சனி, 3 பிப்ரவரி, 2018

சூடான முறுக்கு ..வடை… காப்பி….!


நினைவலைகளில் நீந்துகிறேன்...! (1)

மணப்பாறை முறு... முறு... முறுக்கே...! 


    மணப்பாறை என்றதும் நினைவுக்கு வரும் இரு விஷயங்கள் முறுக்கும் தண்ணீர்ப்பஞ்சமும் தாம். ஒரு காலத்தில் தண்ணீர்ப்பஞ்சத்தின் விளைவால் மணப்பாறையில் நிற்கும் புகைவண்டிகளின் கழிவறைதோறும் தண்ணீர்பிடித்து அதைக் குடிதண்ணீருக்கும் சமையலுக்கும் பயன்படுத்தக் குடத்துடன் காத்திருந்த பெண்கள் கூட்டத்தை அன்று மணப்பாறை வழியே இரயில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் அறிவர். அரசின் முயற்சியால் இன்று குடிநீர்ப்பஞ்சம் தீர்ந்திருந்தாலும் முறுக்கு இன்றளவும் பிரபலமாக மணப்பாறையின் பெயரைத் தக்கவைத்திருக்கிறது. மணப்பாறையில் தயாரிக்கப்படும்   முறுக்கிற்கு எங்கள் ஊரின் உப்புச்சுவை மிகுந்த நீரும் ஒரு காரணம் என்பது கூடுதல் தகவல்.
   இந்தப் பதிவின் தலைப்பு  அன்றைய திரையரங்குகளில், திரைப்படங்களின் இடைவேளைகளில் இருக்கைகளின் ஊடே நடமாடிய பல  விற்பனையாளர்களின் தொனியை நினைவு கூர்ந்து வைக்கப்பட்டது. 


        எனது பள்ளிப்பருவத்தில் ஆகப்பெரும் சாதனையாகத் திரைப்படம் பார்க்கக் கிடைத்த அனுமதியோடு பெரும் கனவாகத் தங்கிவிட்ட இந்த  நொறுக்குத் தீனிகளை நினைவு கூர்வதோடு மட்டும் அல்லாமல் ஒரு சிறுவனாய் என் மனதைப் பாதித்த அந்தக் காலத் திரைப்படங்கள் மற்றும் அதனை ஒட்டி ஒரு நாடகக் கதாசிரியனாய், இயக்குநராய் பரிணமித்த என் அனுபவங்களைப் பதிவு செய்வதாய் அமைத்துக் கொள்கிறேன்.
ஒரு திரைப்படம்  பன்னிரண்டு வயதுச் சிறுவனை என்னவென்றே தெரியாமல் பித்துப் பிடித்து அலைய வைக்க முடியுமா என்றால்......ஆம் அப்படி அலைய வைத்தது. அந்தப் படத்தின் பெயர் பூம்புகார்.
அதைப் பார்த்தபோது அதை யார் இயக்கியது அதன் வசனகர்த்தா யார் என்பது பற்றியெல்லாம் தெரியாமல், அதில் வரும்,
 “பூம்புகார்... இதுதான் இன்றையப் பூம்புகார் காவிரிப்பூம்பட்டிணம்.....................”

என்ற வசனத்தை மனப்பாடம் செய்து எனக்கு நானே சொல்லித் திரிந்தேன்.
அதில் என்ன இருக்கிறது ஏன் என்னைக் கவர்ந்தது என்ற காரண காரியங்கள் ஏதும்  தெரியாமல், என்னை உள்ளீர்த்தது திரைத்தமிழ்.
‘கிளிக் செய்க’
   இப்படியெல்லாம் பேசவும் எழுதவும் முடியுமா என வியந்தும் மயங்கியும் பித்துப்பிடித்திருந்த காலம் அது.
    சூடான முறுக்கு வடை காப்பி எனும் நாச்சுவையின் ஈடுபாட்டில் இருந்து விலகி, திரைப்படத்தில் வரும் வசனங்களில் மோகம் கொண்ட செவிச்சுவை அதற்குப்பின் வாய்த்தது.
   செல்வத்துள் எல்லாம் தலை என வள்ளுவன் இதற்குத்தான் சொல்லியிருக்கிறான் என்ற குறளோடு கருத்தொருமித்த காலம் அது.
படைப்பும் படைப்பாளனும் சுயம்பு அல்ல.  அதுவும் அவனும் தனக்கு முன்பே உள்ள கலைகளின் தாக்கத்திலிருந்தே தனது ஆக்கத்தைத் தொடங்குகிறான்  என்பது பிறகு நான் நாடகங்களுக்கு வசனங்களை எழுத ஆரம்பித்த பின் புரியத் தொடங்கியது.
       நாடக மேடைகள் எனக்குப் பல்வேறு அனுபவங்களைத் தந்தன.
சூடான முறுக்கும் வடையும் காப்பியும் கனவாய் இருந்த காலம் மாறி கதைமாந்தர்களையும் வசனங்களையும் நடிப்பையும் ஒன்றிணைத்து நிழலை நிஜமாக்குவேன் என்று ஒருபோதும் அன்று நான் எண்ணியதில்லை.
      ஆனால் அது நிகழ்ந்தது.
    எப்படி என்பதையும் அதில் எனக்கு ஏற்பட்ட பல்வேறு சுவையான அனுபவங்களையும் அடுத்தடுத்துப் பகிர்கிறேன்.

                                                 -அடுத்து வரும்...


 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

8 கருத்துகள்:

 1. அருமையான தொடக்கம் மணவையாரே...

  காணொளியில் கலைஞர் பேசிய க(ன்)னித்தமிழ் கேட்டு மகிழ்ந்தேன்.

  மணப்பாறையில் நானும் ஒருநாள் முறுக்கு வாங்கி வந்த நினைவுகள் வந்தன... 27 வருடங்களுக்கு முன்பு.

  தொடர்கிறேன் ஆவலாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. மணப்பாறை முறுக்கு போலவே உங்கள் பதிவின் சுவையும் சிறப்பு. மேலும் படிக்க ஆவலுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் ஆவலுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வணக்கம் ஐயா,

  நலமா ? நீண்ட நாட்களாகிவிட்டது...

  மிக சுவாரஸ்யமான ஒரு வாழ்வியல் கட்டுரைக்கு அச்சாரம் போட்டிருக்கிறீர்கள்...

  " சூடான முறுக்கு வடை காப்பி எனும் நாச்சுவையின் ஈடுபாட்டில் இருந்து விலகி, திரைப்படத்தில் வரும் வசனங்களில் மோகம் கொண்ட செவிச்சுவை அதற்குப்பின் வாய்த்தது... "

  மிக அருமையான வரிகள்...

  தொடருங்கள்...தொடருவோம் !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
  http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   வணக்கம். நலம். நாடுவதும் அதுவே.

   தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.


   நீக்கு
 4. தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே
  தொடர்ந்து வாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரந்தையாரே!

   தொடர்ந்து வருகிறேன் அய்யா.

   மிக்க நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...