வியாழன், 30 ஜூலை, 2015

அப்துல் கலாம் காலமானாரென்று யார் சொன்னது?!



கலாம் - காலம்... ! காலமானாரா...?!







மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் (2002 ஜுலை 25-ஆம் தேதி நாட்டின் 11-ஆவது  குடியரசு முன்னாள் தலைவர் 
 அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பொழுது மாணவர் மத்தியில் மாரடைப்பால் காலமானார்.


அய்யா அப்துல் கலாமின் நூலகம்




கலாம் எழுதிய புத்தகங்கள்

  1. Turning Points; A journey through challenges 2012
  2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
  3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
  4. Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.
  5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
  6. Mission India (திட்டம் இந்தியா) ; ஏ பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.
  7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.
  8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
  9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.

கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்

  1. Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ் சந்திரா; பென்டகன் பதிப்பகம், 2002.
  2. ஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ பீ ஜே அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.
  3. A. P. J. Abdul Kalam: The Visionary of India கே பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.
  4. பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட், 2008 இயக்கியது.
  5. The Kalam Effect: My Years with the President பீ எம் நாயர் ; ஹார்ப்பர் காலின்ஸ், 2008.
  6. Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.

தன் சிகை அலங்காரத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை.  இதை மாற்றிக் கொள்ளும்படி பலரும் கூறிய பின்பும் அவர்களிடம் அன்பாக மறுத்த விட்டார் கலாம்.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவரான அப்துல் கலாம் சைவ உணவையே உட்கொண்டார்.  காரணம் திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்த பொழுது ஹாஸ்டலில் சைவ உணவிற்கு கட்டணம் ரூபாய் 14 , அசைவ உணவிற்கு ரூபாய் 18 .  கலாமின் தந்தை வறுமையின் காரணமாக சைவ உணவைச்  சாப்பிடச்சொன்னதாக,  கலாமே குடியரசுத்தலைவராக பதவியேற்பதற்கு முன்னால் தன்னிலையை நண்பரிடம் விளக்கிக் கூறியிருக்கிறார்.

பொருளாதார சமநிலை இல்லாததால் உலகில் வன்முறை ஏற்படக் காரணம்.

திருக்குறள் 100 குறளுக்கு மட்டும் அப்துல் கலாம் விளக்கம் எழுதி இருக்கிறார்.  அதை அவசியம் நூலாக வெளியிட வேண்டும் என்பது ஆவலாக  இருந்திருக்கிறது.


                                               அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயர்...

விடுமுறை விட வேண்டாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார்.

400 கிராம் எடை கொண்ட லேசான செயற்கைக் கால்களை உருவாக்கியதுதான் தனது உண்மையான வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘நேரம்’ என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சசி.  அது ஒரு வானிவியல் நிகழ்ச்சியே தவிர, ஜோதிட நிகழ்ச்சி இல்லை”- என்று சொன்னவர் அப்துல் கலாம்.  எப்போதுமே அவர் ஒரு விஞ்ஞானியாகவே இருந்தார்!


“கனவு என்பது உங்கள் தூக்கத்தில்  வருவது அல்ல...
உங்களைத் தூங்கவிடாமல் செய்வது”

                                    போகலமோ கலாம்?

படகோட்டி  யின்மகனே!  பாரதவிஞ்  ஞான
உடலாகிப்  போனவனே!  ஓய்ந்தாய்!  -  நடமாடா
தூங்காக்  கனவுகளில்  தூளியெமை  இட்டுவிட்டு
நீபோக  லமோ  கலாம்?



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



                           கலைஞர் இரங்கல்



கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து 
மடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க;
மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின்
மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று! 
அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல் 
அமைதிகாக்கும் கேடயமாய் ஆவதற்கும் 
ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை 
அண்டைநாட்டுத் தூதராக மாறுதற்கும் 
மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு 
மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும். 
அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே 
அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே 
அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து 
அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும். 


இத்தகைய உயர்வுக்கும் புகழுக்கும் உரிய அப்துல் கலாம் அவர்களை இந்தியத் திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.































கலங்கரை விளக்கம் சாய்ந்ததது

வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.

‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு பேசினார் அந்த ஆசிரியர். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடிவாங்கிய மாணவன், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். அந்த மகத்தான மாணவன் வேறு யாரும் அல்ல.. அவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
                                           
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டியில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.

1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர் .





திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு படித்தபோது சக மாணவர்கள், பேராசிரியர்களுடன் அப்துல் கலாம் எடுத்துக்கொண்ட புகைப்படம்.   இதில் சிவப்பு  வட்டமிட்டவர் அப்துல் கலாம்.(அக்டோபர் 151931 - ஜூலை 272015) மேல் வரிசையில் வட்டமிட்டு காட்டப்பட்டவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா (எஸ். ரங்கராஜன் மே 31935 - பெப்ரவரி 272008)



அறிவியல் ஹீரோ

1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி மதியம் 3.45 மணி.. இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.




உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடு களின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.

ஏவுகணை அவசியம்

‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமையின் சிகரம்

ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்ஐடியின் பொன்விழா ஆண்டு நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையில் இருந்து எம்ஐடி வளாகத்தினுள் செல்ல, ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், ஏதோ ஒரு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுவிட்டது.
ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே, குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘டாக்டர் கலாம் போறார்...’ என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில் இதுதான் சிறப்புச் செய்தி.

இசைப்பதும் ரசிப்பதும்
                                      
உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும். வீணை வாசிப்பதில் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான ராமேசுவரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கமும் இன்னும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறியது.

வாருங்கள் இளையோரே

‘நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம்.

நிறைவேறாத கனவு

உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.

பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.

அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான கலாம்கள் உருவாவார்கள். இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
நன்றி.
எஸ்.முகமது ராஃபி
தி இந்து 28.7.2015















‘இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்’
இந்தியா வல்லரசாகும் காலம் வரும்...
கலாமே...!
உன் கனவு நனவாகும் 2020 களில்...
உன்னையே எண்ணியே வாழ்கிறோம்...!




-மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ்.

சனி, 25 ஜூலை, 2015

நான் சிக்கிய விபத்தும் சில படிப்பினைகளும்...!

நான் சிக்கிய விபத்தும் சில படிப்பினைகளும்...!



 (ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்... பிழையிருப்பின் பொறுத்தருள்க!) 



வாழ்க்கையில் கடந்து  போன ஒரு நொடியை சரிப்படுத்தி விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் விபத்தினைப் போல வேறெதுவும் இருக்க முடியாது. எல்லோர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சிறு விபத்தாவது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.  ஒரு சிலர் விபத்தைச் சந்திக்காத அதிஷ்டசாலியும் இருக்கலாம்.

         ‘உண்மையெல்லாம் சொல்லவில்லையென்றாலும்...
          சொல்லியதெல்லாம்  உண்மையென்ற உத்ரவாதத்துடன்....’


 தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?   

கால்களில்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா? - இரு
கைகளில்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா?

                ‘தனக்கு வந்தால்தான் தெரியும்தலைவலியும்காய்ச்சலும்’ 
என்ற  பழமொழி நாமெல்லாம் கேள்விப்பட்ட ஒன்றுதான்.

சனி, 18 ஜூலை, 2015

மெல்லிசை மன்னர் பற்றி அறிந்ததும் அறியாததும்


 ‘மெல்லிசை மன்னர் ’என்றழைக்கப்பட்ட எம். எஸ். விஸ்வநாதன்.



சனி, 11 ஜூலை, 2015

உயிர் மெய்...! -சிறுகதை.


                                  உயிர் மெய்...!    -சிறுகதை

                                                       (மணவை ஜேம்ஸ்)





     அதிகாலை வேளை விடியும் பொழுதில் கோழி கூவியது.  கோழி கூவித்தான் பொழுது விடியாது என்றாலும், உறங்கிக் கொண்டிருந்த இராதகிருட்டிணனின் உறக்கத்தை அது கலைத்தது.

     சின்னச்சின்ன வட்டங்களாகக்  கோரைப்பாய் கிழிந்திருக்க, அதில் படுத்திருந்த இராதகிருட்டிணனின் உடம்பு தரையில்பட்டு இருந்ததால் சில்லென்ற சிலிர்ப்பை உண்டாக்கியது.   அருகில் மனைவி ஜெயந்தி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.

முப்பத்தைந்து வயதாகிறது ஜெயந்திக்கு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.  இருபது அல்லது இருபத்தைந்து என்றுதான் மதிக்கத்தோன்றும் இளமையுடன் இருக்கும் இவளது வனப்புமிகு தேகம் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறம்.  பௌணர்மி போன்ற பிரகாசமான வட்ட முகத்தில் சின்ன வட்டமாகச்  செந்தூரப்பொட்டு நெற்றியில் இருந்து  சி திறி முகத்தில் ஒட்டியிருந்தது.  அடர்ந்து சுருண்ட கூந்தலில் பூவைச் சூடாமல் இருந்தாலும்கூட பூவையின் கூந்தலில் மணம் இருந்தது .   வியர்வையில் தாலிக்கயிறு குளித்திருக்க, கழுத்தை ஒட்டித்  தரையில் தாலி கிடந்து  ஜெயந்தியின் மேனியை அழுத்த, தாலியை எடுத்து அவளின் மார்புக்கு நடுவில் இழுத்து வைத்தபொழுது அவரையும் அறியாமல் லேசாக விரல் மார்பில்  பட, அனிச்சச் செயலாக கையைத் தள்ளிவிட்டு முன்பு போலவே அயர்ந்து தூங்குவதில் முனைந்தாள்.

     ஜெயந்திக்கு அருகில் படுத்திருந்த மகள், கவிதா உருண்டு தரையில் படுத்து, தூங்கிக்கொண்டு இருந்தாள்.  பதினான்கு வயதான கவிதா பாவாடை சட்டையில் இருப்பவள்.  இன்றைக்கோ நாளைக்கோ தாவணிக்கு வந்துவிடுவாள்.  அப்புறம் கல்யாணம் காட்சி என்று நல்ல வரன் தேடி திருமணம் முடிக்க வேண்டும்.  இவளுக்கென்று எதைச் சேர்த்து வைத்திருக்கிறோம்?  ஒன்பதாவது படிக்கும் போதே இவளைப் பற்றி ஏன் இப்படிஒரு சிந்தனை வருகிறது என்று இராதகிருட்டிணன் நினைக்கும்பொழுது பால்காரனின் மணி அடித்தது.  பால் வாங்க எழுந்து வாசல் வந்தார்.

     “ போன மாசம் பால் பணம் தர முடியலைப்பா... இந்த மாசம் சேத்துக் கொடுத்திடுறேன்”  இராதகிருட்டிணன் கெஞ்சும் குரலில் கேட்டார்.

     “ சார்... நா என்ன பணம்ன்னு கேட்டேனோ.,..?   எனக்குப்  பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியாரு நீங்க... ஒங்கள்ட்ட பணமே வாங்கக் கூடாது...” பால்கார இராமச்சந்திரன் குருபக்தியுடன்  பேசினான்.

     “ அது நியாயம் இல்லை இராமச்சந்திரா... வாத்தியாருன்னு கடனா பால் ஊத்துனாலே போதும்... இந்த உதவிய மறக்க மாட்டேன்.”

     “சார்... பெரிய வார்தையெல்லாம் சொல்லாதீங்க சார்... எம்.காம்.,பி.எட்.படித்த ஒங்களுக்கு அரசாங்கம் வெறும் நானூறு ரூபாய் சம்பளமா கொடுத்து வருதே... உண்மையிலே ஒங்க நிலமையை நெனச்சு வேதனைப்படுறேன் சார்... நீங்க காசைப் பத்திக்  கவலைப்படாதீங்க சார்.  நீங்க பணம் எப்ப வேணுமுனாலும் கொடுங்க... ஒங்களுக்குப்  பால் ஊத்தறது என் கடமை” பாலை ஊற்றிவிட்டுச் சென்றான்.

     1978-இல்  ஹையர் செகண்டரி ஆரம்பித்த பொழுதே அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த இராதகிருட்டிணன் பதினைந்து வருடங்கள் வேலை செய்தும் தற்பொழுது வாங்கும் சம்பளம் நானூற்றி அம்பது ரூபாய்தான் என்பதை நினைத்துப் பார்த்தால் மெய்யாகவே  கேவலமாகத்தான் இருந்தது.

     கதிரவனின் கதிர்கள் வெடித்துச்  சிவப்புப் பிழம்புகளாய் ... இராதகிருட்டிணனின் கண்ணில் பட்டு மேலும் சிவந்தது.  ஜெயந்தியை எழுப்பி டீ போடச் சொன்னார்.

     “நா...டீ போட முடியாது...நீங்க... வேணுமுன்னா இன்னைக்கி டீ போடலாம்”.  -கூந்தலை அள்ளி முடிந்து கொண்டே சொன்னாள்.

     “நா என்னைக்கி டீ போட்டிருக்கேன்...” ஒன்றும் புரியாமல் கேட்டார்.

     “வாடீ...போடீன்னு  என்னை டீ போடலாம்... ஆனா நா டீ போட முடீயாது... ஏன்னா... டீத்தூள் தீர்ந்து போயிடுச்சு...!டீத்தூள் வாங்க துட்டும் இல்லை..!.”

     ஏம்மா என்னைக்கு உன்னைய டீ போட்டு கூப்பிட்டு இருக்கேன், எனக்கு வாய் வருமா? உனக்குத் தெரியாதா? - என்று மனதில் நினைத்துக்கொண்ட இராதகிருட்டிணன்.

     “சீனி இருக்கில்ல...”

     “கொஞ்சம் இருக்கு...”

     “டீ...கூட ஒடம்புக்கு கெடுதிதான்...பால் குடிப்போம்...ஒடம்புக்கு நல்லது...போட்டுக் கொண்டு வா...”

     சிறிது நேரத்தில் தம்ளரில் பாலோடு வந்து இராதாகிருட்டிணனுக்குக்  கொடுத்தாள் ஜெயந்தி.

     “சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க... நா ஒங்களக் கட்டிக்கிட்ட இந்தப்  பதினஞ்சு வருசத்தில என்னோட இருபத்தஞ்சு பவுனு நகையும் வித்தாச்சு... என்னோட கழுத்தில காதுல ஒண்ணும் இல்லேன்னு சொல்றதா நெனைக்காதிங்க... நமக்குன்னு ஒரு பொண்ணு இருக்கா... நாளைக்கு அவளுக்குன்னு...!”

     “வாஸ்தவம்தான் ஜெயந்தி... என்னை என்னச் செய்யச் சொல்றே..?  பேருதான் ஹையர் செகண்டரி வாத்தியாரு...சம்பளமா அரசாங்கம் சொடுக்கிறது நானூத்தி சொச்சம்... இந்தா இன்னைக்கி அடிப்படை சம்பளம் போட்டுடுவாங்க...நாளைக்கு போட்டுடுவாங்கன்னு நம்பியே நானும் பதினைங்சு வருசத்தை இதுல ஓட்டிட்டேன்.... இனி வேற வேலைக்கா போக முடியும்...?.மனித வாழ்க்கையே நம்பிக்கையிலதான் ஓடுது  ஜெயந்தி... நம்பிக்கையோட இருப்போம்... சரி சரி... கவிதாவை..எழுப்பிப்  பாலை குடிக்கச் சொல்லு”-இராதாகிருட்டிணனின் பெருமூச்சில் ஏமாற்றமும் சேர்ந்திருந்தது.

    ஜெயந்தி, கவிதாவை எழுப்பி விட்டு உள்ளே இருக்கும் பாலை எடுத்து குடிக்கச் சொன்னாள்.  மீண்டும் இராதாகிருட்டிணனின் அருகில்  வந்தாள் ஜெயந்தி. 

     “ஏங்க...”

     “என்ன ஜெயந்தி...?”

     “அரிசி இன்னிக்கி மட்டும்தான் வரும்...”

     “போன மாதப் பாக்கி கொடுக்கலை...எப்படிப் போயி அரிசி கேக்கிறது... சரி, இன்னைக்கி இருக்கிறதைப் போட்டு ஆக்கு... ” என்ன பண்றதுன்னே புரியலையே..என்று .யோசித்து யோசித்துப் பார்த்தார்.  இராதாகிருட்டிணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

     “ஏங்க..!. மஞ்சள முடிஞ்சு இந்த மஞ்சக்கயித்தில கட்டிட்டுத்  தாலியை வித்திட்டு வாங்க... அரிசிக் கடன அடச்சிட்டு, மளிகை சாமான் வாங்கலாம்... இந்த தாதலியை அவுத்துட்டு போங்க...”தாலியைக் காண்பித்து ஜெயந்தி கேட்டபெழுது இருவரின் க்ண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

     “இன்னும் நா உயிரோடதானே இருக்கேன்...?”
       -இராதகிருட்டிணனின் வாயைப் பொத்தினாள் ஜெயந்தி.

     “வேற வழி தெரியலைங்க... நா சொன்னது தப்புத்தான்...” கன்னத்தில் போட்டு கொண்ட ஜெயந்தியின் கையைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டே ஆறுதல் கூறினார்.

     “ நமக்குன்னு ஒரு வழி இல்லாமலா போயிடும்...கவலைப் படாதே...”

     “எம்.காம்.,பி.எட்., படிச்ச ஒங்களுக்கே இந்த நெலமை, பத்தாவது பாஸாகாத எனக்கு என்ன வேலை கெடைக்கும்...ஏங்க.. நா சித்தாளு வேலைக்குப் போகட்டா...?”

     “வாத்தியாரு பொண்டாட்டி சித்தாளு... ஊரு என்ன பேசும்?”

     “ஊரா நமக்குச்  சோறு போடுது?”

     “இல்ல... இருந்தாலும் அந்த வேலை எல்லாம் ஒன்னால செய்ய முடியாதும்மா...?  -இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே பாலைக் குடித்து  முடித்தாள் கவிதா.

     “அப்பா... எனக்கு இருக்கிறது ரெண்டு யூனிபார்ம்... அதுல ஒண்ணு கிழிஞ்சு போச்சுப்பா...ஒரு வாரமா இந்த ஒரே யூனிபார்மதான்...ரொம்பக்  கஷ்டமா இருக்குப்பா...”

     “புதுசா ஒரு யூனிபார்ம் வாங்கிட்டாப்  போச்சு...” எப்படி வாங்குவது என்று தெரியாமலே அரசியல்வாதியைப் போல வாக்குறுதியை மட்டும் வழங்கினார். 

     “அய்யா...”-மகள் கவிதாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

     “கொழம்பு வைக்க ஒண்ணும் இல்ல... மாச ஆரம்பத்திலேயே இப்படின்னா... இந்த மாசத்தை இனி எப்படி ஓட்டறது?...”ஜெயந்தி சொல்லிவிட்டு அடுக்களைக்குள் சென்றாள்.

     ஆசிரியர்களின் பதவி, மதிப்பு அவர்கள் பெறும் ஊதியத்தைப்பொறுத்தே அமைகிறது.  ஒருவருடைய பொருளாதார அடிப்படையைக் கொண்டே சமூகம் மதிப்பளிக்கிறது என்பதை மனதில் நினைத்துக்கொண்டே பள்ளிக்குப் புறப்படத் தயாரானார்.  துவைத்துப் போட்ட கதர் வேட்டி சட்டையை வழக்கம் போலத்  தேய்த்துப் போட முடியாமல் எடுத்து உடுத்திக் கொண்டார்.  ஒட்டுப் போட்டுத்தித்திருந்த பழைய செருப்பை ‘ இன்னும் எத்தனை நாளைக்கு என்னுடன் வரப் போகிறாய்’ என்று நினைத்துக் கொண்டே காலில் மாட்டிக் கொண்டார்.

     அவருடன் கவிதாவும் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

     இராதாகிருட்டிணன் வேலை பார்க்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளி நல்லவேளை அதிக தூரம் இல்லாததால் நடப்பதற்கு வசதியாக இருந்தது,  இல்லையென்றால் இந்தப்  போக்குவரத்துச் செலவை எப்படி ஈடுகட்டுவது?

     “அப்பா... இன்னைக்கு டீச்சர்ஸ்  டே..! . ஏதோ கொடிக்குன்னு ஒரு ரூபாய் எங்க டீச்சர் கேட்டாங்க...”-கவிதா சொன்னபோதுதான்... இராதாகிருட்டிணனுக்கு ஞாபகம் வந்தது,  இன்றைக்குப்  பள்ளிக்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பொன்னுச்சாமிநாதன் வருவது.

     “அப்பா...எனக்கு ஒரு ரூபாய் தரணும்...” மீண்டும் கேட்ட பொழுது, பேனா மட்டுமே இருக்கும் சட்டைப்  பாக்கெட்டைத்  தனக்கே தெரியாமல் காசு ஏதும் இருக்கிறதா? என்று இராதாகிருட்டிணன் தடவிப் பார்த்துக் கொண்டார்.  அவருக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்?

     “ஸ்கூல்ல வந்து தர்றேன்...”

     -பகுதி நேர ஆசிரியர் என்ற பெயரில் முழு நேரம் வேலை பார்க்கும் தன்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லையே என்பதை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார் இராதாகிருட்டிணன்.  இருவரும் ஏதும் பேசாமலே பள்ளி வரை நடந்து வந்தனர்.

     என்.சி.சி. ஆசிரியர் இராஜமாணிக்கம் பள்ளிக்குள் இருந்து வருவதைக் கவனித்தார்.  தேவைப்படும்பெழுது இவரிடம் கேட்டால் இல்லையென்று சொல்லாமல் கொடுக்கக்கூடியவர்.  கவிதாவை அங்கேயே நிறுத்திவிட்டு, இராஜமாணிக்கம் அருகில் சென்றார்.

     “சார்...ஒன் ருப்பி...இருக்குங்களா...?”-இராதாகிருட்டிணன் சங்கோசப்பட்டுக் கொண்டே கேட்டார். 

     “இராஜமாணிக்கம் தன் சட்டைப் பையைப் பார்த்தார்.  நூறும் அம்பதுமாகத்தான் இருந்தது.  உள்ளே கையை விட்டு சில்லரை இருக்கிறதா என்று  தேடிப்பார்த்தார்.  நூறையும் அம்பதையும் காண்பித்துச் சொன்னார்,                 “சாரி சார்...ஒன் ருப்பி இல்ல....”
      “பரவாயில்லைங்க சார்...”

      “எஜுகேசன் மினிஸ்டர் நம்ப ஸ்கூல்ல... டீச்சர்ஸ்  டேக்குக் கொடி ஏத்துறதுகுக்  கார்ல வந்துட்டார்... கொடி ஏத்த ஏற்பாட்ட செய்றேன்.”-சொல்லிக்கொண்டே வேகமாகச் சென்றார் இராஜமாணிக்கம்.

     “அப்பா... மணியடிச்சிடுச்சிப்பா...ஒரு ரூபா காசு கொடுங்கப்பா...”
    
     “................................................................”

      “அப்பா...ஒரு ரூபா காசு கொடுங்கப்பா...”

     “டீச்சர்ட்ட... நா காசு கொடுத்துக்கிறேன்... நீபோ...”

     “டீச்சர் அடிப்பாங்க...”-கண்களைத் தேய்த்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

     “அழுதீன்னா ... நா அடிச்சுப்புடுவேன்...சொன்னா கேளு...போ...”
        - கவிதா  பயந்து கொண் டு  அழுதவாறே  சென்றாள்.

      மேடையில் நின்ற கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற, கொடிக்கயிற்றின் சுருக்கை அவிழ்த்தார்.

  
     இராதாகிருட்டிணன் தனது அறையில் வேட்டியைக் கழற்றி உத்திரத்தில்  மாட்டினார், கழுத்தில் சுருக்கிட்டு  முடிச்சை இறுக்கினார்,  கால் உதைத்து.  உயிர் முடிச்சு  அவிழ வாழ்வின் போராட்டம் சில நொடியில் முடிந்து போன பேரமைதியில் பிதுங்கிய அந்தக் கண்களில் அவரைப் போன்ற இன்னும் போராட்டத்தோடு உயிர்வாழும் ஜீவன்களின் வலி உறைந்து கிடக்கிறது. அவரின் எஞ்சியிருந்த மலம் மட்டும் கடைசி எச்சத்தின் மிச்சமாகத் தரையில் கழிந்து கிடக்கிறது.

     கல்வி அமைச்சர்கொடியை ஏற்றிக் கொண்டிருக்கையில் இடையில் வந்த முடிச்சொன்றால் அமைச்சர் ஏற்றிய தேசியக் கொடி கம்பத்தின் உயரத்திற்குப் போக முடியாமல் அரைக் கம்பத்திலேயே நின்று பட்டொளி வீச  இந்தக் சிக்கலைப் பார்த்துச் செய்வதறியாது அனைவரும்  திகைத்து நின்றனர்.


     ‘ என் சாவிற்கு வேறு யாரும் காரணமில்லை...அரசாங்கம்தான்... இறந்தால் கொடுக்கும் அறுபதாயிரத்தை விரைவில் வீட்டிற்கக் கொடுக்கவும்’
-இராதாகிருட்டிணனின் கையில் இருந்த கசங்கிய  தாளில் இந்த வரிகள் எழுதி இருந்தது.

    

                                                                                             -மாறாத அன்புடன்,

                                                                                               மணவை ஜேம்ஸ்.
                

                  (1994-இல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)

                மீள் பதிவு
Related Posts Plugin for WordPress, Blogger...