திங்கள், 17 செப்டம்பர், 2018

பெரியாரையா செருப்பால் அடித்தாய்...?!





பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா :







சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தன்னுடைய காலணியை கழற்றி பெரியார் சிலை மீது வீசியுள்ளார்.





தாராபுரம் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவில் தந்தை பெரியாரின் 6 அடி உயர வெண்கலச்சிலை அமைந்துள்ளது. விஷமிகள் சிலர்  சிலை மீது ஒரு ஜோடி காலணிகளை வைத்து அவமரியாதை செய்ததோடு, கல்லால் அடித்தும் சேதப்படுத்தியுள்ளனர்.










அந்த நாய்கள்...  நன்றியுள்ள நாய்கள்...!

செருப்பால் அடித்தாயே...!
உன் தாயிடம் கேள்...
உனக்குத் தந்தை யாரென்று...?
யாரென்று தெரியவில்லையென்றால்
அவர்தான் பெரியார்...!


வாழும்போதே...
வண்டியில் போகும்போதே
அவர்படாத செருப்படியா...?

அடியே!  அடி...!
 உனக்காக உழைத்தவர் அவர்தான்...
உனக்குத் தெரியாது...!
அவர்...
வாழும்போது -நீ
வாழ்ந்திருக்க மாட்டாய்...!
அடியே!  அடி...!


பெண்கள் உருப்படியாக-
தேவதாசிமுறையை 
ஒழிக்கப்  பாடுபட்டவருக்குச் செருப்படியா?
அவர் பட்டபாட்டிற்கு...
இன்னும் பலன் கிடைக்கவில்லை!
அடியே!  அடி...!
                                                                   






மூத்திரப்பையை இடுப்பில் கட்டிக்கொண்டு
மூடச்சாத்திரங்களை
மூடச்செய்யப்
பகுத்தறிவு விளக்கேந்தி
பாரெங்கும்  96 வயதிலும்
பம்பரமாய்ச் சுற்றிச் சுற்றிப்
போராடிய வீரனுக்கு...
வீனர்களின் விபரீதம்...!
 நீர்  பார்த்தீரா....?

இவர்களுக்காகத்தானே...
இடஒதுக்கீடு கேட்டாய்...!
இவர்கள் ஒதுங்க இடம் கொடுத்தவனுக்கு...
இவர்கள் ஒதுங்கும் இடம் பார்த்தீரா...?

நாய்கள்கூட-
தன்காலில் படாமல்
நாகரிகமாகச்  சிறுநீர்கழிக்கும்  பார்த்தீரா...?

தந்தை பெரியார்...
நாய்கள் பதினைந்துக்கும் மேல் வளர்த்தாராம்...!
அந்த நாய்கள்...
அவர்   பயணிக்கும்  வண்டியில் பயணிக்கும்...
அரங்கத்தின் கீழே அமர்ந்திருக்கும்...
அந்த நாய்கள்...
நன்றியுள்ள நாய்கள்...!

-மணவை ஜேம்ஸ்.




ஒரு சமயம் கடலூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு ரிக்‌ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இன்றுபோலக் கார் வைத்துக்கொள்ளாத காலம் அது, இருட்டு அதிகம் இருந்த இடத்திலிருந்து ஒருவன் என் மீது செருப்பினை வீசினான்; அது எனது ரிக்‌ஷா வின் முன் விழுந்தது. அதனை எடுக்கச்சொல்லிக் கொஞ்சம் தூரம் போனேன். பிறகு யோசனை வந்தது. செருப்பு நல்லதாக இருக்கின்றது; ஒற்றையாக இருந்தால் என்ன பிரயோசனம்! திருப்பிவிடு அந்த இடத்திற்கு இன்னொன்றையும் வீசுவான், அதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிக்‌ஷாக்காரனிடம் கூறினேன். அவனும் ரிக்‌ஷாவைத் திருப்பிவிட்டான். குறிப்பிட்ட அந்த இடம் போனதும் இன்னொரு செருப்பையும் வீசினான். மிக்க நன்றி! இரண்டு செருப்பையும் வீசியமைக்கு என்று சொல்லிவிட்டு ஜாகைக்குத் திரும்பினேன்.” (விடுதலை-24.03.1973) 


பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி மட்டும் அல்ல ஒரு போராளி ,ஆம்

 மூத்திரப் பையை இடுப்பில் கட்டிக் கொண்டு 96 வயது வரை 

பகுத்தறிவைப்  பிரச்சாரம் செய்த ஒரு போராளி !



=====================================================================




எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார்




கவிஞர் கவிமதி



மூடிமறைத்துப் பேச
அறியார்
மூடப் பழக்கம் எதுவும்
தெரியார்

நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்

நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வருணம் கலைத்த
கரியார்

எளிதாய்க் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்

தெளியார் அறிவு நெய்த
தறியார்
தெளிந்தோருக்குத் தெளிவான
குறியார்

உலகத் தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மனு வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்குத் தெளிவான
ஒலியார்
தேடிப் படிக்க சிறந்த
நெறியார் – தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.
நன்றி- கவிமதி
--------------------------------------------------------------------

                            அவர் பெரியார்!

பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது; செருப்பால் அடிக்கப்படுகிறது. இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார். அவரே சொன்னார்... 'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’

 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும்.

 

30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்என கவிஞர் கருணானந்தம் எழுதினார். பெரியாரின் 'ராசிஇறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்!

 

ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்!

 

'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வுஎன்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு. 'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார்.

 

கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்என்றார்.

 

கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.

 

தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரிஎனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?

 

'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டுஎன்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.

 

சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.

 

சைவப்பழமான திரு.வி.-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். அப்போது தமிழ் அறிஞர் களான ..ஞானசம்பந்தனும்

 

மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்எனச் சொன்னார்கள். 'சரிஎன, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்என ..ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்கஎனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.

 

கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாதுஎனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாதுஎன மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையேஎன பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லைஎன அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையேஎன பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.

 

அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’

 

அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள்.

 

பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர, குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரைஎனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாதுஎன்றவர்.

 

அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்துகஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார்.

 

மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலைஎன தி.-வினருக்கு அறிவுறுத்தினார்.

 

கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்என மறுத்த மாண்பாளர்.

 

அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்?

 

அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. .பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன .பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருதுஎன்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்கஎன இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மைஎனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லைஎன்றும் சொன்னார்.

 

ஏனெனில், அவர் பெரியார்!

 

- 6 - 5 - 2015 , ஆனந்த விகடன் .


 நன்றி-

கழக சேவகர் நெல்லை

மில் ஜே குமார் ராஜா எஸ் அப்பாஸ் ரா பாபநாசம் நெல்லை மாநகர கழகம்



-மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...