வியாழன், 18 டிசம்பர், 2014

விடியுமா?விடியுமா?

(மணவை ஜேம்ஸ்)                “கல்யாணி...கல்யாணி...சுந்தரமூர்த்தி தன் மனைவியைக் கூப்பிடும் சாக்கில் கத்தினார்.  அடுக்களையில் வேலையாய் இருந்த கல்யாணி கையில் கரண்டியோடு வெளியே வந்தாள்.

     “என்னங்க... காலங்காத்தாலே கத்த ஆரம்புச்சுட்டீங்க...என்னா?
                                                                                 
     “ஏன்டி கல்யாணி... மாப்பிள்ளை வீட்ல இருந்து நம்ம பொண்ணு ராதாவ... பொண்ணுப்பாக்க எத்தனை மணிக்கு வர்றதா கடுதாசி போட்டு இருந்தாங்க?“ கேட்டுக் கொண்டே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார் சந்தரமூர்த்தி.
                             
     “காலையில் பதினொரு மணிக்குள்ள வந்திருடறதா போட்டு இருந்தாங்களே... இதக்கூடவா மறந்துட்டீங்க...? ஆமா... எங்கே வெளியே கௌம்புராப்புள இருக்கு...?

     “கடைவீதி வரையிலும்... சும்மா...சும்மாதான் கல்யாணி...அசடு வழிந்தார்.

     “சும்மான்னாலே ஏதோ இருக்குதுன்னு எனக்குத் தெரியும்... மணி பத்தாகப்போகுது... மாப்பிள்ளை வீடு வந்திடுவாங்க... நீங்க ஒண்ணும் போக வேண்டாம்...” சற்று கடுமையாகத்தான் சொன்னாள் கல்யாணி.
                                                           
     “இல்ல... கல்யாணி... போனவுடனே வந்திடுவேன்

     “நீங்க போறது எதுக்கிண்ணு எனக்குத் தெரியும்... ஒன்னும் போக வேண்டாம்...

     “ஆமாம்... இந்த ராதா எங்க போயி இருக்கா...?”  பேச்சை மாத்தப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.

     “அவ... அவ பிரண்ட் லதா வீட்டுக்கு போயிருக்கா... ஏதோ வேலை விசயமா விசாரிச்சுட்டு வர்றேன்னு போனா... பி.காம். முடிச்ச அவளுக்கு ஏதாவது வேலைக்கு போகனுமுன்னு நெனைக்கிறா...?

     “அவளப் போயி இன்னைக்கு வெளியே ஏ அனுப்புச்சே...?எதிர் தரப்பு வக்கில் குறுக்கு விசாரணை செய்வதைப்போல் தன் கேள்வி இருப்பதாக நினைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.
                                                       
     “அவ இப்ப வந்திடுவா...

     “நானும் இப்ப வந்திடுவேன்... சொன்னா நம்பு.

     “நீங்க டாஸ்மாக் கடைக்கு... குடிக்கத்தானே போறிங்க..?.

     “ஆமா... நா சம்பாதிக்கிறேன்... நா குடிக்கிறேன்... நீயா சம்பாதிக்கிறே...? 
கஷ்டப்பட்டு லாரி ஓட்டுறவன் நானு... அலுப்புக்குக் குடிக்கிறேன்.... இதுக்கு போயி ஒரேயடியா அலட்டிக்கிறியே,... ஆமா... ஒயின் ஷாப்புக்குதான்... குடிக்கத்தான் போறேன்... அதுக்கு எண்ணாங்கிறே..

     “நமக்கு புள்ளன்ணு சொல்லிக்க ஒரே ஒரு பொண்ணுதான் இருக்கா... இன்னக்கி பொண்ணு பார்க்க வர்றாங்க... நல்ல நாளும் அதுவுமா...?!

     “நாணும் அதேதான் சொல்றேன்... நல்ல நாளும் அதுவுமா புலம்பாதே... இன்னக்கி நாமெல்லாம் சந்தோசமா இருக்ணும் தெரியுமா?  கல்யாணி என்னப்பத்தி ஒனக்கு தெரியுமுல்ல... இன்னக்கி நேத்தா குடிக்கிறேன்...

     “நல்லா தெரிஞ்சது நாலதாங்க கேக்கிறேன்... நா ஒங்களுக்க வாக்கப் பட்டு வந்த நாள்ல்ல இருந்து நீங்க குடிச்சிட்டுதான் இருக்கீங்க... என்னப் போட்டு அடிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்க...

     “தப்பா சொல்றியேடி கல்யாணி... கல்யாணத்துக்கு முன்னாலேயே... பதினெட்டு வயசுல...இருந்தே... வீட்டுக்கு தெரியாம ஜாலிக்கிண்ணு குடிக்க ஆரம்பிக்க... அப்புறம் போதைக்கிண்ணு குடிச்சு... இப்ப கட்ட காட்டுக்கு போற வரைக்கும் குடிக்கணுங்கிறது எ தலைவிதியா ஆயிடுச்சு கல்யாணி

     “ஏ இப்படி விரக்தியா பேசுறீங்க...?

     “விரக்தி இல்ல கல்யாணி... உண்மை என்னான்னா... சரக்க உள்ள ஊத்தலன்னா கை கால்... ஏன் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுது தெரியுமா?  என்னால நெசமா குடிக்காம இருக்க முடியாது... என் கை ஆடறதப்பாத்தியா? இந்தாப் பாரேன்...” சுந்தரமூர்த்தி கையை நீட்டியபொழுது அவர் சொல்வது உண்மைதான் என்பது தெரிந்தது.

     “அய்யோ... என்னங்க சொல்றீங்க... இத்தன நாளும் எங்கிட்ட இதச் சொல்ல்லையே... நா கட்டி வந்த நாள்ல்ல இருந்தே... தலையால அடிச்சுட்டேன்... குடிக்காதீங்க... குடிக்காதீங்கண்ணு... கேக்கலை... கடவுளே எ புருஷனை காப்பாத்துப்பா... ஆஸ்பத்திரிக்கி போயி வைத்தியம் பாப்போங்க...” கணவன் மேல் கல்யாணி வைத்திருக்கும் அன்பு அவள் கண்ணிலிருந்து வழியும் நீரில் தெரிந்தது.

     “அடிப் போடி... பைத்தியக்காரத்தனமா பேசாதடி... இதுக்கு மருந்து அந்தச் சரக்குதாண்டி... முள்ள முள்ளாளதான் எடுக்கணும்... நா போயிட்டு வந்திடுறேன்...

     “ஒங்க ஒடம்பு இருக்க நெலமையில... அந்த கண்றாவிய வாயில வக்கணுமா... ஒங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா... எங்க நெலமைய கொஞ்சம் நெனச்சுப்பாத்தீங்களா?...”-கேவி கேவி முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள் கல்யாணி.

     “ கல்யாணி பயப்படாதேடி... அவ்வளவு சீக்கிரம் செத்துரமாட்டேன்டி... இன்னைக்கு மட்டும் குடிச்சிட்டு வாரேன்....  நாளைல்ல இருந்து குடிக்கமாட்டேன் சத்தியமா...” தலையில் கை வைத்துச் சொன்னார் சத்தியமூர்த்தி.

     “சரி... கொஞ்சமா குடிச்சிட்டு... வெளியே தெரியாம உடனே வந்திடுங்க... கொஞ்சம் உள்ளே போட்டாலே வளவளன்னு பேசிட்டு யார்க்கிட்டயாவது வம்பளந்துட்டு நிக்காமா... போனோம்... வந்தோமின்னு வாங்க... மறந்திடதாதிங்க... நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வர்றீங்க... என்னா சரியா?“

     “சரி... சரி... ஒரு இரு நூறு ரூபா குடு“ கெஞ்சும் குரலில் குழைந்தார் சுந்தரமூர்த்தி.

     “என்ன... இரு நூறு ரூபாயா...?”- வாயில் கைவைத்து ஆச்சர்யத்துடன் கேட்டார் கல்யாணி.

     “ஒனக்கும் ஒன்னும் தெரியாது.... சரக்கு விலையெல்லாம் சாஸ்திம்மா... அடிக்கடி சர்க்காரு... பணம் வேணுமுன்னா... இந்த விலைய ஏத்திபுடுறாங்க தெரியுமுல்ல... கொஞ்சமாவது குடிமக்கள நினைச்சு கவலப்படுறதே இல்ல...!

     “நாளையிலேயிருந்து குடிக்கமாட்டீங்களே... இந்தாங்க...சுருக்குப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள் கல்யாணி.

     “அதாம் சத்தியம் பண்ணிருக்கேன்ல்ல... சந்தேகப்படாதே... ராதா வந்தவுடனே அந்தப் புதுச் சேலையை கட்டிக்கச் சொல்லு... நீ போயி வேலையைப் பாரு... ஓ வேலைய வேற கெடுத்திட்டேன்... போ... போ... நா வர்றேன்...” சந்தோசமாக ஏதோ பாட்டை முணுமுணுத்துக்கொண்டே வேகமாக டாஸ்மாக் கடையை நோக்கி நடந்தார் சுந்தரமூர்த்தி.
                                      
     தன் கணவனை நினைத்து பெரு மூச்சுவிட்டு... இனிப்பு பலகாரம் செய்ய முனைந்தாள் கல்யாணி.

     வெளியே சென்றிருந்த ராதா வீட்டுற்குள் நுழைந்தாள்.

     “ஏன்டி... சீக்கிரம் வாயேன்டி... மாப்பிள்ளை வீட்ல வர்றதுக்கு நேரமாயிடுச்சு... என்ன ஒ பிரண்டு லதாக்கிட்ட தங்க நெக்லஸ் வாங்கியாந்தியா?

     “ம்...ம்...” தலையசைத்தாள் ராதா.

     “சரி...சரி...போயி... அந்த புதுச்சேலையை எடுத்துக் கட்டிக்கிட்டு அந்த நெக்லஸ போட்டுக்க... சீக்கிரம்... என்னா?

     “என்னம்மா... இன்னைக்கின்னு... இவ்வளவு சுவீட் காரமெல்லாம் தேவையா?

     “ஒனக்கு ஒண்ணும் தெரியாதுடீ... நம்ம வசதியில கொறஞ்சிருந்தாலும்... நெறையா பேரு வருவாங்கல்ல... அதுவும் மாப்பிளை வேற பேங்கில்ல வேலை பாக்கிறாரு... ஒன்னோட பேசிக்கிட்டு இருந்தா ஒரு வேலையும் ஓடாது போயி ரெடியாகு”  ராதாவை அனுப்பி வைத்து வேலையில் மும்முரமானாள் கல்யாணி.
                             
     குறித்த நேரத்தில் மிகச் சரியாக மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து விட்டார்கள். 
ஆனால் போன மனுஷன் சுந்தரமூர்த்தியைத்தான் இன்னும் காணவில்லையே என்று கல்யாணியின் மனதுபதைபதைத்தது.  வெளியே போனவர் வருகிறாரா என்று நோட்டமிட்டபடியே வந்தவர்களை வரவேற்று வணங்கி அமரச் செய்தாள்.

     “பையனோட அப்பா நான்...” மாப்பிள்ளையின் தந்தை தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

     “எல்லாத்துக்கும் வணக்கமுங்க...” கல்யாணி கையெடுத்து வணங்கினாள்.

     “ பொண்னோட அப்பாவைக் காணோம்...

     “ஓ.... எங்க வீட்டுக்கார கேக்றீங்களா... அவரு கடை வீதி வரைக்கும் போயிருக்காரு... வந்திடுவாரு...இதோ வர்றேன்...உள்ளே சென்ற கல்யாணி மகள் ராதாவிடம் இனிப்புக் காரத் தட்டைக் கொடுத்தாள்.

     “ஏம்மா... நெறையாப் பேரு வந்திருக்கிறாங்க போல இருக்கு... எல்லாத்துக்கும் கொடுக்கனுமா?

     “மெதுவாச் சொல்லுடி... அவுங்க காதுல விழுந்திடப் போவுது.... அதுக்காகத்தான் இவ்வளவு செஞ்சேன்... மாப்பிளைளையைப் பார்த்தேன்... நல்ல சிவப்பா... நல்ல உயரமா... வாட்ட சாட்டமா... அழகா லட்சனமா... நல்லா இருக்காருடி....நீ பாரேன்... ஒனக்கு கண்டிப்பா மாப்பிள்ளை பிடிச்சு போயிடும்...போயி எல்லாத்துக்கும் பலகாரம் கொடு... பயப்படமா போடி...பலகாரம் கொடுக்கிறப்ப மாப்பிள்ளைய நல்லா பாத்திடு...போ...” என அனுப்பி வைத்தாள்.

     ராதா தட்டோடு...தரைபார்த்து மெல்ல மெல்ல அடி எடுத்து நடந்து வர, மாப்பிள்ளை அவளையே பார்த்துக் கொண்டிருக்க... ஒரு தேவதை பச்சைப் பட்டுடுத்தி பூமியில் நடந்து வருவதைப்போல தெரிந்தது.  அவனின் ஆறரையடி உயரத்திற்குச் சற்றேறக்குறைய சரியான உயரத்தில் அவள் இருந்தாள்..  உண்மையில் அவனின் அழகு இந்தப் பெண்ணிடம் தோற்றுப் போனது.  அன்ன நடை என்று சொல்வார்களே... அன்னத்த பார்த்ததில்லை... ஒரு வேளை இவள் போலத்தான் அது நடந்து இருக்குமோ? இருக்கலாம்... மனத்தில் எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது அவள் அவன்முன் தட்டை நீட்டினாள்.  தட்டை வாங்கும் பொழுது அவன் முகத்தை முதன்முதலாகப் பார்த்தாள்.  அம்மா பொய் சொல்லவில்லை என்பதை அவள் மனம் உணர்த்தியது. ராதாவின் முகம் நாணத்தால் சிவந்தது. 

     மாப்பிள்ளையின் அப்பா சாப்பிட்டுக்கொண்டே சொன்னார், “நல்லாயிருக்கும்மா... சுவிட்டெல்லாம் நல்லா இருக்கு... விஷயத்துக்கு வருவோம்...நாங்களும் பொண்ண பெத்தவங்க... பொண்ணு வீட்டு கஷ்ட நஷ்டம் எல்லாம் நல்லாத் தெரியும்... எங்களுக்கு அது வேணும் இது வேணுமுன்னு கேட்கமாட்டோம்... குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருந்தா போதும்... மகன் பேங்க்ல வேலை பாக்கிறான்... கைநெறைய சம்பாதிக்கிறான். வெளியூர்ல தனியா தங்கி...இருக்கிறான்..... அவனுக்கு ஒரு துணை நல்லா அமைஞ்சா போதும்...


     “எங்க பொண்ண எந்தக் குத்தம் குறையும் சொல்ல முடியாதுங்க... வீட்டு வேலையெல்லாம் நல்லா செய்வா... ஞாயிற்றுக் கிழமை அன்னக்கி அவ சமையல்தான்னா பார்த்துக்கோங்க... ... எங்க பொண்ண நாங்களே மெச்சிச் சொல்லக் கூடாது...

     மாப்பிள்ளையின் அம்மா கல்லகலன்னு சிரித்துக் கொண்டு பேசினாள்,  “பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா... பொண்னு பயோ டேட்டாவைப் பாத்திட்டுத்தான் வந்தோம்... பையனும் பொண்ணப் புடுச்சிடுச்சின்னு... ஓ கேன்னு  சிக்கனல் கொடுத்திட்டான்.   மொதல்ல எங்க கண்டிசன சொல்லிடுறோம்... பொண்னுக்கு வரதட்சனை ஏதும் வாங்கமாட்டோம்...  அது அவனோட... எங்களோட லட்சியம்.  எங்களுக்கும் பொண்ணு இருக்கா... நாங்களும்  வரதட்சனை யாருக்கும் கொடுக்கவும் மாட்டோம். பொண்ணுக்கும் மாப்பிள்ளைய பிடிச்சிருக்கான்னு கேட்டுச் சொல்லுங்கம்மா...  ஆமா நாமலா பேசிக்கிட்டு இருக்கோம்... ஒங்க வீட்டுக்காரரு வர்லயே !

     “வந்திருவாரும்மா சொல்லிக் கொண்டே உள்ளே சென்ற கல்யாணி,  “ஏண்டி ராதா... மாப்பிள்ளைய ஒனக்கு பிடிச்சிருக்கா...?
“ஒங்களுக்கு பிடிச்சிருந்தா சரிம்மா...”  என்று மாப்பிள்ளை பிடித்திருப்பதை வெட்கப்பட்டு உடனே சரியென்று சொல்லாமல் சம்மதத்தைச் சொன்னாள்... காபியை ராதாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டு போன மனுசனை இன்னும் காணமே என்ற மனதில் நினைத்துக் கொண்டாள்.  காப்பியைக் கொடுக்கும் போது நன்றாகவே மாப்பிள்ளைய மீண்டும் நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.  ராதாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது... மணவாழ்க்கையை எண்ணி!
               
                சுந்தரமூர்த்தி வீட்டினுள் நுழைந்தார்... கீழிந்த பனியனும், அண்டராயருமாய் நிதானம் தெளியாத போதையில் தள்ளாடிக் கொண்டே உளறியவாறு விட்டினுள் நுழைந்தார்...“ஏன்டா... எனக்கா புத்தியில்லேங்கிறீங்க...போக்கத்த பயலுகாலா... ஒங்கள உள்ள தள்றேன்ண்டா... போன எடத்தில ஒரு சின்ன தகராறு... போதையாயிருக்கவும்தான் என்ன அடிச்சு காயப்படுத்திப்புட்டாங்க....அப்புறமா அவிங்கள கவனிச்சிக்கிறேன்... முக்கியமான வேல இருந்ததால வந்தேன்டா...ஒங்கள அப்புறம் வந்து கவனிச்சிக்றேன்...தப்பா நெனச்சுகாதிங்க... நீங்க பேச வேண்டியத எல்லாம் கல்யாணிக்கிட்ட பேசிக்கங்க... என்னால நிக்க முடியல... முதல்ல நா படுக்கனும்... தப்பா நினைச்சுக்காதிங்க... பிளீஸ்... என்னால நிக்க முடியல... முதல்ல நா படுக்கனும்... எங்கேடி கட்டில்...கல்யாணி கட்டில்.... கேட்டுக் கொண்டே கீழேயே படுத்தார், படுத்தவுடனே வாந்தி எடுத்தார்... அந்த இடமே அசிங்கமானது.

     “சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க... இதுமாதிரி குடிகாரக் குடும்பத்தில சம்மந்தம் பண்ண நாங்க விரும்பல... நாங்க வர்றோம்மா...”  மாப்பிள்ளையின் அப்பா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசி பொழுதே வந்திருந்த அனைவரும் ஏதோதோ இவர்களைப் பற்றி ஏளனமாக பேசிக் கொண்டு வெளியேறினர்.

     சுந்தர மூர்த்தி இன்னும் போதையிலிருந்த தெளிவடைநது எழுந்திருக்கவில்லை... இரவாகிவிட்டது  வீட்டுக்குள்ளே இன்னும் குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.  இடையிடையே கெட்டவார்த்தைகளும்.  கல்யாணிக்குத் தன் இறந்தகாலம் குறித்தும் ராதாவிற்குக் தன் எதிர்காலம குறித்தும், பெருகிய கண்ணீரால் இரவு நனைந்து கொண்டிருந்தது.  வாழ்வு விடியுமா? 
                              
                                         
                                          
         பொழுது விடிந்தது.  கதவு தட்டும் சத்தம் கேட்டு ராதா கதவைத் திறந்தாள். எதிரே மாப்பிள்ளை நின்று கொண்டு இருந்ததைப் பார்த்து பிரமிப்புடன் திகைத்து நின்றாள்.  
         விழிகள் மட்டும் பேசின!                                                                                         
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.  


       *’மாலை முரசு’ நாளிதழில் முரசு மலர் பகுதியில் “நேரம் தவறிய முகூர்த்தம்” 
        என்ற பெயரில் 7.8.1993  அன்று வெளிவந்த சிறுகதை.
        (நன்றி-மாலைமுரசு)
        சிறிய மாற்றங்களுடன் வலைத்தளத்தில். 

      **இலங்கை வானொலியில் ‘ஆசிய சேவை’ நிகழ்ச்சியில் அந்த ஆண்டு திருச்சி           நடிகர் திரு.டி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவரால் படிக்கப்பட்ட இந்தச் சிறுகதை           ஒலிபரப்பானது.                                           
                                                 

12 கருத்துகள்:

 1. அய்யா வணக்கம்.
  அருமையான நடையில் அழகான கதையைத் தந்திருக்கிறீர்கள்.
  நடப்பியல் சிறுகதையோட்டத்தின் முடிவு எதிர்பாராததாய் முடிந்து விட்டது, இல்லை விடிந்து விட்டது.
  உங்களிடம் இருந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 2. அன்புள்ள அய்யா,

  தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அரசு கடையையும் திறக்கும் குடிக்ககூடாதின்னும் சொல்லும். நல்ல வேளை அவளுக்காவது விடிந்ததே!!

  பதிலளிநீக்கு
 4. அன்புச் சகோதரி,

  தொட்டிலையும் ஆட்டி... பிள்ளையையும் கிள்ளி விட்ட கதைதான். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 5. குடி குடியைக் கெடுக்கும் என்பது இப்படித்தானோ...ம்ம் பரவாயில்லை கெடுத்தாலும் இறுதியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு விடியல் வந்ததே...அருமை ஐயா!

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள அய்யா,

  சுந்தரமூர்த்தி போல பல மூர்த்திகள் இருப்பதால் நல்ல பெண்களின் கீர்த்தி கெட்டு விடுகின்றது என்பது உண்மைதானே !

  தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. இந்த பெண்ணுக்கு விடியல் கிடைத்துவிட்டது... ஆனால் இது போன்ற சுந்தரமூர்த்திகளால் நித்தம் வதைப்படும் பெண்களுக்கு... ?!

  அருமையான கதை. வாழ்த்துக்கள்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
  http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள அய்யா,

  ஆமாம் . இது போல நாட்டில் சுந்தரமுர்த்திகள் பலரால் நல்ல மகள்களின் வாழ்க்கை நாசமாய்ப் போவதென்னமோ உண்மைதான்.
  தங்களின் வருகைக்கும்... கருத்திற்கும்...வாழ்த்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...