பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 4
பிழையான சொல் ‘சிவப்பு’ வண்ணத்திலும்...
பிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1. நல்ல சமுதாயத்தில் ஏற்றத்
தாழ்வுகள் இருக்காது.
அஃறிணைப் பன்மையில் ‘இரா’ என்று முடிய வேண்டும்.
நல்ல சமுதாயத்தில்
ஏற்றத் தாழ்வுகள் இரா.
2. தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் சிலவற்றில் ‘காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை’ என்று
எழுதுகிறார்கள்.
‘சித்திரிக்கப்பட்டவை’ என்று எழுதுதல் வேண்டும்.
‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது நினைவு கூரத்தக்கது.
3. மேசையின் மேல் உள்ள அந்தப் பழங்கள் நல்லவை இல்லை.
பழங்கள் இருக்கின்றன. ஆனால் அவை
நல்லவை அல்ல. எனவே
‘அந்தப் பழங்கள் நல்லவை அல்ல.’
தன்மைப் பொருளை
உணர்த்த மட்டுமே இல்லை என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு சொற்கள்
இணையுமிடத்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துகளை முதலாக உடைய
சொற்கள் வந்தால் அவ்வெழுத்துகள் ஒற்றுகள் மிகுதலும் உண்டு. மிகாமல் இயல்பாதலும் உண்டு.
இங்கே ‘கள்’ என்பது பன்மை விகுதி. அதனால் மிகாது. தனிச் சொல் அன்று. (கள் பெயர்ச்சொல் ஆயின் வேறு பொருள்)
வாழ்த்துகள் – எழுத்துகள் – படைப்புகள் என இயல்பாக நிற்றலே சரியானது.
‘கள்’ என்னும் விகுதி – ஒரு சொல்லில் அடங்கியதேயன்றித் தனிச்சொல் இல்லையாதலின்
புணர்ச்சி விதிகளுக்கு இடமில்லை.
இனிப்புக்கள் – இனிப்புச் சுவையுடைய கள் என்ற பொருள் கொள்ள
வாய்ப்பிருக்கிறது.
இனிப்புகள் – என்றெழுதுவதே
சரியானது.
அவ்வாறே கருத்துகள், தலைப்புகள் என்பனவுமாம்.
5. பசும்பாலா? பசுப்பாலா?
வாழை மரத்தினுடைய பழம் – வாழைப்பழம் என்பது போன்றே
பசுவினுடைய பால் – பசுப்பால் ஆகும்.
பசும்பால் – பசுமையான பால், பச்சையான பால் என்ற பொருளாகி விடும்.
(ஆனால் பேச்சு வழக்கில் ‘பசும்பால்’ என்றே
குறிப்பிடப்படுகிறது)
6. தேனீரா? தேநீரா?
தேன்+ நீர் – தேனீர் – தேன்போன்று இனிக்கும்
‘நீர்’ என்று பொருள் தரும்.
தேநீர் – தே+நீர் – தேயிலைத்
தூளிலிருந்து எடுக்கப்படும் நீர். ஆதலின் ‘தேநீர்’ என்பதே சரியானது.
7. குடக்கூலியா?
குடிக்கூலியா?
குடக்கூலி – குடம்+கூலி – எனப்பிரித்து
குடம் செய்தவர்க்குக் கூலி
எனப் பொருள் தரும்.
குடி+கூலி – குடியிருப்பதற்கான கூலி – என்பதே சரியானது.
8. மென்மேலும் – மேன்மேலும்
மேலும்
மேலும்- அடுக்குத் தொடர்.
மேலும்
மேலும் என்ற சொல் மேன்மேலும் என்ற
மாறியுள்ளது. ஆதலின் மென்மேலும் என்பது பிழையானது.
‘மேன்மேலும்’ என்பது சரியானது.
பிழையான சொல் ‘சிவப்பு’ வண்ணத்திலும்...
பிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
9. ‘என்று – என்னும்’ சொற்கள் பயன்படுத்தும் விதம்
இவனுக்கு முருகன் என்று பெயர்.
இவனுக்கு முருகன் என்பது பெயர்.
இந்தியாவின் அருகில் நேபாளம் என்ற நாடு இருக்கிறது.
இந்தியாவின் அருகில் நேபாளம் என்னும் நாடு இருக்கிறது.
என்ற – இறந்த காலப் பெயரெச்சமென்பதால் தவறாகிறது.
பெயர்ச் சொல்லிற்கும் பெயர்ப் பதிலிக்கும் இடையே ‘என்று’ என்னும் சொல் வரலாம்.
(எ.கா) பாரியென்று ஒருவன் உளன்.
(தொடரும்...
நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.