சனி, 30 ஆகஸ்ட், 2014

பாய்மரம் - சிறுகதை


                                       
          ‘இந்த அவசரநிலைப் பிரகடனம்-  சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்காது என்று உறுதிகூற விரும்புகிறேன்.  ஏழைகளின் துயர்களைத்  துடைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’  இப்படிப்  பிரதமர்  நாட்டு மக்களுக்குத்  தொலைக்காட்சி,  வானொலி மூலமாக உரையாற்றினார்.
          பிரதமரின் உரை மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இரவில் பெற்ற சுதந்திரம், அதே இரவில் தொலைந்து போய் விடுமோ?  ஜனநாயகம், சட்டம், நீதி, அடிப்படை மனித உரிமைகள் எல்லாம் கனவாகிப் போய் விடுமோ?  என்ற அச்சம் அரசியல்வாதிகளின் மனதில் முளைவிட்டது.

          மறுநாள் காலைப்பொழுதும் மக்களைப் போல பயந்து கொண்டே விடிந்தது.  எதிர்க்கட்சிகள் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து கோட்டையை நோக்கி ஒரு பேரணிக்கு அழைப்பு விட்டிருந்தததை ஒட்டி மக்கள் ஆயிரக்கணக்கில் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் திரண்டனர்.

          ‘மீண்டும் ஒரு சுதந்திரப் போர்’  கரகோஷங்கள் கோட்டைக்குக் கேட்க வேண்டுமென,  அந்தச் சாலையில் பேரணி புறப்படத் தயாரானது.  இதையெல்லாம் தெரிந்தே அரசாங்கம் ஊர்வலத்திற்கு முன்கூட்டியே தடை விதித்திருந்தது.  தடையை மீறி ஊர்வலம் புறப்பட்டது.

          சிவா  கையில் புத்தகங்களுடன் வழக்கம் போலக்  கல்லூரி செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டான்.  சிவா ஆறடிக்கும் மேலே,  மாநிறம், அரும்பிய மீசையை மழித்திருந்தான்.   அவனது நடை மட்டுமல்ல, உடம்பும் பட்டாளத்துச் சிப்பாயைப் போல வாட்ட சாட்டமாக இருந்தது.

          சாலையோரமாக நடந்து வந்த சிவா, சாலையைக் குறுக்கே கடந்து செல்ல நினைக்கையில், அந்த பெரிய ஊர்வலம் சாலையில் ஊர்ந்து வந்தது.  சிவா எதிரே மணிக்கூண்டைப் பார்க்க , கல்லூரி துவங்க இன்னும் சிறிது நேரமே இருப்பதைக் காட்டியது.  வேகமாக ஊர்வலத்தின் இடையே புகுந்து சாலையைக் கடக்க முனைந்தான்.

          காவல்துறை வேனில் போலீஸ்காரர்கள்  அதிகம் பேர் திடீரென வந்து இறங்கினர்.  லத்தியைத் தூக்கிக்கொண்டு கூட்டத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.  போலீஸ்காரர்கள் தன்னை அடித்துவிடுவார்களோ என்று எண்ணிய கூட்டம் நாலாபக்கமும் சிதறி ஓடியது.  சிவாவை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினர்.  சிவா  ஒதுங்க நினைக்கையில் யாரோ ஒருவனால் தள்ளப்பட்டு கையில் உள்ள புத்தகங்கள் நழுவ, கீழே விழுந்தான்.  எழுந்து நிற்க முயலு முன்னே தன்னைப் பல பேர் மிதித்துக் கொண்டு ஓடுவதை அவனால்  உணர முடிந்தது.  சிறிது நேரத்தில் கண்கள் இருள  மயங்கினான்.
          சிவா மயக்கம் தெளிந்து கண்ணைத் திறந்தான், காவலர்கள் சூழ்ந்திருக்க காவல் நிலையத்தில் இருந்தான்.  சிவாவோடு  இன்னும் சிலரும்  அங்குகொண்டு வரப்பட்டிருப்பது  தெரிந்தது.
                                                               
          “தடையைமீறிஊர்வலம் நடத்தியதற்காக...அரசைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியவர்கள்’ என்று சொல்லி மனிதாபிமானமற்ற முறையில் போலீஸ்காரர்களால் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர்கள்  லத்திகளால் விளாசப்பட்டு சித்ரவதைப் படுத்தப்பட்டனர்.

          சிவா தனக்கும் ஊர்வலத்திற்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்றும், தான் ஒரு கல்லூரி மாணவன் என்றும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் போலீஸ்காரர்கள்  அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.  போலீஸ்காரர்கள் சிவாவின் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்றி ஊற்றி நரம்பிலேயே அடித்தார்கள்.

          அன்று இரவு பிள்ளைப்பூச்சியை வயிற்றில் கட்டினார்கள்.  அது சதையைச் சுரண்ட சிவாவிற்கு உயிர்போய் உயிர் வந்தது.  எஞ்சிய இரவு முழுவதும் நடந்து கொண்டே இருக்கச் சொன்னார்கள்.  சிவா நடக்கக்கூட முடியாமல் நின்றால் கூட, காக்கிச் சட்டையின் லத்திகள் கொடுமையாகப் பதம் பார்த்தன.  பிறகு தரையில் அமரச் சொல்லி கணுக்காலில் லத்தியால் அடித்தார்கள்.  சிவாவின் அலறலும், அழுகையும் நான்கு சுவர்களிலும் எதிரொலித்தன.  

          “சத்தம் போடக் கூடாது...மீறிச்  சத்தம் போட்டால் கொன்னுப் போட்டுடுவோம்”-போலீஸ்காரர்கள் சிவாவை மிரட்டி,  இரண்டு கையையும் தூக்கச் சொல்லி, கழுத்துக்கும் கைக்கும் நடுவில் லத்தியை நுழைத்துத் திருக, வலியால் துடித்த  சிவா மயங்கித்  தரையில் துவண்டு  விழுந்தான்.

          மயக்கம் தெளிந்து கண் விழித்தபொழுது, சிவாவிற்குத் தன் அம்மா ஞாபகம் சட்டென வர கண்கள் குளமாயின.  தந்தை தன்னை விபரம் தெரியாத வயதில் அம்மாவிடம் விட்டு விட்டு இறந்து போக, அம்மா இட்லிக் கடையை வைத்து... தான் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக, கஷ்டப்பட்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்ததை எண்ணிக் கலங்கினான்.

          ஒரு நாள் வகுப்பாசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டதும் நினைவிற்கு வந்தது.  ‘நீங்க படிச்சிட்டு என்னவாகப் போகனுமுன்னு நினைக்கிறீங்க?’

          ஒவ்வொருவரும் டாக்டர், என்ஜினியர், லாயர்,சயின்டிஸ்ட், டீச்சர் எனப் பலவாறு தங்களின் கனவுகளைச் சொன்னார்கள்.  

          சிவா எழுந்து நின்று பெருமையுடன் ,  ‘கலெக்டராகணும்’-என்றான்..

          “என்ன? பில் கலெக்ட்ரா...? ”ஆசிரியர் எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டே கேட்டார். 

           “நோ...சார்... டிஸ்ட்டிக் கலெக்டர்” - ஆசிரியர் தெரியாமல் கேட்பதாக நினைத்துக் கொண்டான்.

          “டே...டே...! அதெல்லாம் உன்னாலே முடியாதுடா...!அதுக்கெல்லாம் வேற பயலுக  இருக்கானுக...”-ஆசிரியர் சிவாவின் பின்னணியைக்  கிண்டல் செய்ய மாணவர்களெல்லாம் கொல்லெனச் சிரித்தனர்.  சிவாவிற்கு அது பெருத்த அவமானமாகப்பட்டது.  பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து, தன் அம்மாவிடம்  நடந்ததை சொல்லி, அவ்வளவு  நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்க முடியாமல் கேவிக் கேவி அழுதான்.  

          “டே...! சிவா...யாரு சொன்னா என்னடா...ஒன்ன நா படிக்க வக்கிறேண்டா...என் புள்ள ஜில்லா கலெக்டரா வரணும்... நிச்சயம் வருவேடா...” என்று ஆறுதல் கூறியவாறு சிவாவின் கண்ணீரைத் தனது முந்தானையில் துடைத்தாள் கமலாம்மாள்.

          சிவா கலெக்டராக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்தான்.  நடந்து முடிந்திருந்த  செமஸ்டர் தேர்வுகளிலும் முதல்  மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.  வாழ்க்கை சுகமாகும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது,  இப்படி வாழ்வு சுமையாகிப் போனதே என்று நினைத்து நினைத்து அழுதான்.

          சிவா கைதாகி இருப்பதை அறிந்த கமலாம்மா துடிதுடித்துப் போய் ஓடி வந்தவள்,  அனுமதி வாங்கிக்  கொண்டு உள்ளே வந்தாள்.  அம்மாவைப் பார்த்ததும் விழியிலிருந்து கண்ணீர் செந்நீராக வழிந்தது.  கமலாம்மாள் கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டாள்.  

          “அம்மா..!. நா எந்த தப்பும் செய்யலம்மா... அரசுக்கு விரோதமா செயல்பட்டேன்னு..!.என்னைக் கிரிமினல்ன்னு சொல்லி உள்ள வச்சிட்டாங்கம்மா..!.”அழுது கொண்டே சொன்னான்.

          “அழாதே சிவா..! அழாதே...!.ஒங்க அப்பாகூட சுதந்திரத்துக்காக ஜெயில்ல இருந்துதான் செத்தாரு...அன்னைக்கு இருந்த அந்த அரசும்...அவரை கிரிமினல்ன்னுதான் சொல்லிச்சு...ஆனா இப்ப அவரைத்  தியாகின்னு சொல்லலையா?    நீ கவலைப்படாதே....!”

          “அம்மா...! எ... கனவு... இலட்சியம்...?” ஏக்கத்துடன் கேட்டான்.

           “கலெக்டராகனுமுன்னு நெனச்ச...டே! சிவா...!அந்த கலெக்டரே கைகட்டி...ஒங்கிட்ட நின்னு பதில் சொல்ற அளவுக்கு நீ பெரிய மனுஷனா வருவடா..!.நிச்சயம் வருவாய்..! எனக்கு நம்பிக்கை இருக்கு...ஆமா...!ஒன்ன எப்ப வெளியே விடுவாங்க...?”

          “தெரியலம்மா...!” ஏக்கப் பெரு மூச்சுவிட்டான்.

          கமலாம்மாவின் அருகில் காவலர் வந்து,  “பேசினது போதும்...போங்கம்மா... நேரம் ஆயிடுச்சு” என்று வெளியே வலுக்கட்டாயமாக விரட்டி  அனுப்பி வைத்தார்.

          சிவா தலைகுனிந்து கன்னத்தில் கைவைத்தவாறு  அமர்ந்தான். 
          அருகில் ஒருவன் வந்து நிற்க, சிவா தலைநிமிர்ந்து பார்த்தான்.

          “எந்த தப்பும் செய்யாத நம்பள...இப்படி அநியாயமா இங்க வச்சிட்டாங்களே...!  யாருக்கும் தெரியாம...இங்க இருந்து தப்பிச்சு போயிடலாமா....? ” என்று சிவாவின் காதருகே அவன்  மெதுவாகக் கேட்டான்.

          “.............................................................................................”
-அவனின் கேள்விக்கு பதில் எதுவும் கூறாமல்  சிவா புன்முறுவல் பூத்தான்.

          “தப்பிச்சு போயி...போராளியா மாறிடலாமா...? -அவன் மீண்டும் கேட்டான்.

          சிவா மௌனமாக அவனைப் பார்த்தான்.  அந்த மௌனத்திற்கு  அர்த்தம் புரியவில்லை!.

                                                                                                 -மாறத அன்புடன்,

                                                                                                   மணவை ஜேம்ஸ்.

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...