சனி, 11 அக்டோபர், 2014

மதிக்கு(ம்) மடல்...







மதிக்கு(ம்)  மடல்...

 

இலங்கைத் தமிழர்களின்-
வாழ்க்கைக் கதை கேட்டு                                
வாழும் நிலை கேட்டு
வாழ்ந்த வதை கேட்டு
வாழ்வின் கதவடைத்து                                       
வாயடைத்துப் பதைபதைத்துக்
கையறுநிலையில் கதைக்கின்றோம்!
              

இலங்கைத் தமிழர்கள்-
செய்த தவறுதான் என்ன?
தமிழனாய்ப் பிறந்த்தா?
இல்லை...
தமிழையே பேசுவதா?
செய்த தவறுதான் என்ன?

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
கணியன் பூங்குன்றனார்                
கணித்ததும் தவறாகிப் போனதோ?

பிறந்த மண்ணில்...
சொந்தம் இல்லையென்று
துரத்தி விரட்டும்
தீதுகூட பிறர்தர வருவதா?

மண்ணும் மதமும்
இன்னும் பேசும் மொழியும்
மனிதன் பிறப்பைப் போல
அவன் முடிவு செய்வதில்லையே!

உயர்திணைக்கும்-                       
அஃறிணைக்கும்-
பெயர் வைத்தது எல்லாம்
மானிடா நீதானே..?
மொழிக்கும் தான்...!

கூடி வாழ்ந்த மனிதன்...
செய்தியைப் பரிமாறிக் கொள்ளத்தானே
மொழி பிறந்தது...?
மனிதனைக் கொல்ல அல்லவே!

பிறப்பால்-
எல்லாம் மனிதர்கள்தானே... !
பிறக்கும் போதும்
எதையும் எடுத்து வரவில்லை...
இறக்கும் போதும்
எதையும் எடுத்துச் செல்வதில்லை
இருக்கும் போதும்
எதற்கு இந்தச் சண்டை?

நயவஞ்சகச் சிங்களனே!
தப்பேதும் செய்யாமல்...
தறிகெட்டு அலையாமல்...
நரிபுத்தி கொள்ளாமல்...
எறிகுண்டு எறியாமல்...
வெறிகொண்டு திரியாமல்
மனிதத்துடன் வாழலாமே!


எங்கள்-
தொப்புள்கொடிச் சொந்தங்களுக்குத்-
துக்கம் சொந்தமாகிப் போனதால்...
தூக்கமே தொலைந்து போனதே...!


சொந்த மண்ணில்-
வாழ வழியின்றி...
உயிருக்கு உத்தரவாதமின்றி...
நாடு விட்டு நாடு சென்று-
தன் உயிர்க் கூடு விட்டு
உடல் மட்டும் பிற நாடு சென்று
தஞ்சமென அகதிகளாய்...
இன்னும் எத்தனை காலம் 
காத்திருந்து கழித்திருப்பது?

நினைத்தாலே நெஞ்சம் பதறுதடா!
கொஞ்சம் எண்ணிப் பாராடா...
ஈழத்தமிழன் என்ன கேட்கிறான்?

‘உன்னைப் போல...
அவனும் இருக்க
உரிமைதானே கேட்கிறான்...!

மதியிழந்தவர்களே...!                                                     
மனசாட்சி என்று
ஒன்று இருந்தால்...
மனிதநேயத்துடன் எண்ணிப்பாரடா...!
உன்னைப் போல...
அவனும் மனிதன்தானே...!

உரிமைதானே கேட்கிறான்...
கொடுக்கவில்லை என்றால்
எவ்வளவு காலம்தான் பொறுத்திருப்பான்...!
பொங்கியெழும் காலம் விரைவில் வரும்...
விரைவில் எடுத்துக்கொள்வான்...!
அந்த நாள் விரைவில் வரும்...
அந்த நாள்
ஆனந்தத் திருநாள்...!.


                                              -மாறாத அன்புடன்,

                                               மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

4 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    மதிக்கொரு மடலென மதிப்பான பதிவுதந்தீர்!
    விதியதன் செயலல்ல விளைந்தவை! கதியற்ற
    ஈழத்தான் என்றெண்ணி ஓங்கியது எதிரிகை!
    வீழவில்லை எம்மிலக்கு! விடியும் விரைந்தே!

    அலையெனப் பெருகி ஆர்ப்பரித்த உங்கள்
    உணர்வுகண்டே சிலையாகி நிற்கின்றேன் ஐயா!..
    உணர்வையும் மானத்தையும் இழக்காத இறுதி ஈழமகன்
    உள்ளவரை தீராது உளங்கொண்ட தாகம்!
    விலைதரும் நாள் வரும் விரைந்து!..

    உணர்வுமிக்க பதிவு பகிர்ந்தமைக்கு
    உளமார்ந்த நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  2. அன்புச்சகோதரி!

    ஈரமுள்ள ஈழமகன் வீரமுடன் வாழும்வரை
    ஈனமுள்ள சிங்களன் ஊனமுற்று வீழும்வரை

    தஞ்சமடை தமிழனெல்லாம் வஞ்சமதைத் தீர்க்கும்வரை
    நெஞ்சினிக்கும் ஈழமதில் கொஞ்சிடவே கூடும்வரை


    கொஞ்சகாலம் காத்திருப்போம் வஞ்சகரின் வேரறுக்க
    எஞ்சும்நாள் இனிதாகும் எதிர்பார்த்துக் காத்திருப்போம்!

    -மாறாத அன்புடன,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  3. மதிக்கு மணவையார் மாண்புற இட்ட
    மதிக்கும் மடலும் மலர - உதித்திடுமே
    ஓரா யிரங்கவிதை ஒண்தமிழில் சிந்திக்க
    வேராகும் உம்தமிழின் வித்து!
    கவிதைப் பதிவும் பகிர்வும் அருமை அய்யா!
    தொடருங்கள்!
    நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...