ஞாயிறு, 21 ஜனவரி, 2018

வெளிவராத படத்தில் ஒரு பாடல்

ஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும்!

 1970 இல் வெளிவந்த சிறுகதை
அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த, கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற காரியத்தில் முனைந்தாள்.

"
என்ன காலிலே?"  என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.

"
போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின் தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக் கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை  யாராவது வாங்குவாங்களாங்கோ?" 


அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான்.

நந்தகோபால்! புதிதாகக் கல்யாணமானவன் அவன்

அவனுடைய உணர்வுகளையோ, தவிப்பையோ புரிந்து கொள்ளாமல்திரும்பிப் படுத்துக் கொண்டு  தூங்குகிற மனைவி. முதுகில் இரண்டு அறை வைத்தால் என்ன என்ற நினைப்பின் ஊடேயே, இதே மாதிரித் தன்னுடைய தகப்பன் தாயை நடுராத்திரி, போட்டு மிதிப்பதும் , ஐயோ பாவி சண்டாளா என்று தாய் அழுதுகொண்டே திட்டத் திட்ட தகப்பன் அவளை மீண்டும் மீண்டும் அடிக்கிற காட்சியும், மறுநாள் காலை இருவருமே எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாக இருக்கிறமாதிரி நடிப்பதையும் தனது பதினைந்து வயது வரை பார்த்து அதிர்ந்ததும் நினைவு வருகிறது.

யாருக்கு வேண்டும் இந்த திருமணம், பந்தம் உறவு எல்லாம் என்று சலித்துக் கொள்கிறபோது, அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தூண்டிய  அந்த சைத்தான்-கிரிஜாவின் நினைவு வருகிறதுசைத்தானைக் கட்டிக் கொண்டு வீட்டில் வைத்துக் கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று சொல்கிறேனே,அவளைப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான்.

கிரிஜா! இங்கிதம் தெரிந்தவள், இவனோடு குடித்தனமாகக் கொஞ்ச நாள் இருந்தவள். தொழிலாக இல்லாமல், நம்பிக்கை, தேவையின் அடிப்படையில் வேறு சிலரோடும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள். அவளோடு பேசிக் கொண்டிருந்தாலே மனதுக்கு இதமாக இருக்கும் அதற்காகத் தான், வேறு எதற்காகவுமில்லை என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டே கிரிஜாவின் வீட்டுக்குப் புறப்படுகிற பின்னணியில், இருவருக்கும் ஏற்பட்ட உறவை சுருக்கமாக சொல்கிறார் ஜெயகாந்தன். தன்னுடைய தாய், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதை, அவளிடம் சொல்லி, தன்னுடைய தயக்கத்தையும் பகிர்ந்து கொள்கிற சிநேகிதம், "அம்மாவை உங்க நயினா அடிச்சாருங்கிறதுக்காகவா கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க? நீங்க உங்க பொஞ்சாதியை அடிக்காம இருங்க." என்று கனிவோடு சொல்கிற இங்கிதம், உறவிலேயே, செல்லமாக வளர்க்கப் பட்ட பெண் ஒருத்தியை திருமணம் பேசியிருப்பதைச் சொல்லும்போது . அவள் மனத்துள் அவளே அறியாத வண்ணம் ஒரு  ஏமாற்றமும் வருத்தமும் இருந்தாலும், மனம் நிறைய அவனை சந்தோஷமாக வாழ்த்துகிற  காதலின் ஒரு புறமும் சொல்லப் படுகிறது.

திடீரென அவன் வந்து நின்றதில் ஒரு அதிர்ச்சி, உள்ளூர ஒரு சந்தோஷம். மண வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று அவனை விசாரிக்கிறாள்.
நந்தகோபால் தன்னுடைய மனைவி பாராமுகமாக இருப்பதையும், ஊரில் இருந்து வந்ததில் இருந்து ஒரே அழுகையும் பிடிவாதமுமாக இருப்பதையும் சொல்லி,உன்னையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம் என்று திரும்பத் திரும்ப அவன் மனைவி அவனைப் புறக்கணித்ததில் எழுந்த அவமானத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்.

அவனைத் தேற்றுகிறாள்! எப்படி!!

கல்யாணம்  ஆனதினாலேயே அவன் மனைவி, பாவம் சிறு பெண்  அவனுக்குச் சமமாகி விடுவாளாசெல்லமாக வளர்ந்தவள், திடீரென்று ஊர்விட்டு வந்து, தனியாக..குழந்தைப் பெண்தானே? நீங்கள் அனுபவமுள்ளவர். அந்தப்பெண்ணுக்கோ எல்லாம் புதிது அல்லவா? ஆண் என்றாலே பயம், அருவருப்பு கூட   வருமே! நான் உங்களிடம் இயல்பாக இருந்தேன் என்றால், அதற்கு எக்ஸ்பீரியன்ஸ் தானே கரணம்! அதே எக்ஸ்பீரியன்ஸ் தானே  கல்யாணம் செய்து கொள்ள டிஸ்க்வாலிபிகேஷனுமாகவும் ஆகிப் போனது?உங்கள் மனைவியை விட நீங்கள் அனுபவஸ்தர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டுஅவள் குழந்தை என்று பொறுத்துப் போனால், எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும்.

அவள் பேசப் பேச, மனம் லேசாவதை அவன் உணர்கிறான். இவளைத் தேடி வந்தது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது?

கதை அவள் கால்விரல் புண்ணுக்கு செருப்புக் கடித்த காயத்திற்கு எண்ணெய் ஊற்றுவதில் திரும்புகிறது.

செருப்புக் கூடப் புதியதாக இருக்கும்போது கடிக்கிறது! அதற்காகப் பழைய செருப்பை யாராவது வாங்குவார்களா என்ன?

கிரிஜா சிரித்துக் கொண்டே தான் நந்தகோபாலிடம் கேட்கிறாள்! அவன் அவள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுவதோடு இந்தக் கதை முடிகிறது.
ஜெயகாந்தன் அவர்கள் 1978இல்  தயாரித்து இயக்கிய ‘புதுச் செருப்பு கடிக்கும்’   படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடும்

 ‘சித்திரப்பூ சேலை சிவந்த முகம்....’ என்ற  அருமையான பாடலை ஜெயகாந்தன் இயற்ற எம்.பி. சீனிவாசன் அவர்கள் இசையமைத்தது. படம் முடிந்தும் வெளிவரவில்லை.

சித்திரப்பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு

முத்துச் சுடர் மேனி  எழில் மூடி வரும் முழு நிலவோ 
மூடி வரும் முழு நிலவோ 
சித்திரப் பூ சேலை


மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதா
தேனின் ருசி தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா
சித்திரப்பூ சேலை

மஞ்சள் பூசும் இடமெல்லாம் என் மனம் பூசல் ஆகாதா
கொஞ்சம் என்னை குங்குமமாய் குழைத்தெடுத்தால் வாரேனா
சித்திரப் பூ சேலை


படிக்கட்டில் ஏறிவரும் பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக்கட்டின் இடையிலே ஓர் பலகையாய் மாறேனா
சித்திரப் பூ சேலை 


முக்காலும் துணி மறைத்து
நீ மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில் நான்
சொக்காகி மூலைச் சுவராகி முன்னின்று பாரேனா
சித்திரப் பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி எழில் மூடிவரும் முழு நிலவோ
மூடிவரும் முழுநிலவோ சித்திரப் பூ சேலை  
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க.

-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

6 கருத்துகள்:

 1. அருமையான பாடல் மணவையாரே...
  இன்று இப்படி வரிகள் எழுத கவிஞனும் இல்லை அதை தாலாட்டும் இசைக் கலைஞனும் இல்லை.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் கருத்து முற்றிலும் சரியானது ஜி. தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பாடல் அருமை!! கேட்டதே இல்லை இப்போதுதான் தங்கள் பதிவிம் மூலம் கேட்கிறோம்...மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...