“தெருவில் ஒரு திருவிளக்கு”-நாடகம்
திருச்சி, பாலக்கரை உலக மீட்பர் ஆலயத்தில் 2002 -ஆம் ஆண்டு அன்றைய பங்குத் தந்தை இன்றைய திண்டுக்கல் ஆயர் மேதகு. தாமஸ் பால்சாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அருட்தந்தை. இரா.மனோகரதாஸ் அன்றைய ஆர்.சி. மேனிலைப்பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் விருப்பத்தின்படி திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் & திரு. அருளானந்தம் அவர்களின் மகன் அருட்தந்தையாகப்போகும்
செல்வன். மாணிக்கம் அவர்களும்
நடிகை திருமதி. T.R. ராஜேஸ்வரி அவர்களும் வேளாங்கன்னி மாதாவாக ஒரு மாணவி (சொரூபம் அன்று) நடித்து அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகம் “தெருவில்
ஒரு திருவிளக்கு!”
இலங்கையிலிருந்து
அகதியாக வந்த தாயும் மகனும் வாழ வழியின்றி அல்லல்படுகிறார்கள். வேறு வழியின்றி பிச்சைக்காரியாகி
வாழ்க்கையை நகர்த்தும் பொழுது ஒரு பால்காரன்
அவனது ஆசைக்கு இணங்கி அவனோடு வந்தால் பணம் தருவதாக அழைக்கிறான். ‘நான் அப்படிப்பட்டவலல்ல’
என்று கூறி அழுது புலம்பிக் கொண்டிருக்கையில்… இதைக் கவனித்த பாதிரியார் அவளது நிலையை
அறிந்து அவளுக்குக் கன்னியாஸ்திரி மடத்தில் சமைக்கிற வேலை வாங்கித் தருவதாகக் கூறி
உதவி செய்வதாக அழைக்கிறார். அவளுக்கு அவர் தெய்வமாகத் தெரிய… அவர்கள் புறப்படுகிறார்கள். அதைக்கண்ட பால்காரன் “பாருடா… நா … கூப்பிட்டு வராதவ…
அவரு கூப்பிட்டவுடனே போறாள்…” என்கிறான்.
மேற்கண்ட நாடகம் இந்த எனது சிறுகதையிலிருந்து சிறிது மாற்றம் செய்யப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
தெருவில் ஒரு திருவிளக்கு...!
“தர்மம் செய்யுங்கய்யா... தாயே தர்மம் செய்யுங்கம்மா... அய்யா...அம்மா... ஒங்களுக்கு புண்ணியமா போகுமுங்க...’’ அண்ணா சிலைக்கருகில் பரிதாமாபமாகக் குழந்தையை இடுப்பிலும் ஈயத்தட்டைக் கையிலும் வைத்துக்கொண்டு கீறல் விழுந்த தேசிய கீதத்தைப்போலக் கத்திக் கொண்டு இருந்தாள் கண்ணகி.
நிலவுக்கு வழிவிட்டுச் சூரியன் மறையும் அந்தி வேளை...அந்தச் சோடியம் வேப்பர் விளக்கின் வெளிச்சம்.. கண்ணகியின் மேனிக்கு மஞ்சள் பூசி அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. இன்று ஜங்ஷனுக்கு வந்து போகும் ஜனங்களின் நடமாட்டம் சற்று அதிகமாகத்தானிருந்தது.
பிள்ளை மொழி பேசத் தெரியாததால் பசியை அழுகையால் அறிவுறுத்தியதும்...தன்னிடம் பால் இல்லையென்பதும் கண்ணகிக்குத் தெரியாத ஒன்றல்ல... தனது பசியையும் மறந்து பிள்ளையின் பசியைப் போக்க நினைத்துத் தட்டைப்பார்த்தாள்... பால் வாங்கக்கூட பற்றாக்குறையாகத்தான் இருந்தது.
விதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. பிள்ளை பசியின் கொடுமை தாங்காமல் ‘வீல்...வீல்...’ எனக் கத்த ஆரம்பித்தது. தாய்பால் இல்லையென்றாலும் பாலைக் குழந்தைக்கு ஊட்டுவது போல் முனைந்தாள்.
கண்காட்சியாக இதைக் கவனித்துக் கொண்டிருந்தது அங்கொரு கும்பல், வெறும் பால் ரப்பரைச் சப்பிக்கொண்டு எல்லாக் குழந்தைகளைப் போலத்தான் அதுவும் தனக்கு வேண்டியது கிடைத்து விட்டது போல மகிழ்ச்சியில் அழுகையை நிறுத்தியது. கண்ணகிக்கோ அழுகை அழுகையாய் வந்தது. தாய்மையின் இலக்கணமே அதுதானே...!
அதை நினைத்து அழுதாள். ‘அந்த லாரிக் காரன் குடிச்சிட்டு வண்டி ஓட்டி...பாவிப்பய... எ புருஷன் மேலயா வண்டிய விடனும்...ஆண்டவன் எ தலையில் இப்படி எழுதிட்டானே... இந்த அபலைய அம்போன்னு அனாதையா விட்டிட்டு...கட்டின ஒரு வருஷத்திலே போயிட்டியேயா... இந்த பாவி மக கையிலேஒரு புள்ளயக்கொடுத்துட்டு... இப்படி கஷ்டப்பட வச்சிட்டு போயிட்டியேய்யா...போயிட்டியேயா...’ எண்ணப்பறவை எங்கெங்கோ பறந்து கொண்டிருக்க அந்தப் பேச்சு கண்ணகிக்கு எங்கே இருகிறோம் என்று ஞபாகப்படுத்தியது.
“டே...கருப்பானாலும் அழகுக் கருப்புடா...!”
“மச்சி...இவளுக்கு இருபது வயசுகூட இருக்காது...மார்க்கு எம்பதுக்கு மேலே போடலாமுடா...!”
“டே...இவ அப்படிப்பட்டவளா இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்குடா...!”
“இதுல என்ன மச்சி சந்தேகம்...எல்லாம் அந்த கேஸ்தான்...காசு இல்லாம இதப்பத்தி பேசிப் பிரயோஜனம்...வா போகலாம்”. -கல்லூரி மாணவர்களின் பேச்சு அவளின் விழியைச் சிவப்பாக்கியது.
ரோட்டுக்கரையிலே வந்து நிக்கனுமுன்னு எனக்கு மட்டும் பிரியமா... என்ன? வேலை கேட்ட பக்கமெல்லாம் குழந்தையில்லேன்னா வேலை தர்றேங்கிறாங்க...குழந்தை இருக்கிறதனாலேதான் நான் உயிரோட இருக்கிறேங்கிறது அவுங்களுக்குத் தெரிவதற்கு நியாயமில்லதான். இப்போதைக்கு இதைத் தவிர வேற வழியே தெரியலை.
இரக்க குணம் படைத்தவர்கள் சிலர் இல்லாமல் இல்லை. இரண்டு அம்பது பைசாவும் ஒரு ரூபாய் காசும் சொந்தம் கொண்டாடிக் கிடந்தது . ‘அம்மா தாயே..’.என்று வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பித்தாள்.
‘ஒடம்ப வளத்து வச்சிருக்கா..ஒழச்சு சாப்புட வேண்டியதுதானே... என்ன கை நொண்டியா...? காலு நொண்டியா...? பிச்சை போட்டுப் போட்டுத்தான் நம்ம நாடு இப்படியாயிடுச்சு...’ வழிநடைப் பயணிகள் சிலர் பேசிக்கொண்டே போனார்கள்.
முருக்கு மீசைக்காரப் பால்காரன்... கைலியும் பனியனும் மட்டுமே மாட்டியிருந்தவன்... மீதமான பாலைச் சேதமாகாமல் சேர்த்து வைத்துக் கொண்டே... நீண்ட நேரமாகத் தன்னையே பார்த்துக் கொண்டடிருந்தாலும், பார்க்காதவள் போல்தான் நின்று கொண்டிருந்தாள்.
பால்காரன் பக்கத்தில் வருவதைப் பார்த்த கண்ணகி, “குழந்தை பசியால துடிக்குதுங்க...என்ட்ட இருக்கிறது ரெண்டு ரூபாதாங்க...இதை வச்சிக்கிட்டு குழந்தைக்குக் கொஞ்சம் பால் கொடுத்தீங்கன்னா...“ எதிர்பார்ப்பு அவள் கண்ணில் தெரிந்தது.
பீடியைப் பற்றவைத்துப் புகையை வாயிலிருந்து வளைய வளையமாக விட்டுக்கொண்டே பேசினான், “புள்ளைக்கு பாலுதானே வேணும்...கவலைய வுடு... எனக்கு காசே வேணாம் புள்ள...எவ்வளவு காசு வேணுமுன்னாலும் நா தர்றேன்... என்னோட வர்ரீயா...?”
அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே அவள் உடலே நடுங்கியது. அந்த வார்த்தை அந்தச் சம்பவத்தை நினைவு படுத்தியது.... இப்படித்தான் ஒருநாள் அந்தி சாயும் நேரம் நடுத்தர வயதுள்ள ஒருவன்
‘நான் ஒன்ன அடிக்கடி கடை வீதியிலே பாக்கிறேன்...எ மனைவிக்கு ஒடம்பு சரியில்ல...வீட்டுக்கு வந்து...பாத்திரத்தச் தேச்சு கொடுத்துவிட்டுப் போயிடு...அன்னன்னிக்குப் பணம் கொடுத்திடுறேன்...எனக்கும் சுலபமா இருக்கும்...ஒனக்கும் சாப்பாட்டுக்கு வழி கிடைக்கும்...’ என்றான். இவளும் அவனோடு சென்றாள்.
வீட்டிற்குள் நுழைந்தவள் ‘அம்மா எங்கே? ’ என்று கேட்டாள்.
‘ எங்கே அம்மா இருக்காங்க...சும்மா சொன்னேன்...எல்லாம் நான்தான்...என்னோடு நீயும் சேர்ந்தால் ‘ என்று அவளைக் கட்டி அணைக்க முயன்றான். அவனின் முரட்டுப்பிடியில் இருந்து திமிற முடியாமல் திணறிய அவள், தனது குழந்தையின் அழுகுரல் கேட்க... அடுத்த வினாடி சுதாரித்துக் கொண்டவளாக ‘கொஞ்ச நேரம் பொறுங்கள் குழந்தையின் அழுகையை நிப்பாட்டிட்டு வர்றேன்’ என்றவாரே, வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து... சடாரென வேகமாக அறையைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு அன்றைக்கு தப்பித்து வந்தது நினைவுக்கு வர கண்கள் குளமாயின.
“என்ன புள்ள...என்னோட வர்ரியா புள்ள...”-மறுபடியும் பால்காரன் கேட்டான்.
“......................................................................................” அவளால் பேச முடியாமல் வார்த்தை சிக்கிக் கொண்டு வெளியில் வரத் தடுமாறியது.
“எங்கே கூப்புடுறேன்னு புரியலேங்கிறியா...? வா புள்ள புரிய வைக்கிறேன்... காசுக்குக் காசு... சுகத்துக்குச் சுகம்...”
“......................................................................................”- விழிகளிலிருந்து நீர் ‘பொலபொல’வென வழிந்தது.
“மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கிறத... நா மறந்தே போயிட்டேன்...” காரைப் பல்லைக்காட்டிச் சிரித்தான்.
“ நா வாழனுமுன்னு நெனைக்கிறேன்... எ வாழ்க்கைய அழிக்கனுமுன்னு நெனைக்கிறீங்களே... என்ன வாழவிடுங்கய்யா...ஒங்கள கை எடுத்துக் கும்புடுறேன்” என்று கெஞ்சினாள்.
“பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கிறீயே...“ மீசையை முறுக்கிய பால்காரன்... பாதிரியார் பக்கத்தில் வரவே நகர ஆரம்பித்தான்.
அந்த நேரத்தில் அருகில் வந்த பாதிரியார், “உன் நிலையை பார்த்து மனம் ரொம்ப வேதனைப்படுது...உனக்கு சிஸ்டருங்க மடத்தில... கான்வென்ட்ல... சமைக்கிற வேலை வாங்கித் தர்றேன்... என்னோடு வாரியாம்மா...” தாயன்போடு கேட்டார். அதுவரை நாராசமா ஒலித்த இந்த வார்த்கை இப்போது அவளுக்குத் தெய்வ வாக்காக காதில் கேட்டது. தெய்வமாகத் தெரிந்த பாதிரியாரைப் பார்த்து ‘சரி’ யென்பதைப் போலத் தலையசைத்து... அவள் நம்பிக்கையுடன் குழந்தையோடு பாதிரியாரைத் தொடர்ந்தாள்.
“பாருடா...நா கூப்புட்டதுக்கு வராதவ... அவரு கூப்புட்டவுடன... போறதப் பாரு...” பால்காரன் படு கேவலமாகவும்... ஏளனத்துடன் பேசியது காதில் கேட்டாலும், பிரகாசமான கண்களோடு தனக்கு நல்ல எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கி நடைபோட்டு சென்றாள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் நடந்தார்கள்!
மணவை ஜேம்ஸ்.