வியாழன், 14 ஏப்ரல், 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்! (16)


நீங்க நினைக்காத நெஞ்சம்! (16)


ரோஸி மனம் தக்கை போல லேசாக இருப்பதாக உணர்ந்தாள்.




   தமிழினியனிடம் அவனின் அம்மா எழுந்தவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள். 
                        
வெளியில் சென்ற சிறிது நேரத்திலேயே அரக்கப்பரக்க வேகமாக வீட்டிற்குள்  கையில் செய்தித்தாளுடன் வேகமாக வந்தாள்.

“என்னாச்சு... ஏன் பதட்டம்...?தமிழினியனும் பதட்டத்துடன் கேட்டான்.

“டீக்கடையில வால் போஸ்டர பார்த்தேன்... ‘ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் தீ  29 பேர் உடல்கருகிச் சாவுங்கிறத பார்த்து... பேப்பர வாங்கி பார்த்தேன்.   மாப்பிள்ளையும் செத்துப் போயிட்டாருன்னு செய்தியை படிச்சிட்டு ஓடி வர்றேன்...!” - என்று அந்தப் பேப்பரை ரோஸி வேகமாக நீட்டினாள்.

தமிழினியன் அந்தச் செய்த்தாளை வாங்கிப் படித்தான்.  திருமண மண்டபத்தில் சசிரேகாவின் கல்யாணத்தில் நடந்த அந்த விபத்து பற்றி படங்களுடன் இருந்த செய்தியைப் பார்த்தவுடனே மயங்கிச் சரிந்தான்.

ரோஸி வேகமாகத் தண்ணீரைத் முகத்தில் தெளித்து மயக்கம் போக்கினாள்.

தமிழினியன் மீண்டும் செய்தித்தாளைப் படித்தான்;  தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.  ரோஸி அவனைத் தேற்றினாள்.

“கெளம்புங்க... நாம சசியோட வீட்டுக்குப் போகலாம்...”  ரோஸி அழைத்தவுடன் தமிழினியன் எழுந்தான்.  தமிழினியன் அம்மாவை எழுப்பி தாங்கள் அவசரமாக வெளியே செல்வதால் சாப்பாட்டை எடுத்துப் போட்டு சாப்பிடச் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.

இதைக் கேட்டு கண்விழித்த தங்கம்மாளுக்கு ஒன்றும் புரியாமல் அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..   திருமண விசயமாக முடிவெடுத்து அதை என்னிடம் சொல்லாமல் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று செல்கிறார்கள் போல என்று தங்கம்மாள் மனதில் நினைத்துக் கொண்டு சந்தோசப்பட்டாள்.

நகரப் பேருந்து வரும்வரை காத்திருந்து, அது வந்தவுடன் அதில் ஏறினர்.

‘சசி எப்படி இருக்கிறாளோ...?  ஏன் அவளின் வாழ்வில் இந்தக் கொடுமை...?இந்த அகோர விபத்தினால் அவளின் வாழ்க்கை சிக்கிச் சின்னாபின்னமாக ஆகிவிட்டதே...!’  தமிழினியனுக்கு நினைக்க நினைக்க அழுகை அழுகையாக வந்தது.  கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்தான்.
            
பேருந்திலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக சசியின் வீட்டை அடைந்தனர். 
 
வீட்டில் ஒரே மயான அமைதி;  சசிரேகாவின் அப்பா ரெங்கராஜ் சுவரில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தார்.  இவர்கள் இருவரையும் பார்த்தார்.  ‘வாங்கஎன்றோ இல்லை ஏன் வந்தீர்கள்?எனறோ எதுவும் சொல்லாமல் இருந்தார்.

தமிழியனும் ரோஸியும் மெதுவாக  சசிரேகாவின் அறைக்குள் சென்றனர்.

சசிரேகா தலைமுடியெல்லாம் கலைந்து முகத்தை அது மூடிக்கொண்டு கிடக்க கட்டிலில் குத்திட்டு அமர்ந்திருந்தாள்.
                           
ரோஸி சசிரேகாவின் அருகில் போய் முகத்தை மூடி இருந்த முடியை விளக்கி எடுத்துப் பின்புறம் போட்டாள்.  சசிரேகா குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். 
                              
ரோஸி சசிரேகாவின் முகத்தைத் தன் கைகளால் உயர்த்திப் பிடித்தாள். 

“சசி... நா... தமிழ்... வந்திருக்கேன்...”  தமிழினியன் வார்த்தை வெளிவரத் தடுமாறி வந்து விழுந்தது.

சசிரேகா அவர்களைப் பார்த்தாள்.  அவளின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லைமீண்டும் தலையை அதேபோலத் தொங்கப் போட்டுக் கொண்டு விட்டாள்.

“சசி... நா... தமிழ்... வந்திருக்கேன்...” - தமிழினியன் சொல்வதைத் காதில் கேட்டுக் கொண்டவளாகத் தெரியவில்லை.  தமிழினியன் கேவிக் கேவி அழுதான்.

“நா ரோஸி... வந்திருக்கேன்... இங்க பாருங்க...”  என்று ரோஸி தலையை  நிமிர்த்திச் சொன்னாள்.

“எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்...சொன்ன இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.   அவர்களைப் பார்த்து ‘ஹி...ஹி...’வெனச் சிரித்தாள்.

வந்திருப்பது யாரென்‘று அவள் உணர்ந்த்தாகத் தெரியவில்லை.

“எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்... எனக்குக் கல்யாணம்...’ -என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் டிரஸ்ஸிங் டேபிளைக் கீழே தள்ளிவிட,  அதிலிருந்த கண்ணாடி உடைந்து சுக்குநூறானது.
                                  
ரெங்கராஜ் சத்தம் கேட்டு அறைக்குள்ளே ஓடி வந்து திகைத்து நின்றார்.

“மண்டபத்தில நடந்த விபத்தப் பார்த்ததுல இருந்து... புத்தி சுவாதீனமில்லாம... பைத்தியம் பிடிச்சவமாதிரி நடந்துக்கிறா...?  பச்சத் தண்ணீகூட குடிக்கமாட்டேங்கிறா... எதுவும் இதுவரைக்கும் சாப்பிடல... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... இவளோட வாழ்க்கையக் கெடுத்த பாவியாயிட்டேன்...”  என்று சொல்லி ரெங்கராஜ் கதறிக் கதறி அழுதார்.

ரோஸி சமையலறைக்குள் சென்று வேலைக்காரப் பெண்ணிடம் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்து சசிரேகாவின் அருகில் அமர்ந்தாள்.

தட்டிலில் இருந்த சாப்பாட்டை எடுத்து சசிரேகாவிற்கு தமிழினியன் ஊட்டிவிட,  பயங்கரப் பசியில் இருந்தவள் போல அதைச் சாப்பிட்டாள்.

“நீங்களும் சாப்பிடுங்க...!என்று சொல்லிக் கொண்டே தமிழினியனுக்கும் ரோஸிக்கும் சாப்பாட்டை எடுத்து சசிரேகா ஊட்டிவிட்டுக் கொண்டே...  
அவள் மெல்லச் சிரித்தாள்..  
....................
                                                                            

படிக்க  ‘கிளிக்’ செய்க 















                                                                                                

                                                
                                                         
                                                                                                                                                            







        



12 கருத்துகள்:

  1. நடை அருமையாக உள்ளது. பதிவிற்கான புகைப்படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள முனைவர் அய்யா,

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. அவள் மெல்லச் சிரித்தாள்,என்ன சொல்ல நினைத்தாலோ தெரியவில்லையே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ!

      அவள் மெல்லச் சிரித்தாள் என்ன சொல்ல நினைத்தாளோ...? அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை...!


      நீக்கு
  3. இக்கதையில் வரும் மணப்பெண் எங்கள் ஊர்...ஒரே தெருவும் கூட...அவரின் தங்கை என்னுடன் படித்தாள்...மனவேதனையான செய்தி அந்த விபத்து...நல்ல நடை அதற்கு துணை செய்கின்றது...சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      அந்த மணப்பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்வு மிகமிக சோகமானது. அவரின் தங்கை தங்களுடன் படித்தவர் என்பதால், அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவத்தின் பாதிப்பை நன்கு உணர்ந்திருப்பீர்கள்.

      தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சசிரேகாவிற்கு தமிழினியன் இனி துணை ரோசியும் உதவிக்கு இல்லையா..முற்றும்? இல்லை தொடருமா நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள்... முற்றும். தங்களின் தொடர் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  5. முடிவு வேதனையைத் தந்தது மணவையாரே.... என்றாவது ஒருநாள் அவள் குணமடைந்து சேர்ந்து வாழ்வார்கள் என்று நம்புவோம்..
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் நம்பிக்கை நிறைவேண்டும்.

      வாக்கிற்கும் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சிறந்த பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...