செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பெண்கள் முன்னேற்றம்

நீ பாதி... நான் பாதி...!

பெண்கள்:
               அகிலத்தில் அன்று முதல் இன்று வரை காலங்காலமாக ஆணாதிக்கச் சமூகத்தில்தான் பெண்கள் வாழவேண்டிய அவலநிலை இருக்கின்றது என்பதே நிதர்சனம்.  ஆணுக்கம் பெண்ணுக்கும் சில உறுப்புகளால் வேறுபாடு இருந்தாலும் அவர்களின் அறிவுஆற்றல்பெருமைகளில்  எந்த வேறுபாடு இல்லை.
சமூகத்தில் பெண் குழந்தை:
               நம்நாட்டில்  பெண் குழந்தை பிறந்தது என்றால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது.  இவளைத் திருமணம் செய்து கொடுக்கப்  பெரிய தொகை செலவு செய்ய வேண்டி வருமே என்ற கவலையும் பெற்றோருக்கு அந்தப் பெண் குழந்தையுடன் சேர்ந்து பிறக்கிறது.  பெண் குழந்தை பிறந்தவுடனே கள்ளிப்பாலை  அதன் வாயில் ஊற்றிக் கொல்லும் கொடுமை தமிழ்நாட்டில்தானே நடந்தது.  இதுபோன்ற அவலங்களைத் தடுப்பதற்காகத்தானே அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தை’ த் தொடங்கியது.  இந்தத் திட்டத்தில் வளர்ந்த  குழந்தைகளில் அதிகம் பெண் குழந்தைகள்தான்.  


               ஆண் குழந்தை பிறந்தது என்றால் குடும்பம் தழைக்க வாரிசு வந்துவிட்டதாகவும்;  வருங்காலத்தில் வரவுதான் என்றும் குதுகளிக்கிறார்கள்;  கொள்ளிப் போட பிள்ளை வந்து விட்டதாகவும் எண்ணுகிறார்கள்.
புராண இதிகாசங்களில் பெண்கள்:
               இராமாயணத்தில் சீதை,  கற்பை நிருபிக்க நெருப்பாற்றில் நீந்த வேண்டியதாயிற்று!  மகாபாரதத்தில் பாஞ்சாலி,  பஞ்சபாண்டவர்கள் அய்வருக்கும் மனைவிதுரியோதனன் தம்பி துச்சாதனனால் துகிலுரியப்பட்டாளே!  சூரியன் குந்திதேவியின்  முன்னாள் தோன்றித் தன்னொளியால் அவருக்குக் கர்ணனை மகனாக  அளித்தாரே!    சிலப்பதிகாரத்தில் கண்ணகி,  தன் கணவன் கோவலன் மாதவியிடம்  குடும்பம் நடத்துவதை மறுப்பேதும் சொல்லாமல் பொறுத்துக் கொண்டவள்தானே! 
பெண் கல்வி: 
               ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்’ என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கிணங்கப் பெண்கள் அனைவரும் கல்வி கற்கின்ற நிலை உருவாகி இருப்பதற்குக் முக்கியக் காரணம் அனைவருக்கும் கல்வித் திட்டம்’  நடைமுறைப்படுத்தப் படுவதாகும்.  அடுப்பூதும் பெண்களுக்குப்  படிப்பெதற்கு’ என்று யாரும் பேசும் நிலையில் இன்று இல்லை.  ஆனால் பெண்கள், கல்வி நிலையங்களில் ஈவ்டீஸிங்’ செய்து இன்னலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
அரசியலில் பெண்கள்:
               ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற முண்டாசுக் கவிஞனின் முரசொலிக்கேற்பப்  பாரதநாட்டில் குடியரசுத் தலைவர் முதல் பிரதமர்,  முதலமைச்சர்,  அமைச்சர் பெருமக்கள் வரை உயர்பதவிகளில் பெண்கள் பதவி வகித்தார்கள்;   வகிக்கிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.  ஆணுக்குப் பெண் சரிசமமாக இருக்கின்றபோது பாராளுமன்றத்தில் அவர்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்க எத்தனை ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நிறைவேறியது!   அது நடைமுறைக்கு வருவது அரசியல் தலைவர்கள் மனது வைக்க வேண்டும்.
பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததா:
               என்றைக்கு ஒரு பெண் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டுநள்ளிரவில் எவ்வித அசம்பாவிதமும் நேராமல்தனியாக நடந்து செல்ல முடிகிறதோஅன்றுதான் இந்தியாவுக்கு உண்மை யான சுதந்திரம் கிடைத்ததாகப் பொருள்” என்று அண்ணல் காந்தி அடிகள் சொன்னார்.  ஆனால் இன்று மத்திய மந்திரி சொல்கிறார் ‘ பெண்கள் இரவில்வெளியே வரக்கூடாது’ என்கிறார்.
                நாட்டில் பெண்களுக்கு எவ்வளவுதான் பாதுகாப்பு அளித்தாலும் அவர்களுக்கு எதிராகக் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை.   இந்தியாவில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள்   கற்பழிக்கப்படுவதாக தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகி உள்ளது.  
          கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 36,735 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், இதில் 5,076 வழக்குகளுடன் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.  இதற்கு அடுத்தபடியான இடங்களில் இராஜஸ்தான்(3,759), உத்தரபிரதேசம்(3,467),
மராட்டியம் (3,438), டெல்லி (2,096) மற்றும் பீகார் (1,127) ஆகிய மாநிலங்கள் இருப்பதாகப்  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  கல்வியறிவு விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் கேரளாகூட, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பின்னடைவைச்  சந்தித்துள்ளது.  அங்குக் கடந்த ஆண்டு மொத்தம் 1,347 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. 
பெண்களுக்கு வேலைவாய்ப்பு:
              பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்  எல்லாம் பணியமர்த்தப் படுகிறார்கள்.  சம்பாதிக்கும் பெண்கள் அவரவர் விருப்பப்படிச் செலவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.  வேலைக்குச் செல்லும பெண்கள் வீட்டு வேலைகளையும் அவர்களே செய்கின்ற நிலையில்தான் உள்ளனர்.
               பெண்கள் என்னதான் உயர்பதவிகள் வகித்தாலும்,  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பணியாறி வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வி.விஷ்ணுபிரியா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.  அவர் அரசியல் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து,  அப்பாவிகள்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய மறுத்து நேர்மையாக இருந்தாலும்  ஆணாதிக்கச் சமூகத்தில்  தன் உயிரையே கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைதானே!   இன்னும் பெண்களுக்கு, இதுபோன்ற  நிகழ்வுகள் தொடர்கின்றன.
பெண்களின் திருமணம்:                           
               பெண்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களின விருப்பத்திற்கேற்றவாறு காதலித்தவரைத்  திருமணம் முடிக்க இந்தச்  சமூகம் அனுமதிப்பதில்லை.  அதற்குச்  சாதிமதம் மற்றும் பொருளாதரம் பெரும் தடையாக இருக்கின்றன.  கணவன் இறந்த பின் விதவைகள் மறுமணத்தை இந்தச் சமூகம் அனுமதிப்பில்லை.  சமூகத்தை எதிர்த்து  நடக்கும் திருமணங்கள் வித்தியாசப் படுத்தித்தான் பார்க்கிறது.   ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே  இங்கு வேரில்  பழுத்த பலா’ என்று கைம்மைப் பழியைப் பற்றிப்  புரட்சிக்கவி பாரதிதாசனின் கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது.   கணவனோ உறவுகளோ இறந்தாலும் இடுகாடு வரையோ, கொள்ளி வைக்கவோ பெண்கள்  அனுமதிக்கப்படுவதில்லை.
பெண்களின் முனேற்றம்:
               ''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறையப்  பெண்களிடம் போய்ச் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையைப் பெண்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு அவர்களின் உரிமைக்காகப் போராடி, சொத்தில் பங்கு பெற அனைத்து முயற்சிகளையும் எடுக்க  வேண்டும்.   பெற்றோர்களும் பெண்களுக்குத் தாமாக முன்வந்து மனவுவந்து சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும். 
               திருமணத்திற்காகப் பெண்வீட்டார் மணக்கொடை கொடுக்க மாட்டோம் என்ற முடிவுடன் வைராக்கியமாக இருக்க வேண்டும்.  கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தவறு இல்லை என்பதால் விதவை மறுமணத்தைப்  பெண்கள் ஆதரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
               ஆணாதிக்க மனநிலை மாற்ற பெண்கள் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை’ என்று சாதித்துச் சாதனை படைக்க மனதில் உறுதி ஏற்றுச் செயல் படுத்திக் காட்ட வேண்டும்.  பெண்ணைப் பெண்ணாக மட்டும் நினைத்து மதித்து நடந்தால் போதும்... நீ பாதி... நான் பாதி...!
*****************






உறுதிமொழி:

இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதிகூறுகிறேன்.

மேற்கண்ட படைப்பு வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்றுமுடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.










          
          


16 கருத்துகள்:

  1. அன்பு மணவையாருக்கு பெண்களைப்பற்றி விரிவான விளக்கங்களுடன் அருமையான கட்டுரை 1980ல் நடந்த கள்ளிப்பால் கொடுமையால் அன்று பிறந்த ஆண்கு குழந்தைகளுக்கு இன்றும் பலருக்கும் பெண் கிடைக்காமல் துயரப்படும் நிகழ்வுகள் தொடந்து கொண்டு இருக்கிறது போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
    பரிசு எனக்கு இல்லை எனக்கு இல்லை மணவையார் இப்படி எழுதினால் எனக்கு எப்படி கிடைக்கும் எனக்கு இல்லை எனக்கு இல்லை சொக்கா.....
    தமிழ் மணம் இணைப்புடன் 111

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      முதலில் வந்து முதன்மையான கருத்துகளை வெளியிட்டு பாராட்டி தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  2. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    உடனுக்குடன் வலைப்பதிவர் சந்திப்புத் தளத்தில் இணைத்து அந்தத் தகவலை உடனே தெரிவிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அய்யா,
    நல்ல அருமையான தொகுப்பு,, போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையான படைப்பு ஐயா
    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,


      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சிறந்த படைப்பு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பொருண்மையைத் தெரிவு செய்து எழுதியுள்ள விதம் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      ஒரு கையால் தட்டச்சு செய்வதால் சற்று சிரமாக இருக்கிறது. தகவலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல படைப்பு. காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றது. நல்லதையே எதிர்னோக்குவோம்.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.


      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...