புதன், 19 ஆகஸ்ட், 2015

ஊமையான உண்மைகள்!



ஊமையான உண்மைகள்!  


                                  
                
        


           உறங்கிக் கொண்டிருந்த ஊரார்களை உசுப்பி எழுப்பியது அந்த கோவிலின் வெண்கல மணியோசை.  இந்த இரவு நேரத்தில் கோவில் மணியை அடித்தது யார்?  மணி எதற்காக அடிக்கப்பட்டது,  நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஊரில் மணியடித்துத் தெரிவிப்பது வழக்கம்தான்  என்றாலும் வழக்கத்திற்கு மாறாக  ஏதோ அவசர அழைப்பாகவே எண்ணத் தோன்றியது.  சிறிது நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் ஆண் பெண் பேதமின்றி ஊரார்கள் அனைவரும் கோவில் முன் வந்து கூடிவிட்டனர்.


          அங்கே ஊர் பெரியவர்களில் மணியக்காரர், கோவில்பிள்ளை வந்துவிட்ட பின்னும் ‘பெரியவர்’ என்றழைக்கப்படும்  நாட்டாண்மை மட்டும் வரவில்லை. ‘ கோவில் மணியை அடித்தது யார்?’- என்று தெரிந்துகொள்ள கோவிலுக்குள் கூட்டம் விரைவாக  நுழைந்தது.  கோவிலுக்குள்ளிளிருந்து அழுதுகொண்டே இழுத்துப் போர்த்திய சேலை முந்தானையால் கண்களைத் துடைத்தவாறு வெளியே வந்தாள் அனுசூயா.

           அனுசூயா மஞ்சளை அரைத்துப்  பூசினாற்போன்ற நிறம்.  அவள் பெற்றெடுத்த ஆண்குழந்தைக்காக, வெளியூர் சென்று வேண்டிக்கொண்ட கோவிலில் முடிஎடுக்க  காரில் குடும்பத்துடன் சென்ற பொழுதுதான், கார் விபத்துக்ளுள்ளாகிக் கணவனும் அவளின் மாமியாரும் அதே இடத்தில் இறந்து போக இளம் வயதிலேயே விதவையானவள்.  அப்பொழுதுதான்‘ உண்மையிலேயே கடவுள் இல்லையோ?’ என்ற எண்ணம் அவளுக்குள் வந்தது.  கடவுள் இருந்திருந்தால்,  கடவுளைக்  காணத்தானே வந்தோம்?   கோவிலுக்கு வராமல் இருந்திருந்தால் வெள்ளைச் சேலையில்  இந்தக் கோலத்தை அடைந்திருக்க  மாட்டோமே!’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டவள்தான் அவள். 

          ‘‘நீயாம்மா மணியடிச்சது?’’-மணியக்காரர் கேட்க, ஆமாம் என்பதைப் போல தலையசைத்தாள் அனுசூயா.

          ‘‘எதுக்கும்மா மணியடிச்ச? ” -அனுசூயாவிடமிருந்து பதில்வராமல் கண்ணில் இருந்து நீர் வந்தது. 

          “யோவ்...கோல்காரரே...! நம்ம பெரியவர வரச்சொல்லி கையோட கூட்டிட்டு வா...”-கோவில்பிள்ளை கோல்காரரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே‘ பெரியவர் ’என்று அழைக்கப்படும் நாட்டாண்மை வந்து சேர்ந்தார்.  அவரைக் கண்ட ஊர்மக்கள் எழுந்து நிற்க, அனைவரையும் அமரச் சொல்லிக் கையசைத்தார்.

                                   
         அறுபது வயதுக்கும் குறைவாகவே மதிக்கத்தக்க  பெரியவர்  நாட்டாண்மை இராஜ நடைபோட்டு வந்து,  அந்த அரசமரத்தடியில் உள்ள கட்டையில் அமர்ந்தவர், கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்,  “இந்த நேரத்தில யாரு மணியடித்தது?”

           கணீரென்ற பெரியவரின் பேச்சை இடைமறித்து பேசினார் மணியக்காரர்,  “ஒங்க மருமகள்தான் மணியடிச்சது...என்னான்னு கேட்டா சொல்லாம அழுவுது...நீங்களும் வந்தாச்சு...ஊரும்  கூடியாச்சு...ஏம்மா...!அழுதுகிட்டு இருந்தா எப்படி?  என்னான்னு சொன்னாத்தானே தெரியும்?

          அனுசூயா அழுகையை அடக்கிக்கொண்டு பேசமுனைய ஊரே உற்று நோக்கியது.  “நான் தூங்கிக்கிட்டு இருந்தப்ப... இவரு என்ன கெடுக்கப்பாத்தாரு...”-இவரு என்று சுட்டிக்காட்டியது நாட்டாண்மையை!.

          ஊரே அதிர்ச்சியில் திகைத்து அசையாமல் நின்றது!.  ‘நாட்டாண்மை இப்படி நடந்து கொண்டிருப்பாரா?  தெரிந்தும் தெரியாமலும் அவர் செய்யும் தப்பு, குடிப்பதுதான்.  இப்படி நடக்கக் கூடியவரா?’-என்று ஊரார் அவர்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டனர். 

          சந்தோசத்தையும் துக்கத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாத இறுக்கமான மனிதர் நாட்டாண்மை என்பதால் ஊரார் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.  பெரியவர் எழுந்து நிற்க ஊரே எழுந்தது.  அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு  தோளில் கிடந்த அங்கவஸ்திரத்  துண்டை எடுத்து இடுப்பில் கட்டினார்.  எதிரே அனுசூயா நின்று கொண்டிருந்தாள்.            “குத்தம் சுமத்தப்பட்டவரு நின்னுக்கிட்டு பதில் சொல்றதுதான் வழக்கம்....  நாட்டாண்மையா நா இருக்கிறதுனால... எனக்கு மட்டும் எந்த விதிவிலக்கும் வேணாம்... நான் சொல்றத எல்லாரும் நல்லாக்   கேட்டுக்கோங்க... கொழந்தைக்குப் பால் கொடுத்தபடியே...அந்தப் பொண்ணு தூங்கிடுச்சு... பால்வாடைக்கு பூனை அந்த பொண்ணு பக்கத்தில போயிட்டு இருந்தப்ப... அந்த நேரத்தில இந்த பாவி மனுசன்...கொல்லைக்குப் போக வெளியே வந்த நேரத்தில ... எ கண்ணு அந்தப் பூனையப் பார்த்திடுச்ச... இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னா நெனக்க முடியும்?. எங்கே பூனை கடிச்சிடப் போவுதுன்னு பூனையை பிடிக்கப் போனேன்...கை தவறி மார்ல  பட்டிடிச்சு...”      -என்று பதட்டமில்லாமல் சொன்னார் நாட்டாண்மை.   

        “என்னம்மா நாட்டாண்மை சொல்ற மாதிரி கொழந்தைக்கு பால் கொடுத்திட்டே தூங்கிட்டியா...?”  -மணியக்காரர் கேட்டார்.   

“ஆமாங்க...ஆனா...”-அனுசூயா சொல்லி முடிக்குமுன் இடைமறித்தார் மணியக்காரர்.

          “என்னா ஆனா...ஆவன்னா...பெண்புத்தி பின்புத்திங்கிறது சரியாப் போச்சு..தூங்கிறப்ப ஜாக்கிரதையா தூங்கிறதில்லையாம்மா...என்னா புள்ள நீ..?-கோவில்பிள்ளை  மிடுக்கானக் குரலில்  பேசிவிட்டு மீசையைத் தடவிக்கொண்டார்.

          “பெரியவர்ட்ட மன்னிப்பு கேட்டிட்டு வீட்டுக்குப் போம்மா”-மணியக்காரர் தீர்ப்புக் கூறுவதைப் போல்  கூறினார்.
 
          தன் பேச்சு எடுபடவில்லை என்பதைவிட,  தன்னைப் பேசவே விடவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாக  அதிகமாக அனுசூயா  வேகமாக நடையை எட்டிவைத்து விரைந்து வந்து வீட்டிற்குள் நுழைந்தாள். 

          தூங்கிக்கொண்டிருந்த குழந்தை எப்பொழுது விழித்ததுக் கொண்டது  என்றே தெரியவில்லை.  பசியால் ‘வீர்...வீர்...’என்று கத்திக் கொண்டிருந்தது.  அழுத குழந்தையின் வாயில் பால் ரப்பரைத் திணிக்க, அழுகை சப்தம் மெதுவாககுறைந்தது என்றாலும் இன்னும் சிறிது நேரத்தில் பாலுக்காக அழுவான் என்பது தெரியும்.  
                                                               

       வேகமாக அடுக்களைக்குள் சென்று கேஸ்அடுப்பைப் பற்ற வைத்துப் பாலைச் சூடேற்றினாள்.  சிறிது நேரத்திலேயே அவளின் மனதைப் போலவே பாலும் பொங்க ஆரம்பித்தது.   அடுப்பை  அணைத்துவிட்டு பாலை நன்றாக ஆறவைத்து புட்டியில் அடைத்து,குழந்தைக்கு புகட்டினாள்.   பாலைக் குடித்துக்கொண்டே குழந்தை தூங்கிபோனது.

          நாட்டாண்மை வீட்டிற்குள் நுழையுமுன் செருப்பை வெளியில் விட்டுவிட்டு, உள்ளே நுழைந்து, பீரோவில்  வைத்திருந்த பிராந்தியை எடுத்துத் தண்ணீர் எதுவும்  கலக்காமலேயே வேகமாக கண்ணை மூடிக்கொண்டு குடித்தார்.  அனுசூயா அதைப்பார்த்துப் பயந்து உடல் லேசாக நடுங்க... அதை வெளிக்காட்டிக் கொள்ளமலிருந்தாள்.

          “ஊருக்கே நாட்டாண்மை நா...!  என்னயே பஞ்சாயத்தில நிறுத்திட்டியே..!.நல்லா தெரிஞ்சுக்க...என்ன ஒண்ணால இல்ல...வேற யாராலையும் ஒண்ணும் செய்ய முடியாது...ஏன்னா..!.இந்த ஊர்ல நான் சொல்றதுதான் வேதம்னு ...ஜனங்க நம்புறாங்க...!விதவையா ஆயிட்டா... விவேகமா நடந்துக்கத் தெரியலையே...!”

          “ஒங்கள பெரிய மனுசன்னு ஊரே நினைக்கிறப்ப...இப்படி சின்ன புத்தி இருக்குமுன்னு நான் நெனச்சுக்கூடப்  பாக்கலை...!”

          “என்ன பண்றது...நானும்தான் நெனக்கல...எல்லாம் இப்படி நடக்கனமுன்னு  விதி...நா ஆக்சிடெண்ட்ட சொல்றேன்... ம்...ம்...விதியை மாத்த யாரால முடியும்?”

          “ஆக்சிடெண்டுல  நானும் சாகாமப்  போயிட்டேமேன்னு இப்ப நெனைக்கிறேன்...”

          “அதான் சொன்னேனே...விதியை மாத்த யாரல முடியும்?  கவலைப்படாதே...இனி ஒன்ன கவனிச்சுக்க...எல்லாத்துக்கும் நான் இருக்கேன்...எல்லாமே  ஆக்சிடெண்டுதான்...எல்லாம் விதிப்படிதான் நடக்கும்“    -நாட்டாண்மைபேசிக் கொண்டே அனுசூயாவின் கையைப் பிடித்து இழுத்தார். கையை உதறிவிட்டு ஓட முனைந்தாள்.  அதற்குள் முந்தானையைப் பிடித்து இழுத்து அனுசூயாவை இறுக அணைத்தவாறே சப்தம் வெளியில் வரமல் இருக்க அங்கவஸ்திரத்தால் அவள் வாயை அடைத்தார்.  பலம் கொண்ட மட்டும் அனுசூயா போராடிப் பார்த்தாள்.    தன் சக்தி முழுக்கச் சேர்த்துப் போராடியும் இறுதியில் அந்த மனிதமிருகத்திடம்  தோற்றுப் போனாள்.

                                                          
               அங்கவஸ்திரத் துண்டை உதறித் தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்து தோளில் போட்டுக் கொண்டு  நாட்டாண்மை தனது அறைக்குள் சென்று அறைக் கதவை உட்பக்கமாக தாழ்போட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்தார்.  சிறிது நேரத்தில் உறங்கிப் போனார்.  இரவில் எரியும் சிவப்பு விளக்கு மட்டும் அந்த அறையில் எரிந்து கொண்டு இருந்தது.


           அனுசூயாவின் விழிகள் சிவப்பாகி  கண்ணீரை இரத்தமாக வடித்துக்கொண்டிருக்க, சிலையைப் போல் கிடந்தாள்.  இனி இந்த உயிர் எதற்கு? இனி வாழ்ந்து என்ன பயன்? எண்ணிய பொழுது, குழந்தை விழித்துக் கொண்டு  மீண்டும் கத்தியது. நேரம் ஆக ஆக குழந்தை சத்தமாகவும் வேகமாகவும் கத்திக் கொண்டே இருந்தது.  ‘நாம் இல்லையென்றால் குழந்தையை யார் காப்பாற்றுவார்கள்’- என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தது.  மிகவும் சிரமப்பட்டு அனுசூயா எழுந்தாள்.  குழந்தைக்கு பால் சூடேற்ற அடுக்களைக்கு  மெதுவாகச் சென்றாள்.   கேஸ்அடுப்பைப் திறந்துவிட்டு...பாலைப் பார்த்தாள்.  பாலில்லாமல் வெறும் பால் சட்டிமட்டுமே இருந்தது.  என்ன செய்வது ? ‘தாய்ப்பால் கொடுக்கலாம்’ என்று  யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே...குழந்தை கீழே விழுந்து,  அபயக் குரலில் கத்தவே...வேகமான  பதட்டத்துடன் ஓடி வந்து, குழந்தையை வாரி எடுத்தாள்..  என்ன செய்வதென்று தெரியாமலே யோசித்து யோசித்துப் பார்த்தாள்.  விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருந்தது.  கடைசியில்  வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடலாம் என்று  எண்ணிக்  குழந்தையைத் தூக்கிக் கொண்டு  நடந்தாள். 
 
              வீடு முழுக்க கேஸ் சிலிண்டலிருந்து புரப்பேன் வாயுவின்  நெடி பரவிக் கொண்டிருந்தது.  அது நாட்டாண்மையைத்         தூக்கத்திலிருந்து   எழுப்பியது. என்னவென்று தெரியாமலேயே  தட்டுத்தடுமாறி எழுந்தவர்,  என்னவென்று தெரிந்துகொள்ள மின்விளக்கைப் போட சுவிட்சை அமுக்கினார்.  மறுநொடியே வீடே தீப்பிழம்பாக பற்றி எரிந்தது.  நாட்டாண்மையின் அலறல் சத்தம் மட்டும் வெகுதூரம் கேட்டது. 
   
              ஊரார் உடனே கூடித்  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு  வெகு நேரப் போராட்டத்திற்குப்  பின் தீயை அணைத்தனர்.  தீயில் வெ ந்து போயிருந்த  பெரியவரான நாட்டாண்மையின் உடலைத் தூக்குவதற்கு இயலாமல் இருப்பதை எண்ணி செய்வதறியாது   அனைவரும்  திகைத்து நின்றனர்.

          “பெரியவரு...சொல்லு தாங்க மாட்டாரு...! மானஸ்தர்யா..!.என்னதான் இருந்தாலும்...பெரியவரு பெரியர்வர்தான்...”-ஊரில் ஒரு சிலர் பெரியவரைப் பற்றிப் பெருமையாகப்  பேசிக்கொண்டர்கள்.

          இந்த பரபரப்பில்  அனுசூயா பற்றி நினைக்க  மறந்தனர்.  அனுசூயா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெகு தொலைவு வந்துவிட்டாள்.  அனுசூயாவின் குழந்தை இப்பொழுது அழுகையை நிறுத்தியிருந்தது,  அவளால் இப்பொழுதும் அழுகையை நிறுத்த முடியவில்லை!
                                                                                                                                                                                                                                              .   
                                                                                                                                                                                                                                    மீள் பதிவு
      

 

 மாறாத அன்புடன்,   

மணவை ஜேம்ஸ்.

16 கருத்துகள்:

  1. வணக்கம் மணவையாரே.... அருமையான கருத்துக்கோர்வை பசுத்தோல் போர்த்திய புலிக்கு சரியான தண்டனையை இறைவன் கொடுத்தானா ? இல்லை மணவையார் கொடுத்தாரா ? 80தை என்னால் கணிக்க முடியவில்லை இருப்பினும் முடிவு அருமை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

    ஆனால் ? அனுசூயாவை நினைத்து அனுதினமும் வருந்த வைத்து விட்டீர்கள் எல்லாம் அவன் சாரி உங்கள் செயல்

    தலைப்பு ஊமையான உண்மைகள் எமது வாழ்வில் சமீப காலமாக உண்மைகள் ஊமையாகி விட்டன... என்ன செய்வது நான் குருடன் என்று நினைத்துக்கொ(ல்)கிறேன்
    எமது பதிவையும் தாங்கள் தங்களது தளத்தில் வைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      ‘ஊமையான உண்மைகள்!’ நடந்த நிகழ்வை நினைத்து, தாங்கள் அனுசூயாவை எண்ணி வருத்தபடுவதைப் போல நானும் வருத்தப்பட்டதால் எழுதியது. தங்களின் உள்ளக் குமுறலின் உரத்த சிந்தனை.

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பசுத்தோல் போர்த்திய புலி என்பது இதுதானோ? நாட்டாண்மை தோற்றார். அனுசுயா மனதில் நின்றுவிட்டாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்தவனின் முகத்திரை கிழிக்கப்பட்டதைப் பட்டவர்த்தனமாகச் சொன்னதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
    2. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாக்கிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அனுசுயாவின் முடிவு வரவேற்கதக்கதே! அழகான மொழிநடையில் அழகான கதை அய்யா!
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இந்த தண்டனைத் தேவைதான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவானே தண்டனை தேவைதான் என்ற முடிவிற்கு வந்த பிறகு... அப்பீல் ஏது?

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஜீ.

      நீக்கு
  5. சிறப்பான கதை! மீள்பதிவு என்று நினைக்கிறேன்! ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக வலது கையால்... ஒரு கையால் மட்டுமே தட்டச்சு செய்ய முடிகிறது.. மேற்கண்ட கதை மீள்பதிவுதான்.

      - நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் ஐயா!

    மனம் தொட்ட கதை! அதன் எழுத்து நடை அபாரம் ஐயா!
    உண்மையில் ஒரு குறுஞ் சித்திரம் அல்லது குறும்படம் போன்று
    காட்சிகளை அழகாக அமைத்த வசனங்கள்.

    பண்ணையாரின் பசுத்தோல் போர்த்திய புலி வேடமும்
    அவருக்குக் கிடைத்த தண்டனையும் கதையை நன்றாகவே நகர்த்திச் சென்றது.

    தங்களின் திறமையைக் கதை சொல்லிற்று ஐயா! சிறப்பு!

    வாழ்த்துடன் த ம 8 வாக்கும் வழங்கினேன்!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் மேலான பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அனுசுயாவின் முடிவு அருமை! பல இடங்களில் உண்மைகள் ஊமைகளாகிவிடுகின்றன....அதுதான் இந்த உலகம்....நல்ல கதை...

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    தாங்கள் நல்ல கதை...என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...