செவ்வாய், 19 ஜனவரி, 2016

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மறைந்தாரே!

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்...



நாட்டார் இசை, நாடகத் துறை, ஆய்வுத் துறை என்று பல தளங்களில் இயங்கியவர் கே.ஏ.குணசேகரன்

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமான செய்தியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. 1955-ல் சிவகங்கை அருகே மாறந்தை கிராமத்தில் பிறந்தவர் அவர். 1970-களின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்தார். 1978-ல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜத்தின் பயிற்சியில் நாடகப் பயிற்சி பெற்றார்.


நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் (1955-2016) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை அன்று (17-01-2016) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.  கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு ரேவதி என்ற மனைவியும், குணவதி என்ற மகளும் அகமன் என்ற மகனும் உள்ளனர். 

எண்பதுகளில்  கே.ஏ.குணசேகரனின் இசைக்குழு மணப்பாறை மாரியம்மன் கோயிலில் பாடல்களைப் பாடி பறையடித்து ஆடியது இன்னும் கண்முன் அழியாத கோலங்களாகக் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது.  பல தடவை எங்கள் ஊருக்கு வந்து ஆடிப்பாடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி சென்றிருக்கிறார்.
அன்னாரின் நாட்டுப்புற இசைக்குழுவினர்  பாடிய பாடல்களில் என் நெஞ்சைவிட்டு  நீங்காத பாடல் இது...
   “‘பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே...பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி பேசுதே...”
திருச்சி, ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நான் எழுதி இயக்கிய நாடகத்தில்  இந்தப் பாட்டைப் போட வேண்டும் என்பதற்காகவே ஒரு குறு நாடகம் தயாரித்து  பாவாடை சட்டையை ஒரு பையனுக்குப் போட்டு மாணவியாக மாற்றி சிறப்பாக ஒரு நாடகத்தைப் போட்டேன்.

திருவாளர் கே.ஏ.குணசேகரனின்  மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காணொளி காண ‘கிளிக்’ செய்க...

                                                   
                                           

_____________________________________________________________________________________________


கலகத்தின் கலைமுகம்.


1980-களில் தமிழில் நவீன நாடக எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் விளைவாக, தமிழ்நாட்டில் செயல்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் வெகுஜனத் தளத்தில் நாடகங்களையும் அரசியல் கருத்து பரப்புரைப் பாடல்களையும் நிகழ்த்தத் தொடங்கினர். இந்தக் காலத்தில் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் பல முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து மேடைகளில் நாட்டார் இசை மரபு சார்ந்த அரசியல் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அன்றைக்கு, பிரபலமாக அறியப்பட்ட நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயியைத் தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

எழுச்சி மிக்க குரல்

கே.ஏ.குணசேகரன் பாடிய வாகான ஆலமரம், முக்கா முழம் நெல்லுப் பயிரு, ஒத்த மாடு செத்துப்போச்சு, ஆக்காட்டிஆக்காட்டி, பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதேஆகிய பிற பாடல்கள் கேட்போரை எழுச்சிகொள்ளச் செய்தவை. தலித் சிறுவன் ஒருவன், நிலப் பண்ணையார் கிணறு ஒன்றில் குளித்ததற்காக மின்சாரம் பாய்ச்சிக் கொலைசெய்யப்பட்டான். அந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு மனுசங்கடாநாங்க மனுசங்கடாஎன்ற பாடலை எழுதினார் கவிஞர் இன்குலாப். தனது எழுச்சிமிக்க குரலில் குணசேகரன் இந்தப் பாடலை மேடைகளில் பாடியபோது, தமிழகத்தில் தலித் இயக்க எழுச்சிக்கான பாடலாக அது மாறிப்போனது.

நாடகத் துறை அனுபவம், நாட்டார் இசை குறித்த முனைவர் பட்ட ஆய்வு, நாட்டார் பாடல்களை மேடைகளில் பாடுவது எனப் பல்பரிமாணங்களைக் கொண்ட பேராசிரியர் குணசேகரன், தமிழக நாட்டார் மரபு சார்ந்த கலை வடிவங்களுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் என்று சொல்ல முடியும். பல்வேறு இயக்கங்களுக்காக இவர் நடத்திய நாட்டார் இசைப் பயிற்சி முகாம்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

பிற்காலங்களில் தன்னானே என்ற இசைக் குழுவை அவர் உருவாக்கினார். இக்குழுவில், நாட்டுப்புற இசைக் கருவிகள் குறிப்பாக தவில், பறை, ரெட்டை மேளம் போன்றவற்றைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் பிறந்து வளர்ந்த ஊரான சிவகங்கைப் பகுதியைச் சார்ந்த கோட்டைச்சாமி, அழகிரிசாமி வாத்தியார் ஆகிய நாட்டுப்புறக் கலைஞர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டார். கோட்டைச்சாமியின் குரல் மிக வளமானது. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தியாவின் பெருநகரங்களிலும் இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய இடங்களிலும் தனது குழுவோடு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

பறை இசைக் கருவியை அடிப்படையாகக்கொண்ட தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரெங்கராஜன் பறை இசைக் குழுவும் இவரது குழுவோடு சேர்ந்து பல நேரங்களில் செயல்பட்டது. அந்தப் பின்புலத்தில்தான் சின்னப்பொண்ணு எனும் தமிழகம் அறிந்த நாட்டுப்புறப் பாடகரும் உருவானார். தமிழக நாட்டார் இசை வரலாற்று மரபு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் நிகழ்த்துதல் ஆகியவற்றில் குணசேகரன் அரிய சாதனைகளை நிகழ்த்தியவர்.

தலித் எழுச்சியில் பங்கு

1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாட்டில் உருவான தலித் இயக்கப் பேரலையில் குணசேகரனுக்குத் தனியிடம் உண்டு. தலித் எனும் தன்னிலைசார்ந்து பல்வேறு நாடகப் பிரதிகளை இவர் எழுதினார். பலியாடுகள்’, ‘மாற்றம்’, ‘மழி’, ‘தொடு’, ‘கந்தன் வள்ளிஆகிய பல நாடகங்கள் இவ்வகையில் அமைந்தவை. முக்கியமான தலித் தன்வரலாற்று நூல் என்று கருதப்படும் வடுஇவரது மிக முக்கியமான பதிவு. தலித் அரங்கியல் குறித்து இவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழகப் பழங்குடி மக்கள் மையம் என்ற துறை நீலகிரியில் செயல்பட்டது. அத்துறையில் பணியாற்றினார். அந்த அடிப்படையில் தமிழகப் பழங்குடி மக்கள்என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். பின்னர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார். இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவின் வேறு மாநிலங்களில் இருந்தும் பல மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்றனர். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட அத்துறை, பின்னர் குணசேகரன் தலைமையில் செயல்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி என்று அழைக்கப்படும் அந்தத் துறைக்குத் தலைவராக இருந்ததோடு மட்டுமன்றி புதுச்சேரி பல்கலைக்கழகக் கலைப்புலத் தலைவராகவும் இருந்தார்.

இடைப்பட்ட காலத்தில் மூன்று ஆண்டுகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராகவும் செயல்பட்டார் குணசேகரன். அப்போது பல துறைகளைச் சார்ந்தவர்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். குணசேகரனின் நூல்களில் முக்கியமானவை இசை நாடக மரபு’, ‘நாட்டுப்புற மண்ணும் மக்களும்’, ‘நாட்டுப்புற இசைக் கலை’, ‘பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்’, ‘தலித் அரங்கியல்ஆகியவை. இவரது பலியாடுகள்நாடகம் தமிழக தலித் வரலாற்றில் தனியிடத்துக்கு உரியது.

உலகத் தமிழாராய்ச்சி இயக்குநராக இருந்தபோது, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். திரைப்படக் கலைஞர் தங்கர்பச்சானோடு இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நாசர் இயக்கிய தேவதைபடத்திலும் ஞானராஜசேகரன் இயக்கிய பாரதிதிரைப்படத்திலும் இவருடைய பங்கு குறிப்பிடத் தக்கது.

1975-2015 காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் இயங்கிய பல்வேறு போக்குகளில் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டவராக வாழ்ந்தவர் குணசேகரன். தான் ஆய்வுசெய்த துறையை வெகுசனப் பரப்பில் கொண்டுசென்ற பெருமையும் இவருக்கு உண்டு. நாட்டார் இசை மரபு சார்ந்த மேடைப் பாடல் நிகழ்வுகளும் ஒலிப்பேழை உருவாக்கமும் இவரின் தனித்த ஆளுமைகள் என்று சொல்ல முடியும்.

மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஆளுமை, தன் சமூகம் சார்ந்த பண்பாட்டுப் பரிமாணங்களைப் பொதுவெளி, ஆய்வுவெளி, தனது சொந்த ஆளுமை எனப் பல நிலைகளில் வெளிப்படுத்தி வாழ்ந்த வரலாறே குணசேகரனுடையது. தமிழ்ச் சமூகம் எப்போதும் அவரைக் கொண்டாடும்!

- வீ. அரசு, தமிழ்ப் பேராசிரியர் மற்றும் தமிழ் அச்சுப் பண்பாட்டு ஆய்வாளர்.

நன்றி:  தி இந்து 19.01.2016.

                                 
                                          



காணொளி காண ‘கிளிக்’ செய்க...






-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

28 கருத்துகள்:

  1. மணவையாரே...
    நிறைய விடயங்கள் தந்து இருக்கின்றீர்கள் காணொளியும் கேட்டேன்
    கே.ஏ.குணசேகரன் அவர்களின் குடும்பத்தினருக்கு நமது இரங்கலை தெரிவிப்போம்

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஜி,

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் இரங்கலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புகழஞ்சலி ..
    பதிவு அருமை அய்யா
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நாட்டுப்புறக் கலைகளில் ரொம்பவும் ஆர்வமும் ஆராய்ச்சியும் உள்ளவர். ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற இன்குலாப்பின் வரிகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவர். இவரது வாழ்க்கை அனுபவக் கட்டுரைகளையும், பேட்டிகளையும் சில நூல்களையும் படித்து இருக்கிறேன்.
    உங்களோடு தோழர் கே.ஏ.குணசேகரனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    (தங்களது கட்டுரையில் மேலே 17-01-2017 > 17.01.2016 என்று மாற்றவும் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி. பிழையைத் திருத்தி விட்டேன்.

      நீக்கு
  5. தகவல்கள் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  7. அருமையான ஒரு கலைஞரை பற்றி அறிந்தேன். அன்னாரின் மறைவு மனதை துயரில் ஆழ்த்தியது. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான பதிவு மணவை ஜேம்ஸ். நண்பர் குணசேகரன் எனது மிக நெருங்கிய நண்பர் குழந்தை உள்ளம்---- அதற்குள் கொதிக்கும் அனல்,
    இளகிய மனம்-------அதற்குள் இரும்பான உறுதி,
    வெட்டப்பட்ட பட்ட சிறகுகள்--- -விண்தாண்டிப் பறக்கும் எத்தனம்
    எளிமையான பேச்சு- ----------இறுக்கமான கொள்கை.
    நண்பர் குணசேகரன் இழப்பு மலையாய் மனதை அழுத்துகிறது
    இலங்கையிலிருந்து பாண்டிச் சேரி பல்கலைக் கழகத்தில் நாடகம் படிக்கச் செல்லும் மாணவர்கள் பலருக்கு அவரது வீடு ஒரு தங்கு மடம்
    பாண்டிச்சேரி சென்றால் என்னை எங்கும் தங்கவிடமாட்டார்.
    அவர் வீட்டில் தங்கச் சொல்லி உரிமையோடு கட்டளையிட்டுவிடுவார்..
    ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து இருவரும்
    வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடை பவனி
    வருவோம்
    எனக்கு அது மிகவும் பிடிக்கும்
    வரும் வழியில் எழுத்தாளர் பெரியவர் கி.ராஜநாராயணன்
    வீட்டில் காலைக் காப்பி
    நடை பவனி வருகையில் அவரோடு கதைக்க வரும் அனவருக்கும் என்னை அறிமுகம் செய்வார்
    குணசேகரந்தான் பாண்டிச்சேரியிலுள்ள ஏழை மாரி அம்மன் கோவிலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்
    நான் அவரிடம் கேட்டேன்
    “ஏழை மாரி அம்மனா?
    ஏழைகளின் மாரி அம்மனா?”
    “நீங்கள் சொன்னஇரண்டாவதுதான் சரிபோல் தெரிகிறது ஸார்”
    என்று சிரித்துக்கொண்டு சொன்ன அந்தப் பொழுதுகள் ஞாபகம் வருகிறது
    ஏழைகளுக்காக
    அடக்கப்பட்டவர்களுக்காக
    மேடை தோறும் பாடினார்
    தன் இளமைக்காலக் கதைகளையெல்லாம்
    உருக்கத்தோடு உரைப்பார்.
    பட்ட துயரங்களைக் கொட்டித் தீர்ப்பார்
    தடைகள் பல தாண்டி ஓர்மத்தோடு முன்னேறிய மனிதர்.
    பல தடவைகள் இலங்கயின் கிழக்குப் பலகலைக் கழகம் வந்துள்ளார்.
    அவர் பழக்கிச் சென்ற
    “மக்கள் வாழும் மண்ணகம்”
    பாடலை எமது மாணவர்கள் இப்போதும் மேடையில் உணர்ச்சியோடு பாடுகிறார்கள்.
    நண்பர்கள் ஒவ்வொருவராக விடை பெறுகிறார்கள்
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் மௌனகுரு அய்யா,

      வணக்கம். பேராசிரியரோடு தங்களின் நெருக்கம், அன்பு, பாசம், அவர் வீட்டில் தங்களைத் தங்கச் சொல்லி உரிமையோடு கட்டளையிடும் நல்ல உள்ளம், எழுத்தாளர் கி.ராஜாவோடு பழகும் பாங்கு, அவர் பழக்கி விட்டுச் சென்ற ‘மக்கள் வாழும் மண்ணகம்’ பாடல், நண்பர்கள் ஒவ்வொருவராக விடை பெறுகிறார்கள் என்று சொல்கிற பொழுதே நெஞ்சம் கனக்கிறது... கண்கள் பனிக்கிறது...!

      நேசமிகு நண்பர் குணாளருக்குப் பாசமிகு நண்பர் மௌனகுருவின் மௌனம் கலைத்த நினைவஞ்சலி என்றும் நினைவில்...!

      நெஞ்சார்ந்த நன்றி.
      .

      நீக்கு
  9. தகவலுக்கு நன்றி! அய்யா!! அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா.... த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தமிழ்ப்பல்கலைக்கழகம் மூலமாக எங்களுக்கு அறிமுகமானவர்களில் இவரும் ஒருவர். சிறந்த கலைஞர். நல்ல நண்பர். பழக எளியவர். தான் சார்ந்த துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவரது மறைவு பேரிழப்பே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களுக்கு அறிமுகமான பேராசிரியரைப் பற்றிய மேலான கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. துயர் பகிர்வோடு
    அருமையான தகவல் தந்து
    சிறப்பித்துள்ளீர்கள்

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
    2. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. நாங்க எரியும் போது எவன் மயிரைப் பிடுங்கப் போனீங்க என்று அவர் , உணர்ச்சியோடு முழங்கிய குறை இன்னும் என் காதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      கவிஞர் இன்குலாப்பின் பாடலை உணர்ச்சியோடு பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் பாடியதைத் தமிழன் என்ற உணர்வோடு சுட்டியதற்கு மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...