இதயங்கள் சங்கமம்
ஆசிரிய நண்பர் அவர்களின் மகன் வேலையின் நிமித்தமாக சேலம் சென்றிருந்த பொழுது தந்தையிடம் சொல்லாமலே நண்பர்களோடு சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு சென்றிருக்கிறான். தினந்தோறும் தந்தையிடம் அலைபேசியில் பேசுபவன் அன்றிரவு எட்டு மணிக்குப் பேசியிருக்கிறான்.
‘‘ அப்பா நானும் நண்பர்களும் ஏற்காட்டிற்கு வந்தோம். நாங்கள் இப்பொழுது புறப்படப் போகிறோம். அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டாம்... டவர் சரியாகக் கிடைக்காது...ஓ.கே.” எனத் தொடர்பைத் துண்டித்தான்.
ஏற்காட்டில்தான் அவன் பிறந்தான் என்பதால்தானோ என்னவோ அந்த இடத்தைப்
பார்ப்பதில் அவனுக்கு அலாதிப்பிரியம்.
காலையில் ஆசிரிய நண்பர் பள்ளிக்கு வந்து விட்டார்.
ஆசிரியரது அலைபேசி ஒலிக்கிறது.
“சார்... ஒங்களுக்குப் பையன் யாரும் இருக்காங்களா...?!
இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்து பாலிஸி போடுவதற்காகத் தொந்தரவு செய்கிறார்கள் என்று போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டார் ஆசிரிய நண்பர்.
சிறிது நேரத்தில் மீண்டும் அலைபேசி ஒலிக்கிறது.
“சார்... கொஞ்சம் சொல்றதைக் கேளுங்க... ஒங்க பையன் ஏதும் ஏற்காட்டிற்குச் சென்றிருந்தாரா...?”
“ஆமாம்... சார்...ஆமாம்... என்ன சார்...?!”
“அவருக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சு... ஒங்களுக்குத்தான் கடைசியா போன் பண்ணி பேசியிருக்காரு... அதில பேரு அப்பான்னு இருந்திச்சு... அதான்…”