வியாழன், 12 மார்ச், 2015

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...3



சந்திப்பிழையின்றி எழுதுவோம்...3



சந்திப் பிழை போன்ற சந்திப் பிழை நாங்கள்!

 திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘கருப்பு மலர்கள்கவிதை நூலில் குறிப்பிடுகின்றார்.

       ஒற்றுமிகுத்து ஒலிக்கவேண்டிய இடத்தில் ஒற்று மிகுத்தும், ஒற்றுமிகுத்துக் கூறாமல் இயல்பாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இயல்பாக ஒலித்தும், எழுதியும் வந்தால்தான் தமிழ் இனிமையுடைய மொழியாக இருக்கும்.  இல்லையேல், ஓசை இனிமை குன்றுவதுடன் பொருட்பிழையும் நிகழும்.   
   
     ஒற்றுச் சேர்த்தும் சேர்க்காமலும் எழுதுவதால் பொருள் மாறுபடும் சில இடங்களைப் பார்ப்போம்.
                                                                     
       தயிர் கடை        - தயிரைக் கடைவாயாக
       தயிர்க் கடை       - தயிரை விற்கும் கடை                                                                                                    
       கை குட்ட        - குட்டையான கை
       கைக்குட்டை      - கைக்கு சிறிய துண்டு                                     
       வழிபடுதல்             - வணங்குதல்
       வழிப்படுதல்            - பின்பற்றுதல்  

வல்லினம் மிகா இடங்கள்:

தொகை என்றால் தொக்கி (மறைந்து) வருவது

 என்பதுதான் தெரிந்ததாயிற்றே !




வினைத்தொகையில் எக்காரணம் கொண்டும் வல்லினம் மிகாது.
     நிறுத்துங்க...நிறுத்துங்க... நீங்கபாட்டுக்குச் சொல்லிக்கிட்டுப் போனா எப்படி?  வினைத்தொகைன்னா மொதல்ல என்னான்னு சொல்லனுமுல்ல...?

      மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

         வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.  முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும்.  இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

      
ஊறுகாய் என்பதில் ஊறு என்பது வினைச்சொல்லாகவும் காய் என்பது பெயர்ச்சொல்லாகும்.

மூன்று காலங்களும் மறைந்து வரும்.

(எ.கா) ஊறு + காய்ஊறுகாய் 

ஊறுதல் (வினை)  காய் (பெயர்)

        
இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.
 ஊறிய காய்-இறந்த காலம்
ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
 ஊறும் காய்-எதிர்காலம்

 

சுடு +சோறு = சுடுசோறு
 சுடுதல்(வினை) சோறு(பெயர்)

   சுட்ட சோறு-இறந்த காலம்
   சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
   சுடும் சோறு-எதிர்காலம்

குடி + நீர் = குடிநீர்
குடித்தல் (வினை)நீர் (பெயர்)
   
   குடித்த நீர்-இறந்த காலம்
   குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
   குடிக்கும் நீர்-எதிர்காலம்

ஆமாம் வினைத்தொகையில் என்ன தொக்கி (மறைந்து) வருகிறது என்றுதானே கேட்கிறீர்கள்... சரியாகக் கேட்டீர்கள்...!
           
தொக்கி (மறைந்து) வருவது மூன்று காலங்கள்தான்.... நீங்களே சொல்லி விட்டீர்கள் பார்த்தீர்களா...!


வினைத்தொகையில் கண்டிப்பாக வல்லினம் மிகாது என்றால்....
வேறு என்ன தொகையில் வல்லினம் மிகாது என்றுதானே கேட்கிறீர்கள்?

உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.  

உம்மைத்தொகை என்றால் ‘உம் என்பது மறைந்து வருவதுதானே... என்று சொல்வது புரிகிறது.... 

அதேதான்!

உம்மைத் தொகை கண்டுபிடிக்க...  சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ள சொல்லாக இருக்கவேண்டும்.


                   (
எ-கா) அக்கா தங்கை
               அக்காவும் தங்கையும்

இரு சொற்களுக்கிடையில் "உம்" சேர்ப்பின், பொருள் சரியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பின் அது உம்மைத்தொகை.

(
எ-கா)
சேர சோழ பாண்டியர்
இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் 

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

"
வேண்டுதல் வேண்டாமை" (வேண்டுதலும் வேண்டாமையும் ) "தாய்தந்தை"(தாயும் தந்தையும்) ,  "கபிலபரணர்"(கபிலரும் பரணரும்)

வல்லினம் மிகாமல் வேறு ஏதேனும் தொகை இருக்கிறதா?

      இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.

ஓகோ... அப்படியா! இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’... அது மறைந்து வந்தால் மிகாதா?
      சரியாகச் சொல்லிவீட்டீர்கள்....! அவ்வளவுதான்...!!

(எ.கா) கடல்(கடலை) +  தாவினான்  = கடல் தாவினான்     
புகழ் (புகழை)  பெற்றார்   = புகழ் பெற்றார்    
      மலர் (மலைரை)+பறித்தாள்  = மலர் பறித்தாள்

            முதல் (எழுவாய்) வேற்றுமை எட்டாம் (விளி )வேற்றுமை இரண்டுக்கும் உருபு இல்லேன்னு சொன்னீங்க... அங்கு வல்லினம் மிகுமா? மிகாதான்னு அத நீங்க  சொல்லவே இல்லையே?

            எழுவாய்த் தொடரிலும்... விளித் தொடரிலும் இரண்டிலும் வல்லினம் கண்டிப்பாக மிகாது.


எழுவாய்த் தொடர்:

(எ.கா) நயன்தாரா  பார்த்தாள் = நயன்தாரா பார்த்தாள்
       பிரபுதேவா +   திட்டினான்= பிரபுதேவா திட்டினான்
       பேய்கள்   +  திரிந்தன 
பேய்கள் திரிந்தன


விளித்தொடர்:

             கிளியே தா            கிளியே தா
       அண்ணா + போ         = அண்ணா போ
       கனவே  + கலையாதே   = கனவே கலையாதே

       வேறு எந்தெந்த வேற்றுமைத்தொகைகளில் வல்லினம் மிகாது என்று சொன்னால் பரவாயில்லை...?

      அப்படியா... சொல்லிவிட்டால் போச்சு...
ஆறாம் வேற்றுமைத் தொகை(எ.கா.:புலி+தோல்[புலியது தோல்] =புலித்தோல்) தவிர்த்த... ஏனைய வேற்றுமைத் தொகைகளில் வலி மிகாது.

 (எ.கா)
நீர் பாய்ச்சினான் (நீரைப் பாய்ச்சினான்)      (2)-ஆம் வேற்றுமைத் தொகை

கை தட்டினான் (கையால் தட்டினான்)        (3)                "

சிறை சென்றான்(சிறைக்குச் சென்றான்)  (4)                  "  
            " 
வரை பாய்ந்தான்                                                  (5)                 "   
                         " 
 (வரை[மலை]யிலிருந்து பாய்ந்தான்)  
                                     
ஊர் தங்கினான் (ஊரில் தங்கினான்)            (7)                  "    

      ‘கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியத் தூக்கி மனையில வையின்னு ஒரு பழமொழி சொல்வாங்கல்ல... ஏதோ இரட்டைக்கிளவியில், அடுக்குத் தொடரில் வல்லினம் மிகுமா?  மிகாதா? .  அடுக்கடுக்கா கேள்வி கேட்டு அசத்துறனோ?

     அந்தக் கிழவியில்லீங்க... இது கிளவி...கிளவி... (சொல்) ... கிளவியாக்கம் தொல்காப்பியரே ஓர் அதிகாரம் வைத்துச் சொல்லி இருக்காரே... அந்தக் கிளவி... ஒரு வாக்கியத்தில் வந்த குறிப்புச் சொல்லே இரட்டை இரட்டையாய் அடுக்கி வருவது இரட்டைக்கிளவி.

இரட்டைக்கிளவியில், அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது:


தகதக, தகதக இரட்டைக் கிளவி
சலசல, சலசல இரட்டைக் கிளவி
உண்டல்லோ!  தமிழில் உண்டல்லோ?
 பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை...
பிரித்து வைப்பதில் நியாயம் இல்லை

அடுக்குத்தொடர்:
ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி
வருவது அடுக்குத்தொடர் 
(எ.கா)  பாம்பு +பாம்பு  = பாம்பு பாம்பு
        போ + போ + போ= போ போ போ 
        வாருங்கள் + வாருங்கள் = வாருங்கள் வாருங்கள்

(பிரித்துப்பார்த்தால் பொருள் தரும்)
வல்லினம் மிகா இடங்கள் இன்னும் சொல்லாமல் எச்ச மிச்சமாக ஏதும் இருக்கா?

ஆமாம்... நல்லவேளை ஞாபகப்படுத்துனீர்கள்... 
பெயரெச்சச்தொடர், வினையெச்சத்தொடர்களில் வல்லினம் மிகாது...
          எச்சம் சொச்சம் உள்ள வல்லினம் மிகா இடங்கள் வளரும்...
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.






  









28 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு! ஆனால், பள்ளியில் இலக்கணம் படிக்கும் போது ஏற்பட்ட அதே பயம் இப்போதும் வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள S.P. அய்யா,

    தங்களுக்கே பயம் என்றால் எப்படி...! தத்தித் தத்தி அடி எடுத்து வைப்போம்...! கீழே விழாமல் எந்தக் குழந்தையும் நடப்பதில்லையே! நாமெல்லாம் குழந்தைகள்தான்... தினம் தினம் எதையாவது கற்றுக்கொண்டே இருப்போமே...!

    பதிவைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இனிய இலக்கண வழிகாட்டல்
    பயன் தரும் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அடடா...! படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் பிரமாதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. நண்பரே! நல்ல பதிவு! அருமையான விளக்கங்கள்! எடுத்துக்காட்டுகள் எல்லாமே இன்றைய தலைமுறையினருக்குப் புரியும் வகையில் இருக்கின்றது...அதான் அந்தப் படங்களைத்தான் சொல்லுறோம்.....ஆசிரியர் அல்லவா நன்றாக வாசிப்பவர்களின் பல்ஸ் அன்றிந்துள்ளீர்கள்!

    சாப்பாடு படங்களை எல்லாம் போட்டு எங்களை இப்படி ஜொள் ஒழுக வைத்துவிட்டீர்களே! .ஹஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பாக இருக்கிறது. மிக்க நன்றி.

      நீக்கு
  8. நல்ல தொடர்! இப்பொழுதுதான் பார்க்கிறேன். முதல் பகுதி, இந்த மூன்றாம் பகுதி இரண்டும் படித்துவிட்டேன். ஆனால், இடையிலுள்ள இரண்டாம் பகுதியைப் படிக்க முடியவில்லை. மேலே பதிவின் இறுதியில் நீங்கள் தொடரின் இரண்டாம் பகுதிப் பதிவுக்குக் கொடுத்துள்ள இணைப்பு அந்தக் கட்டுரைக்குச் செல்லாமல் உங்கள் பிளாகர் கணக்குக்குச் செல்கிறது. எனவே, அதைப் படிக்க முடியவில்லை. சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      இரண்டாம் பகுதிப் பதிவுக்குக் கொடுத்துள்ள இணைப்பு அந்தக் கட்டுரைக்குச் செல்லும்படி சரி செய்துவிட்டேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தங்கள் வருகைக்கும்... பாராட்டிற்கும்...வாழ்த்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணைப்பில் உள்ள குறையைக் களைய முயற்சிக்கிறேன்.

    -நன்றி.

    பதிலளிநீக்கு
  10. விளக்கவுரைகள் அருமை வாத்தியாரே,,,, என்னைப்போன்ற மாணவனுக்கு பலன்.
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      எங்கள் ஊரில் ‘ஜி’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கக்கூடிய ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அருமை வாத்தியாரே ...!என்று வாழ்த்தியதற்கும், வாக்களித்ததற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  11. அய்யா வணக்கம்.

    தாமதமாக வந்து பதிலிடுவது தெரிந்தவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்கிற உரிமையில்தான்.

    முதலில் வலையுலகில் பத்தாயிரம் பார்வையாளர்களைக் கடந்த பதிவராக நீங்கள் ஆனதற்காக வாழ்த்துகள்..!!!
    இது அடுத்த ஆண்டில் இந்நேரம் இலட்சம் தொடட்டும் என்கிற லட்சியம் இருக்கட்டும்.

    அதற்கு என் முன்தேதியிட்ட வாழ்த்துகள்.

    சரி ..

    வாழ்த்துகள் என்பது சரியா..

    வாழ்த்துக்கள் என்பது சரியா...?

    பண்டைய மரபில் நச்சினார்க்கினியர் போன்ற பெரும்புலமையாளர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுகிறார்கள்.

    நமக்கு அவ்வளவு புலமை பற்றாதில்லையா நான் வாழ்த்துகள் என்று எழுதுகிறேன்.

    நிற்க....

    இலக்கணங்களை அன்றாட வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி இது போன்ற பதிவுகள் தங்களைப் போன்றோரிடம் இருந்து மென்மேலும் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

    தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நம் குழந்தைகளிடம் இலக்கணத்தைப் பற்றிய அச்ச உணர்வு முற்றிலும் நீக்கப் பெற வேண்டும்.

    அதனைக் கற்பித்தல் என்பது அதன் சட்டைப் பையில் மறைத்து வைக்கப்பட்ட மிட்டாய் ஒன்றை எடுத்து அதன் கண்முன் நீட்டிக் காட்டுவது போல அக்குழந்தைக்குத் தெரிந்த மொழியிலிருந்து எடுத்துக் காட்டி அதன் விழிகளை விரியச் செய்வதாய் இருக்க வேண்டும்.

    வெறுமனே உதுக்காண் என்றும், உவாப்பதினான்கு என்றும் கற்பிக்கப் படுவதைக் கேட்கும் போது எனக்கு அவ்வாசிரியர்கள் மேல் தோன்றும் எரிச்சலையும் அம்மாணவர்கள் மேலும் கவியும் பரிதாபத்தையும் எழுத்தாக்கத் தெரியவில்லை.



    உங்களின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

    தொடருங்கள்.

    தொடர்கிறேன்.


    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,
      வணக்கம். முதலில் வலையுலகை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் மேலும் என்னை வலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உதவியதற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      ‘ஏன்டா... வலைத்தளத்தை ஆரம்பித்துக் கொடுத்தோம்... ?’-என்று எண்ணுகின்ற அளவிற்கு நான் அடிக்கடி சந்தேகங்கள்... மற்றும் பிழைகள் திருத்தச் சொல்லி தொல்லைகள் கொடுக்கின்ற பொழுது சிறிதும் மனம் சுளிக்காமல்... கைமாறு கருதாது... அதை உடனுக்குடன் செய்துதரும் அன்பு உள்ளதை... என்னவென்று சொல்லிப் பாராட்டுவது? என்றும் நான் கடன் பட்டவன்.

      வலையுலகில் காலடி பதித்த ஆறு மாதத்திற்குள் பத்தாயிரம் பார்வையாளர்களைக் கடந்தற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தற்கு.... மீண்டும் எனது நன்றி.


      வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு நின்று விடாமல்...
      வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா? என்று கேட்டுவிட்டீர்கள்?
      வாழ்த்துகள் – வாழ்த்துக்கள் இரண்டுமே சரியென்று கூறுகிறார்கள். இல்லை வாழ்த்துக்கள் என்று சொல்வதுதான் சரியென்று ஒரு சிலரும், இல்லை இல்லை வாழ்த்துகள் என்று (ஒற்று மிகாமல்) சொல்வதுதான் சரியென்றும் ஒரு சிலரும் கூறுகிறார்கள்.


      வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும்பொழுது வல்லினம் மிகாது.
      எழுத்து + கள் = எழுத்துகள்
      கருத்து + கள் = கருத்துகள்
      வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
      போற்று + தல் = போற்றுதல்
      நொறுக்கு + தல் = நொறுக்குதல்


      கண்ணதாசனின் எழுத்துகள் (எழுத்துளைக் குறிக்கும்) எனக்குப் பிடிக்கும்.
      கண்ணதாசனின் எழுத்துக்கள்(எழுத்து கள் போன்றது) எனக்குப் பிடிக்கும்.

      ஒன்றுக்கு மேற்பட்டன்னு சொல்ல வரும் பொழுது பன்மை விகுதியா ‘கள்’ அப்படின்னு சேர்க்கின்றோம்... இது விகுதி. இது தனியான சொல் இல்லை.

      தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழலாம்!
      ஆனால் இனிப்புக்கள் (இனிப்பு கள்[தென்னை அல்லது பனை மரத்திலிருந்து எடுக்கப்பட்டு போதைதரக் கூடியதாக ஆக்கப்பட்ட பானம்] போன்றது) வழங்கி மகிழலாமா?

      திருமண விருந்து கொடுக்கும் நண்பர் வாழ்த்துக்கள் கொடுத்து மயங்க வைக்கலாம்.
      அதன் பிறகு மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லி விடை பெறலாம்.
      வாழ்த்துக்கள் என்பது தவறு.
      வாழ்த்துகள் என்பதுதான் சரி.
      -நன்றி.

      நீக்கு
    2. இது பற்றி 'மாதவிப்பந்தல்' கண்ணபிரான் ஓர் அருமையான விளக்கம் அளித்துள்ளார். இருவரும் படிக்க வேண்டுகிறேன். இதோ சுட்டி: http://madhavipanthal.blogspot.in/2012/06/blog-post.html.

      நீக்கு
    3. வணக்கம் அய்யா!
      வீணாக ஒரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டுவிட்டேனோ...!

      படித்தேன் !

      மாதவிப்பந்தல் “ வாழ்த்துக்கள் “ என்பதற்கு நியாயம் சேர்க்கிறார்.
      மணவை ஜேம்ஸ் அய்யாவின் கருத்தும் அதுவே.

      மாதவிப்பந்தல் பதிவர் தன் பதிவிற்கு முதன்மையாதாரமாகக் கொள்வது நச்சினார்க்கினியரின் வழக்கினையே.

      சான்றோர் ஆட்சி என்ற வகையில் சரிதான் என்றாலும் நச்சினார்க்கினியரின் புலமை மரபினையும் நாம் கேள்விக்கு உள்ளாக்க நமக்குச் சுதந்திரம் இருக்கிறது.

      நான் அந்தப் பதிவைப் படித்தவரையில் பதிவர், மரபிலக்கண நூல்களில் இருந்து “ வாழ்த்துக்கள் “ என்னும் ஆட்சிக்குச் சான்று காட்டியதாகத் தெரியவில்லை.
      மீண்டும் அப்பதிவினைப் பார்க்க முயன்றபோது பதிவு வெளிப்படவில்லை.

      என் நினைவில் இருந்தே அவர் கருத்துகளை எழுதிப் போகிறேன். தவறிருப்பின் திருத்துங்கள்.

      குற்றியலுகரம் வாழ்த்து என்று கொண்டு கள் சேர்க்கப் படவில்லை என்று அவர் கூறுகிறார்.

      ஏனெனில் அவர் அப்படிக் கொண்டால்,

      கள் என்னும் இடைச்சொல் குற்றியலுகரத்தை அடுத்து வரும்போது ஒற்று மிகுமென்றால்

      வாழ்த்து + கின்ற என வருமிடத்தில் நிகழ்கால இடைநிலையாகிய கின்ற வரும் போதும் வாழத்துக்கின்ற என்று எழுத வேண்டியிருக்கும். அது நம் மரபில் இல்லை.
      எனவே இங்கு ஒற்று மிகுந்தது இடைச்சொல் ஆட்சியால் இல்லை என்கிறார்.

      நச்சினார்க்கினியர் வாழ்த்துக்கள் என்று எழுதுவது குற்றியலுகரப் புணர்ச்சியைக் கருதியே என்பதே எனது எண்ணம்
      ஏனெனில் மரபி்ல் இதற்கு வேறெந்த இலக்க ண விதியும் பொருத்த முடையதாக இல்லை.

      வாழத்துகள் என்பதை வாழ்த் துகள் என்று பிரித்துத் துகளாக வாழ் என்று பொருள் கொள்ளலாமே என்று பதிவர் கேட்பது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை.

      இது நீங்கள் திருத்திய புனை பெயர் போல வினைத்தொகை.

      இவர் சுட்டும் பொருளில் இது வாழ்துகள் என்று வருமேயன்றி வாழ்த்துகள் என்று வராது.

      நானும் மெத்தப் படித்தவனில்லை.

      இரண்டுவழக்கும் சரி யென்பது எனது எண்ணம்.

      ஒருவழக்கைக் கையாளும் போது இன்னொரு வழக்கும் இப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும், நாம் ஒன்றைத் தெரிவு செய்வதற்கான காரணங்களை அறிந்திருப்பதும் நல்லதுதானே..!

      நன்றி!

      நீக்கு
  12. அருமையான பதிவில் ,சிறிய கரும்புள்ளியாய் தெரியும் ' மலைரை ' சரி செய்யலாமே :)
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. நல்ல மலராக ஆக்கிவிட்டேன்.
      நன்றி.

      நீக்கு
  13. ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே எங்கள் பள்ளியில் இலக்கணத்துக்கு அளவுக்குமீறி இடம் கொடுத்துக் கற்பித்தார்கள். ஆனால், என்ன பயன்? இரண்டுமே மண்டையில் ஏறவில்லை. கல்லூரிப்பருவத்தில், இலக்கணமே சொல்லித் தரமாட்டார்கள். இலக்கணமும் கேள்வித்தாள்களில் கிடையாது. ஆனால், இருமொழிகளிலும் கல்லூரிப்பருவத்திலே நன்கு இலக்கணப் பிழையின்றி எழுத எப்படி வந்தது எனக்கு எனத்தெரியவில்லை.

    என் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியில் படித்தவர்கள். அவர்களுக்கு ஆங்கில இலக்கணமே சொல்லித்தரப்படவில்லை. நானும் சொல்லித்தரவில்லை. நான் செய்தததெல்லாம், வீடு நிறைய அவர்கள் வயதுக்குப் பொருத்தமான நூலகளை வாங்கி அவர்கள் பார்வையில் போட்டதுவே. பின்னர் ஒரு நூலகத்தை அமைத்ததுவே. அவர்களாகவே கதைப்புத்தகங்கள் படித்துபடித்து நன்கு ஆங்கிலம் எழுதப்பழகிக்கொண்டார்கள்.

    இன்று அவர்களிடம் பாஸ்ட் பெர்ஃபெக்ட் டென்ஸ் என்றால் என்ன? ஆக்டிவ் வாய்ஸ், பாசிவ் வாய்ஸ் எவை என்று கேட்டால் தெரியாது. ஆனால் அவர்கள் எழுதும்போது, அந்த டென்ஸ்கள், அந்த வாய்சுகள் தாமாகவே உட்காரவேண்டிய இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். எப்படி சாத்தியமானது?

    என் இரண்டாவது பையன் சி பி எஸ் சி, 12ம் வகுப்பில் தில்லி மாநிலத்தில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண். இந்தியாவில் 98 மதிப்பெண்களுக்கு மேலெடுத்தவருக்கு வழங்கப்படும் சி பி எஸ் சி சான்றிதழ் பெற்றான். அவன் விடைத்தாளை ஆர் டி ஐ விண்ணப்பத்தில் பெற்றேன். அதில் அவன் எழுதிய விடைகள் தெளிவாக, இலக்கணத்தோடு இருந்தன. எப்படி இலக்கணமே சொல்லிக்கொடுக்கப்படாமல் அவன் எழுதினான்? என்ற கேள்வியை நானே கேட்டு ஆராய்ந்ததின்படி:

    அவன் படித்த நூல்கள் ஏராளம்: ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிப்பாடநூலகளைத்தாண்டி கவிதை, கட்டுரை நாவல்கள் என்று ஏராளம். 11, 12ம் வகுப்பு படிக்குன்போது வாசித்த நூல்கள் சிறந்த எழுத்தாளர்கள் படைத்த இலக்கியம். எனக்கு வாசிக்க வாங்கி, படித்தபின் வைத்துப்போட்டவைகளை அவர்களாகவே வாசித்து இன்புற்றார்கள். அவ்வாசிப்பு அவர்கள் மொழியைப் பண்படுத்தியது. அநிச்சைச் செயலாக. இதுவே தமிழிலும் சாத்தியமாகும்.

    எனவே இருவகையிலும் மொழியில் ஒருவர் புலமை பெறமுடியும். 1. முறையாக இலக்கணப்பயிற்சிபெற்று 2. தேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களை தொடர்ந்து பல்லாண்டுகள் வாசித்துவரின்.

    சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.

    என்ற பாட்டின் பொருளும் அதுதானே! Practice makes perfect.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      “அவன் படித்த நூல்கள் ஏராளம்: ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிப்பாடநூலகளைத்தாண்டி கவிதை, கட்டுரை நாவல்கள் என்று ஏராளம். 11, 12ம் வகுப்பு படிக்குன்போது வாசித்த நூல்கள் சிறந்த எழுத்தாளர்கள் படைத்த இலக்கியம். எனக்கு வாசிக்க வாங்கி, படித்தபின் வைத்துப்போட்டவைகளை அவர்களாகவே வாசித்து இன்புற்றார்கள். அவ்வாசிப்பு அவர்கள் மொழியைப் பண்படுத்தியது. அநிச்சைச் செயலாக. இதுவே தமிழிலும் சாத்தியமாகும்.”

      நல் வழியைப் பிள்ளைகளுக்குக் காட்டினீர்கள். நூல்கள் அதிகம் படித்தாலே அவனது அறிவு விசாலமடையும் என்பதற்குத் தங்கள் பிள்ளைகளே சான்று!

      கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
      மாடல்ல மற்றை யவை.
      -மிக்க நன்றி.

      நீக்கு
    2. திரு மலர்அன்பன் அய்யாவிற்கு,

      தங்களின் கருத்தோடொத்த கருத்தை திரு.S.P. செந்தில் குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கு , “ பசிபரமசிவம் அய்யாவின் கவனத்திற்குப்பணிவுடன் “ எனும் பதிவின் மறுமொழியாக இட்டிருக்கிறேன்.
      நேரமிருப்பின் வந்து கருத்திடும்படி அன்புடன் அழைக்கிறேன்.

      நன்றி

      நீக்கு
  14. பணியில் சேர்ந்த காலகட்டத்தில் அ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா படித்தேன். பின்னர் அவ்வப்போது நாளிதழ்களில் வரும் இது தொடர்பான பதிவுகளைப் படிப்பேன். தற்போது தங்களது பதிவுகள் பல ஐயங்களைத் தெளிவுபடுத்துகின்றன. மிகவும் பயனுள்ள தொடர் பதிவு. தொடருங்கள். தொடர்ந்து படிக்கிறோம். எம்மைத் திருத்திக்கொள்ள முயல்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள அய்யா,

    பயனுள்ள தொடர் எனப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...