செவ்வாய், 14 அக்டோபர், 2014

இவர்கள் இருக்கிறார்கள்...!

எண்ணே...! எண்ணே...!!  ஒனக்கு ஆம்பளப் புள்ளேண்ணே...” மூச்சு முட்ட ஓடி வந்த தங்கை வள்ளியைப் பார்த்துச் சந்தோசத்தால் வார்த்தை வராமல் அப்படியே நின்றான் சொக்கன்.
  “எண்ணே...மம்மட்டிய போட்டுட்டு மவனப் பாக்க வாண்ணே...” என்று சொன்னவுடன்தான் பண்ணையில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருப்பதைச் சட்டென சொக்கனின் மூளை உணர்த்தியது.
பொன்னுத்தாயி நல்லா இருக்காளா...? மவன் நல்லா இருக்கானா...?  கருப்பா...மாநிறமாஇதோ எசமான்ட்டே கேட்டிட்டு  வர்றேன் தாயி...”
-தாய் இல்லாத குறையாலோ என்னவோ தங்கையைத் தாயி என்று அழைப்பதே வழக்கமாகி விட்டது. முதலாளியிடம் சென்று சொக்கன்  சிரித்த முகத்துடன்  பயம் கலந்த குரலில் சொன்னான்.

          “எசமா... எனக்கு பய பொறந்திருக்கான்...”

          “அதுக்கு என்ன என்னடா செய்யச் சொல்றாய்...?”  கோபமாக முதலாளி அவனை  ஏற இறங்கப் பார்த்தார்


          “வூட்டுக்கு போறேங்க...“-தயங்கித் தயங்கித் தலையைச் சொரிந்து கொண்டே கேட்டு விட்டான் சொக்கன்.

          “பொழுது சாய இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குடா...பொழுது சாயவுட்டுப் போடா...” எசமானை எதிர்த்துப் பேச முடியாமல் சரியென்பதைப்போல் தலையசைத்து விட்டு வந்தான்.

                               

                                                                 
 
        “தாயி... நீ போ தாயி... இன்னும் செத்த நேரத்தில் ஓடியாந்திடுறேன்... ராத்திரிக்கி களி கிண்டி வை தாயி...போ தாயி...”  -தங்கையை அனுப்பிவிட்டு வேலையை வேகமாக செய்தான்,  பொழுது மெதுவாக சாய்ந்தது.

          தன் மகனைப் பார்க்க காலதாமதமாகப் புறப்பட்டதால் சொக்கனின் கால்கள் தாமதிக்காமல் குடிசையை நோக்கி வேகமாக நடைபோட்டது.  பட்டளாளத்து சிப்பாயி போல உடம்புள்ள சொக்கனை எப்பொழுது பார்த்தலும் கோவணமும் துண்டும்தான்.  கல்யாணத்துக்கு எடுத்த வேட்டியை வெளியூர் போனால் உடுத்திக் கொள்வதற்காகப்   பத்திரமாக வைத்திருந்தான்.  குடிசைச்குள் நுழைந்த சொக்கன் மகனைப்  பார்த்து உச்சி முகர்ந்து மகிழ்ச்சி பொங்க மனைவியைப் பார்க்க உள்ளம் ஆனந்தக் கும்பி கொட்டியது.  பொன்னுத்தாயி மெதுவாய்ச் சிரித்தாள், அவள் விழியிலிருந்து நீர் வழிந்தது.  ஓ... இதுதான் ஆனந்தக் கண்ணீர் என்பதோ?


          காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த சொக்கனின் அப்பா ‘லொக்...லொக்’ -ன்னு சதா இருமியது காதில் விழுந்தது என்றாலும் காசில்லாமல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  எலும்பும் தோலுமாக இருந்த அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த உலகைவிட்டுப்  போய் விடுவேன் என்ற பயமுறுத்திக் கொண்டு இருந்தார்.  டீக்கடைக்குப் போயி பன்னும், பாலும் வாங்கிக் கொண்டு வேகமாக வந்தான் சொக்கன்.

          “தாயி... இந்த பாலையும்...பன்னையும் அப்பனுக்கும் பொன்னுத்தாயிக்கும் கொடு.. .மீதி இருந்தா நீ குடிச்சிக்க...”

          வள்ளியிடம் பாலை வாங்கிக் கொண்ட சொக்கனின் அப்பா அவனருகில் வந்தார்.                                                                                         


          “நம்ம வம்சம் விளங்கிடுச்சு...இந்த வள்ளிய எவன்ட்டயாவது புடுச்ச கொடுத்திட்டா...எ கடமை முடிஞ்சுடும்...டே... இந்த... இந்தப் பாலைகுடுச்சிடு...” பால் தம்ளரை நீட்டினார்.

          “எனக்கு வேணாப்பா...கடையில குடுச்சிட்டு வந்துட்டேன்” பொய்தான் சொன்னான்.

          “நா ஒன்னும் வாய் வைக்கல...” அப்பா சொன்னதைக் கேட்டவுடனே சொக்கனுக்கு என்னவோ போல் ஆகி முகம் சிவந்து விட்டது.

          “எ...எச்சி...எனக்கிருக்கிற வியாதி ஒனக்கு ஒட்டிகிடுச்சினா...!”
-சொக்கன் இது வரை அது மாதரி நினைத்ததே கிடையாது.  அப்பாவை கொஞ்சம் பாலைக் குடிக்கச் சொல்லி அவனும் பாலைக் குடித்தான்.

          வள்ளி கிண்டின களியைச் சாப்பிட்டுவிட்டு, பொன்னுத்தாயி அருகில் வந்து, சந்தோசத்துடன் நீண்ட நேரம் எதை எதையோ பேசிக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தான் சொக்கன்;  பிறகு உறங்கிப் போனான்.

          வைகறைப் பொழுது  சூரியன் உதிக்கத் தொடங்கு முன்னே தூக்கத்தில் இருந்து பொன்னுத்தாயி கண் விழித்தாள்.  குழந்தையை தூக்கிப் பால் கொடுக்க முனைந்த பொழுது திடுக்கிட்டுக் கத்திளாள்.

          “யோவ்...யோவ்...கொழந்தை ஒடம்பு நெருப்பா கொதிக்கிதுய்யா...கண்ணு முழியெல்லாம் உள்ள சொருவுது...வயித்தால வேற போயிருக்கும் போல இருக்கு...” பொன்னுத்தாய்க்கு  வார்த்தை வெளியில் வராமல் கைகள் நடுங்க அழ ஆரம்பித்த பொழுதே அனைவரும் விழித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தனர்.

          “டவுனுக்கு சீக்கிரமா பஸ்ஸ புடுச்சு ஆசுபத்திரிக்கு போலாம்...டே.காசு பணம் கையில இருக்காடா...?”சொக்கனிடம் அப்பா கேட்டார்.

          “எனக்கு பையன் பொறந்தா நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போயி மொட்ட போடுறதா வேண்டிக் கிட்டேன்... அதுக்குத்தான்  ஒரு நூறு ரூவா கடனா வாங்கி வச்சிருக்கேன்...”

          “நாம நல்லா இருக்கிறப்பக் கோவிலுக்குப் போகிக்கலாம்... இங்கேயே முடியிறைக்கி முடிஞ்சு வைச்சுக்கலாம்.  சாமிய வேண்டிக்கிட்டுப் புள்ளய தூக்கிக்கிட்டுக் கிளம்பு...”

          “நானும் செரமத்தோட செரமமா வர்ரேய்யா...”பொன்னுத்தாயும் புறப்பட்டாள்.

          சொக்கன் அவசரமாக அந்த வேட்டியை கட்டிக்கொண்டே...,
“தாயி..வூட்ட பாத்துக்க... வெரசா போயிட்டு சுருக்கா வந்துடுறோம்...பத்தரம் தாயி...”
                         


          குழந்தையைத் தூக்கிக் கொண்டு பொன்னுத்தாயால் நடக்க முடியவில்லை.  குழந்தையை சொக்கன் வாங்கிக் கொள்ள மூவரும் நடந்தார்கள்.  ஒரு மணி நேரம்காத்திருந்த பிறகு பஸ் வந்தது.  இவர்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்ற பஸ் பாதி தூரம் போனவுடன் ‘சாப்புடுறவங்க எல்லாம் சாப்புடலாம்...கால் மணி நேரம் பஸ் நிக்கும்’ என்ற கண்டக்டரின் சப்தத்தோடு பேருந்து ஒடுகிற சப்தமும் நின்றது.  டீக்குடிக்க, சாப்பிட, இயற்கை உபாதையைக் கழிக்க என்று பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கவிட இவர்கள் மட்டும் பேருந்தில் செய்வதறியாது திகைத்து இருந்தனர்.

          “யோவ்...கொழந்தைக்கு இழுவை மாதரி இழுத்து இழுத்து விக்குதய்யா...பயமா இருக்குய்யா...!”
-கீழே இறங்கிக்  கடைக்குள் ஓடிய சொக்கன் சர்க்கரைத் தணிணியை வாங்கி வந்தான், சொட்டு சொட்டாக குழந்தைக்கு வாயில்விட்டுக் கொண்டே இருந்தான்.  கால் மணி நேரம் கடந்த பிறகு ஒவ்வொருவராக  வந்து அனைவரும் அமர பேருந்து புறப்பட்டது.

          “பொன்னுத்தாயி அழுது கொண்டே ஓட்டுனரின் அருகில் சென்று,
“டிரைவரு அய்யா...கொழந்தைக்கு ரொம்ப முடியாம இருக்கு...கொஞ்சம் சீக்கிரமா... போங்க...”

          “ஒங்க அவசரத்துக் ஒன்னும் போக முடியாதும்மா...வேகமா போயி ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னா...எ வேலை போயிடும்...தெரியுமா...? நா மாட்டிக்கனும்...வந்து சேருது பாரு சாவு கிராக்கி...”  ஏதேதோ முனகிக் கொண்டே பேருந்தை ஓட்டினார்.

          பேருந்து நிலையம் உள்ளே பேருந்து நுழைந்து நின்றது.  பொன்னுத்தாயி குழந்தையை நெஞ்சோடு அனைத்தவாறே தூக்கினாள். குழந்தைக்கு இழுவை நின்ற மாத்திரத்தில் இதயத்துடிப்பும் நின்றது.

          சொக்கனின் அப்பா குழந்தை இறந்ததை உறுதி செய்ய, சொக்கனும் பொன்னுத்தாயும் அலறி அடித்துக் கொண்டு அழுது புலம்பினர்.

          “சீக்கிரம்  இறங்குங்க...மழைவேற வர்ற மாதரி இருக்கு...நீங்கதான் பஸ்ஸில்ல...”
நடத்துநர்  கடிந்து கொண்டார்.

          “அய்யா...கொழந்த செத்துப் போச்சங்கய்யா... செத்துப் போச்சு...இந்த வண்டி திரும்பிப் போறப்ப எங்க ஊர்ல இறங்கிக்கிறோமுங்க...” துக்கம் தாங்காமல் அழுது கொண்டே கேட்டான்.

          “அதெல்லாம் முடியாது...பொனத்த  ஏத்றதுக்குன்னு தனியா வண்டியே இருக்கு...என்னா...  பணம் கொஞ்சம் கூடக் கேப்பாங்க...” நடத்துநர் அவர்கள் போக வழி சொன்னார்.

          “வாடகைக்கு காரு புடுச்சு போற அளவுக்கு நாங்க சம்சாரி இல்லங்க...”

          “நீங்க என்னமோ பண்ணுங்க...முதல்ல இறங்குங்க... நா போயி டீசல் போட்டுட்டு டயத்துக்க டிரிப் எடுக்கணும்...சீக்கிரம்...” நடத்துநர் அவர்களை இறங்கச் சொல்லி அவசரப்படுத்தினார்.

          “நா சொல்றத நல்லா கேட்டுக்க...பொன்னுத்தாயி மனச கல்லாக்கிக்கிட்டு அழுவாம இருப்போம்...கொழந்த செத்துக் போனத யார்ட்டையும் காட்டிக்க வேணாம்...அழுவாத...என்னா? அடுத்த பஸ்ஸுல வந்தவுடனே நாம எப்படி வந்தமோ அப்படித்  திரும்பிப் போயிடுவோம்...” சொக்கன் சொல்லிவிட்டு நிலைமையை நினைத்து மனசுக்குள் அழுதான்.

          “என்னால முடியாதுய்யா... என்னால முடியாது...எம்புள்ள போன துக்கத்த என்னால மறைக்க முடியாது ஒரு பக்கம்... என்னால உண்மையை மறைக்க முடியாது இன்னொரு பக்கம்... நம்ப ஆசை ஆசையா பெத்தபுள்ள நம்பள விட்டுப் போயிடுச்சு...ம்...புள்ள உசிர எப்படியாச்சும் காப்பாத்திடலாம்னு அவசரமா வந்தோம்... அதே போயிடுச்சு...இனிமே என்ன...? எம்புள்ளைய... நானே  தூக்கிட்டு நடந்தே வர்றேன்...”

            அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி வரும் வழியெங்கும் விழிகளில் நீர்  வழிய வழிய... ஊரை நோக்கி அவர்கள் நடந்தார்கள்.


                                                                                                        -மாறாத அன்புடன்,

                                                                                                          மணவை ஜேம்ஸ்.
   

6 கருத்துகள்:

 1. இழவு வீட்டில் அழுது கொண்டிருந்தவர்களைப் பார்த்துச் சிரித்தாராம் பட்டினத்தார்..
  அடிக்கப் பாய்ந்து ஏன் சிரிக்கிறாய் என்று அவரிடம் கேட்ட போது,
  “ செத்த பிணங்களைச் சுற்றி இனிச் சாம்பிணங்கள் அழுதிடக் கண்டு, சிரிக்காமல் என் செய்வேன்? “ என்றாராம்.
  அவரோ யோகி..!
  உங்கள் கதையிலோ ஒரு பிணத்தைத் தூக்கிக்கொண்டு மூன்று பிணங்கள் போகின்றன.
  நெஞ்சு கனக்கிறது அய்யா!
  மணவையாரின் சிறுகதைகள் மெருகேறி வருகின்றன.
  பகிர்விற்கு நன்றி!!!

  பதிலளிநீக்கு
 2. ஐயா! மனம் குலுங்கி விட்டது ஐயா! கண்ணில் நீர் எங்களை அறியாமலேயே வடிகின்றது....நெஞ்சை உலுக்கிவிட்டது ஐயா! கண்களின் முன் கதை காட்சியாய் விரிந்தது ஐயா! ....வாயடைத்து ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா திரு.துளசிதரன் தில்லைஅகத்து அவர்களுக்கு,

   வணக்கம். நன்றி .

   நீக்கு
 3. வணக்கம் ஐயா!

  உங்களின் இப் பதிவு என் டாஷ்போர்ட்டில் காட்டவில்லையே ஐயா!..
  தற்சமயம் ஏன் ஐயா பதிவொன்றும் இடவில்லை
  எனப் பார்க்க வர இப்பதிவினைக் கண்டேன்!
  இத்தனை தாமதமாக வந்தேனே என்று
  கவலையுறுகிறேன்…

  என்னவொரு உணர்வுக் குவியலான கதை!..

  கண்களில் நீர் பெருக மனம் பதைக்க வாசித்து முடித்தேன்!
  ஆயினும் காட்சிகளாக விரிந்த கதையின் தாக்கத்திலிருந்து
  இன்னும் வெளியே வர முடியவில்லை!
  கண்முன்னே நிகழ்வுகளை காட்டும் உங்கள் எழுத்து நடை அற்புதம் ஐயா!
  வாழ்த்துக்கள்! தொடருங்கள்!...

  இப்படியான டயலாக்கோ சொக்கன் போன்று உருவக்
  காட்சியோ இல்லை.
  ஆயினும் எமதூரில் கலவரம் வெடித்த காலக்கட்டத்தில்
  மாலை நேரமானால் ஊரடங்கு பிறப்பித்துவிடுவார்கள்.
  வீட்டை விட்டு வெளியே தலை காட்ட முடியாது. இராணுவம் வீதி ரோந்து முடித்துப் போகக் கலவரக் குண்டர்கள் கும்பலாக
  எரிபொருள் நிரப்பிய எறி குண்டு சகிதம் வருவார்கள்.
  தமிழர்கள் வீட்டில் இருப்பது தெரிந்தால் பற்றவைத்த எரிகுண்டை வீட்டை நோக்கி எறிவார்கள். பின்னர் சொல்லுவதற்கு என்ன உண்டு???..:(

  இதற்குப் பயந்து தமிழர்கள் குழுக்களாகச் சேர்ந்து பிள்ளை குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு மறைவிடங்களிலும் பற்றை,
  மர அடர்த்தி மிக்க இடங்களிலும் ஒளிந்து நாட்களைக் கடத்தினோம். பற்றை, புதரிலும் அப்போது இஸ்லாமியச் சகோதரர்களுக்குப் பிரச்சனை இல்லாதிருந்தமையால் அவர்கள் வீட்டுப் பின்புறத்திலும் மரங்களின் கீழும் கிடத்தட்ட 3 வாரமாக நானும் ஒன்றரை வயது மகனும் கணவரும் இருந்தோம்.
  பிள்ளைகளைத் தூங்க வைப்பது அல்லது விழித்துப் பயந்து அழும் சிறார்களை வாயைப் பொத்தி மூச்சும் விட முடியாமல் சத்தம் போட விடாமல் வைத்திருக்க வேண்டும். தூக்கம் கிடையாது. அப்படி அங்கு வந்திருந்தோர்களில் குண்டர்கள் உலவும் நேரம் அழுத 5 மாதச்சிசுவின் வாயை இறுக்கப் பொத்திய போது மூச்சுத் திணறலாக அதிலேயே மாண்டதும் நடந்தது ஐயா!
  பிள்ளை இறந்ததால் அழக்கூட முடியாமல் அடக்கப்பட்ட இனமாகத் துடித்த அந்தப் பெற்றாரும் அன்றைய நிகழ்வும் இன்று உங்கள் கதையால் மீளவும் என் மனக் கண்ணில் வந்தது ஐயா!:(
  கொடிமையெனில் உச்சக் கட்டக் கொடுமை அது!...

  நான் இங்கு கூறியது கதையல்ல ஐயா!
  அங்கிருந்த அன்நேரம் அனுபவித்த நிஜம்!
  உங்கள் கதை எனக்குப் பழைய நிகழ்வுகளை மீட்டிவிட்டது!
  பதிற் கருத்துப் பகிர்வில் என் அனுபவத்தினையும் இங்கு கூறவேண்டியதாயிற்று! மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 4. அன்புச்சகோதரி,

  வணக்கம்.
  தங்களின் டாஷ்போர்ட்டில் ஏன் கதை காட்டவில்லை எனத் தெரியவில்லை. எனக்கு ‘பிளாக்கர்’ பற்றி கணினி அறிவு அவ்வளவாக இல்லை...மன்னிக்கவும்...தெரியாது சகோதரி. ‘கடை விரித்தேன்...கொள்வார் இல்லை’ என்பதைப் போல ...கதையைப் பற்றி திரு. துளசிதரன் அய்யா மட்டும் எழுதியிருந்தார். எந்தப் பின்னூடமும் வரவில்லை என்பதால் சரி...கதை சரியில்லைபோலும் என்று எண்ணிக்கொண்டோன். தங்களிடமிருந்து வந்த கருத்துகள் நெஞ்சில் பால் வார்த்தன என்று சொன்னால் மிகையில்லை.

  எனது கதையைப் படித்தபொழுது ,‘பிள்ளை இறந்ததால் அழக்கூட முடியாமல் அடக்கப்பட்ட இனமாகத் துடித்த அந்தப் பெற்றாரும் அன்றைய நிகழ்வும் இன்று இந்தக் கதையால் மீளவும் என் மனக் கண்ணில் வந்தது’ எனத் தாங்கள் குறிப்பிட்டது சோகத்தின் உச்சம்.

  எங்கள் சகோதர சகோதரிகள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...! அங்கிருந்து அனுபவித்த நிஜங்களை முகம் காட்டினீர்கள்... தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டததற்காக
  என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். தடை தளர்த்தப்பட்டது...படை புறப்படட்டும்...தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை என நாளை மலரட்டும்...விடுதலை புலரட்டும்!

  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  manavaijamestamilpandit.blogspot.in
  .

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...