ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மரங்களைப் பாடுவேன்...! - கவிப்பேரரசு வைரமுத்து.

  மரங்களைப் பாடுவேன்







-கவிப்பேரரசு வைரமுத்து



வாரும் வள்ளுவரே

மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?

மரம் என்றீர்

மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?



வணக்கம் ஔவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?


மரம் என்றீர்

மரம் என்றால் அத்தனை இழிவா?


பக்கத்தில் யாரது
பாரதிதானே

பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?

நெட்டை மரங்கள் என்றீர்

மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?


மரம் 
சிருஷ்டியில் ஒரு சித்திரம்

பூமியின் ஆச்சரியக்குறி

நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்



விண்மீனுக்குத் தூண்டில்போடும்
கிளைகள்


சிரிப்பை ஊற்றிவைத்த
இலைகள்

உயிர் ஒழுகும்
மலர்கள்

மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு

மனிதன் தோன்றுமுன் 
மரம் தோன்றிற்று

மரம் நமக்கண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்



மனித ஆயுள்
குமிழிக்குள் கட்டிய கூடாரம்


மரம் அப்படியா..?

வளரும் உயிர்களில்
ஆயுள் அதிகம் கொண்டது
அதுவேதான்


மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி

மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும்வரை காய்காய்க்கும்




வெட்டி நட்டால்
கிளை மரமாகுமே
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா?



மரத்தை அறுத்தால்
ஆண்டு வளையம்
வயது சொல்லும்


மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைதான்
உறுப்பு சொல்லும்


மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்


நமக்கோ
உயிர் பிரிந்தாலும்
மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றென்றறிக



மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கேபோய்ச்
சலவை செய்வது?




மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கேபோய்
மனுச் செய்வது?



மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?


பறவைக்கும் விலங்குக்கும்
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர்நாம் தருவோமா?

மனிதனின் முதல் நண்பன்
மரம்

மரத்தின் முதல் எதிரி
மனிதன்

ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
மரங்களின் மீதுதான்


உண்ணக்கனி - ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் - அடைக்கக் கதவு
அழகு வேலி - ஆடத்தூளி
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க விறகு

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்


பிறந்தோம்


தொட்டில்
மரத்தின் உபயம்


நடந்தோம்

நடைவண்டி
மரத்தின் உபயம்


எழுதினோம் 

பென்சில் பலகை
மரத்தின் உபயம் 

மணந்தோம்

மாலை சந்தனம்
மரத்தின் உபயம்

புணர்ந்தோம்

கட்டில் என்பது
மரத்தின் உபயம்

துயின்றோம்

தலையணைப் பஞ்சு
மரத்தின் உபயம்

நடந்தோம்

பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்

இறந்தோம்

சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
எரிந்தோம்

சுடலை விறகு
மரத்தின் உபயம்

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்


மனிதா

மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா

ஒவ்வொரு மரமும்
போதிமரம்.



நன்றி: வைரமுத்து கவிதைகள்
                                                                         


                         காணொளி  காண ‘கிளிக்’ செய்க                            



                                                    செல்வி.  கயலின்  குரலில்


                                                                                                                                                   
                                             
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

                                     















27 கருத்துகள்:

  1. அருமையான கருத்தை பொதிந்த கவிதை மணவையாரே...
    செல்வி. கயலின் அழகாக வாசித்தது வாழ்த்துகள்
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      அதெப்படி தங்களால் மட்டும் முடிகிறது... ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே...’ எனக்கு மட்டும் எனக்கு மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லுங்க ஜி!

      தாங்கள் முதலில் வந்து வாசித்துக் கருத்திட்டு வாக்களித்து ஆச்சர்யத்தில் மூழ்கடித்து விடுகிறீர்களே...! மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ‘மரங்களைப் பாடுவோம்’ கவிப்பேரரசுவின் கவிதை வரிகளைக் கயலிடன் கேட்டதால் மரம் நடும் சமுதாயப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்திடும் ‘விதை(க்)கலாம்’ உறுப்பினரான தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதில் வியப்பில்லை!

      தங்களின் பாராடடிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் ஐயா.

    நீங்கள் ரசித்ததை நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் ரசித்ததற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கவிதை நன்று!காணத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையான கவிதையை
    பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தரே!

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோ!

    அவை அத்தனையும் உண்மை தானே இல்லையா. வெகு சிறப்பான கவிதை. நமக்கும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இந்த மரமண்டையில் கூட ஏறி ரசிக்க வைத்தது கவிதை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      வாரும் பகவானே! மரமண்டை என்றா சொன்னீர்... மரம்மண்டை என்றால் அவ்வளவு மட்டமா? மரம்தான்... மரம்தான்... எல்லாம் மரம்தான்...!

      தங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமை... அருமை...
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அழகான வரிகள். செல்வி கயலின் பகிர்தலும் அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் கவிப்பேரரசுவின் கவிதை வரிகளையும் செல்வி கயலையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. உங்களோடு நாங்களும் ரசித்தோம். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள முனைவர் அய்யா,

      தங்களின் கருத்திற்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

      மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...