சனி, 24 பிப்ரவரி, 2018

நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.


நினைவலைகளில் நீந்துகிறேன்...!(2)

நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.
பூம்புகார் பார்த்துத் திரைப்பட வசனங்களை உருப்போட்டிருந்த எனக்கு, முதலில் தோன்றியது நான்மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு பேசிப்பார்த்த அந்த வசனத்தைப்போல் நாமும் பலர்முன்னிலையில் பேசிப் பாராட்டு வாங்கிவிடவேண்டும் என்ற ஆசைதான்.

ஆறாம் வகுப்பில் நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறவர்கள் கையைத் தூக்கலாம் என்ற அறிவிப்பிற்கு, தான்முந்துற்ற முதல் கை எனது கையாகத்தான் இருந்தது.
பெயர் எழுதிக் கொண்டார்கள்.
நாடகத்திற்கான கதாபாத்திரங்களை மறுநாள் தெரிவு செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.
அன்றிரவெல்லாம் உறக்கம் வரவில்லை.
எப்பொழுது கண்ணயர்ந்தேனோ தெரியாது.


வாளுயர்த்திய இளவரசனாய், மணிமகுடம் தரித்து, அரியணை ஒன்றில் அமர்ந்து, புரவிகளில் பயணித்து,  வில்லேந்தி, பகைபுலம் அழித்து, வெற்றி வெற்றி என்று கூக்குரலிட்டு எழுந்தபோது கனவு கலைந்திருந்தது.
பள்ளிக்குச் சென்று நாடக நடிகர் தேர்விற்கான அழைப்பிற்காகக் காத்திருந்து, அழைப்பு வந்ததும் ஆவலோடு ஓடிச் சென்ற என்னிடம், ஆசிரியர் கட்டை ஒன்றை  வலதுகைக்கு இடையில் கொடுத்து, ஒருகாலைப் பின்னியபடி ஒருகாலால் தாங்கித்தாங்கி நடந்து காட்டச் சொன்னார்.
நடந்து காட்டிய என்னைப் பார்த்து,
“சபாஷ்! நொண்டி கதாபாத்திரம் கனகச்சிதமா பொருந்துதுடா உனக்கு! நம்ம நாடகத்தில நீதான் நொண்டி!” என்றார்.
குதிரை கீழே தள்ளிக் காலால் உதைத்தது.
சிம்மாசனம் தகர்ந்தது.
செங்கோல் ஊன்று கோலாய் மாறியிருந்தது.

முதன்முதலில் நொண்டிப் பேரனாக நன்றாக நடித்தேன் என்ற பெயர் கிடைத்தது.

  நாடகத்தில் நடிப்பதற்கு இன்னொரு காரணம் ஒத்திகை என்று வகுப்பிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

அடுத்த ஆண்டு…
நான் படித்துவந்த பள்ளியிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த மணப்பாறை, தேசிய நடுநிலைப்    பள்ளியில் சேர்த்துவிடச்சொல்லி அடம்பிடித்துச் சேர்ந்தேன். 
அந்தப்பள்ளி நாடகங்களுக்காகவே பெயர்பெற்ற பள்ளி.
அந்தப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் திரு.ஞானஆரோக்கியம் அவர்கள் எனக்கு மாமா முறை வேண்டும்.  ஆனால் ஒருநாள்கூட  அவரை நான் மாமா என்று அழைத்ததே இல்லை. மாணவர்களைக் கொண்டு வெற்றிகரமான நாடகங்களை நடத்துவதில் பெயர்பெற்றிருந்தார். அந்த ஆசிரியருக்காவே அந்தப்பள்ளியில் சேர ஆசைப்பட்டேன்.  அந்த முயற்சிக்கு அந்த ஆசிரியரும் ஒத்துக்கொண்டார்.  ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அதை ஏற்பதாக இல்லை என்பதால் அது கனவாகவே போனது.  அவர்தான் எனக்கு மானசீக குரு.


எட்டாவது படித்துக்கொண்டிருந்த பொழுது… அந்த ஆண்டு ஆண்டுவிழாவிற்காக நாடகம் போடவேண்டி ஒரு பெரிய நாடகம் தயாராக இருந்தது.  நாடகத்திற்காக பாத்திரங்கள் தேர்வு நடைபெற்றது.
ஏழாவது படிக்கக்கூடிய ஒரு மாணவன் கதாநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டான்.  அவன் ஆசிரியர் வீட்டுப் பிள்ளை.  வெட்கம் ஒருபுறம்… வேதனை ஒருபுறம்….. கதாநாயனாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் மேலெழுந்த பொறாமை ஒருபுறம்….. என கலவையான உணர்வுகளுடன் வீடு திரும்பினேன். 

எப்படியும் இவன் கதாநாயகனாக நடிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த சாமன்யனுக்கு வலுப்பெற்றது.
எண்ணங்களுக்கு வலிமை உண்டுதானே..?
மறுநாள் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சொல்லிய செய்தி நாடக ஆசிரியரைத் திடுக்கிட வைத்தது.
எனக்கு ?
                                                    -அடுத்து வரும்...   நினைவலைகளில் நீந்துகிறேன்...!(1)

 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...