தான் சிரிச்சிக்கிட்டு இருக்கணும்...!” உறவுக்காரப் பெண் ஒருத்தி உரிமையுடன் சொன்னாள்.

         “இதுக்கு மேல சிரிக்க முடியாதுங்கிறியா... ஆமாமா... இன்னக்கியே சிரிச்சிக்கம்மா...!”  பேசிக்கொண்டே சசிரேகாவைப் பட்டுச்சேலையைக் கட்ட வைத்தனர்.  கழுத்தில் பெரிய நெக்லஸ், தங்கச் செயின்கள், நெத்திச் சுட்டி, இடுப்பில் ஒட்டியாணம், காலுக்குத் தங்கக் கொலுசு எல்லாம் அணிவித்தனர்.  தலையில் தலையில் மல்லிகைப் பூச்சரங்கள் சூடினர்.  உதட்டுச்சாயம் பூசச்சொல்லி வற்புறுத்தினர்.  அதெல்லாம் வேண்டாம் என சசிரேகா மறுத்து விட்டாள்.  தங்க விக்ரகம் போலச் சசிரேகா ஜொலிப்பதைப் பார்த்து பெண்களே அவளைப் பார்த்து ‘‘எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு...’’   உனக்கு  திருஷ்டிதான்  சுத்திப் போடனும்  என்று மணமகள் அறைக்குள் இருந்தவர்கள் சொன்னார்கள்.  அவர்கள் எதைஎதையெல்லாமே பேசிக் கொண்டு இருந்தார்கள்.  சசிரேகா அதையெல்லாம் கேட்கின்ற மனநிலையில் இல்லை.

   ரெங்கராஜ் ‘ பி.எச்.இ.எல்.’லில்  மேனேஜராக இருப்பதால்  கம்பெனியில் இவருக்குக் கீழே பணியாற்றும்  ஊழியர்கள் கூட்டமும் அதிகமாக வரவே மண்டபம் நிரம்பி வழிந்தது.

    “திருமண மண்டபம் என்று பெயர்தானே தவிரப் பேன் வசதிகூட இல்லை... கீத்துக் கொட்டகை... ஒரு நல்ல கல்யாண மண்டபம் கிடைக்கலையா...!.” வந்தவர்களில் ஒருவர்.

   “மேனேஜர் ஏன் இங்க போயிக் கல்யாணத்த வச்சாரு... நம்ம ஏரியாவில நல்ல மண்டபம் எத்தன இருக்கு...?“

   “இல்ல...இல்ல... ரெங்கராஜ் சாருக்கு... ரெங்கநாதர் பள்ளி கொண்டுள்ள  ஸ்ரீரங்கத்தில வக்கணுமுன்னு... அவரோட விருப்பம்... பெருமாள் மேல அவ்வளவு பக்தி...!”

   “ஒங்க விருப்படியெல்லாம் கல்யாணம் வக்க முடியுமா...?  அது அவுங்களோட விருப்பம்... அத விடுங்கப்பா... மணமேடை நல்லா அலங்கரிச்சிருக்காங்க... பாத்தியா... வீடியோகாரர் நம்பள எல்லாம் படம் எடுத்திட்டு வர்றாரு... நல்லாப் போஸ் கொடுங்க...?”

   “ஆமாமா... அப்பத்தான் கல்யாணத்துக்கு நாம வந்தது தெரியும்... சும்மா சொல்லக்கூடாது... செலவு செய்ய வேண்டியதுதானே... ஓரே பொண்ணு...  அமெரிக்க மாப்பிள்ள.... இருக்கிறவன் அள்ளி முடிய வேண்டியதுதான்...” - கம்பனியில் பணி புரிபவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு மாடியில் போடப்பட்டிருந்த  சேரில் அமர்ந்திருந்தனர்.

   மணமேடையில் அய்யர் வந்து அமர்ந்து ஹோமம் வளர்க்க ஆரம்பித்தார். மந்திரங்களைச் சமஸ்கிருதத்தில் ஓத ஆரம்பித்தார்;  அவர் ஓதுவது யாருக்குப் புரியும்?  மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெய் வார்க்க ஆரம்பித்தார்.  லேசாகப்  புகையுடன் தீ மெல்ல எரிந்தது.  தொடர்ந்து மந்திரங்களை ஓதிக்கொண்டே இருந்தார்.  
                                         
   
   சுமார் அய்நூறுக்கும் மேல் உறவினர்களும் நண்பர்களும் அந்த மாடியில் கூடிவிட்டனர்.   காலைச் சூரியனின் வெயில் சுள்ளென அடித்தது;  கூட்டம் நிரம்பி வழிந்ததாலும் மண்டபத்தின் மாடியில் கூரை வேயப்பட்டிருந்ததால் திருமண அரங்கத்தில் இருந்தவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது.

   வீடியோகிராபர் இதையெல்லாம் சுற்றி வளைத்துத்  தன் கேமராவிற்குள் படமெடுத்துக்  கொண்டிருந்தார்.

   “நாழியாகுது... சீக்கிரம் மாப்பிள்ளயக் கூட்டிண்டு வாங்கோ...!” அய்யர் அவசரப்படுத்தச் சிறிது நேரத்தில் பட்டுவேட்டி கட்டிய மாப்பிள்ளையை மணமேடைக்கு  அழைத்து வந்தனர்.
                                       


   தூரத்தில்  படமெடுத்துக் கொண்டிருந்த  வீடியோகிராபர்  மணமகன் வருகை புரிந்ததை அறிந்து வேமாக ஓட்டமும் நடையுமாக  மணமேடை அருகே வந்தார்;  வந்தவர் ‘போகஸ்’  விளக்கின் பிளக்கைச் சொருகினார்.  அடுத்த நொடியே ‘டமார்’ என  போகஸ் லைட் வெடித்து, கேமராவுடன் யாகத்தீயில் விழுந்தபொழுதே, அய்யர் கையில் இருந்த நெய் சொம்பைத் தட்டிவிட்டுத் தீயில்  கவிழ்ந்தது.   ‘டமார்...டமார்...’ சப்தம் கேட்க தீச் சுவாலை மேலெழும்ப மணமேடையே ஒரே புகைமூட்டமாகிக்  கூரையில் தீ பற்றியது.   தீ மிக வேகமாகப் பரவியது.  திருமணத்துக்கு வந்து மாடியில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக எழுந்து கீழே இறங்க ஓடினர்.  கூட்டம் முழுக்க ஒரே நேரத்தில் ஓட முனைந்ததால் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு கீழே விழுந்தனர்.

    கீழே மணப்பெண் அறையில் இருந்த சசிரேகாவை  உறவுப் பெண்கள்  சரியான நேரத்தில் மண்டபத்தைவிட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர்.

   மணமகன் கல்யாணராமன் வேகமாக ஓடி அவனின் அம்மாவிடம் ‘ ‘‘அப்பாவை நான் தூக்கிகொண்டு வருகிறேன்... நீங்க வெளியே போங்க...” என்று சொல்லிவிட்டு;      பார்வை சரியாகத் தெரியாத தனது அப்பாவைத் தூக்க முனைந்தான்;  அவர் கனமாக இருந்ததால் அவனால்  தூக்க முடியவில்லை.  ‘‘யாராவது அப்பாவைத் தூக்க உதவுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினான்.  அவரவர் தப்பித்தால் போதும் என்று  ஓடுவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

   மாடிப் படிகள் மிகக் குறுகலாக இருந்ததால் ஓடியவர்களால்  வேகமாக வெளியேற முடியவில்லை. கூட்டம், கூட்டமாக முட்டிக் கொண்டு அவர்கள் கீழே விழுந்தனர்.  நெரிசல் மற்றும்  குழப்பத்தால் பெரும்பாலானவர்கள் மாடியைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை.   மாடியில் இருந்து இறங்கும் இடத்திலும் தீப்பிடித்துக் கொண்டது. படிகளை அடையமுடியாமல் பலரும் தவித்தனர்.  தீ மிக வேகமாகப் பரவியது. தீப்பிடித்த கூரை சரிந்து விழுந்தது.    அங்கிருந்தவர்களின் உடைகளில் தீப் பற்றிக் கொண்டது.    புகையில் பலர் மயங்கி விழுந்தனர்.  மண்டபத்தின் மர ஜன்னல்கள், கதவுகளிலும் தீவேகமாகப் பரவி எரிந்தது.

   மண்டபத்தில் ‘அய்யோ...அம்மா...காப்பாத்துங்க...’ என்ற அலறல் சத்தமும் மரண ஓலமும் நீண்ட தூரத்துக்குக் கேட்டது.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஒன்றும் செய்ய முடியாமல் செய்வதறியாமல் திகைத்து  நின்றனர்.


   அங்கு நின்றிருந்தவர்களில் யாரோ ஒருவர் தீயணைப்புப் படைக்குப் போன் செய்தார்..  சில நிமிடங்களில் ஒட்டு மொத்த மண்டபமும்  தீப் பந்தமாக மாறியது. 

   மண்டபம் மிகக் குறுகலான சந்துக்குள் இருந்ததால், வெளியில் இருந்தவர்களாலும் உள்ளே சென்று யாரையும்காப்பாற்ற முடியவில்லை.

   சற்று நேரத்திலேயே திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள்  விரைந்து வந்தன.  எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க வீரர்கள் பலமணி நேரம் போராடினர்.  நீண்ட போரட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது.  அதன் பிறகே வீரர்கள் உள்ளே செல்ல முடிந்தது..  

     திருச்சியில் இருக்கும் அனைத்து ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்ட படுகாயமடைந்தவர்களைத் தீயணைப்புப் படையினர் மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தனர்.  திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ்கள் பறந்தன. 

        “ எங்க என் மாப்பிளை எங்க என் மாப்பிள்ளை ?” என ரெங்கராஜ் கதறியபடி மாடிப்படியில் ஏறத் தொடங்கினார்.  

   
                                                                                 வ(ள)ரும்...
படிக்க  ‘கிளிக்’ செய்க 

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!(12)


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.


















Related Posts Plugin for WordPress, Blogger...