சனி, 11 ஜூன், 2016

புதிய உடன்படிக்கை - 8 -நாடகம்புதிய உடன்படிக்கை

 

காட்சி  8

இடம்: மாளிகை

பாத்திரங்கள்: ஜாக்லின், ஆரோக்கியசாமி, ஞானசௌந்தர்.

(ஹாலிங் பெல் அடிக்கிறது... கதவை ஆரோக்கியசாமி திறக்கிறார்)

ஆரோக்கியசாமி: அடே...டே... வாங்க சம்மந்தி... வாங்க... வாங்க... அம்மா ஜாக்லின்...

(ஞான சௌந்தர் உள்ளே நுழைகிறார்;  ஜாக்லின் உள்ளே இருந்து குரல்)
ஜாக்லின்: என்னங்க மாமா...?

ஆரோக்கியசாமி: இங்கே வாம்மா... யாரு வந்திருக்கான்னு பாரு... ஆமா... நம்ம ஊரு பக்கம் மழைமாரி ஏதும் பெஞ்சிச்சா...

ஞானசௌந்தர்:  எங்கே பெய்யுது... பாழாப்போவுது... எழவு மானம் கண்ணு திறந்திச்சுன்னா... காட்டையாவது உழுது போடலாம்... அதுக்கும் வழியக் காணோம்... ஆமா மாப்பிள்ளைய எங்க காணோம்...

ஆரோக்கியசாமி: இப்பத்தான் வெளியே கிளம்பிப் போனான்... ஏதோ டிராக்டர் வாங்கிறதுக்கு அலையறான் போல இருக்கு...

ஞானசௌந்தர்:   அப்படியா... வாங்கட்டும்... வாங்கட்டும்...

ஆரோக்கியசாமி: என்னம்மா... ஜாக்லின்... உள்ள என்ன பண்றாய்...?

ஜாக்லின்: இதோ வந்திட்டேன் மாமா... (முந்தானையால் நெற்றியைத் துடைத்தபடி வருகிறாள்.  அப்பாவைக் கண்டு மகிழ்ச்சியுடன்) அப்பா... வாங்கப்பா... இப்பத்தான் வநதீங்களா...?  உள்ள உலை கொதிச்சிட்டு இருந்திச்சு... அதான்... கொஞ்சம் நேரமாயிடுச்சு... இப்பதானே வந்தீங்க...

ஞானசௌந்தர்: ஆமாம்மா... இப்பத்தான் வாரேன்... ஒன்ன பாக்கனும் போல இருந்திச்சு... அதான் ஓடியாந்திட்டேன்...

ஜாக்லின்: எனக்கும் ஒங்களப் பாக்கனுமுன்னு ஆசையா இருந்துச்சுப்பா... நீங்களே வந்திட்டீங்க...! கொஞ்சம் இருங்கப்பா காப்பி கொண்டு வர்றேன்...  (உள்ளே போகிறாள்)

ஆரோக்கியசாமி: இன்னும் கொஞ்ச நேரத்தில சமையல் ஆயிடும் சாப்புட்டுட்டு இருங்க சம்மந்தி... நா தோட்டத்துப் பக்கம் போயிட்டு வந்திடுறேன்...

ஞானசௌந்தர்: நீங்க பாக்க வேண்டிய வேலைய பாருங்க சம்மந்தி...

ஆரோக்கியசாமி: மகளோட பேசிட்டு இருங்க... போயிட்டு வந்திடுறேன்... (வெளியே செல்கிறார்.  சிறிது நேரத்தில் காபியுடன் வருகிறாள்)

ஜாக்லின்: இந்தாங்கப்பா... காபி...

ஞானசௌந்தர்: ஒனக்கும்மா...?
                                                         

ஜாக்லின்: நா இப்பத்தான் குடிச்சேன்... நீங்க குடிங்கப்பா...
                                                              
ஞானசௌந்தர்: எப்படீம்மா இருக்கா...? (காபி குடிக்கிறார்)  என்னம்மா ஒரே கசப்பா இருக்கு...

ஜாக்லின்: எதுப்பா...?

ஞானசௌந்தர்: காபிதாம்மா... சரிம்மா... நீ எப்படி இருக்கா...?

ஜாக்லின்: நானா...?  இருக்கேம்ப்பா...

ஞானசௌந்தர்: சந்தோசமா இருக்கியாம்மா...?

ஜாக்லின்: சந்தோசமா...? சந்... தோசமோ... என்னவோ தெரியலைப்பா...!

ஞானசௌந்தர்: (அதிர்ச்சியுடன்) அம்மா... நீ என்னம்மா சொல்றாய்...?

ஜாக்லின்: ஏம்ப்பா... என்னை இங்கு கட்டிக் கொடுத்தீங்க...?

ஞானசௌந்தர்: ஏம்மா... என்னம்மா... மாப்பிளைக்கு என்னம்மா குறை...?

ஜாக்லின்: என்னன்னு நா சொல்றதுப்பா...

ஞானசௌந்தர்: சும்மா சொல்லும்மா...

ஜாக்லின்: வேற யார்ட்டப்பா நா சொல்லுவேன்... எனக்கு யாரு இருக்கா...?  அவரு குடிகாரருப்பா... குடிகாரரு... அவருக்குப் போயி...

ஞானசௌந்தர்: என்னம்மா உண்மையாவா...?

ஜாக்லின்: ஆமாப்பா...

ஞானசௌந்தர்: ஏதோ ஒரு இதுல... குடிச்சிருப்பாரு... பொண்டாட்டி நெனச்சா புருஷன திருத்த முடியாமலா போயிடும்... இதுக்குப் போயி (ஜாக்லின் அழுகிறாள்) அட... அழாதேம்மா... (கண்ணைத் துடைத்து விடுகிறார்)  மாப்பிளை வரட்டும்... நா சொல்றேன்...

ஜாக்லின்: அய்யய்யோ... வேண்டாம்ப்பா... வேண்டாம்... நானே அவரைத் திருத்த முயற்சி பண்றேன்... நீங்க ஒன்னும் கேக்க வேணாம்...

ஞானசௌந்தர்: இல்லம்மா... நா.... நாசுக்கா சொல்றேம்மா...

ஜாக்லின்: வேண்டாம்ப்பா... நா பாத்துக்கிறேன்... சரிப்பா... வாங்க சாப்புடுங்க...

ஞானசௌந்தர்: அதுல ஒன்னும் கசப்பு இருக்காதே...

ஜாக்லின்: நா என்ன வேணுமின்னா... காபி டிகாஷன் கொஞ்சம் கூடப் போயிடுச்சு... இதுக்குப் போயி...

ஞானசௌந்தர்: அது மாதிரிதாம்மா... மாப்பிளை வேணுமுன்னா செய்யப் போறாரு... ஏதோ... அவர அறியாம... நாலு பேரோட சேந்துக்கிட்டு... இதுக்குப் போயி... அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர்றது ஒ கையிலதான் இருக்கு... அது ஒன்னால முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கும்மா... இருக்கு... ஆமா மாப்பிளை வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்...?

ஜாக்லின்: தெரியலைப்பா...

ஞானசௌந்தர்: சரிம்மா... இன்னைக்கி என்ன நாள்...?
(ஜாக்லின் யோசிக்கிறாள்) ஓ பிறந்த நாள்ம்மா... மறந்திட்டியா... இந்தாம்மா... என்னோட அன்பளிப்பு ( பார்சலை கொடுக்கிறார்)

ஜாக்லின்: தேங்யூப்பா... என்னப்பா...?

ஞானசௌந்தர்: பிரிச்சுப்பாரேன்...

ஜாக்லின்: (பிரித்துப் பார்க்கிறாள்) அய்... பட்டுச் சேலை... (தன் மேல் வைத்துப் பார்த்து சந்தோசத்துடன்)  நீங்கதான் செலக்சன் பண்ணுனீங்களா...?

ஞானசௌந்தர்: ஆமாம்... ஏன்...?

ஜாக்லின்: புடவையையெல்லாம் நல்லா செலக்சன் பண்ணியிருக்கீங்க... இதென்ன பேண்ட் சர்ட்டா...?

ஞானசௌந்தர்: ஆமாம்மா... மாப்பிளைக்கு... வந்தவுடன நா கொடுத்ததா கொடும்மா... சரிம்மா... சாப்பாடு போடும்மா... சாப்பிட்டிட்டு கௌம்புறேன்...

ஜாக்லின்: ஏம்ப்பா... இருந்திட்டு போங்கப்பா...

ஞானசௌந்தர்: இல்லம்மா... இருந்திட்டுப் போற மாதிரியா இருக்கு... வீட்ல பண்ணையாளு வேற சொல்லாம கொல்லாம ஓடிப்போயிட்டான்... வீட்ல யாருமில்ல... அங்க வேலை இருக்கு... நா உடனே போவணும்மா... சாப்பாடுகூட வேண்டாம்...  நா கிளம்புறேம்மா...

ஜாக்லின்: இல்லப்பா... வாங்க... சாப்பிட்டிட்டுப் புறப்படுங்க...
                    (உள்ளே செல்கின்றனர்)
                               
                                                       

     
                                           -தொடரும்...
                                                   
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.    
6 கருத்துகள்:

 1. அருமையான நாடகம்... தொடர்கிறேன் அய்யா... http://ethilumpudhumai.blogspot.in/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அழகான நடையில், வழக்கமான உங்கள் பாணியில். தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள முனைவர் அய்யா,

   தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ஞானசௌந்தர் சாப்பிட்டாரா ? தொடர்கிறேன்
  த.ம.வ.போ

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள ஜி,

  ஞானசௌந்தர் சாப்பிட்டது உடம்பில் ஒட்டவில்லை.

  வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...