புதன், 8 ஆகஸ்ட், 2018

ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!
ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!


கலைத்தாய் ஈன்றெடுத்த 
கலைஞரே!
95-ஆம் வயதில்-
உன் சரித்திர சாதனைகளின்
உயரத்தை யாராலும் தொடமுடியாது...
உயரச் சென்ற உதயசூரியனே…!

நீ-
தமிழினம் வாழ
இடஒதுக்கீடு தந்தாயே!
எந்தையே!
இறந்த பிறகு உனக்கா
அண்ணாவிற்கருகில் இடமில்லை?

கோடான கோடித் தமிழர்களின்
இதயசிம்மாசனத்தில்
இடம்பிடித்த உனக்கா
அண்ணாவிற்கருகில் இடமில்லை?

அண்ணாவின் பெயரைச்சொல்லி…
பெயரளவில்-
ஆட்சிநடத்தும்
ஆட்சியாளருக்கு வேண்டுமானால்
இதயம் இல்லாமல் இருக்கலாம்…
இதிலொன்றும் ஆச்சரியம் இல்லை…!

நீதிக்குத் தலைவணங்கும்
கருணையின் நிதியே!
உனக்கு-
நீதியே தலைவணங்கி
நித்திரை கொள்ள
நியாயம் வழங்கியிருக்கிறது.

அண்ணாவின்-
இதயத்தை இரவலாகப் பெற்று
‘நான் வரும்போது உன் காலடியில் சமர்ப்பிப்பேன்’
வாக்கு கொடுத்தாயே…!
உன் வாக்கு பொய்க்காது…!

ஓய்வில்லாச் சூரியனே!
தமிழினத்திற்காக-
ஓய்வில்லாமல் உழைத்தது போதும்…
தலைவா ஓய்வெடு…!

நீ விட்டுச் சென்ற பணியை
நீ விட்டுச் சென்ற…
உன் தளபதி-
தொய்வின்றித் தொடரட்டும்…
ஓய்வெடு தலைவா! ஓய்வெடு!!


                                                -மாறாத அன்புடன்,
                                                    
                                                        மணவை ஜேம்ஸ்.Related Posts Plugin for WordPress, Blogger...