சனி, 4 அக்டோபர், 2014

என்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...?இது கதையல்ல... நிஜம்!               எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இருக்கும்.  முதல் மதிப்பெண் எடுப்பான்.  முதல் தரத்தில் வகுப்பில் இருப்பான்... மாணவரின் அறிமுகத்தின் பொழுது அவனிடம் ...
” உங்க அப்பா என்ன செய்கிறார்?” -என்று விசாரித்தேன்.

“ எங்க அப்பா இல்லை “என்றான்.


“ உங்க அம்மா என்ன செய்கிறார்கள்?“ என்றேன்.

“ எங்க அம்மா இல்லை“ என்றான்.

“ இல்லை என்றால் இங்கில்லையா?“

“ இல்லை இரண்டு போரும் இறந்து விட்டாட்கள்“

“ இறந்துவிட்டார்களா! நீ எங்கிருந்து வருகிறாய்?”

“ இலங்கைக்கான அகதிகள் முகாமில் இருந்து!“ என்றான்.

“ எப்படி இறந்தார்கள்?“ என்று கேட்டேன்.

“ இலங்கையில் எங்களால் வாழ முடியாமல்... கள்ளத்தோணி பிடித்து...பணம் அதிகமாக கொடுத்து...நாங்கள் இந்தியா வந்தோம்...எங்களைப் போல் நிறையப் பேர் அன்று படகில் வந்தார்கள்.... படகு பாரம் தாங்காமல் கடலில் மூழ்கிடுச்சு... எங்க அப்பா அம்மா கடலில் இறந்துட்டாங்க...என்ன யாரோ படகுலதூக்குப் போட்டார்கள்...நான் பிழைத்து விட்டேன்...இப்போ எங்க சித்தியுடன் இருக்கிறேன்.“               அவன் முகத்தில் துக்கத்தையோ சோகத்தையோ எப்பொழுதும் வெளிக்காட்டியதே இல்லை...அப்பொழுதும் வெளிக்காட்டாமல் செய்தியைச் சொன்னான். நான் ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்தேன்.


               அந்த ஆண்டு பள்ளியின் ஆண்டு விழாவில் ஒரு நகைச்சுவை நாடகம் போட்டோம். குமரனை அழைத்து‘ நடந்த நிகழ்வை நாடகத்திற்கு பிறகு நீயே எழுதி நடந்தவைகளைச் சொல்லு‘ என்றேன். ‘சரி‘ என்றான்.

இரண்டு நாள் கழித்து ‘அய்யா என்னால் முடியாது ‘ என்றான்.

‘‘ஏன்’‘என்று கேட்டேன்.

“ அய்யா...என்னால் சொல்ல முடியாது...அழுது விடுவேன்“ என்றான்.

“முடிந்தவரை சொல்லு...முடியவில்லை என்றால் நான் பின்னால் இருந்து சொல்லி முடித்து விடுகிறேன்“ என்றேன்.

நகைச்சுவை நாடகம் முடிந்தவுடன்...இப்பொழுது ‘ஓர் உண்மைச்சம்பவம்‘என்று குமரனை மேடை ஏற்றினேன்.

              குமரன் சொல்ல ஆரம்பித்தான்...நான் மேடைக்குப் பின்புறம் விட்ட இடத்தில் இருந்து தொடரத் தயாராக இருந்தேன்...சொல்லும் போதே அவனுக்கு அழுகை வந்து விட்டது...அழுது கொண்டே சொன்னான்....
.... தேம்பி..தேம்பி அழுது கொண்டே...அழுது கொண்டே... முழுவதும் சொல்லி முடித்தான்.

               அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

               அடுத்த ஆண்டே அவன் இலங்கை செல்வதாகக் கூறி எங்களிடம் ஆசி பெற்றுச் சென்றான்.

                மிக மெலிந்த தேகம்...உருண்ட முகம்... நல்ல உயரம்...இனிய இலங்கை தமிழ்ப்பேச்சு...நெஞ்சில் அழியாத கோலங்களாக நிலைத்து நிற்கின்றன.

                    அவன் எங்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் பொழுது... எங்கள் தலைமையாசிரியருக்கு மரத்தால் ஆன சிறிய தேர் ஒன்று  நினைவாக செய்து கொடுத்து ,  அன்பை வெளிப்படுத்தினான் திரு.குமரன்.

                    அந்த நேசம்...பாசம்...பந்தம்...ஏழ்மையிலும் நேர்மை... .அன்பு... கள்ளமில்லாச்  சிரிப்பு   ...அடடா... எப்படிச் சொல்வது?


                    எங்களை விட்டுப் பறந்தது அந்தப் பறவை...சுதந்திரமாக...சுதந்திரக் காற்றை சுவாசிக்க...!


                    இந்தியா மீண்டும் வந்தால் என்னை வந்து பார் என்று வழியனுப்பி வைத்தேன்.

               
                                                                                                    -மாறாத அன்புடன்,

                                                                                                      மணவை ஜேம்ஸ்.


manavaijamestamilpandit.blogspot.in

20 கருத்துகள்:

 1. உருக்கமான உண்மைச் சம்பவம். மனதை வேதனைப் படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 2. நட்பின் பெருந்தக்க யாவுள
  தங்கள் நண்பர் நிச்சயம் ஒரு நாள் வருவார்
  தங்களைச் சந்திக்க

  பதிலளிநீக்கு
 3. அன்பு மணவையாருக்கு,
  என் நினைவு சரி என்றால் அது 2002 ஆம் ஆண்டாய் இருக்கலாம்.
  குமரனுக்கு அப்போது நான் கணித ஆசிரியன். வகுப்பில் அவனுடன் இன்னொரு இலங்கையில் இருந்து வந்த மாணவனும் இருந்தான்.
  அவன் பெயர் சுரேஷ். இருவருமே நன்கு படிப்பவர்கள். குமரனது தமிழ்தான் என்னைக் கவர்ந்தது. அதனால் தான் நானும் அவனைக் குறித்து வகுப்பில் விசாரிக்க நேர்ந்தது.
  மண்ணில் இருந்து பறிக்கப்பட்டு ஊன்ற இடமற்று அலைகழிக்கப்பட்ட செடியாய்த்தான் அவன் அன்று தெரிந்தான்.
  அந்தச் செடி பாறையிலும் வாழும் உரமுள்ள செடி.
  அவன் கதை அநேக குமரன்களின் கதை. கடல் கொண்டு போன கபாட புரமும் பஃறுளியாறும் பதிவு செய்த தமிழ்வரலாற்றில், நான் படித்தறியாத கதை. ஒருவன் தமழனாய்ப் பிறந்தான் , தமிழ்பேசினான் என்பதற்காக விரட்டப்பட்டும் வேட்டையாடப்பட்டும் பரந்த இந்த உலகில் நிற்க ஓர் பிடி நிலமற்று அலைப்புறுத்தப்படும் கொடுமை, உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே நிகழ்வதாய் இருக்கும்.
  குமரன் தன் மேல் கரிசனத்தை விரும்பியதில்லை.
  மற்ற மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவனுக்கு மட்டும் நான் விலக்களிக்கும் சில தருணங்களில், வகுப்பறையில் நேரடியாகவே அந்தச் சலுகையை மறுத்தவன் அவன்.
  தாய்தந்தையைத் தன் கண்முன்னே கொண்டு போன அந்தக் காலக்கொடூரத்தால் அவன் தன்மானத்தைக் குலைக்க முடியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.
  தங்கள் பதிவு, ஞாபகத் தூர்வாரிப் புறத்திட, எப்புறமிருந்தும் பெருகிக் கொட்டும் ஓர்மைகளால் நிறையுமென் பழமையின் மனக்கிணறு!
  அனுபவப் பகிர்வு நெகிழச் செய்கிறது. இன்னும் பல பகிருங்கள்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு நண்பருக்கு,

   தங்களின் நினைவு சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது குஜராத் பூகம்பம் வந்த ஆண்டாக இருக்க வேண்டும்... அல்லது அதற்கு அதடுத்த ஆண்டாக இருக்க வேண்டும்... அந்த நாடகத்தில் குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்குளுக்கு உதவுவதாக இருக்கும். அந்த ஆண்டு தான் மேதகு. அந்தோணி டிவோட்டா ஆயர் அவர்கள் நமது மறை மாவட்டத்திற்கு வருகை தந்த ஆண்டு...நாடக்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து பாராட்டினார்.

   ‘குமரன் தன் மேல் கரிசனத்தை விரும்பியதில்லை.‘
   மிகச் சரியாகச் சொன்னீர்கள். தமிழன் தாழ்ந்தாலும் தன் தலையைச் சாய்க்கமாட்டான்...தாய் தந்தையரை மறக்க மாட்டான்... அதற்கு ஒர் உதாரணம் திரு.குமரன்.

   நீக்கு
 4. muthal pathivu . manam uruka vaithathu sir.
  kumaran pola kathaikal kelvi pattu iruken. ungalin pathivin mulam padikkumpothu varuthamaka irukkirathu sir.

  thodarnthu eluthungal/.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா திரு. மகேஷ் அவர்களுக்கு,
   நன்றி. இது முதல் பதிவு அன்று. சில பதிவுகள் இதற்கு முன் எழுதியிருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துகிறேன். படித்து கருத்திடுக.
   -மாறாத அன்புடன்,
   மணவை ஜேம்ஸ்.
   manavaijamestamilpandit.blogspot.in

   நீக்கு
 5. நெகிழ வைத்த பதிவு! குமரன் எங்கிருந்தாலும் நலமோடு வாழட்டும்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா ‘தளிர்‘ சுரேஷ் அவர்களுக்கு,
   நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புள்ள திரு.முரளிதரன் அய்யா,
   வணக்கம். உண்மைதான் . தங்கள் கருத்திற்கு நன்றி.

   நீக்கு
 7. கொடிது கொடிது இளமையில் வறுமை. அதனினும் கொடுமை பெற்றோரை இழத்தல். இருந்தும் இதயத்தை இரும்பாக்கி வாழ்ந்திடும். கலையை அவனுக்குப் பயிற்றுவித்த ஆசான்கள் நீங்கள். வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திரு.செல்லப்பா அவர்களுக்கு,
   வணக்கம். வறுமை கொடிது...அதிலும் பெற்றோரை இழத்தல்... நன்றி அய்யா.

   நீக்கு
 8. வேரூன்றிய நாட்டிலும் விரட்டப்பட்டு தொப்புள்கொடி உறவுடைய தமிழகத்திலும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே ஆதரிக்கப்படும் ஈழத்தமிழர்களில் உங்கள் குமரனை போல இன்னும் பலர் உண்டு ! ஒரு கொடி காத்த குமரனின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நாம் இந்த தமிழ்காக்கும் குமரன்களுக்கு என்ன செய்தோம் ?!

  " தாய்தந்தையைத் தன் கண்முன்னே கொண்டு போன அந்தக் காலக்கொடூரத்தால் அவன் தன்மானத்தைக் குலைக்க முடியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்... "

  என குறிப்பிட்டிருந்தார் சகோதரர் ஜோசப்விஜு. ஈழத்தமிழர்கள் பலருடன் பழக நேர்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்... தங்களின் தமிழ் பற்றுக்கு ஈடான தன்மானத்துடன் திகழுபவர்கள் அவர்கள்.

  "அந்தச் செடி பாறையிலும் வாழும் உரமுள்ள செடி... "

  நிச்சயம் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பான் குமரன் !

  மனதை தைத்த பதிவு.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள அய்யா திருமிகு.சாமானியன் அவர்களுக்கு,

  ‘ஈழத்தமிழர்கள் பலருடன் பழக நேர்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்... தங்களின் தமிழ் பற்றுக்கு ஈடான தன்மானத்துடன் திகழுபவர்கள் அவர்கள்’ -என்று தாங்கள் உரைத்தது நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை என்பதை மறுப்பதற்கில்லை.

  ‘மனதை தைத்த பதிவு’ என்று சொல்லி இருந்தீர்கள்....
  திரு.குமரன்... அவனே எழுதி (19.02.2001) பேசியதைத் தேடி எடுத்துவிட்டேன்...!

  விரைவில் அந்தப் பதிவை வெளியிடுகிறேன்...!
  மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஐயா!

  நினைவைப் பதித்து நெஞ்சில் நிறைத்தீர்கள் ஐயா!
  குமரன் மேல் தாங்களும் விஜு யோசெப் ஐயாவும் கொண்ட பாசம்
  கடலெனப் பெரிதாய்க் காண்கிறேன்.

  முதற் பதிவிற் கூறியதுதான் ஐயா!
  மீண்டும் இந்தியா வந்தால் நிச்சயம் குமரன் உங்களையெல்லாம் காண்பான்! அவனின் இதயத்திலும் உங்கள் அன்பு நிறைந்திருக்கும்.

  முதலில் அவன் அங்கிருந்தாலும் நலமோடு இருக்க வேண்டுவோம்.
  இன்றைய காலக் கட்டத்தில் அதுவே மிக முக்கியமானதாகும்!

  காலம் வரும். காண்பீர்கள் அவனை நிச்சயம்!

  குமரனின் ஓடியோப் பதிவையும் தாருங்கள்! கேட்க ஆவலில் உள்ளேன்! நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
 11. அன்புச்சகோதரி கவிஞர் திருமதி.இளமதி அவர்களுக்கு,

  வணக்கம். குமரன் எங்கிருந்தாலும் நலமோடும் வளமோடும் வாழவேண்டும் என்பதே எல்லோரது எண்ணமும் கூட...! நிச்சயம் நன்றாக வாழ்வான்.

  மன்னிக்கவும். அந்த ஆண்டு நடந்த நாடகத்தை நாங்கள் எந்தப் பதிவும் செய்யவில்லை...புகைப்படம் மட்டும் நாடகத்தை எடுத்தார்கள்...அதிலும்...குமரன் பேசும் போது புகைப்படம் எடுக்கவில்லை என்றே ஞபாகம்...! ‘ஏன் எடுக்கவில்லை’ என்று கேட்ட பொழுது ‘அவன் பேசுவதைக்கேட்டு ...மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றார் நண்பர். நம்ப துரதிஷ்டம் என்று எண்ணிக்கொண்டேன்.

  அப்பொழுது பேசிய பேச்சின் உரையாடல் அசல் என்னிடம் இருக்கிறது. அதை விரைவில் பதிப்பிக்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. எத்தனை துக்கமான ஒரு நிகழ்வு அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு/உள்ளங்களுக்கு! மனம் கனக்கின்றது! இவர்களுக்கெல்லாம் விடிவுகாலமே கிடையாதோ?!!!!

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள திரு.துளசிதரன் தில்லைஅகத்து அய்யா,

  வணக்கம்.
  விடிவுகாலம் விரைவில் விடியட்டும்..
  விரைவில் குமரனின் (19.02.2001) உரையாடல் .
  வலைப்பூவில் பதிவிடப்படும்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...