மணவை பொன் மாணிக்கம்
மணப்பாறையில் மேடை கட்டி...
மணப்பாறை தவிட்டுப்பட்டி கிராமத்தில், பொன்னன்-லட்சுமி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார் மணவை பொன் மாணிக்கம். இருப்பதை வைத்து சிறப்பாய் சமைக்கும் அம்மா மீது மாணிக்கத்துக்கு பாசம் அதிகம். ‘இளைத்திருக்கும் பிள்ளைக்கு இலையில் சோறு போட்டால், சதை பிடிக்கும் என்று உறவினர் சொல்ல, ஆறேழு வருடங்களாக இலையில் சோறு போட்டு வளர்த்த அன்னையாயிற்றே!
தியாகேசர் ஆலை உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதோ கவிதை கைவசமானது. பெரியார் கல்லூரியில் படித்தபோது புதுக்காலனி கம்பன் கலைக்குழு நண்பர்கள் உதவியுடன்
‘மனிதன் என்ற போர்வையில்’ நாடகத்துக்கு கதை, வசனம் எழுதி, இயக்குனராகவும் பரிமளித்தார்.
சொந்த பந்தங்களின் பிள்ளைகளைப்போல மகனும் அரசுப்பணியில் அமரவேண்டும் என்பது அப்பாவின் ஆசையாக இருந்தது. ‘லட்சுமி மகனா நீ?! என்று எல்லோரும் வியக்கும்படி என் மகன் அவன் வழியில் முன்னேறுவான்’ என்று தீர்ககதரிசனம் காட்டினார் அம்மா. கல்லூரிப்படிப்பு முடிந்ததும் தாய்மாமன் தங்கப்பல் பழனி கொடுத்த கம்பராமாயணப் புத்தகத்துடன் சென்னைக்கு வந்தார் மாணிக்கம். சென்னை வானொலியில் ஒலிபரப்பான
‘தகுதி’ நாடகங்கள் ஒரு புதிய வட்டத்தை உருவாக்கிக் கொடுத்தன. பார்த்தசாரதி சபாவில் நடந்த நாடகப் போட்டியில் இவரது
‘கர்ப்பக்கிரகம்’ பரிசைத் தவறவிட்டபோதிலும், சர்சைக்குள்ளாகி, நல்ல நாடகம் என ‘தாய்’ பத்திரிகையில் வலம்புரிஜான், வார்த்தைகளால் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அறியப்பட்டது.
‘தாய்’ பத்திரிகையில் சுதந்திர படைப்பாளி,
‘ராணி’யில் சிறுகதை எழுத்தாளர் என்று எழுத்துக்கோலம் போட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்துக்கு ‘பாக்யா’வின் வாசல் திறந்தபோது வசந்தம் வீசி, வெளிச்சமான விலாசம் கிடைத்தது.
‘புத்தகமாக வெளிவரத் தகுதியற்ற எதையும் எழுதுவது வீண்’ என்கிற கவிப்பேரரசு வைரமுத்துவின் வார்த்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மாணிக்கம், ‘பாக்யா’வில் எழுதியவையெல்லாம் அவரது எழுத்தாசான் கே.பாக்யராஜின் மெய் ஆசியுடன் புத்தகங்களாக வெளிவந்தன.
‘எதை எதையோ ...
எதிர்பார்த்து எதிர்பார்த்து
இறுதியில்...
நலம் விசாரிக்கும் கடிதம் மட்டுமே
எதிர்பார்த்து...
இறுதி மூச்சுவிட்ட
என் தாய் தந்தையர்க்கு....’
-என்று இவர் எழுதிய சமர்ப்பண வரிகள் பல சினிமாக் கலைகர்களால் பாராட்டப்பட்டன.
‘படித்துப் பார்த்த எனக்கே கண்ணீர் துளிர்க்கிறதென்றால், உணர்ந்தெழுதிய உமக்கு எப்படியிருக்கும்?’ என்று உச்சி முகர்ந்திருக்கிறார் வைரமுத்து.
எம்.ஜி.ஆரைப்பற்றி இவர் எழுதிய ‘எட்டாவது வள்ளல்’ பத்துப்பதிப்புகளைக் கடந்து பாராட்டுகளை அள்ளியது. இவரது ‘ஐந்தாம் வேதம்’ சிறுகதைத் தொகுதி, கால் காசு செலவில்லாமல் காதல்காட்சிகளைக் கவந்துகொள்ள சில சினிமா இயக்குனர்களுக்குக் கைகொடுத்தது.
சென்னை சாலிகிராமம் சத்யா கார்டனில் இருந்த இயக்குனர் ராஜகுமாரன் அறைக்குச் செல்கிறார் மணவை பொன்.மாணிக்கம். அங்கே சிறிய பூஜையறையில் வைக்கப்படிருந்த சாமி படங்களுடன் ‘எட்டாவது வள்ளல்’ எம்.சி.ஆரும் இடம் பெற்றிருந்தார். ‘எங்க அப்பனைப் பற்றி புத்தகம் எழுதின அதே கையால என் படத்துக்கு ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க’என்று சொல்லி மணவைக்கான பாட்டுச்சாலையைத் திறந்துவிட்டிருக்கிறார் ராஜகுமாரன்.
‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தில் சிற்பி இசையில்,
‘பாசமுள்ள சூரியனே, தேயாத சந்திரனே...’ என்று இவர் எழுதிய முதல் பாடலை மனோவும் கிருஷ்ணராஜும் பாடியிருந்தார்கள்.
ரவிஷங்கர் இயக்கத்தில், சிற்பி இசையில் வெளிவந்த
‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தில் இவர் எழுதி, உன்னிமேனனும் சுஜாதாவும் பாடிய
‘முதல் முதலாய் உன்னைப் பாக்கிறேன் ஒன்று கேட்கிறேன்...’ என்ற பாடல் மெல்லிசையால் வருடியது.
‘இதயமே’ படத்தில்
‘பொன் மேகங்கள்...’ என்று தொடங்கும் இவரது வரிகளை பிரசன்னாவும் அனுராதா ஸ்ரீராமும் சிலாகித்துப் பாடியிருந்தார்கள்.
‘லுக்’ படத்தில் தேவா இசையில்,
‘டியூஷன் சொல்லித்தர வா...’ என்கிற பாடலை சிருஷ்ணராஜும் ரேஷ்மாவும் பாடினார்கள்.
‘காதல் எஃப் எம்’, என்னவோ பிடிச்சிருக்கு, ‘வணங்காமுடி’ என மணவையின் பாடல்களைச் சுமந்த படங்கள் வந்து கொண்டிருந்தன. ‘வணங்காமுடி’யில் தேவா இசையில் இவர் எழுதிய
‘வெடக்கோழி நான் விருத்தாசலத்து வெடக்கோழி, கறிக்கோழி நான் ராத்திரி கூவுற கறிக்கோழி...’ செங்குத்து இதயத்தையும் சரித்துவிடும் குத்தாக அமைந்தது.
நாடகம், பத்திரிகை, பாடல் என இருந்த மணவை பொன். மாணிக்கத்தை
சினிமா இயக்குனராக்கும் காலமும் கனிந்துவிட்டது. இவரது புத்தகங்களைப் படித்த பல படைப்பாளிகளும் ‘சிறந்த திரைக்கதைக்கான காட்சிகள் இங்கே குவிந்து கிடக்கின்றன’ என்று சாட்சி சொன்னார்கள். சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மணவையின் இயக்குநர் உற்சாகமாக எழுந்திவிட்டார்.
மாட்டு வியாபாரியின் மகன் நாயகம், முறுக்க வியாபாரியின் மகள் நாயகி என்ற பின்னணியில் ‘ஐந்தாம் வேதம்’ என்ற பெயரில் படம் இயக்க தயாராகிவிட்டார். மணப்பாறையின் பெருமை சொல்லும் ஒரு பாடலை அந்தப் படத்துக்காக எழுதியிருக்கிறார் மணவை பொன்.மாணிக்கம்.
* வண்ணத்திரை (19-1-2015) இதழில் ‘பாட்டுச்சாலை’ப் பகுதியில் நெல்லை பாரதி எழுதி எங்கள் மண்ணின் மைந்தர்... அன்பு அண்ணன் மணவை பொன் மாணிக்கம் அவர்களைப் பற்றி வெளிவந்துள்ளது.
-நன்றி.வண்ணத்திரை.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.