திங்கள், 20 ஏப்ரல், 2015

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...4




சந்திப்பிழையின்றி எழுதுவோம்...4



பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

                    எச்சம் என்றால் என்னான்னு சொல்லாம... நீங்க பாட்டுக்குப் பெயரெச்சம் என்று சொன்னால் எப்படி?

                    எச்சம் என்றால் குறைவானது,   முழுமை பெறாதது/நிறைவு பெறாதது...  அவ்வளவுதான்.

                    அரைகுறையா புரியிறமாதரி இருக்கு... பெயரெச்சம் என்றால்... அதச் சொல்லவே இல்லையே?   

                    ‘பெயரெச்சம்’-ன்னா நிலைமொழி  எச்சமாக (வினைச்சொல்லாய்) இருக்கும்.  அடுத்து வரும் பெயர்ச் சொல்லைச் சார்ந்து பொருள் முற்றுப் பெற வருவது.

                    (எ.டு) ஓடிய குதிரை. (பெயரெச்சம்)

                                 ஓடிய - எச்சம் (எச்சம் எப்பொழுதும் வினைச்சொல்லாகத்தான் இருக்கும்.  வரும் சொல் பெயரைச் சார்ந்து வந்தால் பெயரெச்சம்;    வினையைச் சார்ந்து வந்தால் வினையெச்சம்... அவ்வளவுதான்.

                                 குதிரை - பெயர்ச்சொல் 




 “பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை; நல்ல
 பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை;  என்னைச் சொல்லிக் குற்றமில்லை:
காலம் செய்த கோலமடி;  கடவுள் செய்த குற்றமடி

“மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை;
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை“


“தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா – இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா


தடித்த எழுத்துகளாலான தொடர்கள் பெயரெச்சத் தொடர்கள்.  இங்கெல்லாம் வல்லினம் மிகாமை காண்க.

பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
ஆனால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில்(ஓடாக் குதிரை) வலி மிகும்.


வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும் என்பதும் பொதுவான விதி

 வினையெச்சம்

               வினையெச்சம் என்றால் என்னவென்று சொன்னால்தானே புரியும் என்று கேட்பதற்கு முன்னால் நானே சொல்விடுகிறேன்.  நிலைமொழி முற்றுபெறாத வினைச் சொல்லாய் இருக்கும்.  வருமொழி வினைமுற்றைச் சாந்ர்ந்து பொருள் முற்றுப்பெற வருவது.

                (எ.டு) ஆடிக் காட்டினான்.
                            ஆடி- என்பது  எச்சம் (வினைச்சொல்)
                             காட்டினான்- என்ற வினைமுற்றுச் சொல்லைச் சார்ந்துதான் முற்றுப் பெறுகிறது.  எனவே, இது (ஆடி) வினையெச்சம். 
                            
                                                                                                                                                                  { வன்றொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சங்களின்  வல்லினம் மிகும்.
[(எ.கா) கேட்டுக்கொண்டான், விட்டுத் தந்தான், செத்துப் பிழைத்தான்.]}

கீழ் வரும்   குற்றுகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலிமிகாது.

 மென்றொடர்  (எ.கா கண்டு களித்தான், வந்து சேர்ந்தான், உண்டு படுத்தான்) 

இடைத்தாடர் (எ.கா பெய்து கெடுத்தது, கொய்து தின்றான், செய்து பார்த்தான்),

உயிர்த்தொடர் (எ.கா உழுது களைத்தான், அழுது தீர்த்தான், பொருது பட்டான்)

இடைச்சொற்றொடரில் வல்லினம் மிகாது:

ஆகாரா, ஏகார, ஓகரா இடைச் சொற்களின் பின் வலி மிகாது.
                                                                           
                                                                       
எ.கா:  ஆ!  : நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே!

           நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

           பட்டிக்காடா பட்டணமா ரெண்டுங்கெட்டான் லட்சணமா
                                                           
       ஏ  :கண்ணெதிரே தோன்றினாள்.  கனி முகத்தைக் காட்டினாள்

           பாவையிலே குமரியம்மா... பழக்கத்திலே குழந்தையம்மா

       ஓ  : முத்துக்களோ கண்கள்... தித்திப்பதோ கன்னம்
                                                                                                                     
            அறிவைக் கெடுத்ததோ துரோணரின் கௌரவம்   

மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் (ஒடு, ஓடு) வல்லினம் மிகாது:

     பாலொடு தேன்கலந்தற்றே       ..... (ஒடு)

     ‘கட்டோடு குழலாட ஆட... ஆட...’.....( ஓடு)

     காற்றோடு புயலாய் வந்தாள்

     பகலோடு  புலியாய் வந்தாய்

    போரோடு படையாய் வந்தாய்   

                                   -நன்றி. தவறின்றித் தமிழ் எழுத..மருதூர் அரங்கராசன்.  
                             

எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப்பின் வல்லினம் மிகாது.

     (எ.கா) ஒன்று கொடு, இரண்டு தந்தான், மூன்று போடு, நான்கு சரிந்தன, ஐந்து கோட்டைகள், ஆறு சிலைகள், ஏழு திருடர்கள், ஒன்பது பலா) என வரும்.

[எட்டு, பத்து என்னும் இரண்டும் (எட்டுத் தொகை, பத்துப்பாட்டு) விதிவிலக்கு.ஏனெனில் இவ்விரண்டும் வன்தொடர் குற்றியலுகம்]

வியங்கோள் வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது:
                க, இய, இயர் –போன்ற விகுதிகளைப் பெற்று அமையும் வினைமுற்றுகள் வியங்கோள் வினைமுற்றுகள்.  இவற்றின் பின் வல்லினம் மிகாது.
வாழ்க தமிழ், வாழிய பல்லாண்டு, வீழ்க சிறுமை.

சுட்டு, வினாச் சொற்களில் வல்லினம் மிகாது:
 அது,      இது,       எது        ...அது பெரிது
அவை,    இவை,     எவை           ...இவை தேவையா?
அன்று,    இன்று,    என்று           ...என்று தருவார்?
அவ்வளவு, இவ்வளவு,  எவ்வளவு ...அவ்வளவு பெரிய மாளிகையா?
அவ்வாறு,  இவ்வாறு,   எவ்வாறு ...இவ்வாறு கலகம் வந்து விட்டதே
அத்தகைய, இத்தகைய,  எத்தகைய...எத்தகைய கலவரம் அது?
அன்றைய, இன்றைய,   என்றைய ...அன்றைய பேச்சு
அப்படிப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட... இப்படிப்பட்ட செயலைச் செய்.

ஆ, ஏ, ஓ எனும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.

அவனா சொன்றான், அவனோ பேசினான், அவனே சிரித்தான்.

வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள்,தல்’ என்னும் விகுதிகள் வரும்பொழுது வல்லினம் மிகாது.


எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் =கருத்துகள்
வாழ்த்து+கள்= வாழ்த்துகள்
போற்று+தல்= போற்றுதல்


              எழுத்துகள், எழுத்துக்கள்,... வாழ்த்துகள், வாழ்த்துக்கள் -என்று இருவிதமாகவும் எழுதுவதைப் பார்க்கிறோம்.  எது சரி?  முடிவு செய்யத் தனிவிதி ஏது இல்லை.  காதுக்கு இனிமை, சான்றோர் வழக்கு, பொருட்பொருத்தம் போன்றவற்றைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும்.

               தோப்பு + கள் = தோப்புக்கள் ; தோப்புகள்

தோப்புக்கள்: இங்கு ‘கள்’ பன்மை உணர்த்தும் விகுதியன்று.  ஒரு பெயர்ச்சொல்லே.  போதை தரும் பொருள்....‘தோப்புக்கள்’.
தோப்பில் விளைந்த ‘கள்’.  ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.  வலி மிகுந்து வந்தது.

          தோப்புகள்:   ‘கள்’ ங்குப் பன்மை விகுதி.
                                    ‘பல தோப்பு’ என்பது பொருள்.  வலி மிகாமல் இயல்பாய்ப் புணர்ந்தது.

           வலி மிகுத்து எழுதும்போது  பன்மையை உணர்த்தாமல்,  வேறு பொருள் உணர்த்துவதைத் தெளிவாகக் காண்கிறோம்.  எனவே எல்லா இடங்களிலும் ‘ஒத்த சீர்மை’யைக் கருதி வலி மிகுக்காமல் எழுதுவதே  சிறந்தது.

            வாழ்த்து  + கள் = வாழ்த்துகள்.

             வன்றொடர்க் குற்றுகர ஈற்றுப் பகுதியுடன், ‘கிறு, ‘கின்று’ போன்ற கால இடைநிலைகளைச் சேர்க்கும்போது, வலி மிகுத்து எழுதுவதில்லை.

            போற்று  +  கிறு  +  ஆர் = போற்றுகிறார்

            தூற்று      +  கின்று+ஆர்=தூற்றுகின்றார்
‘போற்றுக்கிறார்’, ’தூற்றுக்கின்றார்’ என்று எழுதும் வழக்கம் இல்லை.
-அவ்வாறே‘கள்‘ விகுதி சேர்க்கும்  போதும், ஒற்று மிகுக்காமல் எழுதுவதே முறையாகும் என்பர்  பேராசிரியர் தா.ம.வெள்ளைவாரணனார்.

          “அய்யா...  இதற்காக யாரும்  வழக்கு தொடுத்துவிடப் போகிறார்கள்?”
- என்று சொல்வது காதில் விழுகிறது...!

         “ வழக்குத் தொடுத்துவிடப் போகிறார்கள்?”  - என்றால் கண்டிப்பாக  இந்தத் தொடரில் ஒற்று மிகுத்து எழுத வேண்டும்.

         “ தமிழில்  வல்லினம் மிகுவதற்கும், வல்லினம் மிகாதற்கும் விதியைச் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்... தலைவிதியே என்று  நொந்து... விதியே என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்... .  விதியைச் சொல்கிறீர்களே...!  விதிவிலக்கு  ஏதும் இருக்கிறதா?”

          “ நல்லாக் கேட்டீங்க போங்க... விதின்னு இருந்தா... விலக்குன்னு இருக்குமுல்ல...”

           ”ஓ...கோ... அப்படியா...!”

           “அதையும்தான் பார்த்திடுவோமா...?”


                                                                                             

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...3

         
           

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...2        



சந்திப்பிழையின்றி எழுதுவோம்!



                                                                                        

                                                                                    (ஆகட்டும் பார்க்கலாம்...
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

                                                                                                        

22 கருத்துகள்:

  1. அருமையான அழகான விளக்கம்...

    நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தர் அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் ஊக்குவித்தலுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  2. பாடல் வரிகளால் நீங்கள் பாடம் நடத்தி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது ,ஒரு சந்தேகம் ,ஓடாக் குதிரைக்கு ,எப்படி வலி மிகும் :)

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள பகவான் ஜி,

    தாங்கள் ரசித்துப் படித்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சி. வாக்கிற்கும்... வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
    சரியாக சந்தேகம் கேட்டீர்கள்... குதிரை ஓடினால்தானே வலி மிகும்... ஓடாத குதிரைக்கு வலி மிக வழியில்லையே என்றுதானே! பகவானே கால்வலியைத்தானே கேட்கிறீர்கள்...!(ஜோக்காளி அல்லவா!) ஓ... அந்த வலியில்லையா? புரிகிறது... எப்படி வல்லினம் மிகும் என்றுதானே கேட்கிறீர்கள்.... மன்னிக்கவும் ... நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

    பெயரெச்சத்தில் இரு வகை உண்டு.
    நேர்ப் பெயரெச்சம் (ஓடிய குதிரை),
    எதிர்மறைப் பெயரெச்சம் (ஓடாத குதிரை).
    இந்த இரண்டிலும் வலி மிகாது.

    ஆனால், ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற ஒரு வகையில்மட்டும் வலி மிகும்.
    உதாரணமாக:
    * ஓடிய குதிரை : நேர்ப் பெயரெச்சம் : வலி மிகாது
    * ஓடாத குதிரை : எதிர்மறைப் பெயரெச்சம் : வலி மிகாது
    * ’ஓடாத’ என்பதில் ஈறு, அதாவது நிறைவு எழுத்து ‘த’ என்பதை நீக்கிவிட்டால், ‘ஓடாக் குதிரை’, இங்கே ‘க்’ வரும், அதாவது வலி மிகும்!
    இதேபோல் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும் உதாரணங்கள் இன்னும் சில: பொருந்தாக் காதல், அருந்தாத் தாகம், பறக்காக் கிளி, பாடாக் கவிதை, அறியாக் குழந்தை, உதவாச் செல்வம்,
    விளங்காப் பொருள், அய்யா இப்ப பொருள் விளங்குகிறதா?

    விளங்காத+பொருள் = ஈற்றில் உள்ள ‘த’ கெட்டதால்
    ‘விளங்கா’ (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்) + பொருள்=
    விளங்காப் பொருள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜி ஒரு வேளை பொய்க்கால் குதிரை பற்றிக் கேட்கிறாரோ? :))

      நீக்கு
    2. அன்புள்ள அய்யா,

      பொய்க்கால் குதிரை பற்றிக் கேட்டிருந்தாலும் கேட்டு இருக்கலாம்...! ஓடாக் குதிரை அது தானே!

      பகவான் என்ன எண்ணுகிறார் என்று பகவானுக்குத்தான் தெரியும்!

      நன்றி..

      நீக்கு
  4. பயனுள்ள பதிவு மணவையாரே... என்னைப்போன்ற பாமரனுக்கு நிறைய விடயங்கள் கிடைக்கிறது தொடரட்டும் தங்களது தமிழ்ப்பணி.
    தமிழ் மணம் 6 மனமே 6
    (66 அல்ல)

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஜி,

    பயனுள்ள பதிவென்று பாராட்டியதற்கும் ஆறு போல் பெருக ஆறு மனமே ஆறு என்று ஆற்றுப்படுத்தியதற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அய்யா,

    நீங்கள் எங்களுக்கு எளிமையாக சொன்னது போல் எங்கள் தமிழய்யா எங்களுக்கு சொல்லித் தரவில்லையே. தமிழ் வகுப்புகள் எல்லாம் நேரம் கடத்தும் வகுப்புகளாகத்தான் போனது. இப்போது வயது கூடக் கூட படிப்பது எதுவும் மண்டையில் தங்குவதில்லை. சந்திப்பிழை பற்றி எத்தனை முறை சொன்னாலும் அது சங்கடப்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது.

    இதில் எத்தனை பிழைகள் இருக்கிறதோ ஜேம்ஸ் அய்யாவுக்கே வெளிச்சம்.
    த ம 7

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    எங்கள் தமிழய்யாவும் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை. நானும் தங்களைப் போல்தான்!

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள், இல்லை, இல்லை, கள் இல்லை, வாழ்த்துகள் மணவை ஜேம்ஸ் அவர்களே. என் பலநாள் சந்தேகம் தீர்ந்தது.

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. விளக்கம் நன்று! இது, தற்காலத் தேவையும் ஆகும்!

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அய்யா,
    இது போல அன்றாட வாழ்வியல் செய்திகளையும் மாணாக்கரைக் கவர்கின்ற திரைப்படைப் பாடல்களையும் எடுத்துக் காட்டிக் கற்பித்தால் நிச்சயமாய் இலக்கணத்தில் ‘வலி‘ மிகாது.
    என் போன்றோர்க்கு உதவும் பதிவு.
    தொடருங்கள்.

    நன்றி்.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தங்களது பதிவுகள் எங்களது எழுத்துக்களை நாங்கள் சீர்செய்துகொள்ள உதவுகிறது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள அய்யா,

    தங்களின் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சினிமா பாடல்களின் மூலம் இலக்கணம் அருமை சார்.இலக்கணத்தை சுவாரசியமாக்க இந்த உத்தியை பயன்படுத்தலாம்

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அய்யா,

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. மிகவும் பயனுள்ள தொடர்! தொடர்ந்து வருகின்றோம். பள்ளியில் படிக்கும் போது, கற்று அதைத் தொடர்ந்து வந்தாலும் பல சமயங்களில் பிழைகள் வருகின்றன. பலவருடங்கள் எழுதாமல் இருந்து விட்டதால். இப்போது உங்கள் தொடர் அதை மீண்டும் புதுப்பிக்கின்றது.

    வாழ்த்துக்கள்/வாழ்த்துகள் (இதைக் கேட்க வேண்டும் என்றிருந்தோம். அதே போன்று கருத்துகள்/கருத்துக்கள்....நாங்கள் வாழ்த்துகள், கருத்துகள் என்றுதான் எழுதி வந்தோம் ஆனால் பெரும்பான்மையோர் க் சேர்த்துதான் எழுதி வருகின்றனர். அப்படியானால் நாம் தான் தமிழை மறந்துவிட்டோம் போல என்று நினைத்து நாங்களும் க் சேர்க்கத் தொடங்கினோம். உங்கள் விளக்கம் நாங்கள் எழுதி வந்தது சரி எனச் சொல்லுகின்றது. விளக்கங்கள் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா,

    தொடரைத் தொடர்ந்து வந்து ‘மிகுந்த பயனுள்ள தொடர்’
    -- என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...