சனி, 15 ஆகஸ்ட், 2015

மனித நேயத்துடன் மாணவிக்கு உதவி கிடைத்தது எப்படி?

முசிறி மாணவி  நேரில் பார்த்த மனித தெய்வங்கள்! 



முகவரி தவறியது எப்படி?

மாணவி சுவாதி திருச்சியில் உள்ள வேளாண் பல்கலை 
கல்லுாரியில் உள்ள உதவி மையம் மூலமே, 'ஆன் - லைனில்' விண்ணப்பித்துள்ளார். கோவை பல்கலையுடன் அவருக்கு நேரடித் தொடர்பு ஏதும் இல்லை.  இதனால், கலந்தாய்வு எங்கு நடக்கிறது என்ற விவரத்தை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. மேலும், கலந்தாய்வுக்குப் புறப்படும்போது, சுவாதியின் தாய் தங்கப்பொண்ணு, தன் உறவினரிடம் கேட்டு,  கோவையில் தான் கலந்தாய்வு என்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், சுவாதியின் தோழி ஒருவர், 'சென்னையில் தான் அண்ணா அரங்கு உள்ளது; அங்கு தான் கலந்தாய்வு நடக்கிறது' என்று கூறி குழப்பி விட்டதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

                                                                       

சொந்த கிராமத்தில் மாணவி சுவாதி



.
மாணவி சுவாதி திருச்சி மாவட்டம் முசிறி பைபாஸ் ரோடு, உழவர்சந்தை அருகே வசிப்பவர் ராஜேந்திரன் மனைவி தங்கப்பொண்ணு(வயது40). இவர் கணவனால் கைவிடப்பட்டவர். இவர்களுக்குச் சுவாதி, சுஸ்மிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சுவாதி 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை முசிறியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 10–ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.
மேலும் தனது குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தீவிரமாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1, பிளஸ்–2 படித்தார். பிளஸ்–2 அரசுப் பொதுத்தேர்வில் 1,117 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த சுவாதிக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பிடெக் பயோ டெக்னாலஜி படிப்பதற்கு விண்ணப்பித்தார்.

சென்னை வந்தார் கடந்த 8–ந் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பாணை வந்தது. சென்னையில் கலந்தாய்வு நடைபெறுவதாக நினைத்துக் கலந்தாய்வுக் கடிதத்தைச் சரியாகப் பார்க்காமல் சுவாதி தாயாருடன் முசிறியில் இருந்து சென்னை அண்ணாபல்கலைக்கழகத்துக்கு வந்து விட்டார்.

தவறாக வந்த மாணவிக்கும் அவருடைய தாயாருக்கும் விமானத்தில் டிக்கெட் எடுத்துக்கொடுத்து அன்றே கோவைக்கு அனுப்பிவைத்துக் கலந்தாய்வில் பங்கேற்கக் காரணமாக இருந்தவர்கள் அண்ணாபல்கலைக்கழக நூலகர் ஆர்.பாண்டியன் உள்பட 4 பேர்கள்.
மாணவிக்கு மனித நேயத்துடன் உதவிய அண்ணாபல்கலைக்கழக நூலகர் ஆர்.பாண்டியன் கூறியதாவது:

நடைபயிற்சிநான் தினமும் அண்ணாபல்கலைக்கழக மைதானத்தில் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்து அண்ணாபல்கலைக்கழகத்திற்கு 8–ந்தேதி காலை 6–30 மணிக்கு வந்தேன். நுழைவு வாயிலில் செக்யூரிட்டியிடம் 2 பெண்கள் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தனர். அந்த 2 பெண்களிடம் நீங்கள் எங்குச் செல்லவேண்டும் என்றுகேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு தாளைக் காண்பித்தனர்.

அது கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அழைப்பு ஆணை ஆகும். அதைக் காண்பித்து அண்ணா அரங்கம் எங்கே உள்ளது என்று கேட்டனர். உடனே அவர்கள் கையில் இருந்த அழைப்பு ஆணையை வாங்கிப் பார்த்தேன். கலந்தாய்வு நடக்கும் இடம். அண்ணா அரங்கம், டி.என்.ஏ.யு என்று போடப்பட்டு இருந்தது. உடனே உங்கள் பெயர் என்ன என்றுகேட்டேன். அப்போது 2 பெண்களில் ஒருவர் தான் மாணவி என்றும், பெயர் சுவாதி என்றும் தெரிவித்தார். அண்ணா அரங்கம் இந்தப் பல்கலைக்கழகத்தில் இல்லையே என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
புலம்பி அழுதனர்நான் இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, அங்கு நடைபயிற்சிக்காகத் தனியார் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுதுறையில் பணிபுரியும் எம்.சரவணன் என்பவர்
                                                 
                                  திருவாளர். சரவணன்
வந்தார். அவர் எனக்குத் தெரிந்தவர் ஆவார். அவரிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன். உடனே அவர், தனக்கு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முருகேஸ் பூபதியைத் தெரியும் என்றார். அத்துடன் அவருடன் பேசினார். பின்னர்ச் சுவாதியிடம், ‘‘உங்களுக்குக் கலந்தாய்வு கோவையில் தான் நடக்கிறது. டி.என்.ஏ.யு. என்றால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகும். அஃது அண்ணாபல்கலைக்கழகம் அல்ல’’ என்று கூறினார்.

இப்படிக் கூறியதும் கோவை செல்வதற்குப் பதிலாகச் சென்னை வந்துவிட்டதை எண்ணி சுவாதியும் அவருடைய தாயாரும் அழுது விட்டனர். அப்போது சுவாதியின் அம்மா கூறுகையில், ‘‘நானே ஆடு, மாடு வளர்த்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து சுவாதியைப் படிக்கவைக்க நினைத்துள்ளேன். கோவையில் இன்று(கடந்த 8–ந்தேதி) நடக்கும் கலந்தாய்வுக்குப் போகாமல் சென்னைக்கு வந்துவிட்டோமே! எப்படிக் கலந்தாய்வில் கலந்துகொள்வது’’ என்று புலம்பி அழத்தொடங்கினார்.

விமான டிக்கெட்டுக்கு உதவிய பரமசிவம்இப்படி அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது நடைபயிற்சிக்காகப் பரமசிவம் என்பவர் வந்தார். அவரிடம் மாணவி சுவாதியின் நிலைமையை எடுத்துக்கூறினோம். உடனே அவர் தனியாக என்னை அழைத்து விமான டிக்கெட் நான் எடுத்துக்கொடுக்கத் தயார். ஆனால் எனது பெயர் எதுவும், வெளியில் தெரியவேண்டாம் என்று கூறிவிட்டு உடனே கோட்டூர்புரத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் வீட்டில் இருந்து இணையதளத்தில் சுவாதிக்கு விமான டிக்கெட் ‘புக்’ செய்ய முயன்றார். ஆனால் அப்போது மின்சாரம் இல்லை.
உடனே கார் எடுத்துக்கொண்டு திருவான்மியூரில் உள்ள அவருடைய அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு இணையதளத்தில் கோவைக்கு சுவாதிக்கும் அவருடைய தாயாருக்கும் டிக்கெட் எடுக்க முயற்சி செய்தார். அப்போது இருப்பிட முகவரிக்கான அடையாள அட்டை தேவைப்பட்டது. உடனே என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார். நல்லவேளையாகச் சுவாதியின் அம்மா ரேஷன் கார்டு வைத்திருந்தார். அதில் உள்ள நம்பரை பரமசிவனிடம் தெரிவித்தேன். அதைக் குறிப்பிட்டு விமான டிக்கெட் எடுத்தார். விமான டிக்கெட் விலை ரூ.9 ஆயிரத்து 500.

பின்னர்க் காரில் வந்து சுவாதியிடம் டிக்கெட்டை கொடுத்தார். அதற்குச் சுவாதியின் அம்மா எங்களுக்கு விமானம் ஏறத்தெரியாது என்றார். 
                                    
நானே காரில் விமானநிலையத்திற்குச் சென்று உங்களை அனுப்பிவைக்கிறேன் என்று கூறி மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களிடம் மேலும் செலவுக்காக ரூ.500 கொடுத்தார்.

அங்கு விமானநிலையத்தில் உள்ள ஊழியரிடம் சுவாதியையும் அவருடைய அம்மாவையும் பற்றி எடுத்துக்கூறி விமானத்தில் ஏற்றிவிட ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அதன்படி அவர்கள் இருவரும் காலை 10–05 மணிக்கு விமானத்தில் ஏறி கோவைக்கு 11 மணிக்குச் சென்றடைந்தனர்.
                                 
ஜெய்சங்கர் உதவிஇதற்குள்ளாக நடைபயிற்சிக்காக வரும் 
தொழில்அதிபர் ஜெய்சங்கர், தனது நண்பரான கோவை வேளாண்மை பல்கலைக்கழக டீனுடன் தொடர்பு கொண்டு சுவாதி தவறுதலாகச் சென்னை வந்த சம்பவம் பற்றியும் அவரைக் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும்படியும் கூறினார்.

                   காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
             ஞாலத்தின் மாணப் பெரிது.

இதைத்தொடர்ந்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து சுவாதியை அழைத்துச்செல்ல கோவை விமான நிலையத்திற்குக் கார் அனுப்பப்பட்டது. அதைச் சுவாதியும், அவருடைய அம்மாவும் கவனிக்காமல் ஒர் ஆட்டோவில் ஏறிச்சென்று உள்ளனர். பிறகு கோவை வேளாண்மை பல்கலைக்கழகக் கலந்தாய்வில் கலந்துகொண்டு பி.எஸ்சி. உயிரி தொழில்நுட்பவியல் படிப்பை மாணவி எடுத்துள்ளார்.
இவ்வாறு பாண்டியன் தெரிவித்தார். பாண்டியனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சோழக்கூர்.
நன்றி தெரிவித்தார்இதுபற்றி அண்ணாபல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் கூறுகையில் பணம் வரும் போகும். ஆனால் மனிதாபிமானத்துடன் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பரமசிவம், அண்ணாபல்கலைக்கழக உதவி நூலகர் பாண்டியன் மற்றும் சரவணன், ஜெய்சங்கர் ஆகியோர் தக்க நேரத்தில் செய்த உதவியைப் பாராட்டுகிறேன் என்றார்.

விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து உதவி செய்த பரமசிவம் திருவான்மியூரில் உள்ள தனியார் கம்பெனியில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றுகிறார். பரமசிவம் கூறியதாவது:

நான் மாணவி சுவாதியின் இக்கட்டான நிலைமையை எண்ணிப் பார்த்து உதவி செய்தேன். எனது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் பழையாறு. நான் செய்தது சாதாரணம்தான். இதைப் பெரிதாக எண்ணவேண்டாம்.
இடம் கிடைத்ததும் மாணவி சுவாதி எனக்குப் போன் செய்து தகவலைத் தெரிவித்து நன்றி தெரிவித்தார். எனக்கு நன்றி தெரிவிக்கவேண்டியதில்லை. பாண்டியன்தான் இதற்கு அடிப்படை. அவருக்குத்தான் நன்றி தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு பரமசிவம் தெரிவித்தார்.

பசுமைப்புரட்சிகலந்தாய்வு முடித்து முசிறி திரும்பிய மாணவி சுவாதி, வீட்டில் வளர்க்கும் மாடுகளைக் கவனிப்பது, விவசாயப் பணி என்று தனது வழக்கமான வேலைகளைப் பார்த்து வருகிறார். அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:

கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழைக் கூலித்தொழிலாளியின் மகளாகிய நான் டாக்டராகிக் கிராமமக்களுக்குச் சேவை செய்ய விரும்பினேன். ஆனால் எனக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த தான் விவசாயத்தில் பசுமைப் புரட்சி செய்து சாதனை படைக்க விருப்பம் கொண்டு பிடெக் பயோ டெக்னாலஜி படிக்க விரும்பினேன். இதையடுத்துக் கோவையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்றுள்ளேன்.
கோவைக்குப் பதில் சென்னைக்குத் தவறுதலாகச் சென்ற போதும் சரியான நேரத்தில் கோவைக்குச் சென்று கலந்தாய்வில் பங்கு கொள்ள உதவி செய்த சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பாண்டியன், சரவணன், பரமசிவம், ஜெய்சங்கர் ஆகியோருக்கு நானும் எனது தாயாரும் என்றும் நன்றிக்கடன்பட்டவர்கள். அவர்கள் செய்த உதவியை மறக்கமாட்டேன்.
இவ்வாறு மாணவி சுவாதி கூறினார்.

சுவாதியின் தாயார், கூறுகையில் எனது மகள் மருத்துவம் படிக்கத்தான் விரும்பினாள். கால்நடை மருத்துவப் படிப்பும் கிடைக்கவில்லை. அதனால் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இப்போது பி.எஸ்சி உயிரி தொழில்நுட்பம் எடுத்து இருக்கிறாள் என்றார்.

சலுகை காட்டவில்லை!

மாணவிக்குச் சட்டத்தை மீறி எந்தச்  சலுகையும் தரவில்லை.அவர் காலை, 8:30 மணிக்கு வந்து, கலந்தாய்வு விண்ணப்பத்தை நிரப்பி, சுய விவரம் பதிவு செய்ய வேண்டும். அதைச் சென்னையில் இருந்து அனுப்பி விட்டதால், அவர் வருவதற்குள் அலுவலகப் பணி முடித்து வைக்கப்பட்டது. மாணவி வரும்போதும் கலந்தாய்வு நடந்து கொண்டிருந்ததால், அவருக்கு அப்போதைய நிலைமைக்கு ஏற்ப இடம் அளித்தோம்
சி.ஆர்.அனந்தகுமார், கோவை வேளாண் பல்கலை பதிவாளர்
                                                                          
உரிய நேரத்தில் பேருதவி செய்த சரவணன் டேக் மஹேந்திரா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக இருக்கும் அவர், அண்ணா பல்கலையில் படித்தவர்.
“காலையிலிருந்தே எல்லோரும் வாழ்த்து சொல்லிக்கிட்டே இருங்ககாங்க... என்னால் ரியல் லைப்புக்கு இன்னும் வர முடியல... ஒரு குடும்பத்துக்கு உதவிய திருப்தி! ” 
                                                     

சமூக ஆர்வலர்களான திருவாளர்கள்.சரவணன், பாண்டியன், பரமசிவம் அவர்களுக்கு  அரசு  விருது வழங்கிக்  கௌரவிக்க  வேண்டும்.

‘நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்’

-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

17 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ! வாசிக்க வாசிக்க புல்லரித்து நெகிழ்ந்துதான் போனேன் இப்படிக் கூட மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற மகிழ்வில் கண்கள் நீர் சொரிந்தன. மகத்தானவர்கள் அது தான் இன்னும் மண்ணும் நிலைத்திருக்கிறது போலும். அவர்கள் எல்லாச் சிறப்புகளுடனும் நீடூழி வாழவேண்டும். என்று வாழ்த்துகிறேன்..! இவற்றை அறியத் தந்தமைக்கு நன்றி சகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      வணக்கம். மண்ணில் மனித நேயமிக்க மாமனிதர்கள் வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணுகின்ற பொழுது வியப்பாகத்தான் இருக்கிறது.

      நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
      தேன் தமிழ் போல் வான் மழை போல்
      சிறந்து என்றும் வாழ்க

      தங்களின் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாழ்த்துதளுக்குறிய நல்ல மனங்களை வாழ்த்துவோம் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      பூ மழை தூவி தங்களின் வசந்த வாழ்த்துகளுக்கும் வாக்கிற்கும் மனதார நன்றி.

      நீக்கு
  3. இந்தச் செய்தியை நாளிதழ்களில் முழுமையாகப் படித்தேன். சமூக நலன் கருதி தாங்கள் பகிர்ந்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மனித நேயமிக்கவர்கள் நிரம்ப இருக்கிறார்கள் என்பதற்கு அவசரத்துக்கு உதவிய இவர்கள் எடுத்துக்காட்டு. சுதந்திர தின வாழ்த்துகள்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் ஐயா.

    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை.

    தங்களிடமிருந்து இது போன்ற பதிவுகள் இன்னும் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் விருப்பத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. உங்கள் வாழ்த்துடன் என் வாழ்த்தும் !

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள ஜீ,

    தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நெகிழ்ச்சி... எல்லோருன் இன்புற்றிருக்க நினைபதுவே அன்றி வேசொன்றரிஎன் பராபரமே... பகிர்விற்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. நன்றி அய்யா... என்னுடைய வலைப்பூ ethilumpudhumai.blogspot.com அய்யா

      நீக்கு
  8. இது மகத்தான சேவை ! பொறுப்புடன் செயற்பட்ட அனைவரையும் பாராட்ட வேண்டும்.
    இதை விட்டு ஒரு குடிகார எழுத்தாளராம் அவருக்கு ரெமி மாட்டின் வாங்கிக் கொடுக்கும் கூட்டமும் இங்குண்டே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் என் நெஞ்சாரா நன்றி. ஜெயகாந்தனின் ‘பாரிஸிக்கு போ’ படித்திருக்கிறேன். பாரிஸிக்குப் போனவரின் எழுத்தைப் பார்த்து மகிழ்ந்தேன்.

      நீக்கு
  9. மாணவிக்கு உதவிய அன்பார்ந்த நெஞ்சங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    உதவிய உள்ளங்களை வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...