சனி, 11 ஜூலை, 2015

உயிர் மெய்...! -சிறுகதை.


                                  உயிர் மெய்...!    -சிறுகதை

                                                       (மணவை ஜேம்ஸ்)





     அதிகாலை வேளை விடியும் பொழுதில் கோழி கூவியது.  கோழி கூவித்தான் பொழுது விடியாது என்றாலும், உறங்கிக் கொண்டிருந்த இராதகிருட்டிணனின் உறக்கத்தை அது கலைத்தது.

     சின்னச்சின்ன வட்டங்களாகக்  கோரைப்பாய் கிழிந்திருக்க, அதில் படுத்திருந்த இராதகிருட்டிணனின் உடம்பு தரையில்பட்டு இருந்ததால் சில்லென்ற சிலிர்ப்பை உண்டாக்கியது.   அருகில் மனைவி ஜெயந்தி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.

முப்பத்தைந்து வயதாகிறது ஜெயந்திக்கு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.  இருபது அல்லது இருபத்தைந்து என்றுதான் மதிக்கத்தோன்றும் இளமையுடன் இருக்கும் இவளது வனப்புமிகு தேகம் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறம்.  பௌணர்மி போன்ற பிரகாசமான வட்ட முகத்தில் சின்ன வட்டமாகச்  செந்தூரப்பொட்டு நெற்றியில் இருந்து  சி திறி முகத்தில் ஒட்டியிருந்தது.  அடர்ந்து சுருண்ட கூந்தலில் பூவைச் சூடாமல் இருந்தாலும்கூட பூவையின் கூந்தலில் மணம் இருந்தது .   வியர்வையில் தாலிக்கயிறு குளித்திருக்க, கழுத்தை ஒட்டித்  தரையில் தாலி கிடந்து  ஜெயந்தியின் மேனியை அழுத்த, தாலியை எடுத்து அவளின் மார்புக்கு நடுவில் இழுத்து வைத்தபொழுது அவரையும் அறியாமல் லேசாக விரல் மார்பில்  பட, அனிச்சச் செயலாக கையைத் தள்ளிவிட்டு முன்பு போலவே அயர்ந்து தூங்குவதில் முனைந்தாள்.

     ஜெயந்திக்கு அருகில் படுத்திருந்த மகள், கவிதா உருண்டு தரையில் படுத்து, தூங்கிக்கொண்டு இருந்தாள்.  பதினான்கு வயதான கவிதா பாவாடை சட்டையில் இருப்பவள்.  இன்றைக்கோ நாளைக்கோ தாவணிக்கு வந்துவிடுவாள்.  அப்புறம் கல்யாணம் காட்சி என்று நல்ல வரன் தேடி திருமணம் முடிக்க வேண்டும்.  இவளுக்கென்று எதைச் சேர்த்து வைத்திருக்கிறோம்?  ஒன்பதாவது படிக்கும் போதே இவளைப் பற்றி ஏன் இப்படிஒரு சிந்தனை வருகிறது என்று இராதகிருட்டிணன் நினைக்கும்பொழுது பால்காரனின் மணி அடித்தது.  பால் வாங்க எழுந்து வாசல் வந்தார்.

     “ போன மாசம் பால் பணம் தர முடியலைப்பா... இந்த மாசம் சேத்துக் கொடுத்திடுறேன்”  இராதகிருட்டிணன் கெஞ்சும் குரலில் கேட்டார்.

     “ சார்... நா என்ன பணம்ன்னு கேட்டேனோ.,..?   எனக்குப்  பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியாரு நீங்க... ஒங்கள்ட்ட பணமே வாங்கக் கூடாது...” பால்கார இராமச்சந்திரன் குருபக்தியுடன்  பேசினான்.

     “ அது நியாயம் இல்லை இராமச்சந்திரா... வாத்தியாருன்னு கடனா பால் ஊத்துனாலே போதும்... இந்த உதவிய மறக்க மாட்டேன்.”

     “சார்... பெரிய வார்தையெல்லாம் சொல்லாதீங்க சார்... எம்.காம்.,பி.எட்.படித்த ஒங்களுக்கு அரசாங்கம் வெறும் நானூறு ரூபாய் சம்பளமா கொடுத்து வருதே... உண்மையிலே ஒங்க நிலமையை நெனச்சு வேதனைப்படுறேன் சார்... நீங்க காசைப் பத்திக்  கவலைப்படாதீங்க சார்.  நீங்க பணம் எப்ப வேணுமுனாலும் கொடுங்க... ஒங்களுக்குப்  பால் ஊத்தறது என் கடமை” பாலை ஊற்றிவிட்டுச் சென்றான்.

     1978-இல்  ஹையர் செகண்டரி ஆரம்பித்த பொழுதே அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த இராதகிருட்டிணன் பதினைந்து வருடங்கள் வேலை செய்தும் தற்பொழுது வாங்கும் சம்பளம் நானூற்றி அம்பது ரூபாய்தான் என்பதை நினைத்துப் பார்த்தால் மெய்யாகவே  கேவலமாகத்தான் இருந்தது.

     கதிரவனின் கதிர்கள் வெடித்துச்  சிவப்புப் பிழம்புகளாய் ... இராதகிருட்டிணனின் கண்ணில் பட்டு மேலும் சிவந்தது.  ஜெயந்தியை எழுப்பி டீ போடச் சொன்னார்.

     “நா...டீ போட முடியாது...நீங்க... வேணுமுன்னா இன்னைக்கி டீ போடலாம்”.  -கூந்தலை அள்ளி முடிந்து கொண்டே சொன்னாள்.

     “நா என்னைக்கி டீ போட்டிருக்கேன்...” ஒன்றும் புரியாமல் கேட்டார்.

     “வாடீ...போடீன்னு  என்னை டீ போடலாம்... ஆனா நா டீ போட முடீயாது... ஏன்னா... டீத்தூள் தீர்ந்து போயிடுச்சு...!டீத்தூள் வாங்க துட்டும் இல்லை..!.”

     ஏம்மா என்னைக்கு உன்னைய டீ போட்டு கூப்பிட்டு இருக்கேன், எனக்கு வாய் வருமா? உனக்குத் தெரியாதா? - என்று மனதில் நினைத்துக்கொண்ட இராதகிருட்டிணன்.

     “சீனி இருக்கில்ல...”

     “கொஞ்சம் இருக்கு...”

     “டீ...கூட ஒடம்புக்கு கெடுதிதான்...பால் குடிப்போம்...ஒடம்புக்கு நல்லது...போட்டுக் கொண்டு வா...”

     சிறிது நேரத்தில் தம்ளரில் பாலோடு வந்து இராதாகிருட்டிணனுக்குக்  கொடுத்தாள் ஜெயந்தி.

     “சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க... நா ஒங்களக் கட்டிக்கிட்ட இந்தப்  பதினஞ்சு வருசத்தில என்னோட இருபத்தஞ்சு பவுனு நகையும் வித்தாச்சு... என்னோட கழுத்தில காதுல ஒண்ணும் இல்லேன்னு சொல்றதா நெனைக்காதிங்க... நமக்குன்னு ஒரு பொண்ணு இருக்கா... நாளைக்கு அவளுக்குன்னு...!”

     “வாஸ்தவம்தான் ஜெயந்தி... என்னை என்னச் செய்யச் சொல்றே..?  பேருதான் ஹையர் செகண்டரி வாத்தியாரு...சம்பளமா அரசாங்கம் சொடுக்கிறது நானூத்தி சொச்சம்... இந்தா இன்னைக்கி அடிப்படை சம்பளம் போட்டுடுவாங்க...நாளைக்கு போட்டுடுவாங்கன்னு நம்பியே நானும் பதினைங்சு வருசத்தை இதுல ஓட்டிட்டேன்.... இனி வேற வேலைக்கா போக முடியும்...?.மனித வாழ்க்கையே நம்பிக்கையிலதான் ஓடுது  ஜெயந்தி... நம்பிக்கையோட இருப்போம்... சரி சரி... கவிதாவை..எழுப்பிப்  பாலை குடிக்கச் சொல்லு”-இராதாகிருட்டிணனின் பெருமூச்சில் ஏமாற்றமும் சேர்ந்திருந்தது.

    ஜெயந்தி, கவிதாவை எழுப்பி விட்டு உள்ளே இருக்கும் பாலை எடுத்து குடிக்கச் சொன்னாள்.  மீண்டும் இராதாகிருட்டிணனின் அருகில்  வந்தாள் ஜெயந்தி. 

     “ஏங்க...”

     “என்ன ஜெயந்தி...?”

     “அரிசி இன்னிக்கி மட்டும்தான் வரும்...”

     “போன மாதப் பாக்கி கொடுக்கலை...எப்படிப் போயி அரிசி கேக்கிறது... சரி, இன்னைக்கி இருக்கிறதைப் போட்டு ஆக்கு... ” என்ன பண்றதுன்னே புரியலையே..என்று .யோசித்து யோசித்துப் பார்த்தார்.  இராதாகிருட்டிணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

     “ஏங்க..!. மஞ்சள முடிஞ்சு இந்த மஞ்சக்கயித்தில கட்டிட்டுத்  தாலியை வித்திட்டு வாங்க... அரிசிக் கடன அடச்சிட்டு, மளிகை சாமான் வாங்கலாம்... இந்த தாதலியை அவுத்துட்டு போங்க...”தாலியைக் காண்பித்து ஜெயந்தி கேட்டபெழுது இருவரின் க்ண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

     “இன்னும் நா உயிரோடதானே இருக்கேன்...?”
       -இராதகிருட்டிணனின் வாயைப் பொத்தினாள் ஜெயந்தி.

     “வேற வழி தெரியலைங்க... நா சொன்னது தப்புத்தான்...” கன்னத்தில் போட்டு கொண்ட ஜெயந்தியின் கையைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டே ஆறுதல் கூறினார்.

     “ நமக்குன்னு ஒரு வழி இல்லாமலா போயிடும்...கவலைப் படாதே...”

     “எம்.காம்.,பி.எட்., படிச்ச ஒங்களுக்கே இந்த நெலமை, பத்தாவது பாஸாகாத எனக்கு என்ன வேலை கெடைக்கும்...ஏங்க.. நா சித்தாளு வேலைக்குப் போகட்டா...?”

     “வாத்தியாரு பொண்டாட்டி சித்தாளு... ஊரு என்ன பேசும்?”

     “ஊரா நமக்குச்  சோறு போடுது?”

     “இல்ல... இருந்தாலும் அந்த வேலை எல்லாம் ஒன்னால செய்ய முடியாதும்மா...?  -இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே பாலைக் குடித்து  முடித்தாள் கவிதா.

     “அப்பா... எனக்கு இருக்கிறது ரெண்டு யூனிபார்ம்... அதுல ஒண்ணு கிழிஞ்சு போச்சுப்பா...ஒரு வாரமா இந்த ஒரே யூனிபார்மதான்...ரொம்பக்  கஷ்டமா இருக்குப்பா...”

     “புதுசா ஒரு யூனிபார்ம் வாங்கிட்டாப்  போச்சு...” எப்படி வாங்குவது என்று தெரியாமலே அரசியல்வாதியைப் போல வாக்குறுதியை மட்டும் வழங்கினார். 

     “அய்யா...”-மகள் கவிதாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

     “கொழம்பு வைக்க ஒண்ணும் இல்ல... மாச ஆரம்பத்திலேயே இப்படின்னா... இந்த மாசத்தை இனி எப்படி ஓட்டறது?...”ஜெயந்தி சொல்லிவிட்டு அடுக்களைக்குள் சென்றாள்.

     ஆசிரியர்களின் பதவி, மதிப்பு அவர்கள் பெறும் ஊதியத்தைப்பொறுத்தே அமைகிறது.  ஒருவருடைய பொருளாதார அடிப்படையைக் கொண்டே சமூகம் மதிப்பளிக்கிறது என்பதை மனதில் நினைத்துக்கொண்டே பள்ளிக்குப் புறப்படத் தயாரானார்.  துவைத்துப் போட்ட கதர் வேட்டி சட்டையை வழக்கம் போலத்  தேய்த்துப் போட முடியாமல் எடுத்து உடுத்திக் கொண்டார்.  ஒட்டுப் போட்டுத்தித்திருந்த பழைய செருப்பை ‘ இன்னும் எத்தனை நாளைக்கு என்னுடன் வரப் போகிறாய்’ என்று நினைத்துக் கொண்டே காலில் மாட்டிக் கொண்டார்.

     அவருடன் கவிதாவும் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

     இராதாகிருட்டிணன் வேலை பார்க்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளி நல்லவேளை அதிக தூரம் இல்லாததால் நடப்பதற்கு வசதியாக இருந்தது,  இல்லையென்றால் இந்தப்  போக்குவரத்துச் செலவை எப்படி ஈடுகட்டுவது?

     “அப்பா... இன்னைக்கு டீச்சர்ஸ்  டே..! . ஏதோ கொடிக்குன்னு ஒரு ரூபாய் எங்க டீச்சர் கேட்டாங்க...”-கவிதா சொன்னபோதுதான்... இராதாகிருட்டிணனுக்கு ஞாபகம் வந்தது,  இன்றைக்குப்  பள்ளிக்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பொன்னுச்சாமிநாதன் வருவது.

     “அப்பா...எனக்கு ஒரு ரூபாய் தரணும்...” மீண்டும் கேட்ட பொழுது, பேனா மட்டுமே இருக்கும் சட்டைப்  பாக்கெட்டைத்  தனக்கே தெரியாமல் காசு ஏதும் இருக்கிறதா? என்று இராதாகிருட்டிணன் தடவிப் பார்த்துக் கொண்டார்.  அவருக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்?

     “ஸ்கூல்ல வந்து தர்றேன்...”

     -பகுதி நேர ஆசிரியர் என்ற பெயரில் முழு நேரம் வேலை பார்க்கும் தன்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லையே என்பதை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார் இராதாகிருட்டிணன்.  இருவரும் ஏதும் பேசாமலே பள்ளி வரை நடந்து வந்தனர்.

     என்.சி.சி. ஆசிரியர் இராஜமாணிக்கம் பள்ளிக்குள் இருந்து வருவதைக் கவனித்தார்.  தேவைப்படும்பெழுது இவரிடம் கேட்டால் இல்லையென்று சொல்லாமல் கொடுக்கக்கூடியவர்.  கவிதாவை அங்கேயே நிறுத்திவிட்டு, இராஜமாணிக்கம் அருகில் சென்றார்.

     “சார்...ஒன் ருப்பி...இருக்குங்களா...?”-இராதாகிருட்டிணன் சங்கோசப்பட்டுக் கொண்டே கேட்டார். 

     “இராஜமாணிக்கம் தன் சட்டைப் பையைப் பார்த்தார்.  நூறும் அம்பதுமாகத்தான் இருந்தது.  உள்ளே கையை விட்டு சில்லரை இருக்கிறதா என்று  தேடிப்பார்த்தார்.  நூறையும் அம்பதையும் காண்பித்துச் சொன்னார்,                 “சாரி சார்...ஒன் ருப்பி இல்ல....”
      “பரவாயில்லைங்க சார்...”

      “எஜுகேசன் மினிஸ்டர் நம்ப ஸ்கூல்ல... டீச்சர்ஸ்  டேக்குக் கொடி ஏத்துறதுகுக்  கார்ல வந்துட்டார்... கொடி ஏத்த ஏற்பாட்ட செய்றேன்.”-சொல்லிக்கொண்டே வேகமாகச் சென்றார் இராஜமாணிக்கம்.

     “அப்பா... மணியடிச்சிடுச்சிப்பா...ஒரு ரூபா காசு கொடுங்கப்பா...”
    
     “................................................................”

      “அப்பா...ஒரு ரூபா காசு கொடுங்கப்பா...”

     “டீச்சர்ட்ட... நா காசு கொடுத்துக்கிறேன்... நீபோ...”

     “டீச்சர் அடிப்பாங்க...”-கண்களைத் தேய்த்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

     “அழுதீன்னா ... நா அடிச்சுப்புடுவேன்...சொன்னா கேளு...போ...”
        - கவிதா  பயந்து கொண் டு  அழுதவாறே  சென்றாள்.

      மேடையில் நின்ற கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற, கொடிக்கயிற்றின் சுருக்கை அவிழ்த்தார்.

  
     இராதாகிருட்டிணன் தனது அறையில் வேட்டியைக் கழற்றி உத்திரத்தில்  மாட்டினார், கழுத்தில் சுருக்கிட்டு  முடிச்சை இறுக்கினார்,  கால் உதைத்து.  உயிர் முடிச்சு  அவிழ வாழ்வின் போராட்டம் சில நொடியில் முடிந்து போன பேரமைதியில் பிதுங்கிய அந்தக் கண்களில் அவரைப் போன்ற இன்னும் போராட்டத்தோடு உயிர்வாழும் ஜீவன்களின் வலி உறைந்து கிடக்கிறது. அவரின் எஞ்சியிருந்த மலம் மட்டும் கடைசி எச்சத்தின் மிச்சமாகத் தரையில் கழிந்து கிடக்கிறது.

     கல்வி அமைச்சர்கொடியை ஏற்றிக் கொண்டிருக்கையில் இடையில் வந்த முடிச்சொன்றால் அமைச்சர் ஏற்றிய தேசியக் கொடி கம்பத்தின் உயரத்திற்குப் போக முடியாமல் அரைக் கம்பத்திலேயே நின்று பட்டொளி வீச  இந்தக் சிக்கலைப் பார்த்துச் செய்வதறியாது அனைவரும்  திகைத்து நின்றனர்.


     ‘ என் சாவிற்கு வேறு யாரும் காரணமில்லை...அரசாங்கம்தான்... இறந்தால் கொடுக்கும் அறுபதாயிரத்தை விரைவில் வீட்டிற்கக் கொடுக்கவும்’
-இராதாகிருட்டிணனின் கையில் இருந்த கசங்கிய  தாளில் இந்த வரிகள் எழுதி இருந்தது.

    

                                                                                             -மாறாத அன்புடன்,

                                                                                               மணவை ஜேம்ஸ்.
                

                  (1994-இல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)

                மீள் பதிவு

சனி, 4 ஜூலை, 2015

திரைப்படப் பாடல் போட்டிக்கு அனுப்பிய பாட்டு





வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”


திரைப்படப் பாடல் போட்டிக்கு அனுப்பிய பாட்டு





ஆண்:

           செல்லமே செல்லமே மௌனமா?
கொல்லவே கொல்லவே வேண்டா
மதியைப் பிரியுமா வானம்...
சகியே சொல்வாய்!

பெண்:
                                                                               
         அன்பே!  ஆருயிரே! அனிச்சம் மலர்போல்
நானே... வாடுகிறேன்...
காதலில் விழுந்தேன்
கடுஞ்சொல்ஏனோ?  தீயாய் சுடுகிறதே...ஓ...
திசைதெரியாத மேகமாகியே
விசையின்றி நானே அலைகிறேன்
விதியை எண்ணியே வாழுகிறேன்
            விழிமூடிக் கிடக்கிறேன்
      
ஆண்:
                                                                                     

செல்லமே செல்லமே மௌனமா?
கொல்லவே கொல்லவே வேண்டா!         
மதியைப் பிரியுமா வானம்...
சகியே சொல்வாய்

பெண்:


கண்ணே கனியே மானே மயிலே
எல்லாம் பொய்யா?
இதயத்தையே இடம்மாற்றிய     
திருடா நீயே!  மெய்யே! நீயே
சொல்வாயே வனமாகுதே!  பாலை வனமாகு...தே... ஏ...

ஆண்:
                                                                                                                          பெய்யாய்ச் சீண்டியது மெய்யாக மெய்தான்
      வஞ்சிமலரே உன்னை கெஞ்சுகிறேன்
      கொஞ்சி மகிழ கொஞ்சம் தாராய்?
    
பெண்:

       கொஞ்சநேரத்தில் துடித்தது நெஞ்சமே   
       போதுமே குறும்பு  மாலைதந்து விரும்பு

ஆண்:  
                                                                                                         
         நாணத்தால் நீ சிவந்து
நாயகி நீ விருந்து    
மாலைவரும் வேளைவருமே     விரைந்தே       
ஓலைவருமே...கலங்காதே... மயங்காதே!
    


பெண்:

         சோலையாகுமே நாளும் வாழ்வே
வசந்த காலமினியே...
வாசம் வீசுமினியே                                          
காதல்... பேசும் விழியே    
            காலம்... வாழ்த்துப் பாடும்

ஆண்:

           செல்லமே செல்லமே மௌனமில்ல   
சொல்லவே சொல்லவே வார்த்தையில்ல    
           உள்ளத்தில்  உன்னையன்றி யாருமில்ல
 உள்ளத்தைக் கேட்டுப்பார் பொய்யுமில்ல


பாடல் இசையைக்  கேட்க  கீழே ‘கிளிக்’ செய்யவும். 


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

    









சனி, 27 ஜூன், 2015

கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை...



உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015


                                                                              
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ரூபன் யாழ்பாவாணன் இணைந்துநடத்திய 

 ஆறுதல் பரிசு பெற்றவர்கள்


வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய கவிதை...



இணையத் தமிழே இனி !

பஃறொடை வெண்பா


மணவை ஜேம்ஸ்.



ஆறா வதுபூதம் !  ஆறறிவின் அற்புதம்!

பேறாம்நீ மானிடத்தின் பேராறு கண்டடைந்த

ஆழிநீ என்பேன். அகிலத்தை ஆள்பவளே!

வாழியே எல்லாம் வடித்துத் தருபவளே!

எங்கள் மகாகவிக்குக் கிட்டாப் புதுவார்ப்பு

எங்களுக்குக் கிட்டிட்ட ஈடில்லா மாசத்தி

நீரின்றி யேயமையா ஏதுமே நாட்டினிலே               

நீரிணைப்பாய் அன்புள்ள நெஞ்சத் தவரை

பலதுறை பல்லுறவுப் பெட்டகமாய் இந்த

உலகைச் சமைத்தவளே! உற்றுனில் கற்போம்!

இணையப் பெருவரமே! நீவாழ வாழும்

இணையத் தமிழே இனி!


 

கண்ணீர் இலங்கையாய்க் காட்சிகள் வேண்டாமே!

மண்ணில் புதைந்து மடிந்தது போதுமே!

வென்று மகிழ்ந்தினி வெற்றிக் கொடிகட்டி

என்று விடுதலை என்றைக்குக் காண்போம்?

கனவினில் வாழ்ந்தே கழித்தது போதும்

நனவினில் வாழுகின்ற நாள்வரும் எப்போது?

வாடும் தமிழினத்தின் வாட்டத்தைப் போக்கியே

பாடும் குயில்களெனப் பாரில் மகிழ்ந்து
                                                                 
வலைத்தளம் பற்றுகின்ற வண்ணத் தமிழாய்

கலைத்தனம் மட்டுமின்றி காயம்பட் டோர்க்காய்

இணைப்பாய்த் தமிழனையே ஈழம் கிடைக்க

இணையத் தமிழே இனி!



-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in


  


சனி, 13 ஜூன், 2015

‘இதயங்கள் சங்கமம்’ - நாடகம்.


‘இதயங்கள் சங்கமம்’




ஆத்ம திருப்திக்காக



                    ஆசிரியர்கள் கடைசிவரை ஆசிரியராகத்தான் இருப்பார்கள்.

ஆனால் அந்த ஆசிரியர்கள்தான் பெரிய வழக்கறிஞர்களையும், 

மருத்துவர்களையும்,  ஐ.ஏ.எஸ்,   ஐ.பி.எஸ். அதிகாரிகளையும்,

பேரறிஞர்களையும் உருவாக்குபவர்கள் என்கிற அரிய பணியைச்

செய்கிறார்கள் என்பதால் நான் ஆசிரியர் பணியை அரும்பணியாக ஏற்று

திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன்.  இருந்தாலும் நான்

படிக்கிற காலத்திலிருந்து இன்று ஆசிரியப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும்

இன்று வரை நாடகம் போடுவது, கதை எழுதுவது,  நல்லக் கருத்தை வைத்துக்

குறும்படம் எடுப்பது என்பது என் ஆத்ம திருப்திக்காகச் செய்வது.  சமீபத்தில்

 ஓர் இளைஞன் விபத்துக்குள்ளாகி,  மூளைச்சாவு ஏற்பட்ட காரணத்தால்

அவரின் இதயம் தானமாகக் கொடுக்கப்படுகிறது என்கிற கருத்தை மையமாக

வைத்து,  நான் இயக்கிய ‘இதயங்கள் சங்கமம்’ நாடகத்தில் நான் தமிழக

முதல்வர் அவர்களின் வேடமேற்று நடித்தது ஆயிரம் மடங்கு ஆத்ம திருப்தி.

                                                                                                                                   -மணவை.




                                                                                                                     
_________________________________________________________________________________
தமிழாசிரியர் மணவை  ஜேம்ஸ்.
_________________________________________________________________________________
                                                                                                       நன்றி- பாக்கியா(27-3-2009)




புதன், 3 ஜூன், 2015

கலைஞருக்கு 92-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்




சாதித்த சரித்திரமே!  போராளியின் பூபாளமே!  வாழ்க... வாழ்க...!







 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  

92ஆவது பிறந்த நாளுக்கு...



இத்தமிழ்க் கலைஞனின் 

இதயப்பூர்வமான வாழ்த்துகள்





( ‘இதயங்கள் சங்கமம்’ - என்ற என்னுடைய நாடகத்தில் நான் )


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

manavaijamestamilpandit.blogspot.in
manavaijamestamilpandit@gmail.com

புதன், 20 மே, 2015

தூது - சிற்றிலக்கியம்

தூது 



        ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம்.

         காதலாலோ  துயரத்தாலோ ஆண் அல்லது பெண் தூது அனுப்புவது.
              
         அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு அனுப்புவது;  அவர்களிடம் மாலை வாங்கி வருமாறு தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது. 

                                                           
                ‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்காக  கண்ணதாசன்- தூது செல்ல ஒரு தோழி வேண்டி தலைவியின் பாடல்.

தூது செல்ல ஒரு தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவி                                                  



துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி......................

              ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்திற்காக கங்கை அமரன்  அவர்கள் பூவையும் காற்றையும்  குயிலையும் குருவியையும் மயிலையும் பறவைகளையும் தூது விடுகிறார்.   இந்தப் பாடலைப் பாடிய எஸ். ஜானகி அம்மாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
                                                             
                                                              

செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்றக்  
காற்றே!                                          
என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?
நீ கொஞ்சம் சொல்லாயோ? செந்தூரப் பூவே!

தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்!
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே!
என்ன இனிக்கிது அந்த நினைவதுவே!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!


நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!
கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!
காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!

திங்கள், 11 மே, 2015

கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் - கவிதை.



கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் 


கவிதை இன்று (11.5.2015)  முரசொலி நாளிதழில் வெளிவந்தது.



 பார்வைக்காக:



அண்ணன் காட்டிய வழியில்

கலைஞர் ஊட்டிய மொழியில்


எந்தச் சரிகமபதனிக்குள்ளும்
முடங்கிக்கிடப்பதல்ல மடங்கிக்கடப்பதல்ல
புரட்சிப்பூபாளம்!
சிலந்திவலைக்குள் சிக்கக்கூடியவையல்ல
தந்தை பெரியாரின் கந்தகச் சிந்தனைகள்!
உடையா நடைமுறைச் சிந்தனைகள் அவை
வாழ்வுக்குள் வரமறுக்கும்
கற்பனைக் காவியக்கனவுகள் அல்ல.
வெற்றியின்  முகவரியில் காத்திருக்கும்
வெப்ப வினாக்களின் வெளிச்சவிடைகள்!
கடக்கத் துணிந்தவனுக்குக்
கடலின் எல்லா அலைகளிலும் கதவுகள்
திறந்தே இருக்கும்!
சாதிக்கமுடியாத சாக்கரடீசு-தனது
சந்ததி பெரியார்மூலம் சாதித்துக்கொண்ட
சரித்திரம்தான் திராவிடஇயக்கம்!

செவ்வாய், 5 மே, 2015

அந்தாதி -சிற்றிலக்கிய அறிமுகம்.


அந்தாதி



        அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதியாகும். 

       அந்தம் (இறுதி) ஆதியாக (முதலாக) வருவதால் இப்பெயர் பெற்றது.


       மூன்று முடிச்சு  திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல் அற்புதமான அந்தாதி.  திரைப்பாடலில் வேறு அந்தாதி பாடல் இருந்தால் அறியத்தரலாமே!



வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
 நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
Related Posts Plugin for WordPress, Blogger...