சனி, 9 டிசம்பர், 2017

மயானத்தில் கேட்ட பாடல்

நண்பனின் மரணம்

                                                                             
அன்று, பள்ளியில் படித்த   பால்யகால நண்பன் கிருஷ்ணன் இறந்த செய்தி இன்று ( 8.12.2017) மாலை எனக்கு நண்பன் ஜான் கென்னடியின் அலைபேசியின் மூலம் தெரியவந்தது.

இறந்த நண்பன் கிருஷ்ணனைக் கடந்த சனிக்கிழமை அவனது மளிகைக்கடையில் அமர்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தான்.   அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்;  தற்பொழுது மிகவும்  நன்றாக இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.   ஆனால் அவனின் இறப்புச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் வருத்தப்பட்டேன்.


திருச்சியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் எனது நண்பன் அருள் ஜேம்ஸ் பால்ராஜைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.  அவனுக்குத் தகவல் தெரியவில்லை.

பிறகு உடல்தகனம்  நாளைக்குத்தானே இருக்கும் என்று விசாரித்தபோது,   ‘இல்லை... இன்றே உடல்தகனம் செய்யப்படுகிறது’ என்பதை அறிந்து இருவரும் மாலை வாங்கிக்கொண்டு இறுதி மரியாதை செலுத்த செல்லலாம் என்று புறப்பட்டுச் செல்கின்றபொழுது... எதிரே அமரர்வண்டியில் அவனது உடல் எடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.





மயானத்திற்குச் சென்று அவனது உடலைப் பார்த்தோம்...

பள்ளியில் பக்கமது நெருக்கமாக உட்கார்ந்திருந்தவனா

பாடையில் படுத்துப் பூதஉடலாகக் கிடக்கிறனான்...?

வீட்டிற்குத் தெரியாமல் அவன் கடையில் இருந்து

வீண்செலவு செய்யத் தினமும் எடுத்த காசுதான் எவ்வளவு?




எட்டாவது படிக்கும்பொழுது... 

ஒரு நாள் நண்பனிடம் பணம் கொடுத்து  டவுனுக்குச் சென்று

அம்மாள் கபே ஹோட்டலுக்கருகில் உள்ள கவரிங் கடையில் 

‘ஐந்து லவ் டாலர்’ வாங்கி வரச் சொல்ல...


 அவன் ஹோட்டலில் போய்   ‘ஐந்து லவ் டாலர்’கேட்க... 


அவர்கள்‘ லவ் டாலர் இல்லை லட்டுதான் இருக்கிறது’ என்று சொல்ல... 

‘சரி... அதில் ஐந்து கொடுங்கள் என்று வாங்கி வந்துவிட்டான்.  

அன்று அவனைத் திட்டியபடி ஐந்து லட்டையும் சாப்பிட்டோம். 

அஃது அடிக்கடி நினைவில் வரும்...

ஆனால் இன்று நீயோ நினைவில்...?


‘எங்கள் தந்தை சபரிமலைக்கு மாலைபோட்டு இருக்கிறார்கள்...

என்னை எல்லாரும் சாமி என்றுதான் கூப்பிடவேண்டும்...’ 

என்று உன் கட்டளைக்குப் பணிந்து

உன்னை  நாங்கள் ‘சாமி’ என்று கூப்பிட்டால் 

ஒரு நாலணா தருவாயே... !

அதெல்லாம் நினைவில்...

ஆனால் நீயோ நினைவில்...?



அவனின் அன்புமகன் அவனுக்கு இறுதி மரியாதைசெய்ய...

அவனின் தந்தை பெற்ற மகனுக்குச் சோறூட்டி மகிழ்ந்தவர்

அவனின் பேசமுடியாத வாய்க்கு இன்று அரிசியிட்டு...

அவரும் பேச முடியாமல் அழவே...

எரியும் மின் மயானத்திற்குள்ளே...

நாங்களும் முதன்முதலில் அடிஎடுத்து வைக்க... 

அவன் உடல் எடுத்து அடியில் கிடத்தப்பட்டு

உள்ளே  தள்ளி கதவு மூடப்பட்டது... 

அவனது   பயணம் முடிந்து விட்டது.  



நாங்களும் பயணப்பட்டோம்...

‘ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் 

கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?’


அந்த மயான அமைதியில்... 

அந்த மயானத்தில்...

இந்தப் பாடல் ஒலித்தது.


 ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க 
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன! 

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

                                  -கவிப்பேரரசு வைரமுத்து.


பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க.



-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

8 கருத்துகள்:

  1. தங்களது நண்பர் திரு. கிருஷ்ணன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. எனது ஆழ்ந்த இரங்கல். தங்களது நண்பர் கிருஷ்ணனின் ஆன்மா அமைதி பெறட்டும். பெரும்பாலும் எல்லா மயானத்திலும், மின் தகனமேடை இருக்கும் இடங்களில், கவிஞர் வைரமுத்து எழுதிய, 'ஜென்மம் நிறைந்தது' என்று தொடங்கும் இந்த பாடலை ஒலிபரப்பு செய்கிறார்கள். ஆழ்சிந்தனை உடைய உருக்கமான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா,

      நான் முதன்முதலில் மின்தகனமேடையில் உடல்தகனத்தைப் பார்த்தேன். இந்தப் பாடல் அந்த நேரத்தில் ஒலித்தது. மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
  4. நண்பரின் மறைவிற்கு ஆழ்ந்தஇரங்கல்கள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...