புதன், 20 மே, 2015

தூது - சிற்றிலக்கியம்

தூது 



        ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம்.

         காதலாலோ  துயரத்தாலோ ஆண் அல்லது பெண் தூது அனுப்புவது.
              
         அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு அனுப்புவது;  அவர்களிடம் மாலை வாங்கி வருமாறு தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது. 

                                                           
                ‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்காக  கண்ணதாசன்- தூது செல்ல ஒரு தோழி வேண்டி தலைவியின் பாடல்.

தூது செல்ல ஒரு தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவி                                                  



துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி......................

              ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்திற்காக கங்கை அமரன்  அவர்கள் பூவையும் காற்றையும்  குயிலையும் குருவியையும் மயிலையும் பறவைகளையும் தூது விடுகிறார்.   இந்தப் பாடலைப் பாடிய எஸ். ஜானகி அம்மாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
                                                             
                                                              

செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்றக்  
காற்றே!                                          
என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?
நீ கொஞ்சம் சொல்லாயோ? செந்தூரப் பூவே!

தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்!
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே!
என்ன இனிக்கிது அந்த நினைவதுவே!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!


நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!
கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!
காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!

திங்கள், 11 மே, 2015

கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் - கவிதை.



கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் 


கவிதை இன்று (11.5.2015)  முரசொலி நாளிதழில் வெளிவந்தது.



 பார்வைக்காக:



அண்ணன் காட்டிய வழியில்

கலைஞர் ஊட்டிய மொழியில்


எந்தச் சரிகமபதனிக்குள்ளும்
முடங்கிக்கிடப்பதல்ல மடங்கிக்கடப்பதல்ல
புரட்சிப்பூபாளம்!
சிலந்திவலைக்குள் சிக்கக்கூடியவையல்ல
தந்தை பெரியாரின் கந்தகச் சிந்தனைகள்!
உடையா நடைமுறைச் சிந்தனைகள் அவை
வாழ்வுக்குள் வரமறுக்கும்
கற்பனைக் காவியக்கனவுகள் அல்ல.
வெற்றியின்  முகவரியில் காத்திருக்கும்
வெப்ப வினாக்களின் வெளிச்சவிடைகள்!
கடக்கத் துணிந்தவனுக்குக்
கடலின் எல்லா அலைகளிலும் கதவுகள்
திறந்தே இருக்கும்!
சாதிக்கமுடியாத சாக்கரடீசு-தனது
சந்ததி பெரியார்மூலம் சாதித்துக்கொண்ட
சரித்திரம்தான் திராவிடஇயக்கம்!

செவ்வாய், 5 மே, 2015

அந்தாதி -சிற்றிலக்கிய அறிமுகம்.


அந்தாதி



        அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோசீரோஅசையோஎழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதியாகும். 

       அந்தம் (இறுதி) ஆதியாக (முதலாக) வருவதால் இப்பெயர் பெற்றது.


       மூன்று முடிச்சு  திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல் அற்புதமான அந்தாதி.  திரைப்பாடலில் வேறு அந்தாதி பாடல் இருந்தால் அறியத்தரலாமே!



வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
 நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஒரு பார்வையின் மௌனம்...! -சிறுகதை.




ஒரு பார்வையின் மௌனம்


(மணவை ஜேம்ஸ்)

பிரியமான கவிஞர் வசந்த லீலாவிற்கு,

               தங்கள் இரசிகன் அழகேசன் எழுதுவது நலம்.  நாடுவதும் அதுவே!
‘கரும்புவில்இதழில் இந்த வாரத்தில் வெளியான தங்களின் கவிதையில் நான் மிகவும் இரசித்துப் படித்த வரிகள்,

‘நிலாவே!
 நீ என்ன தோசைகல்லா?
ஒவ்வொரு ராத்திரியும்                 
என்னைச் சுடுகிறாயே!
நீயும்...
என்னைச் சுட்டுக் கொல்லாதே!

 நிலவும் தனிமையில்...
உலவும் வெறுமையில்...
வஞ்சச் சுமைதனை
நெஞ்சம் தாங்குமோ?  

               தங்கள் கவிதைக்கு அப்படியொரு காந்தசக்தி இருக்கிறது...! படிக்கின்றபொழுது அதோடு ஒட்டிக்கொள்கிறேன் என்று சொல்வதா? அல்லது என்னைக் கவர்ந்து கொள்கிறது என்று சொல்வதா? என்றே எனக்குத் தெரியவில்லை! 

              கவிதைக்குள் சோகம் இழையோடுகிறதே! சோகத்தைப் பங்கிடுவதும் சுகம்தானே! ‘நீயும் சேர்ந்து என்று நீங்கள் சுட்டு விரலை நீட்டி யாரைச் சொல்கிறீர்கள்?  வரும் கடிதத்தில் விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

              தங்களின் ஒவ்வொரு கடிதத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.  எனது கடிதத்திற்குத் தவறாமல் பதில் எழுதுவதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                        அன்பு நெஞ்சன்,
                                                                                                           க.அழகேசன்.

- கடிதத்தை  உள்வைத்து நாக்கின் எச்சிலைக் கவருக்குக் கொடுத்து ஒட்டினான்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

பெரியாரைச் செருப்பால் அடித்தாயே!



அவர்தான் பெரியார்...!










செருப்பால் அடித்தாயே...!
உன் தாயிடம் கேள்...
உனக்குத் தந்தை யாரென்று...?
யாரென்று தெரியவில்லையென்றால்
அவர்தான் பெரியார்...!


வாழும்போதே...
வண்டியில் போகும்போதே
அவர்படாத செருப்படியா...?

அடியே!  அடி...!
 உனக்காக உழைத்தவர் அவர்தான்...
உனக்குத் தெரியாது...!
அவர்...
வாழும்போது -நீ
வாழ்ந்திருக்க மாட்டாய்...!
அடியே!  அடி...!


பெண்கள் உருப்படியாக-
தேவதாசிமுறையை 
ஒழிக்கப்  பாடுபட்டவருக்குச் செருப்படியா?
அவர் பட்டபாட்டிற்கு...
இன்னும் பலன் கிடைக்கவில்லை!
அடியே!  அடி...!
                                                                   






மூத்திரப்பையை இடுப்பில் கட்டிக்கொண்டு
மூடச்சாத்திரங்களை
மூடச்செய்யப்
பகுத்தறிவு விளக்கேந்தி
பாரெங்கும்  96 வயதிலும்
பம்பரமாய்ச் சுற்றிச் சுற்றிப்
போராடிய வீரனுக்கு...
வீனர்களின் விபரீதம்...!
 நீர்  பார்த்தீரா....?

இவர்களுக்காகத்தானே...
இடஒதுக்கீடு கேட்டாய்...!
இவர்கள் ஒதுங்க இடம் கொடுத்தவனுக்கு...
இவர்கள் ஒதுங்கும் இடம் பார்த்தீரா...?

நாய்கள்கூட-
தன்காலில் படாமல்
நாகரிகமாகச்  சிறுநீர்கழிக்கும்  பார்த்தீரா...?

தந்தை பெரியார்...
நாய்கள் பதினைந்துக்கும் மேல் வளர்த்தாராம்...!
அந்த நாய்கள்...
அவர்   பயணிக்கும்  வண்டியில் பயணிக்கும்...
அரங்கத்தின் கீழே அமர்ந்திருக்கும்...
அந்த நாய்கள்...
நன்றியுள்ள நாய்கள்...!





ஒரு சமயம் கடலூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு ரிக்‌ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இன்றுபோலக் கார் வைத்துக்கொள்ளாத காலம் அது, இருட்டு அதிகம் இருந்த இடத்திலிருந்து ஒருவன் என் மீது செருப்பினை வீசினான்; அது எனது ரிக்‌ஷா வின் முன் விழுந்தது. அதனை எடுக்கச்சொல்லிக் கொஞ்சம் தூரம் போனேன். பிறகு யோசனை வந்தது. செருப்பு நல்லதாக இருக்கின்றது; ஒற்றையாக இருந்தால் என்ன பிரயோசனம்! திருப்பிவிடு அந்த இடத்திற்கு இன்னொன்றையும் வீசுவான், அதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிக்‌ஷாக்காரனிடம் கூறினேன். அவனும் ரிக்‌ஷாவைத் திருப்பிவிட்டான். குறிப்பிட்ட அந்த இடம் போனதும் இன்னொரு செருப்பையும் வீசினான். மிக்க நன்றி! இரண்டு செருப்பையும் வீசியமைக்கு என்று சொல்லிவிட்டு ஜாகைக்குத் திரும்பினேன்.” (விடுதலை-24.03.1973) 


பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி மட்டும் அல்ல ஒரு போராளி ,ஆம்

 மூத்திரப் பையை இடுப்பில் கட்டிக் கொண்டு 96 வயது வரை 

பகுத்தறிவைப்  பிரச்சாரம் செய்த ஒரு போராளி !



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.


தூக்கிலேற்றிய காதல் !





தூக்கிலேற்றிய  காதல்! 

                                                            - ஒர் உண்மைச் சம்பவம்.13.03.2015 

                                                                           

                                           
          காதலின் சுவை மரணத்தில்தான் தெரியும் போலிருக்கிறது. தினமும் நாளிதழ் படிக்கும் வழக்கம் எனக்கிருக்கிறது. நாளிதழைத் திறந்தாலே கொட்டிக்கிடக்கும் கொலை கொள்ளை தற்கொலை போன்ற செய்திகளின் வீச்சும் வீரியமும் அவை நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நடக்கும்வரை புரிவதில்லை.

          அப்படி என் ஊரில் என் உறவொன்றிற்கு நடந்த ஒரு சம்பவத்தின் பின் தான் நாளிதழ்களில் வரும் செய்தியின் கனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...4




சந்திப்பிழையின்றி எழுதுவோம்...4



பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

                    எச்சம் என்றால் என்னான்னு சொல்லாம... நீங்க பாட்டுக்குப் பெயரெச்சம் என்று சொன்னால் எப்படி?

                    எச்சம் என்றால் குறைவானது,   முழுமை பெறாதது/நிறைவு பெறாதது...  அவ்வளவுதான்.

                    அரைகுறையா புரியிறமாதரி இருக்கு... பெயரெச்சம் என்றால்... அதச் சொல்லவே இல்லையே?   

                    ‘பெயரெச்சம்’-ன்னா நிலைமொழி  எச்சமாக (வினைச்சொல்லாய்) இருக்கும்.  அடுத்து வரும் பெயர்ச் சொல்லைச் சார்ந்து பொருள் முற்றுப் பெற வருவது.

                    (எ.டு) ஓடிய குதிரை. (பெயரெச்சம்)

                                 ஓடிய - எச்சம் (எச்சம் எப்பொழுதும் வினைச்சொல்லாகத்தான் இருக்கும்.  வரும் சொல் பெயரைச் சார்ந்து வந்தால் பெயரெச்சம்;    வினையைச் சார்ந்து வந்தால் வினையெச்சம்... அவ்வளவுதான்.

                                 குதிரை - பெயர்ச்சொல் 




 “பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை; நல்ல
 பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை;  என்னைச் சொல்லிக் குற்றமில்லை:
காலம் செய்த கோலமடி;  கடவுள் செய்த குற்றமடி

“மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை;
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை“


“தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா – இன்று
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா


தடித்த எழுத்துகளாலான தொடர்கள் பெயரெச்சத் தொடர்கள்.  இங்கெல்லாம் வல்லினம் மிகாமை காண்க.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நேயம்! - பரிசு பெற்ற சிறுகதை.



       ‘ஆவி டாக்கீஸ்’ 
 -வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை

குறும்பட - சிறுகதைப் போட்டியில் 

ஆறுதல் பரிசு பெற்ற எனது சிறுகதை.

                                                                         
நேயம்!- 

(மணவை ஜேம்ஸ்)

                விடியாத அந்த வைகறைப் பொழுதில் சூளியாபட்டிக்குள் பால்காரர் மணியை அடித்தபடி நுழைந்தார். பால்காரர் மணியடித்தாலே மணி நான்கு என்று அர்த்தம்.
                                         

              வெயிலையும் பனியையும் வரவேற்கும் ஓலைக்குடிசையில் வசிக்கும் 
கதிரவனின் அப்பா, இராமசாமி அன்றாடங்காய்ச்சி. நீடித்துவந்த இருமலுக்கு கைவைத்தியமாய்ச் செய்த கஷாயங்கள் எடுபடாமல் போய் இறுதிச் சரணாகதியாய் அரசுமருத்துவமனைக்குச் சென்றபொழுதுதான் டி.பி. முற்றிவிட்டது தெரிந்தது.  இருமியபடியே  தன்மகன் கதிரவனை எழுப்பினார், கதிரவன் எழுந்தான்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!



வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!







                            திருக்குவளையில் கலைஞர் மு. கருணாநிதி  ஆகியநீர் கருவாகி,  திருவாரூரில்  உருவாகி, ஈரோட்டில் மெருகாகி,  காஞ்சியில் திருவாகி, வள்ளுவத்தில் தருவாகி, வாழும் வரலாறே! 

                        ‘ தமிழர்களின் சமயம் வள்ளுவர் சமயமே;   அவர்களின் நெறிநூல் திருக்குறளே!’  என்று உரைத்த பெரியாரின் பள்ளியில் பிள்ளையாய், சென்னையிலே வள்ளுவருக்குச் சிலைவைத்த பேரறிஞர்  அண்ணாவின் பல்கலைக்கழகத்தில் தம்பியாய்த் தரணியில் உலாவரும் தமிழ்க்களஞ்சியமே!

                        ஈ.வே.ரா.-வும் அண்ணாவும் உனதிரு கண்கள் என்றால்;   வள்ளுவர் உனக்கு மெய்யாகும் என்பது உனது செயப்படுபொருள்களால் மெய்யாகும்.  

                         இருநூற்றாண்டுகள் சங்கமிக்கும் 1.1.2000-த்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் கல்லிலேயே சிலை வைத்திட்டாய்.   பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து 
நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது.

திங்கள், 6 ஏப்ரல், 2015

நீங்க பார்க்காத குறத்தி...! -சிற்றிலக்கியம்...1.




நீங்க பார்க்காத குறத்தி...!




      ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இருக்காது.  தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பிரபலமான குழுக்கள் இன்னமும் இருந்துகொண்டு ஆடிவருகிறார்கள்.

                       குறவன் குறத்தி ஆட்டம் என்றால் பாட்டுப் பாடிக்கொண்டே, அவர்கள் ஆடுவதைப் பார்ப்பதே ஓர் அழகுதான்.

                      சிற்றிலக்கிய (96) வகைகளில்  குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வதுகுறவஞ்சி என்ற இலக்கிய வகை ஆகும்.
  
          இப்பொழுது இருக்கும் குறவன் குறத்திகள் ஊர்களில் நையாண்டி மேளத்துடன் ஆடிப்பாடி கதகைகளைக் கூறி மக்களை மகிழ்விக்கிறார்கள். 

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சந்திப் பிழையின்றி எழுதுவோம்-5

சந்திப் பிழையின்றி எழுதுவோம்-5




விதி விலக்கு




            விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்...மிகாமலும்...உறழ்ந்தும்... அமையும் இடங்கள் பார்ப்போமா?



                                           வீதி விளக்கு பாத்திருக்கின்றோம்... விதி விலக்கெல்லாம் சொன்னாத்தானே தெரியும் என்பதுநீங்கள் சொல்வது கேட்கிறது.

                                                                                                                                                                                                                                 சிறப்பு விதி   
                                    
எழுவாய்த் தொடர்:  

எழுவாயாக நிற்கும் பெயர், ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது.  ( எ.டு)  பாரதிதாசன் பாடினார்.



எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது என்பது விதி.  ஆனால்
எழுவாய்த் தொடரானாலும் நிலைமாழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழிமுன் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

     தீ சிறியது  =   தீச் சிறியது
     நா +குழறியது = நாக் குழறியது
    
 (குறில் நெடிலுக்குப் பின் மிகும்)
      இரா  +  பகல் இராப் பகல்        

      நிலா +   காண் நிலாக் காண்

                   
      ஆமா(காட்டுப் பசு)  +   துரத்தினான்=  
ஆமாத் துரத்தினான்         
                                         (இரு நெடில்களின் பின் மிகும்)


      திணை சிறியது = திணைச் சிறியது ; திணை சிறியது.
          (குறில் இணைச் சொல் வல்லினம் மிகுந்தும் – மிகாமலும் வரும்)


      சுடு  + சிறிது = சுடுச் சிறிது
      விள + தீது    விளத் தீது (சுடு, விள- சொற்களுக்குப் பின் மிகும்)  

வெள்ளி, 20 மார்ச், 2015

தடம்மாற்றிய பண்டிகை! - (பரிசு பெற்ற சிறுகதை)

பரிசு பெற்ற சிறுகதை

              திருவாளர்கள் ரூபன் &  யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில்    இடம் பெற்ற 

 எனது சிறுகதை...


தடம்மாற்றிய பண்டிகை!

(மணவை ஜேம்ஸ்)

     ல்லிக்கட்டு நடத்த  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.

     முத்தப்பனைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது.  ‘மாடுபிடி வீரன்எனப்பெயரெடுத்தவன்.  இவனின் வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு  வயதில் கரம் பிடித்தாள்.

     கல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.

வியாழன், 12 மார்ச், 2015

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...3



சந்திப்பிழையின்றி எழுதுவோம்...3



சந்திப் பிழை போன்ற சந்திப் பிழை நாங்கள்!

 திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘கருப்பு மலர்கள்கவிதை நூலில் குறிப்பிடுகின்றார்.

       ஒற்றுமிகுத்து ஒலிக்கவேண்டிய இடத்தில் ஒற்று மிகுத்தும், ஒற்றுமிகுத்துக் கூறாமல் இயல்பாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இயல்பாக ஒலித்தும், எழுதியும் வந்தால்தான் தமிழ் இனிமையுடைய மொழியாக இருக்கும்.  இல்லையேல், ஓசை இனிமை குன்றுவதுடன் பொருட்பிழையும் நிகழும்.   
   
     ஒற்றுச் சேர்த்தும் சேர்க்காமலும் எழுதுவதால் பொருள் மாறுபடும் சில இடங்களைப் பார்ப்போம்.
                                                                     
       தயிர் கடை        - தயிரைக் கடைவாயாக
       தயிர்க் கடை       - தயிரை விற்கும் கடை                                                                                                    
       கை குட்ட        - குட்டையான கை
       கைக்குட்டை      - கைக்கு சிறிய துண்டு                                     
       வழிபடுதல்             - வணங்குதல்
       வழிப்படுதல்            - பின்பற்றுதல்  

வல்லினம் மிகா இடங்கள்:

தொகை என்றால் தொக்கி (மறைந்து) வருவது

 என்பதுதான் தெரிந்ததாயிற்றே !




வினைத்தொகையில் எக்காரணம் கொண்டும் வல்லினம் மிகாது.
     நிறுத்துங்க...நிறுத்துங்க... நீங்கபாட்டுக்குச் சொல்லிக்கிட்டுப் போனா எப்படி?  வினைத்தொகைன்னா மொதல்ல என்னான்னு சொல்லனுமுல்ல...?

சனி, 7 மார்ச், 2015

கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!





கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!




          கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் பிறந்த குழந்தை

 

நாளிதழில் படித்ததும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய  செய்தி இதுதான்.

சேலத்தில் இருந்து


சுற்றுலா வந்த 21 வயது கல்லூரி மாணவிக்கு ‘திடீர்’ பிரசவம்


கழிப்பறையில் குழந்தை பிறந்தது


   சேலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இருந்து 300 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 5 பஸ்களில் கடந்த 22-ந்தேதி கேரளாவுக்குச் சுற்றுலா சென்றனர்.  அவர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு கோவை வழியாக சேலம் செல்வதற்காகப் பஸ்களில் வந்து கொண்டிருந்தனர்.  நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் வந்த பஸ் தமிழக – கேரள எல்லையில் உள்ள கந்தேகவுண்டன் சாவடியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

     அப்போது அந்த பஸ்சில் வந்த 21 வயது மாணவி ஒருவருக்குத் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது.  இதனால் அவர் வேதனையில் அலறித்துடித்தார்.  அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே பஸ் வந்து கொண்டிருந்த்தால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  ஆனால் அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமானதால் சக மாணவிகளும், ஆசிரியைகளும் செய்வதறியாது திகைத்தனர்.

     இதையடுத்து பஸ்சை க.க.சாவடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தினார்கள்.  அங்குள்ள கழிவறைக்கு செல்லுமாறு அந்த மாணவியிடம் ஆசிரியைகள் கூறினார்கள்.  உடனே அந்த மாணவி கழிவறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.  சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டது.  இதைக் கேட்டதும் சக மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     பின்னர் ஆசிரியைகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் உதவியுடன், கழிவறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.  கழிவறைக்குள் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.  அவர் அருகில் ஒரு பெண் குழந்தையும் கிடந்தது.  இதைப் பாத்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்சில் அந்த மாணவியையும், குழந்தையையும் மீட்டனர்.  ஆனால் அந்த பெண் குழந்தை இறந்தே பிறந்தது தெரிய வந்தது.  மாணவி மயங்கிய நிலையில் இருந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.  இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிதோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.


     இந்த சம்பவத்தால் சுற்றுலா வந்த மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.  சுற்றுலா வந்த இடத்தில் பிரசவமா? என்று அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  இதுகுறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

 

     மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியாமல் அவரை எப்படி சுற்றுலாவுக்கு அழைத்து வந்தீர்கள் என்று சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அதற்கு அவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பது எங்கள் யாருக்கும் தெரியாது.  அப்படி தெரிந்திருந்தால் அவரை சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருக்க மாட்டோம்.  திருமணமாகாத, அதுவும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிந்திருந்தால் நாங்கள் அந்த மாணவியின் பெற்றோரிடமே தெவித்திருப்போமே என்று கூறினார்கள்.  இது தொடர்பாகப் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

     இதைத்தொடர்ந்து விசாரணை பேரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.  போலீசார் இது பற்றி அந்த மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.  இதற்கிடையில் மயக்கம் தெளிந்த மாணவியிடம் நேற்று மதியம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அந்த மாணவி யாரையாவது காதலித்தாரா?  கர்ப்பத்துக்கு யார் காரணம்?  என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...