ஞாயிறு, 7 டிசம்பர், 2014

எனது மேடை நாடகம் ‘புதிய உடன்படிக்கை’


எனது மேடை நாடகம் புதிய உடன்படிக்கை

                                                                                                                 

                                                                               

  12.10.1991 அன்று எனது ‘புதிய உடன்படிக்கை’ நாடகம் திருச்சி இரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


                    அன்றைக்கு மேனிலைப்பள்ளியில் தொழில்கல்வி ஆசிரியராக (இரு பகுதி நேரம்) பணியாற்றினேன்.  அப்பொழுது எனக்கு அரசாங்கச் சம்பளம் ரூபாய் 700 .   அன்றைக்குப் போட்டியில் கலந்துகொள்ள ரூபாய் 300 நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.  அன்றைய தினம் அந்தக் கட்டணத்தைக் கட்ட என்னால் இயலவில்லை.  அன்றைய தினம் தாளாளராக இருந்த அருட்தந்தை A.சூசைராஜ்  அடிகளார் அவர்கள்தான் (எனக்கு பணி வழங்கியவர்...தற்பொழுது உயிருடன் இல்லை) நுழைவுக் கட்டணம் செலுத்தப் பணம் கொடுத்து உதவி செய்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

                     அந்த ஆண்டு ரூபாய் 100 சம்பளம் அரசாங்கம் உயர்த்திக் கொடுத்தது.  ஓர் ஆண்டு நிலுவைத் தொகையாக ரூபாய் 1000 கிடைத்தது.  அதை அப்படியே எடுத்துக்கொண்டு நாடகம் நடந்த அரங்கிற்குச் சென்றேன்.  ஒப்பனை, இசை, மற்றும்  இதர செலவுகளுக்கு கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி  அன்றைக்கு வீட்டிற்குச் செல்வதற்குப் பேருந்துக்குக்கூட பணம் இல்லாமல் நண்பர்கள் டிக்கட் எடுக்க எனது ஊருக்கு,  அன்றைய இரவு வந்து சேர்ந்தேன்.

       அப்பொழுது எனக்கு வயது 27. என்னுடன் நடித்தவர்கள் அணைவருமே என்னை விட வயதில் மூத்தவர்கள்.  அவர்களுடைய ஒத்துழைப்பையும், திறமையையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.  

         எங்கள் நாடக் குழுவிற்கு ‘புனிதாலயாஎன்று பெயர் வைத்திருந்தோம். அந்த நாடகம்  பார்க்க  நுழைவுக்கட்டணம் 5 ரூபாய்... F.G.N. அரங்கமே மக்களால் நிறைந்திருந்தது....!  குறைந்த கட்டணத்தில்   ரூபாய் 500   கொடுத்து வீடியோ எடுத்தேன்.

         மாலை மலரில்’ வந்த நாடக விமர்சனம் இதோ உங்கள் பார்வைக்கு...
                


                                                       
                
                        
                                                         
                        
       
            
                     
               திருச்சி ஆர்.ஆர். சபாவில் இடம் பெற்ற நாடகப் போட்டியில் 8-வது கடைசி நாடகமான புதிய உடன்படிக்கையை வழங்கியவர்கள் புனிதாலயா நாடகக் குழுவினர்.

        இந்த வருடம் நடைபெற்ற நாடகப் போட்டியில் இது முதல் பரிசை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது.

கதை

             செல்வந்தர் ஆரோக்கியசாமியின் ஒரே மகன் ஜான்சன்.  பள்ளிக்கூட ஆசிரியை ஜாக்குலினை கைப்பிடிக்கிறான்.  ஜான்சனின் குடிப்பழக்கம் காரணமாக ஜான்சன்-ஜாக்குலின் தாம்பத்திய உறவு தடைபடுகிறது.

             “குடி நின்றால்தான் அந்தரங்க ஆசைகள் அரங்கேற்றம் 
ஆகும்-என்று சொல்லும் மனைவியை ஜான்சன் அடித்து உதைத்து கொலை செய்ய முயற்சி செய்கிறான்.  இதை தடுக்கும் தந்தையும் மகனும் மோதிக் கொண்டு பிரிகிறார்கள்.  ஜாக்குலின், தாய் வீடு செல்கிறாள்.  ஜான்சன் சீரழிந்த பெண்களின் துணையை நாடுகிறான்.

             ஆர்.சி. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்ததால் விவாகரத்து செய்ய முடியாது என்றாலும் கணவனுடன் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலைக்கு ஜாக்குலின் தள்ளப்பட்டதால், பாதிரியார்களின் நடுவர் மன்றம் விசாரணை நடத்துகிறது.  ஜான்சனை விட்டு அவள் பிரிந்து வேறு திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

             ஜான்சன் மோசமான பெண்கள், மிதமிஞ்சிய குடி ஆகியவை காரணமாக நோயில் விழுகிறான்.  தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கத் துடிக்கிறான்.  தவறை உணர்ந்த கணவனை ஆஸ்பத்திரியில் சந்திக்கிறாள்.  அவனையே மீண்டும் ஆயுட்கால துணையாக ஏற்றுக் கொள்கிறாள்.

மோதல்

              தந்தை மகனாக வந்தவர்கள் ஜார்ஜ் ஸ்டீபன், மனுவேல்ராஜ் ஆகியோர் அருமையான நடிப்பு.  மனைவியிடம் கொடுமையாகவும், விசாரணை குழுவிடம் அப்பாவியாகவும், படுக்கையில் விழுந்தபோது அசல் நோயாளியாகவும் வித்தியாசப்படுத்தி அசத்தியவர் மனுவேல்ராஜ்.
குடிக்கிறது தப்புன்னா...ஏன் பிராந்தி கடையை திறக்கிறார்கள்...?”  -யதார்த்தமான கேள்வி.

              ஆரோக்கியசாமி ஜான்சன் கதையில் மோதினார்கள் என்றால் ஜார்ஜ் ஸ்டீபனுக்கும், மனுவேல்ராஜ்க்கும் உணர்ச்சிமயமான நடிப்பில் ஏக போட்டி.  ஜாக்குலின் தந்தை ஞானசவுந்தர் ஆன செபாஸ்டினுக்கும் இதில் பங்கு உண்டு

               ஜாக்குலின் ராஜேஸ்வரி கேட்கவா வேண்டும்? கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்கள்.  ஜான்சனின் நண்பர்களாக வந்து அட்டகாசம் செய்தவர்கள் லூர்து சகாயராஜ், ஆரோக்கியராஜ், அடிஷனல் பிராங்க், பாதிரியார் தாமஸ் வேடத்தில் ஆரோக்கியசாமியும், நடுவர் குழு பாதிரியார்களாக வந்த ஆச்சர்யம், மரிய ஜான்பிரிட்டோ, ஜெரால்டு    மணவைஜேம்ஸ், ஜெரால்டு ஆகியோரும் நிறைவு செய்திருந்தார்கள்.

சிரிப்பு அலை
          
              டாக்டர் காதில் ஸ்தெலஸ்கோப்-ஐ வைக்காமலேயே நோயாளி ஜான்சனை டாக்டரான அந்தோணிசாமி சோதனை செய்தது... சீரியஸ் ஆன கட்டம் என்றாலும் இந்த சிறிய கவனக்குறைவின் காரணமாக நாடகத்தில் சிரிப்பு காட்சிகள் இல்லாத குறை நீங்கியது.  இதில் வசனம் வெளியே கேட்காதது குறை.   
       
               அர்த்தமுள்ள வசனங்கள், அடுக்கு தொடர் போன்ற பிசிர்’ இல்லாத காட்சி அமைப்பு, தெளிந்த கதை ஆகியவற்றடன் இயக்கத்தை ஏற்ற மணவை ஜேம்ஸ்சின் திறமையை பிரதிபலித்தன.  ஜொலிக்கட்டும்.

முதல் பரிசு

                இசை ஒய்.ஜேம்ஸ் இன்னும் கொஞ்சம் இனிமை சேர்த்திருக்கலாம்.  டாக்டரின் தேவை இல்லாத சிரிப்பும், ஆஸ்பத்திரில் தனிமையில் ஜான்சன் கதை சொல்லுவதும் ஒட்டவில்லை.  நல்ல மனைவி கைபிடித்த கணவனை மன்னிக்கும் மாண்புமிக்கவள் என்ற கருத்தை மையமாக வைத்து சுழன்ற இந்த நாடகத்தின் முடிவு வழக்கமானது.

                உயிரைக் கொடுத்து உழைத்தாலும் அதிஷ்டம் வேண்டும்.  அது இவர்களுக்கு இருக்கிறது. காரணம் முட்டி மோதிய 8 நாடகங்களில் முதல் பரிசு பெற்ற நாடகம் இந்த புதிய உடன்படிக்கைதான்.
                                 
           முதல் பரிசு பெற்ற நாடகம் புதிய உடன்படிக்கை’.
           ‘மீண்டும் தலைப்பு செய்திகள்2 –வது பரிசை பெற்றது.
           சிறந்த கதையாக புதிய உடன்படிக்கை தேர்வு செய்யப்பட்டது.
           சிறந்த இயக்கத்துக்கு மணவை ஜேம்சும்,
           சிறந்த நடிகருக்கான பரிசை மனுவேல் ராஜும்
           பெற்றார்கள்.
                                                                       

                                                                                    வளர்க நாடகக் கலை.

          
 விரைவில் புதிய உடன்படிக்கைநாடகம் You tube-இல் என்னுடைய வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                                      
           நன்றி.

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.  


        

16 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் நண்பரே... தாங்கள் ஒரு நடிகர் என்பதை சொல்லவே இல்லையே.... விரைவில் யூடிப்பில் உடன் படிக்கை காண ஆவலாக இருக்கிறேன் எமது புதிய பதிவில் தாங்களும் நடித்து இருக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன் - கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள நண்பர் கில்லர்ஜி,

    தங்களின் வாழ்த்திற்கு நன்றி. ‘உலகமே நாடக மேடை....அதில் நாமெல்லாம் நடிகர்கள்’ என்று ஓர் அறிஞர் சொன்னதாக ஞாபகம் அய்யா.
    நெஞ்சம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் மகிழ்ச்சி.... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா!

    இயலிசை நாடகம் எம்தமிழ்ச் சீர்கள்!
    செயலுமது கண்டேன் சிறப்பு!

    எத்தனை திறமைகள் உங்களிடத்தில்.. !
    கண்டு விறைத்துப் போனேன் ஐயா!..

    மேலும் சிறக்கத் தமிழன்னையை வேண்டி வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி,

      முத்தமிழின் ஒன்றான முத்தான நாடகத்தை
      எத்திக்கும் தித்திக்க வே!
      தங்களின் வாழ்த்திற்கு நன்றி.

      நீக்கு
  5. அய்யா,
    வணக்கம். தங்களின் நாடகம் வெற்றி பெற்றதை அறிவேன். ஆனாலும் அந்தக் கதையையும் அதன் விமர்சனத்தையும் இப்போதுதான் படிக்கிறேன்.
    நாடகத்தையும் நான் கண்டதில்லை.
    நீங்கள் நாடகம் நடத்திய அன்று உங்கள் பள்ளியில் படித்திருந்தால் சில ஆண்டுகள் கழித்து உங்களிடம் படித்திருப்பேனோ என்னவோ?
    விரைவில் காணொளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்!
    தங்களின் தேக்க நிலை மாற்றிப் புதிய புதிய மாற்றங்களை எழுத்தில் கொண்டு வாருங்கள்!
    நாங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    தங்களின் நல்ல பல ஆலோசனைகள் என்னை மேலும் மேலும் வளர்க்கும் .... என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. ஒன்றும் தெரியாத என்னை இந்த வலையில் சிக்கவைத்ததே தாங்கள் தானே!
    சிக்கலில் வைத்ததாகச் சொல்லவில்லை அய்யா.... என்னால் முடிந்தவரை சிக்கெனப் பிடிக்க முயற்சி செய்கிறேன்... இருந்தாலும் முடியவில்லை... முயல்கிறேன். தாங்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை...!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! முதல் பரிசு அல்லவா பெற்றிருகிறீர்கள். வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  8. அருமையான நாடகம் !! முதல் பரிசு பெற்றதற்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நண்பரே! நல்ல விமர்சனமும் வந்துள்ளது!! காணொளி பதிவேற்றம் செய்ய இயலவில்லையா நண்பரே! முடிந்தால் அதையும் செய்ய முயலுங்களேன். மேடை நாடகம் என்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும் நண்பரே! அது நல்ல கூட்டு முயற்சி வேண்டும். எல்லோரும் காட்சி அமைப்பு புரிந்து நடிக்க வேண்டும், தவறு நடந்தால் படம் போன்று சரி செய்ய முடியாது. இப்படி பல பிரச்சினைகள் இருக்கின்றது அதன் நடுவில் தங்களது இயக்கம் வெற்றி பெற்றிருக்கின்றது என்றால் எத்தனை சிறப்பு!

    மீண்டும் தாங்கள் இயக்கலாமே நண்பரே! நல்ல விசயம்தானே! இயக்குங்கள் பல நல்ல நாடகங்களை. சமூகத்திற்கு நன்மை பயக்குமே!

    மிக்க நன்றி! வாழ்த்துக்கள் தாங்கள் தொடர்ந்து இயக்குவதற்கும்!

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. மேடை நாடகம் பற்றி தங்களின் கருத்து முற்றிலும் சரியானது. மேடை நாடகம் போடுவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றது என்பது உண்மையே.

    தங்களின் ஆலோசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. முதல் பரிசு தொடக்கமாக அமைந்து மேன்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  11. தங்களின் வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...