நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)
காரிருள் சூழப் பகலிலேயே வானம் இருண்டுகொண்டு கனமழைக்கான மேகச் சுவடுகளுடன் இருந்தது.
டாக்டர் ‘பயாப்ஸி’ எடுத்து டெஸ்ட்டுக்கு கொடுத்த ரிசல்ட் கையில் வைத்து அமைதியாக அதையே பார்த்துக் கொண்டு இருந்தார்; எதிரே அமர்ந்திருந்த தமிழினியனின் இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே போக அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“மிஸ்டர்...................” - டாக்டர் அவனின் பெயரை யோசித்தார்.
“தமிழினியன்...டாக்டர்”
“ஓ...எஸ்... மிஸ்டர் தமிழினியன்... நெறையாப் பேரப் பார்க்கிறதால பேர மறந்திட்டேன்... சாரி...”
“பரவாயில்லைங்க டாக்டர்...எத்தன பேர் வர்றாங்க... போறாங்க... எல்லாருடைய பேரும் ஞாபகம் வச்சுக்க முடியாதில்ல...!”
“சரியாச் சொன்னீங்க... மிஸ்டர் தமிழினியன்... சரி...நா விஷயத்துக்கு வர்றேன்... நா சந்தேகப்பட்ட மாதரியே ஒங்க அம்மாவுக்கு லங்ஸில்ல கேன்சர்ன்னு கன்பார்ம் ஆயிடுச்சு” தமிழினியனின் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. அவனால் பேச முடியவில்லை; வேண்டிய தெய்வங்கள் எல்லாம் கைவிட்டதாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.
“டாக்டர்... எங்க அம்மாவ எப்படியாவது காப்பாத்துங்க... எனக்கின்னு வேறு யாருமில்ல...பிளிஸ்” கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான்.
“மிஸ்டர் தமிழினியன்... கேன்சர்ன்னா... எல்லாமே ஆளக் கொன்னுடுமுன்னு நெனக்க வேண்டியதில்ல... ஒங்க அம்மாவுக்குப் புற்றுநோய் இருப்பதைத் தொடக்கத்திலேயே கண்டிபிடிச்சாச்சு... இது பர்ஸ்ட் ஸ்டேஸ்தான்... நோ பிராபளம்... பயப்பட வேண்டியதில்ல... குணப்படுத்த முடியாதுன்னு முன்பு கருதப்பட்ட புற்றுநோயத் தற்போது குணப்படுத்த வழி உருவாகி இருக்கு... பயப்பட வேண்டியதில்ல...மருந்து மாத்திரை நான் தாறேன்... சீக்கிரம் குணமாக்கிடலாம்... டோன்ட் ஒர்ரி... ‘தெரபி’ கொடுக்க அவசியம் இருக்காது... தேவை ஏற்பட்டா... பிறகு பார்த்துக்கலாம்.
“டாக்டர்... ஒங்களத்தான் நா தெய்வமா நம்பி இருக்கேன்... கைவிட்டுடாதிங்க...” டாக்டரின் காலைப்பிடித்துக் கெஞ்சினான்.”
“என்ன இது...? எழுந்திரு... கவலப்படாதே... நா இருக்கேன்... கவலப்படாதே... மாத்திரை எழுதித் தாரேன்... வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ...!”
‘வீட்டுக்கா...?’ வீடு இருந்தால்தானே... மனதுக்குள் நினைத்துக் கொண்டே மாத்திரைச் சீட்டை வாங்கிக் கொண்டு, மாத்திரையை வாங்கினான்.
கருத்திருந்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு இடியுடன் மழையைப் பெய்து வானமும் அழத்தொடங்கியது.
தமிழினியன் அம்மாவிடம் சிரித்துக் கொண்டே வந்தான்.
“என்னப்பா... ராசா... டாக்டர் என்ன சொன்னாரு...?” தங்கம்மாள் கேட்டாள்.
“ஒன்னுமில்லையாம்மா... சும்மா சின்ன நீர்க்கட்டியாம்... பயப்பட ஒன்னுமில்லட்டாரு...”
“அப்ப... நம்ம... வீட்டுக்குப் போலாமாப்பா...?”
“போலாம்மா...” என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது மழையில் நனைந்திருந்த ரோஸி இவர்களின் அருகில் வந்து நின்றாள். ரோஸியை சற்றும் எதிர்பார்க்காத அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
“வாங்க... ரோஸி... அம்மா... இவுங்க எனக்குத் தெரிஞ்சவுங்கம்மா...எங்கம்மா” அறிமுகப் படுத்தினான் தமிழினியன்.
“வாம்மா... மகாலட்சுமி மாதரி இருக்கே.... அய்யோ ஒடம்பெல்லாம் நனைஞ்சு போயிருக்கே... இங்க வாம்மா...வா...” அருகில் அழைத்து தன் முந்தானையால் ரோஸியின் தலையின் ஈரத்தைத் துவட்டி விட்டு அவளின் முகத்தைத் துடைத்து விட்டாள்.
“என்ன இங்க வந்திருக்கீங்க...” ரோஸியப் பார்த்துக் கேட்டான் தமிழினியன்.
“ஒங்க வீடு தீயில எரிஞ்சு போனதப் பேப்பர்ல பார்த்தேன்...”
“அய்யய்யோ... நம்ப வீடு தீயில எரிஞ்சிடுச்சா.... என்னப்பா...?” பயத்துடன் நடுங்கியபடித் தங்கம்மாள் கேட்டாள்.
“ஆமாம்மா... நம்ம ஆஸ்பத்திரிக்கு வந்தோமில்ல அன்னக்கி ராத்திரி...”
“அய்யய்யோ... அம்மாவுக்குத் தெரியாதா... ?
“நா சொல்லல...பரவாயில்ல... எப்ப இருந்தாலும் தெரிஞ்சுதானே ஆகனும் ”
“ஆபிஸ்ல வேலை... உடனே என்னால வர முடியல... இன்னக்கி சண்டே ... அதான்”
”என்னப்பா சண்டே...” தங்கம்மாள் பதறிக் கேட்டாள்.
“அய்யோ... இன்னக்கி ஞாயிற்றுக் கிழமைன்னு சொல்றாங்க...!”
“அதானே... சண்டேயோ என்னமோன்னு நா பயந்தே போயிட்டேன்...”
“ஒங்க வீட்ட விசாரிச்சு அங்க போனதுக்கு அப்புறம்தான்... நீங்க ஆஸ்பத்திரியில இருக்கிற விவரம் தெரிஞ்சது... அதான் நேரா இங்க வந்தேன்....”
“அம்மாவுக்கு என்னாச்சு...?”
”ஒன்னுமில்ல... வயித்துவலி... மாத்திரை கொடுத்திருக்காரு... வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாரு...” தமிழினியின் சொன்னான்.
“சரி... கௌம்புங்க... எ வீட்டுக்குப் போகலாம்...! நா தனியாத்தானே இருக்கேன்... வாங்க போகலாம்...! வாங்கம்மா... ! ” தங்கமாளை அழைத்துக் கொண்டு தமிழினியனிடன் சம்மத்தைக் கேட்டாமலே புறப்பட்டாள். தமிழினியனும் வேறுவழியின்றிப் பின் தொடர்ந்தான்.