சனி, 23 ஜனவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! 1



பிழையின்றித் தமிழில் எழுதலாம்!

                                                                                


நாம் எழுதுகின்ற சொற்றொடர்களில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி  எழுத வேண்டுமல்லவா...?  வாருங்கள்... முயற்சி செய்து பார்ப்போம்.  முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்று உண்டோ?

பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்
பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
                                


1. என் முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(முதற்கண் நன்றி என்றால் இரண்டாம் கண் நன்றி.  மூன்றாம் கண் நன்றி என்று என்று உள்ளதாக அமைந்துவிடும்.)

   என் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
          


2. செய்திகள் வாசிப்பது சித்ரா.(இது தவறு)

   செய்திகள் வாசிப்பவர் சித்ரா.- (சரியானது)



                       



3. இந்த நூலை இயற்றியது பேராசிரியர் சாலமன் பாப்பையா.

   இந்த நூலை இயற்றியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

‘இயற்றியது என்பது அஃறிணைச் சொல்.  அதனால் இயற்றியவர் என்று இருப்பதே சரியானது.



4. அவர் பெரிய செல்வந்தர்

   அவர் பெரிய செல்வர்.

                                                                



5. அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆங்கில மொழியின் தாக்கத்தால் அமைந்த பிழை வழக்கு.)

   அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

                                                                    



6. அமைச்சர் தனது தொகுதிக்குச் சென்றார்.

(அமைச்சர் என்பது பன்மைக்குரிய சொல்.  தனது என்பது ஒருமைக்குரிய சொல்.)

   அமைச்சர் தமது தொகுதிக்குச் சென்றார்.

                                                               



7. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒழுங்கீனங்கள் ஏற்படாது.

(ஒழுங்கீனங்கள் என்னும் எழுவாய் ஒரு பன்மைச் சொல் அதற்குப் பயனிலையும் பன்மையில்தான் அமைய வேண்டும்.  ஏற்படாது என்பது ஒருமைக்குரிய பயனிலை. 

   இத்திட்டத்தை நிறைவேற்றுதில் ஒழுங்கீனங்கள் ஏற்படா.

                                 



8. ஊட்டியை மலையரசி என்று அழைக்கிறார்கள்.

   ஊட்டியை மலையரசி என்று வழங்குகிறார்கள். / குறிப்பிடுகிறார்கள்.
                                                                                   



9. பிரதி ஞாயிறுதோறும் விடுமுறை.

பிரதி (வடசொல்) என்றாலும் தோறும் என்றாலும் ஒரே பொருள்தான்.

   ஞாயிறு தோறும் விடுமுறை /
   பிரதி ஞாயிறு விடுமுறை.


                                                                       


10. தசரதனது மகன் இராமன்.


தசரதன் +   அது என்பதில் அது என்பது அஃறிணைக்குரியது.  தசரதனது மகன் என்று எழுவது பிழையாகும்.
நான்காம் வேற்றுமையில் கூற வேண்டியதை ஆறாம் வேற்றுமையில் கூற முயல்வதால் தசரதனது மகன் என்னும் தவறு உண்டாகிறது.
சிலர் இந்த ஆறாம் வேற்றுமையை வைத்துக் கொண்டு அஃறிணை உருபை மட்டும் மாற்றி ‘தசரதனுடைய மகன் இராமன்என்று எழுதுகிறார்கள்.  ‘உடைய’ என்பது ஆறாம் வேற்றுமைக்குச் சொல்லுருபு.  இக்காலத்தில் இத்தொடரைப் பிழையற்றதாய் ஏற்றுக் கொள்கிறார்கள்.  வேற்றுமை உருபைத் தராமல் ‘இன்என்னும் சாரியையினை மட்டும் இணைத்து ‘தசரதனின் மகன் இராமன்’ என்பதையும் தற்காலத்தில் ஏற்கின்றனர்.

         தசரதனுக்கு மகன் இராமன்.



நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.



                                                                தொடரும்...

-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.







                        


செவ்வாய், 19 ஜனவரி, 2016

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மறைந்தாரே!

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்...



நாட்டார் இசை, நாடகத் துறை, ஆய்வுத் துறை என்று பல தளங்களில் இயங்கியவர் கே.ஏ.குணசேகரன்

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமான செய்தியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. 1955-ல் சிவகங்கை அருகே மாறந்தை கிராமத்தில் பிறந்தவர் அவர். 1970-களின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்தார். 1978-ல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜத்தின் பயிற்சியில் நாடகப் பயிற்சி பெற்றார்.


நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் (1955-2016) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை அன்று (17-01-2016) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.  கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு ரேவதி என்ற மனைவியும், குணவதி என்ற மகளும் அகமன் என்ற மகனும் உள்ளனர். 

எண்பதுகளில்  கே.ஏ.குணசேகரனின் இசைக்குழு மணப்பாறை மாரியம்மன் கோயிலில் பாடல்களைப் பாடி பறையடித்து ஆடியது இன்னும் கண்முன் அழியாத கோலங்களாகக் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது.  பல தடவை எங்கள் ஊருக்கு வந்து ஆடிப்பாடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி சென்றிருக்கிறார்.
அன்னாரின் நாட்டுப்புற இசைக்குழுவினர்  பாடிய பாடல்களில் என் நெஞ்சைவிட்டு  நீங்காத பாடல் இது...
   “‘பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே...பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி பேசுதே...”
திருச்சி, ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நான் எழுதி இயக்கிய நாடகத்தில்  இந்தப் பாட்டைப் போட வேண்டும் என்பதற்காகவே ஒரு குறு நாடகம் தயாரித்து  பாவாடை சட்டையை ஒரு பையனுக்குப் போட்டு மாணவியாக மாற்றி சிறப்பாக ஒரு நாடகத்தைப் போட்டேன்.

திருவாளர் கே.ஏ.குணசேகரனின்  மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காணொளி காண ‘கிளிக்’ செய்க...

                                                   
                                           

_____________________________________________________________________________________________


கலகத்தின் கலைமுகம்.


1980-களில் தமிழில் நவீன நாடக எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் விளைவாக, தமிழ்நாட்டில் செயல்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் வெகுஜனத் தளத்தில் நாடகங்களையும் அரசியல் கருத்து பரப்புரைப் பாடல்களையும் நிகழ்த்தத் தொடங்கினர். இந்தக் காலத்தில் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் பல முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து மேடைகளில் நாட்டார் இசை மரபு சார்ந்த அரசியல் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அன்றைக்கு, பிரபலமாக அறியப்பட்ட நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயியைத் தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

எழுச்சி மிக்க குரல்

கே.ஏ.குணசேகரன் பாடிய வாகான ஆலமரம், முக்கா முழம் நெல்லுப் பயிரு, ஒத்த மாடு செத்துப்போச்சு, ஆக்காட்டிஆக்காட்டி, பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதேஆகிய பிற பாடல்கள் கேட்போரை எழுச்சிகொள்ளச் செய்தவை. தலித் சிறுவன் ஒருவன், நிலப் பண்ணையார் கிணறு ஒன்றில் குளித்ததற்காக மின்சாரம் பாய்ச்சிக் கொலைசெய்யப்பட்டான். அந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு மனுசங்கடாநாங்க மனுசங்கடாஎன்ற பாடலை எழுதினார் கவிஞர் இன்குலாப். தனது எழுச்சிமிக்க குரலில் குணசேகரன் இந்தப் பாடலை மேடைகளில் பாடியபோது, தமிழகத்தில் தலித் இயக்க எழுச்சிக்கான பாடலாக அது மாறிப்போனது.

நாடகத் துறை அனுபவம், நாட்டார் இசை குறித்த முனைவர் பட்ட ஆய்வு, நாட்டார் பாடல்களை மேடைகளில் பாடுவது எனப் பல்பரிமாணங்களைக் கொண்ட பேராசிரியர் குணசேகரன், தமிழக நாட்டார் மரபு சார்ந்த கலை வடிவங்களுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் என்று சொல்ல முடியும். பல்வேறு இயக்கங்களுக்காக இவர் நடத்திய நாட்டார் இசைப் பயிற்சி முகாம்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

பிற்காலங்களில் தன்னானே என்ற இசைக் குழுவை அவர் உருவாக்கினார். இக்குழுவில், நாட்டுப்புற இசைக் கருவிகள் குறிப்பாக தவில், பறை, ரெட்டை மேளம் போன்றவற்றைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் பிறந்து வளர்ந்த ஊரான சிவகங்கைப் பகுதியைச் சார்ந்த கோட்டைச்சாமி, அழகிரிசாமி வாத்தியார் ஆகிய நாட்டுப்புறக் கலைஞர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டார். கோட்டைச்சாமியின் குரல் மிக வளமானது. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தியாவின் பெருநகரங்களிலும் இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய இடங்களிலும் தனது குழுவோடு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

பறை இசைக் கருவியை அடிப்படையாகக்கொண்ட தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரெங்கராஜன் பறை இசைக் குழுவும் இவரது குழுவோடு சேர்ந்து பல நேரங்களில் செயல்பட்டது. அந்தப் பின்புலத்தில்தான் சின்னப்பொண்ணு எனும் தமிழகம் அறிந்த நாட்டுப்புறப் பாடகரும் உருவானார். தமிழக நாட்டார் இசை வரலாற்று மரபு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் நிகழ்த்துதல் ஆகியவற்றில் குணசேகரன் அரிய சாதனைகளை நிகழ்த்தியவர்.

தலித் எழுச்சியில் பங்கு

1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாட்டில் உருவான தலித் இயக்கப் பேரலையில் குணசேகரனுக்குத் தனியிடம் உண்டு. தலித் எனும் தன்னிலைசார்ந்து பல்வேறு நாடகப் பிரதிகளை இவர் எழுதினார். பலியாடுகள்’, ‘மாற்றம்’, ‘மழி’, ‘தொடு’, ‘கந்தன் வள்ளிஆகிய பல நாடகங்கள் இவ்வகையில் அமைந்தவை. முக்கியமான தலித் தன்வரலாற்று நூல் என்று கருதப்படும் வடுஇவரது மிக முக்கியமான பதிவு. தலித் அரங்கியல் குறித்து இவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழகப் பழங்குடி மக்கள் மையம் என்ற துறை நீலகிரியில் செயல்பட்டது. அத்துறையில் பணியாற்றினார். அந்த அடிப்படையில் தமிழகப் பழங்குடி மக்கள்என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். பின்னர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார். இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவின் வேறு மாநிலங்களில் இருந்தும் பல மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்றனர். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட அத்துறை, பின்னர் குணசேகரன் தலைமையில் செயல்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி என்று அழைக்கப்படும் அந்தத் துறைக்குத் தலைவராக இருந்ததோடு மட்டுமன்றி புதுச்சேரி பல்கலைக்கழகக் கலைப்புலத் தலைவராகவும் இருந்தார்.

இடைப்பட்ட காலத்தில் மூன்று ஆண்டுகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராகவும் செயல்பட்டார் குணசேகரன். அப்போது பல துறைகளைச் சார்ந்தவர்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். குணசேகரனின் நூல்களில் முக்கியமானவை இசை நாடக மரபு’, ‘நாட்டுப்புற மண்ணும் மக்களும்’, ‘நாட்டுப்புற இசைக் கலை’, ‘பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்’, ‘தலித் அரங்கியல்ஆகியவை. இவரது பலியாடுகள்நாடகம் தமிழக தலித் வரலாற்றில் தனியிடத்துக்கு உரியது.

உலகத் தமிழாராய்ச்சி இயக்குநராக இருந்தபோது, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். திரைப்படக் கலைஞர் தங்கர்பச்சானோடு இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நாசர் இயக்கிய தேவதைபடத்திலும் ஞானராஜசேகரன் இயக்கிய பாரதிதிரைப்படத்திலும் இவருடைய பங்கு குறிப்பிடத் தக்கது.

1975-2015 காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் இயங்கிய பல்வேறு போக்குகளில் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டவராக வாழ்ந்தவர் குணசேகரன். தான் ஆய்வுசெய்த துறையை வெகுசனப் பரப்பில் கொண்டுசென்ற பெருமையும் இவருக்கு உண்டு. நாட்டார் இசை மரபு சார்ந்த மேடைப் பாடல் நிகழ்வுகளும் ஒலிப்பேழை உருவாக்கமும் இவரின் தனித்த ஆளுமைகள் என்று சொல்ல முடியும்.

மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஆளுமை, தன் சமூகம் சார்ந்த பண்பாட்டுப் பரிமாணங்களைப் பொதுவெளி, ஆய்வுவெளி, தனது சொந்த ஆளுமை எனப் பல நிலைகளில் வெளிப்படுத்தி வாழ்ந்த வரலாறே குணசேகரனுடையது. தமிழ்ச் சமூகம் எப்போதும் அவரைக் கொண்டாடும்!

- வீ. அரசு, தமிழ்ப் பேராசிரியர் மற்றும் தமிழ் அச்சுப் பண்பாட்டு ஆய்வாளர்.

நன்றி:  தி இந்து 19.01.2016.

                                 
                                          



காணொளி காண ‘கிளிக்’ செய்க...






-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

சனி, 16 ஜனவரி, 2016

தடம்மாற்றிய பண்டிகை! - சிறுகதை.


தடம்மாற்றிய பண்டிகை!

(மணவை ஜேம்ஸ்)

     ல்லிக்கட்டு நடத்த  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.

     முத்தப்பனைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது.  ‘மாடுபிடி வீரன்’ எனப்பெயரெடுத்தவன்.  இவனின் வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு  வயதில் கரம் பிடித்தாள்.

     கல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.

     ழவர்திருநாளாம் இன்று தன்வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்குப் பொங்கல் வைத்துப் படைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.  மகாலட்சுமிக்கு முப்பது வயது;  மாநிறத்தில் ஒல்லியாக அழகான உடம்பு!   முத்தப்பனுக்கோ அவளைவிட மூன்று வயதுகூட!  கருப்பு என்றாலும் ஆணழகனென்றே சொல்லலாம்.
                                         


     பெரியவள்‘ஐஸ்வர்யா ஆறாம்வகுப்பும்;  நடுப்பெண்‘பிரியங்கா அய்ந்தாம்வகுப்பும் சின்னவள்‘அஞ்சலி நான்காம்வகுப்பும் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கிறார்கள்.

“மஞ்சுவிரட்டுக்குப் போகணுமுல்ல!“  முத்தப்பன் வேகப்படுத்தினான்.

“மாடு கன்னுபோடுற நெலமையில் இருக்கு...அத நா பாத்துக்கிறேன்...புள்ளகளக் கூட்டிட்டுப்போயி... காலரியில் நின்னு ஜல்லிக்கட்டப் பாருங்க...”  தயங்கித் தயங்கித்தான் சொன்னாள்.


“அடிப்போடி பொசகெட்ட கழுத... நல்லா இருக்கே கத...இந்தா பாரு மாடுபிடிக்கிறதுக்கு டோக்கனெல்லாம் வாங்கி வச்சிருக்கேன்.   நீ வரலன்னா டி.வி.யில நேராக் காட்டுவாங்க... பாத்துக்கிட்டு இரு... புள்ளகளக் கூட்டிட்டுப்போயி பத்தரமா ஒக்காரவைக்கிறேன்... கிளம்புங்கம்மா...பிள்ளைகளை அழைத்துக்கொண்டு  புறப்பட்டான்.

மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாகத்தான் இருந்தது. பிள்ளைகளைக் காலரியில் அமரவைத்துவிட்டு, “நா வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு நகரக்கூடாது...!“ கண்டிசன் போட்டுவிட்டுச் சென்றான்.


வந்திருந்த ஆயிரம் காளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தனர். 

முத்தப்பனும் பரிசோதனை முடித்து... சீருடையைப் போட்டுக்கொண்டு வாடிவாசலுக்குமுன் வந்து நின்றான். 

      “ம்ம ஊரு ஜல்லிக்கட்டு ஆரம்பமாவுது... மொதல்ல நம்ம கோயில்மாடு வருது... அத யாரும் பிடிக்கக்கூடாது...”  அறிவிப்புச் செய்யப்பட்டு மாடு அவிழ்க்கப்பட்டது. 
                                      
மாடுகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.  யாருக்கும் பிடிகொடுக்காமல் நிறையமாடுகள் ஓடிக்கொண்டே இருந்தன.  பிடிபட்ட மாடுகள் மிகச்சிலவேமாட்டுக்காரர்களே பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றனர்.

“வர்ற மாட்டைப் பிடிக்கிறவனுக்கு பீரோ...கட்டில் பரிசு
தாவி வந்த செவலைமாட்டை, முத்தப்பன் வலதுகையால் லாவகமாகத் திமிலில் கைபோட்டு இடது கையால் கொம்பைப்பிடித்து மாட்டைக்கட்டி... எல்லைக்கோடுவரை சென்றான்.

பரிசை வாங்கிப் பத்திரப்படுத்துவதற்குள் பலமாடுகள் அவிழ்த்துவிடப் பட்டுக்கொண்டே இருந்தன.

 “ய்... அடுத்த மாடு பெரிய மாடுப்பா...பத்துபேரக் கொல பண்ணுனமாடு... ஜாக்கிரத...... ஒரு பவுன் மோதிரம்... மாட்டுக்கரார் ஆயிரம் ரூவா...பிடிங்கப்பா... ஆம்பள சிங்கம்ன்னா பிடிங்கப்பா...“

பிடிகாரரெல்லாம் பயந்து விலக வாடிவாசலருகே முத்தப்பனோடு மூன்று பேர்மட்டுமே அந்த மாட்டைப் பிடிக்க நின்றிருந்தனர்.

“மாடு வாடிவாசலவிட்டு வெளியே வர மாட்டேங்கிதுப்பா... தரையக்குத்துது... ரொம்பக் கோபமாக இருக்கு... ஜாக்கிரத......” அறிவிப்பு செய்துகொண்டிருக்கும் பொழுதே தாவிக்குதித்து வெளியில் வந்த கருப்புக்காளையின் திமிலைப்பிடிக்க முத்தப்பன் தாவினான்...பிடி சரியாகக் கிடைக்காமல் அவன் கைநழுவ...  மாட்டின் இரண்டுகொம்புகளை வேகமாகப் பற்றினான்... தலையை வேகமாக அந்தமாடு ஆட்ட ஆறடிக்குமேல சென்று கீழே வந்தவனைத் தன்கொம்பிலேயே நடுவயிற்றில் தாங்கி;   முத்தப்பனின் குடல்சரிய... அவனைச் சுமந்துகொண்டே  அந்தமாடு எல்லைக்கோட்டையும் தாண்டிச்சென்று... அவனைத்தரையில் வீசியது;   தரையில்விழுந்தவனின் மார்பில் மீண்டும் குத்தியது.  ‘முடிந்தால் என்னைத் தொட்டுப்பாருங்கள்’  என்பதைப்போல அந்தமாடு ஓடாமல் நடந்தே சென்றது. 


தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மகாலட்சுமி ‘அய்யய்யோ...‘வெனக் கத்தியபடி மயங்கி விழுந்தாள். 

பெரியவள்‘ஐஸ்வர்யா செய்வதறியாது அழுதுகொண்டே தன்தங்கைகளை அழைத்தாள்.  நடுப்பெண்‘பிரியங்கா’ அக்காவைக் இறுகக்கட்டிப்பிடித்துச் சத்தம்போட்டு அழஆரம்பித்தாள்.

“நா வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு

நகரக்கூடாதுன்னு சொன்னாருல்ல... அப்பா... வந்து கூட்டிட்டுப்போவார்“ சின்னவள்‘அஞ்சலிஅசையாமல் நின்றாள். 

மருத்துவர்கள் முத்தப்பனின் உடலைப் பரிசோதித்துப் பார்த்து...
கைவிரித்தனர்! 
                                       

     ல்லிக்கட்டு நடந்துகொண்டிருந்தது...!
                                                                     


                                                                        


(திருவாளர்கள் ரூபன் &  யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய  சிறுகதைப் போட்டி(2015)யில்  சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில்    இடம் பெற்ற எனது சிறுகதை... மீள்பதிவு)


-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

Related Posts Plugin for WordPress, Blogger...