ஒரு பார்வையின் மௌனம்
பிரியமான கவிஞர் வசந்த லீலாவிற்கு,
தங்கள்
இரசிகன் அழகேசன் எழுதுவது நலம். நாடுவதும்
அதுவே!
‘கரும்புவில்’ இதழில் இந்த வாரத்தில் வெளியான தங்களின் கவிதையில் நான் மிகவும் இரசித்துப்
படித்த வரிகள்,
நீ என்ன தோசைகல்லா?
ஒவ்வொரு ராத்திரியும்
என்னைச் சுடுகிறாயே!
நீயும்...
என்னைச் சுட்டுக் கொல்லாதே!
நிலவும் தனிமையில்...
உலவும் வெறுமையில்...
வஞ்சச் சுமைதனை
நெஞ்சம் தாங்குமோ? ’
தங்கள் கவிதைக்கு அப்படியொரு காந்தசக்தி
இருக்கிறது...! படிக்கின்றபொழுது அதோடு ஒட்டிக்கொள்கிறேன்
என்று சொல்வதா? அல்லது என்னைக் கவர்ந்து கொள்கிறது என்று சொல்வதா? என்றே எனக்குத்
தெரியவில்லை!
கவிதைக்குள்
சோகம் இழையோடுகிறதே! சோகத்தைப் பங்கிடுவதும் சுகம்தானே! ‘நீ’யும்
சேர்ந்து என்று நீங்கள் சுட்டு விரலை நீட்டி யாரைச் சொல்கிறீர்கள்? வரும் கடிதத்தில் விளக்கம் தருவீர்கள் என்று
நம்புகிறேன்.
தங்களின் ஒவ்வொரு கடிதத்தையும் பாதுகாத்து
வைத்திருக்கிறேன். எனது கடிதத்திற்குத்
தவறாமல் பதில் எழுதுவதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு நெஞ்சன்,
க.அழகேசன்.
- கடிதத்தை உள்வைத்து
நாக்கின் எச்சிலைக் கவருக்குக் கொடுத்து ஒட்டினான்.