வியாழன், 29 அக்டோபர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)


“எழுத்தில்தான்  எல்லாம் புரட்சி செய்கிறீர்கள்...!  நடைமுறையில் அது சாத்தியமில்லை அப்படித்தானே...நான் சொல்வது சரிதானே...!”  ரோஸி கேட்டுக் கொண்டே தமிழினியனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பொதுவாக அப்படிக் கேட்டால்  எப்படி?  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை... சமுதாயத்தில் எத்தனையோ மாற்றம் நடந்துகிட்டுத்தானே இருக்கு?” -என்று தயங்கியவாறு பதில் சொன்னான்.

“சமுதாயத்தின் மேல பழியை போட்டுட்டு நீங்க ஒதுங்கிக்கிவீங்க... நீங்க சொல்லறத என்னால ஏத்துக்க முடியாது...!”

“நீங்க சொல்றத பார்த்தா...உங்களால் புரட்சி செய்ய முடியுமுன்னு சொல்றீங்க...அப்படித்தானே!” என்று தமிழினியன் கேட்டவுடனே சில்லரைக் காசு கொட்டியது போல கலகலவென சிரித்தாள்.

“சொல்வதை எல்லாம் செய்ய முடியாதுங்கிறீங்க... அப்படி எடுத்துக் கொல்லலாமா?”

“நீங்க சொல்றத என்னால புரிஞ்சிக்க முடியல...நீங்க யாரு...என்ன பண்ணீறீங்க... எதுவுமே எனக்குத் தெரியாது!”

“நான்தான் என் பேரு ரோஸின்னு சொன்னேனே...!”

“பேரு மட்டும்தான் சொன்னீங்க...வேற ஒன்னும் சொல்லலையே...!”

“நான் ஜி.எஸ்.டி. கார் சேல்ஸ் கம்பனியில டைப்பிஸ்ட்டா வேலைபார்க்கிறேன்... கருமண்டபம் பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்திலே ரோட்டு ஓரதத்தில பொறம்போக்குலதான் எங்க வீடு...ஓட்டு வீடுதான்... போதுமா?”

“ஒங்க பாதர் என்ன பண்றார்...”

இதைக்கேட்டு ரோஸி மீண்டும் விரக்தியுடன் புன்னகைத்துத்  தலைகுனிந்து அமைதியானாள்.

“என்ன நான் கேட்டதுக்கு ஒன்னும் பதில் இல்லை...” என்று மீண்டும் கேட்டான்.

“நீங்க கேட்டதுக்கு பதில் இல்லைன்னு அர்த்தம்...”

“அப்படின்னா...”-என்று தமிழினியன் இழுத்தான்.

“அப்படித்தான்...” என்று ரோஸி முடித்தாள்.

“சரி... அப்பாவப்பத்திச்  சொல்லாட்டினாலும் உங்க அம்மாவைப் பற்றி... சொல்லலாமா...?”

“என்னோட அப்பா யாரென்று எங்க அம்மாவுக்கு தெரியாது...!”

“என்ன உங்களோட அப்பா யாரென்று உங்க அம்மாவுக்கே தெரியாதா...?  நீங்க சொல்றது புதுமையா இருக்கு...புரியும்படியா சொல்லுங்க...”

 “ஆமா... என்னோட அம்மாவும் இப்ப உயிரோட இல்ல... என்ன தனிமரமா விட்டிட்டு போயிட்டாங்க...”

“உங்க அம்மா என்ன பண்ணுனாங்கன்னுவாவது சொல்லுங்களே...”

“சொல்றமாதரி இல்லங்க...!”

“சும்மா... சொல்லுங்க... நானும் தெரிஞ்சிக்கிறேன்...”

தயங்கித்  தயங்கி நின்ற ரோஸி சொன்னாள், “பிராஸ்டூட்” என்று சொன்னாள்; கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.  இதை சற்றும் எதிர்பாராத தமிழினியன் ஒரு நிமிடம் ஆடிப்போனான்.

“சாரிங்க... ஐ ஆம் சாரி...வெரி சாரி...தெரியாம கேட்டிட்டேன்...”

“பரவாயில்லங்க...கவிதையில் விபச்சாரி பற்றி குறிப்பிட்டதால் உங்களோடு பேசவேண்டும் எனத் தோன்றியது... அதான் பேசினேன்... தப்பா நினைக்காதிங்க... எங்க அம்மாதான் அப்படி இருந்தாலும்... நா அதுமாதரி ஆயிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தாங்க... என்னப்  பத்தாவது வரைக்கும் படிக்க வச்சுட்டாங்க...நானும் டைப்பிஸ்ட்டா வேலை பார்க்கிறேன்...”

தமிழினியன் எதுவும் பேசமுடியாமல் அமைதியாகச் சிலையாகி நின்றான்.

“உங்கள சந்தித்ததில் ரொம்ப சந்தோசமுங்க... அப்ப நா வர்றேன்...”

“உங்கள சந்திக்கணுமுன்னா எங்க பார்க்கலாம்...”

“என்னப் பாக்கணுமுன்னா வீட்டுக்கு வாங்க...” என்று  சொல்லிய பொழுது சசிரேகா வந்தாள்.

“என்ன தமிழ்...ரொம்ப நேரமாப்  பேசிகிட்டு இருக்கீங்க போல இருக்கு... கிளம்புறப்பப்   புரபஸர் பேச்சில பிடிச்சிக்கிட்டாரு... ஆமா யாரு... இவுங்கள பார்த்ததே இல்லையே...”என்று  சசி கேட்ட உடனே தமிழினியன் போறப்ப சொல்றேன் என்றான்.

“சரி...சரி... நானே என்ன அறிமுகப்படுத்திக்கிறேன்... என் பேரு சசிரேகா...தமிழ் என்னோட லவ்வர்...என்ன சொன்னீயா... சொல்லலையா...நீ சொல்லி இருக்க மாட்டியே...அதான் நானே சொல்லிட்டேன்...என்ன சரிதானே...!”



“சரிங்க... நா புறப்படுறேன்”- வணக்கம் சொல்லி ரோஸி புறப்பட்டாள்.  தமிழினியனும் சசிரேகாவும் கல்லூரியிலிருந்து புறப்பட்டனர்.

                                                                                                                        -வ(ள)ரும்...

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.



சனி, 24 அக்டோபர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...!

நீங்க நினைக்காத நெஞ்சம்...!

     இந்தக் கதை  திருச்சி எஸ்.ஐ.டி. யில்  பாலிடெக்னிக்கல் (அப்பொழுது கல்லூரி என்று சொல்லுவது இல்லை) டிப்ளோமா மெக்கானிக்கல் இன்சினியரிங்...  நான்  படித்துக் கொண்டிருந்த பொழுது...  13-12-1983 அன்று... முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் எழுதியது.  அதன் நகல் (carbon paper) காணக் கிடைத்தது.  தங்களின் பார்வைக்காக...  

                                                
   ‘செல்வி சசிரேகாவின் பரதநாட்டியத்தை அடுத்து’  ஒலிபெருக்கியில் ஒலித்த வார்த்தை,  தனியார் அலுவலகத்திலிருந்து பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ரோஸியின் கவனத்தை ஈர்த்தது. 
                                                    
   அன்னை  சத்யா கல்லூரி -  பொன்விழா தங்களை அன்புடன்    வரவேற்கிறது’ -என்ற வாசகம் ரோஸியையும் உள்ளே இழுத்தது.

   அந்த அரங்கம் வண்ண வண்ண மின்விளக்குகளால் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்தது;   உள்ளே நுழைந்த ரோஸியின் கண்கள் இருக்கையைத் தேடி, இரண்டாவது வரிசையில் இரண்டு இருக்கை காலியாக இருப்பதைப் பார்த்தது.  இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்தது இல்லை என்றாலும் மனதில் ஏற்பட்ட பயத்தை வெளியில் யாரால் பார்க்க முடியும் என்ற தைரியத்தில் அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

   தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு  பயிலும் தமிழினியன் ‘இன்றைய காதல்’ என்ற தலைப்பில் அவர் இயற்றிய கவிதை... அவரே உங்கள் முன்னால் இதோ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒலிபெருக்கியின் முன் குரலைச் சரி செய்து கொண்டு தமிழினியன் வாசிக்கத்  தொடங்க,  கூடியகூட்டம் தன் காதுகளைக் கொடுத்தது.

‘காதல்-
கல்லூரியில் மலிவு விலையாகி-
கடைச்சரக்காகிப் போனதோ?
காதல் போயின் சாதலா?
அது அந்தக் காலம்...!

வீதியில் சிவப்பு விளக்கு எரிகிறது...!
இருளில் இருந்து...
வெளிச்சத்தைத்  தேடி 
விதியே என்று...
விழுந்து அழியும் விட்டில்கள்!
சமூகம் இவர்களுக்கு வைத்த பெயர்
‘விபச்சாரி.’

பசியிங்கே...
பரிணாமம் பெற்றுப்
பண்டமாற்று முறையில்
பகிர்ந்து கொள்ளப்படுகிறது!
..............................................................

-இன்னும் கவிதையைச்  சில நிமிடங்களில் வாசித்து  முடித்தான்.  அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

   இருக்கையில் அமர வந்த தமிழினியன் தன் இருக்கையில் செல்வி சசிரேகா அமர்ந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்;  ஆனால்  செல்வி சசிரேகா அமர்ந்திருந்த இருக்கையில் வேறொரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பின் புறம் வந்து நின்று கொண்டான்.

   அதன் பிறகு எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தாலும் ரோஸியின் நினைவு அந்தக் கவிதையில்தான் புதைந்து கிடந்தது.  விழா முடிந்ததால் வீட்டிற்கு அனைவரும்  திரும்பிக் கொண்டிருந்தனர்.



   தமிழினியன் வெளியில் போவதைப் பாத்த ரோஸி அவனருகில் சென்றாள்.
“எ  பேரு ரோஸி...சார்...உங்க  கவிதையைக்  கேட்டேன்... ரொம்ப நல்லா... அருமையா இருந்திச்சு...!”

“தேங்க் யு வெரி மச்...”  கையெடுத்துக் கும்பிட்டான்.

“ஒன்னு சொன்னா தப்பா நெனக்க மாட்டீங்கன்னா சொல்றேன்...!”

“ம்...ம்... சொல்லுங்க...”

“தப்பா நெனக்க மாட்டீங்கன்ன சொல்றேன்னு... சொன்னேன்... அதுக்கு நீங்க ஒன்னும் சொல்லலையே...!”

   தமிழினியன் ஏதோ யோசித்துக் கொண்டே, “ஒன்னும் நெனக்க மாட்டேன்...ம்...ம்...சொல்லுங்க...” -என்று ரோஸியின் முகத்தைப் பார்த்தான்.

“.......................................................................................”  ரோஸியும் சிறிது நேர மௌத்துக்குப் பின் பேசினாள்.

                                                                                                                                 வ(ள)ரும்....

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



சனி, 17 அக்டோபர், 2015

சுட்டார்... சுட்டேன்... புதுகை வலைப்பதிவர் விழா!


நான்காம் ஆண்டு - புதுகையில் வலைப்பதிவர் திருவிழா-2015

திருமன விழாவாக...!


கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்
மகன் வலைப்பதிவுச் செல்வனுக்கும்

வலைச்சித்தர் திண்டுக்கல் தனபால் அவர்களின் 
 மமகள் இணையச் செல்விக்கும்

11-10-2015 ஞாயிற்றுக் கிழமை
காலை 9,30 மணியளவில்  ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில்

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா தலைமையில்

கோவை முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா.அருள் முருகன்,

சென்னை தமிழ் இணையக்கல்விக் கழக உதவி இயக்குநர்
முனைவர் மா.தமிழ்ப்பரிதி &

விக்கி மீடியா திட்ட இயக்குநர்
அ.இரவிசங்கர் ஆகியோரின் முன்னிலையில்

‘திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆகமாட் டாயா? 
 தமிழ்ச் செல்வம் ஆகமாட் டாயா?‘

என்று கேட்ட பாவேந்தரின் பாடலான 
‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’ 
இனிய பாடலுடன் தமிழிசைப் பாடல்களைப் பாடிய   
‘தமிழ்ச்செல்வி‘ சுபாஷினி 
மகா.சுந்தர் அவர்களின் மகள் மட்டுமல்ல,
 மனவிழாவிற்கு மகுடம் சூட்டிய
எங்கள் தங்கம்.

மனவிழா இனிதே நடைபெற்றது.

கரந்தையாரின் வித்தக விரல்களால்
ரூபனின் கவிதை
நூல்களால் நெய்த
பொன்னாடைகளைப் போர்த்திமகிழ
வந்திருந்தவர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

அதுசமயம்

எழுத்தாளர் முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன்

நல்வாழ்த்துகளுடன் கூடிய அறிவுரையும்

‘நீச்சல்காரரான’ ராஜாராமன்
எதிர்நீச்சல் போட்டு முன்னேற வழிகாட்டினார்.

தமிழ் இணையக்கல்விக் கழகம் ரூபாய் 50,000/-மொய்யாக
மெய்யாகக் கொடுத்து வாழ்த்த

வந்திருந்த சொந்தங்கள் அனைத்தும் மனமுவந்து கொடுக்க
ரூபாய் ஒன்றரை இலட்சம் தொட்டது மிகுந்த மகிழ்ச்சி!

வந்த உறவுகளைப்  புதுகை கணினித் தமிழ்ச்சங்கத்தார்
விருந்தளித்து உபசரித்தது விழாவின் உச்சம்!  வயிறும் மனமும் குளிர்ந்தது!

அய்யா கஸ்தூரியின் தலைமையில் இந்த நிகழ்வனைத்தும் நேரலையில் பன்னாடும் கண்டு களித்து வாழ்த்தி மகிழ்ந்தது.  

விழாவிற்கு வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பக்கூடாதென்று
‘உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு’ 

இலவசமாகத்  தாம்பூலப் பையில் வைத்துக் கையோடு கொடுத்து அனுப்பினர்.

புதுகை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய 
வரலாற்றுச் சாதனை!

வாழ்த்துகள்!  பாராட்டுகள்!





இணையம் இணைத்த கைகள்!


நீ சிரித்தால் தீபாவளி!

வியாழன், 15 அக்டோபர், 2015

காலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்!



 2020 கனவு மெய்ப்படும்!







இந்தியா-
இரண்டாயிரத்து இருபதில்...                 
வல்லரசாகி  வலிமை பெறக்
கனவு கண்ட நாயகனே!

இரண்டு கோடிக்கு மேல்
இளைஞர்களைச்  சந்தித்து
உரையாடி...உறவாடி...
நம்பிக்கை  விதைகளை
விதைத்திட்ட வித்தகரே!

இந்திய மனங்களையெல்லாம்
கொள்ளை கொண்ட
கொள்ளைக்கரான் - நீ
கொள்கைக்காரன்!

உன் மகுடிக்குத்தான்
மாணவத் தலைகளெல்லாம் 
மயங்கித் தலைகள் ஆட்டினவே!
ஆமாம்... எதை வாசித்து
உன்னை நேசிக்க வைத்தாய்...?!

கலாமே!
நதிகளை இணைக்கச் சொன்னாயே...
நாதி இல்லை...!
நீர் வழிச்சாலையை
நீர் சிந்தித்தீர்...! 
ராமர் பாலம் 
நீருக்குள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு- 
தேசியச் சின்னமாக
அறிவிக்கக் கோரும்  மனிதச் சாமிகள்
நீதி மன்றத்தில் மனுசெய்யும்
மதவாதிகளின் காலமிது!


சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
சேதமுற்றுக் கிடக்கிறது...!
எந்த அணில்களும் உதவவில்லை...
‘சாண்  ஏற முழம் வழுக்குகிறது
இருந்தாலும்- 
இந்திய இளைஞர்கள் விடுவதாய் இல்லை...!

நீ செல்லும் பாதையில் 
தடைகள் ஏதும் இல்லை என்றால்-அது
நீ  செல்லும் பாதை அல்ல...
யாரோ ஒருவர் சென்ற பாதைஎன்று
நீ தானே சொன்னாய்...!
தடைகள் உண்டென்றால்
தடைகளைத் தகர்க்கத்
தடந்தோள் உண்டென்று
இளைஞர் பட்டாளம் புறப்பட்டு விட்டது...!   

மாற்றுத் திறனாளர்களின் வாழ்வில்-
மாற்றம் கொண்டு வர
மூன்று கிலோவுள்ள ‘காலிபரை’
முன்னூறு கிராமாக ஆக்கியதே...
தான் செய்த மகத்தான சாதனையென 
மெச்சி மகிழ்ந்தாய்!

                                                         
தாய்மொழித் தமிழில்  படித்தே - இந்தியத்
தாய்நாட்டின் - குடியரசுத்
தலைவனானாய்...!
மாணவரின் நாடி பிடித்தே-
மாணவரிடம் பேசிப் பேசியே... 
மாணவரிடம் பேசியபடியே - உன்
நாடித்துடிப்பை நிறுத்திக் கொண்டாய்...!

இந்தியரின் இதயங்கள்-
அணுகுண்டாய் 
வெடித்துச் சிதற விட்டு...
அக்னிப் பறவையாய்ப்  பறந்து விட்டாய்...!

ஏழையாய்ப்  பிறந்து-
எளிமையாய் இருந்து...
அறிவியல் அறிஞனாய்த் திகழ்ந்து...
மனித நேயமிக்க மனிதாய் வாழ்ந்து...
மனித இதயங்களையெல்லாம்
அன்பாலே வாங்கி 
செல்வந்தராகிப் போன சீமானே...!

இளைஞரின் எழுச்சி நாயகனே...
உனது பிறந்த நாளை-
இளைஞரின் எழுச்சி நாளாக்கி
விழித்துக் கொண்டு கொண்டாடுகிறோம்...!
உனது 2020 கனவு மெய்ப்படும் நாள்
தூரத்தில் இல்லை...!











(  மறைந்த அப்துல் கலாம் அவர்களின் 84-ஆவது பிறந்த நாள் இன்று - இராமேஸ்வரத்தில் அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது)




-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

புதன், 7 அக்டோபர், 2015

100 - ஆவது பதிவில் 50- ஆம் ஆண்டு பொன்விழா நாடகம்!

‘முடிவுகள் அறிமுகம்’ -  நாடகம்!


                                                                               -ஆவது பதிவு

                                எங்கள் திருச்சிஆர்.சி.மேனிலைப்பள்ளி பொன்விழாவிற்காக நான் எழுதி இயக்கிய முடிவுகள் அறிமுகம்  மேடை நாடகம்
9-1-1996 ஆம் ஆண்டு நடைபெற்றது.


                நீங்கள்  படத்தில் பார்க்கும் அனைவரும் கதாபாத்திரங்களே...  எங்கள் பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்.  பெண்கள் மூன்று பேர் மட்டும்  தொழில்முறை நடிகைகள்.  பெண் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எங்கள் பள்ளி ஆசிரியரின் மகள்.

                 நாடகத்திற்குத்  தலைமை தாங்க திருமிகு.V.G.P. பன்னீர்தாஸ்சென்னையிலிருந்து வருவதாக இசைவு அளித்து இருந்தார்.   அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் தாளாளர் அருட்பணி. S. தாமஸ் அடிகளார் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வர சந்தித்தேன்.  சிறப்பு அழைப்பாளர் அவசர அலுவல் காரணமாகத்  தீடிரென வெளிநாடு சென்றதால், வணிக சங்கத் தலைவர் A.G.L. ஞானராஜ் தலைமை தாங்கினார்.  திடீரென  நாடகம் ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பிக்க வேண்டுமென தாளாளர்  பணித்தார்.  உடனடியாக ஒப்பனைக்கான வேலைகளில் ஈடுபட்டோம்.  ஆறு மணிக்கெல்லாம் நாடகம் ஆரம்பிக்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

‘என் வாழ்க்கையே என் செய்தி... ’ காந்தி ஜெயந்தி...!

என் வாழ்க்கையே என் செய்தி

                                                                           








    பாரதியின்  கவிதை

வாழ்க நீ! எம்மான்இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க!வாழ்க!


                                                                           
அடிமைவாழ் வகன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து,செல்வம், 
குடிமையி னுயர்வு,கல்வி,ஞானமும் கூடி யோங்கிப் 
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! 
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குளே முதன்மை யுற்றாய்!
                   
                                                                                                                       -மகாகவி பாரதியார்.

*********************************************************************************



கண்ணதாசனின்  கவிதை


காந்தியும்  அவர்பின்  னாலே
   கணக்கற்ற சீடர் தாமும்
நீந்திய தியாகத் தீயை
   நினைக்குங்கால் சிலிர்க்கும் மேனி!
ஏந்திய விளக்கில் தாங்கள்
   எண்ணெய்யாய் விழுந்தார் அந்நாள்
சாந்திக்கு ரத்தம் தந்தார்;
   தர்மத்தின் நிழலாய் நின்றார்!

சந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா?

சந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா?


(அக்டோபர் 11, 2015)

பொதுமையில் நம்மைப்பற்றிச்  சிந்திப்போமா?


        









பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது... 
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்
வலைப்பதிவர் சந்திப்பு நடக்கின்றது.

புதுக்கவிதை


மகாத்மா நீ மீண்டும் பிறக்காதிரு...!



அண்ணலே... அன்று  நீ-
நாட்டின் பண்பாட்டைக் காக்க
ராட்டை சுழற்றினாய்...
நாடும்  உன் பின் சுழன்றது!

Related Posts Plugin for WordPress, Blogger...