செவ்வாய், 28 மார்ச், 2017

எனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் ! (1)


என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ 

பார்க்கிறாய் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி, பொத்தமேட்டுப்பட்டியில் நான் எட்டாவது படித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது... எங்கள் பள்ளிக்கருகில்  ‘சக்தி டூரிங் டாக்கிஸ் இருந்தது;. அதன் அருகில் மான்மூண்டி ஆற்றுப்பாலம் வெள்ளைக்காரன் கட்டியது இன்று பயனற்றுக் கிடக்கிறது. 
                                                          
அந்த டூரிங் டாக்கிஸின் உரிமையாளர் எங்கள் ஊரில் முத்துக்காளை என்று அழைக்கப்படும் தாத்தாதான்.  பட்டு வேட்டி பட்டு முழுக்கைச் சட்டையுடன் சின்னதாக மடித்துள்ள சரிகைத் துண்டு, கட்டைவிரல் தவிர்த்து இரண்டு கைகளின் அனைத்து விரல்களிலும் வைரக்கல் பதித்த தங்க மோதிரம் டாலடிக்க வலம் வருவார்.  (அவர் இப்பொழுது மறைந்துவிட்டார்)  தோட்டம் காட்டிற்குச் சென்றாலும் சைக்கிளை ஓட்டிக்கொண்டுதான் செல்வார்... சென்று கோவணம் கட்டிக்கொண்டு தோட்டத்தில் வேலை செய்வார்.  அவர் மனைவிக்கு மட்டும் வாழ்க்கை கொடுக்காமல் பல பெண்களையும் சேர்த்து வாழ்வு கொடுத்தார்.

என்னோடு படிக்கும் மாணவர்கள் பலர் அன்றைக்குச் சினிமாவுக்குத் தரை டிக்கட் 25 பைசா கொடுக்க இயலாமல் தியேட்டருக்கு வரும் சைக்கிளை உள்ளே தள்ளிவைக்கும் வேலையைத் தினமும் பஸ்ட் ஷோவிற்காகப் பார்த்து டைட்டில் போட்டுப் படம் கொஞ்சம் ஓடியவுடன் இலவலசமாகப் படம் பார்த்து வந்ததை அடுத்த நாள் பள்ளிக்கு வந்து கதைகதையாகச் சொல்வது வழக்கமாக இருக்கும்.


எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் தனியாக என்னை அனுப்ப மாட்டார்கள். மனதுக்குள்ளே அந்த மாணவர்களை நினைத்து எனக்குப் பொறாமையாகவும் என்னை நினைத்து வருத்தமாகவும் இருக்கும்.

சினிமாவிற்குச் செல்ல அனுமதி கேட்டால் எப்பொழுதாவது அனுமதி கிடைக்கும்... அன்றைக்கும் அதுபோல்தான் படம் நல்ல படம்... போய்ப் பார்த்துவிட்டு வர அனுமதி கிடைத்தது.  சினிமாவிற்குச் செல்வதென்றால் மனம்தான் துள்ளிக் குதிக்குமே!

அந்தத் தியேட்டரில் வழக்கமாக ஒரு சாமி பாட்டுப் போட்டால், படம் போடப்போகிறார்கள் என்று அர்த்தம்.  அந்தப் பாடல் போடுவதற்கு முன்னால் தியேட்டருக்குப் போய்விட வேண்டும் என்ற முனைப்பில் போய்... 25 பைசாவிற்கு டிக்கட் எடுத்து உள்ளே சென்று மணல் தரையில் மணலை மலைபோல(?) குவித்து வைத்து அதில் உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் என்ன படம் என்று தெரியாமலே படம் பார்த்தேன்.
முதலில் அந்தத் திரைப்படத்தைப் பற்றித் திரையில் தோன்றியவர் அடுக்கு மொழியில் அன்னைத் தமிழில் பேசியதைக் கண்டு அசந்து போனேன். 

அதை நீங்களும் பார்க்க ‘கிளிக்’ செய்க


‘பூம்புகார்திரைப்படம் பார்த்து விட்டு வந்தால் வீட்டில் தூக்கம் வரவில்லை.  அடுத்தநாள் நானும் ஒரு குயர் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு அதுபோல் எழுத வேண்டும் என்று எண்ணிச் சிறு பிள்ளை கிறுக்கலாகக் கிறுக்கி... எழுத ஆரம்பித்தேன்.  அப்பொழுது அவர் யாரென்றே எனக்குத் தெரியாது... கலைஞர் என்றால் யாரென்றே தெரியாது! அவர்தான் கலைஞர் மு. கருணாநிதி என்று பிறகு தெரிந்து கொண்டேன்.

‘சிலப்பதிகாரத்தில்  கண்ணகியின் வழக்கில்   தம் பகுத்தறிவுச் சிந்தனையால்  சிறிது மாற்றிக் காட்டியவர் கலைஞர் மு. கருணாநதி.


இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள். 

- பா.எண்: 5


பார்க்க ‘கிளிக்’ செய்க
                                                         
                                                                               
                                        -அனுபவம் பழமை தொடரும்...                 
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.                      

9 கருத்துகள்:

 1. பரவாயில்லை, நல்ல படமாகத்தான் பார்த்திருக்கிறீர்கள்! ‘பூம்புகாரி’ல், சிலம்பைத் திருடியவன் அமைச்சன் என்று காட்டுவார் கலைஞர். அந்தக் காட்சி வந்ததும் எல்லாரும் கை தட்டுவார்கள். (சிலப்பதிகாரத்தின்படி, திருடியவன் பொற்கொல்லன்.) அதாவது காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் திருடர்கள் என்று அர்த்தம். (அப்போது கலைஞர் ஆட்சிக்கு வரவில்லை.). பின்னாளில் அவர் ஆட்சிக்கு வந்தபோது, திரைப்படத்தில், தான் ஏற்கெனவே சொன்னதை, உண்மையாக்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமே! 'ஊழலை அறிவியல்பூர்வமாகச் செய்தவர்' என்று சர்க்காரியா கமிஷன் பட்டம் கொடுத்தது. ..பிற்பாடு 2-ஜி....இன்றளவும் தீராத பழியால் வாடுகிறார். அவர்.. (2) ஆனால் திரைப்பட நுட்பங்களில் கலைஞரை மிஞ்சி யாரும் திமுக-வில் இருந்ததில்லை. அறிஞர் அண்ணாவே அவருக்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப்போனவர் தானே! – இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா.

   நீக்கு
 2. #மணல் தரையில் மணலை மலைபோல#
  பின்னால் உட்கார்ந்து இருப்பவர் மணல் மலையை குடைந்து,நம்மை கீழே கொண்டு வந்திருப்பார் !அந்த அனுபவத்தை மறக்க முடியுமா :)

  பதிலளிநீக்கு
 3. நலமா நண்பரே! எனக்கும் இந்த அனுபவம் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பிற்குரிய பெரும்புலவர் அய்யா,

   நலம். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அருமையான கண்ணோட்டங்கள்
  படம் பார்க்கத் தூண்டுகிறது...

  ஐயா!
  "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
  அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
  முழு விரிப்புமறிய
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  பதிலளிநீக்கு
 5. அருமையான அனுபவங்கள் ஐயா. பள்ளிக்காலத்தில் கும்பகோணம் அருகே அண்ணாலக்ரகாரம் டூரிங் டாக்கீசில் படம் பார்த்த நினைவு வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...