புதன், 14 ஜனவரி, 2015

மணப்பாறையில் மேடை கட்டி...

                 

         மணவை பொன் மாணிக்கம்  

                  மணப்பாறையில் மேடை கட்டி...

                                 
           
                                                           
                       மணப்பாறை தவிட்டுப்பட்டி கிராமத்தில், பொன்னன்-லட்சுமி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார் மணவை பொன் மாணிக்கம்.  இருப்பதை வைத்து சிறப்பாய் சமைக்கும் அம்மா மீது மாணிக்கத்துக்கு பாசம் அதிகம்.  ‘இளைத்திருக்கும் பிள்ளைக்கு இலையில் சோறு போட்டால், சதை பிடிக்கும் என்று உறவினர் சொல்ல, ஆறேழு வருடங்களாக இலையில் சோறு போட்டு வளர்த்த அன்னையாயிற்றே!

                       தியாகேசர் ஆலை உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதோ கவிதை கைவசமானது.  பெரியார் கல்லூரியில் படித்தபோது புதுக்காலனி கம்பன் கலைக்குழு நண்பர்கள் உதவியுடன் ‘மனிதன் என்ற போர்வையில்’ நாடகத்துக்கு கதை, வசனம் எழுதி, இயக்குனராகவும் பரிமளித்தார்.

                        சொந்த பந்தங்களின் பிள்ளைகளைப்போல மகனும் அரசுப்பணியில் அமரவேண்டும் என்பது அப்பாவின் ஆசையாக இருந்தது.  ‘லட்சுமி மகனா நீ?!  என்று எல்லோரும் வியக்கும்படி என் மகன் அவன் வழியில் முன்னேறுவான்’ என்று தீர்ககதரிசனம் காட்டினார் அம்மா.  கல்லூரிப்படிப்பு முடிந்ததும் தாய்மாமன் தங்கப்பல் பழனி கொடுத்த கம்பராமாயணப் புத்தகத்துடன் சென்னைக்கு வந்தார் மாணிக்கம்.  சென்னை வானொலியில் ஒலிபரப்பான ‘தகுதி’ நாடகங்கள் ஒரு புதிய வட்டத்தை உருவாக்கிக் கொடுத்தன.  பார்த்தசாரதி சபாவில் நடந்த நாடகப் போட்டியில் இவரது ‘கர்ப்பக்கிரகம்’ பரிசைத் தவறவிட்டபோதிலும், சர்சைக்குள்ளாகி, நல்ல நாடகம் என ‘தாய்’ பத்திரிகையில் வலம்புரிஜான்,  வார்த்தைகளால் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அறியப்பட்டது.   ‘தாய்’ பத்திரிகையில் சுதந்திர படைப்பாளி,  ‘ராணி’யில் சிறுகதை எழுத்தாளர் என்று எழுத்துக்கோலம் போட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்துக்கு ‘பாக்யா’வின் வாசல் திறந்தபோது வசந்தம் வீசி, வெளிச்சமான விலாசம் கிடைத்தது.

                            ‘புத்தகமாக வெளிவரத் தகுதியற்ற எதையும் எழுதுவது வீண்’ என்கிற கவிப்பேரரசு வைரமுத்துவின் வார்த்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மாணிக்கம்,  ‘பாக்யா’வில் எழுதியவையெல்லாம் அவரது எழுத்தாசான் கே.பாக்யராஜின் மெய் ஆசியுடன் புத்தகங்களாக வெளிவந்தன.

                             ‘எதை எதையோ ...
                               எதிர்பார்த்து எதிர்பார்த்து
                               இறுதியில்...
                               நலம் விசாரிக்கும் கடிதம் மட்டுமே
                               எதிர்பார்த்து...
                               இறுதி மூச்சுவிட்ட
                               என் தாய் தந்தையர்க்கு....’  
-என்று இவர் எழுதிய சமர்ப்பண வரிகள் பல சினிமாக் கலைகர்களால் பாராட்டப்பட்டன.

                               ‘படித்துப் பார்த்த எனக்கே கண்ணீர் துளிர்க்கிறதென்றால்,  உணர்ந்தெழுதிய உமக்கு எப்படியிருக்கும்?’ என்று உச்சி முகர்ந்திருக்கிறார் வைரமுத்து.

                               எம்.ஜி.ஆரைப்பற்றி இவர் எழுதிய ‘எட்டாவது வள்ளல்’ பத்துப்பதிப்புகளைக் கடந்து பாராட்டுகளை அள்ளியது.  இவரது ‘ஐந்தாம் வேதம்’ சிறுகதைத் தொகுதி, கால் காசு செலவில்லாமல் காதல்காட்சிகளைக் கவந்துகொள்ள சில சினிமா இயக்குனர்களுக்குக் கைகொடுத்தது.

                              சென்னை சாலிகிராமம் சத்யா கார்டனில் இருந்த இயக்குனர் ராஜகுமாரன் அறைக்குச் செல்கிறார் மணவை பொன்.மாணிக்கம்.  அங்கே சிறிய  பூஜையறையில் வைக்கப்படிருந்த சாமி படங்களுடன் ‘எட்டாவது வள்ளல்’ எம்.சி.ஆரும் இடம் பெற்றிருந்தார்.  ‘எங்க அப்பனைப் பற்றி புத்தகம் எழுதின அதே கையால என் படத்துக்கு ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க’என்று சொல்லி மணவைக்கான பாட்டுச்சாலையைத் திறந்துவிட்டிருக்கிறார் ராஜகுமாரன்.  ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தில் சிற்பி இசையில், ‘பாசமுள்ள சூரியனே, தேயாத சந்திரனே...’ என்று இவர் எழுதிய முதல் பாடலை மனோவும் கிருஷ்ணராஜும் பாடியிருந்தார்கள்.

                        ரவிஷங்கர் இயக்கத்தில், சிற்பி இசையில் வெளிவந்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தில் இவர் எழுதி, உன்னிமேனனும் சுஜாதாவும் பாடிய ‘முதல் முதலாய் உன்னைப் பாக்கிறேன் ஒன்று கேட்கிறேன்...’ என்ற பாடல் மெல்லிசையால் வருடியது.
                     
                       ‘இதயமே’ படத்தில் ‘பொன் மேகங்கள்...’ என்று தொடங்கும் இவரது வரிகளை பிரசன்னாவும் அனுராதா ஸ்ரீராமும் சிலாகித்துப் பாடியிருந்தார்கள்.

                        ‘லுக்’ படத்தில் தேவா இசையில், ‘டியூஷன் சொல்லித்தர வா...’ என்கிற பாடலை சிருஷ்ணராஜும் ரேஷ்மாவும் பாடினார்கள்.

                       ‘காதல் எஃப் எம்’, என்னவோ பிடிச்சிருக்கு, ‘வணங்காமுடி’ என மணவையின் பாடல்களைச் சுமந்த படங்கள் வந்து கொண்டிருந்தன.  ‘வணங்காமுடி’யில் தேவா இசையில் இவர் எழுதிய ‘வெடக்கோழி நான் விருத்தாசலத்து வெடக்கோழி, கறிக்கோழி நான் ராத்திரி கூவுற கறிக்கோழி...’ செங்குத்து இதயத்தையும் சரித்துவிடும் குத்தாக அமைந்தது.

                        நாடகம், பத்திரிகை, பாடல் என இருந்த மணவை பொன். மாணிக்கத்தை சினிமா இயக்குனராக்கும் காலமும் கனிந்துவிட்டது.  இவரது புத்தகங்களைப் படித்த பல படைப்பாளிகளும் ‘சிறந்த திரைக்கதைக்கான காட்சிகள் இங்கே குவிந்து கிடக்கின்றன’ என்று சாட்சி சொன்னார்கள்.  சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மணவையின் இயக்குநர் உற்சாகமாக எழுந்திவிட்டார்.

                         மாட்டு வியாபாரியின் மகன் நாயகம், முறுக்க வியாபாரியின் மகள் நாயகி என்ற பின்னணியில் ‘ஐந்தாம் வேதம்’ என்ற பெயரில் படம் இயக்க தயாராகிவிட்டார்.  மணப்பாறையின் பெருமை சொல்லும் ஒரு பாடலை அந்தப் படத்துக்காக எழுதியிருக்கிறார் மணவை பொன்.மாணிக்கம்.
                                                           
                           * வண்ணத்திரை (19-1-2015)  இதழில் ‘பாட்டுச்சாலை’ப் பகுதியில் நெல்லை பாரதி எழுதி  எங்கள் மண்ணின் மைந்தர்... அன்பு அண்ணன்  மணவை பொன் மாணிக்கம் அவர்களைப் பற்றி வெளிவந்துள்ளது.
                                                                                                      -நன்றி.வண்ணத்திரை.

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


                         

23 கருத்துகள்:

  1. மணவை பொன் மாணிக்கம் அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா...

    பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... +1 நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    முதல் பின்னூட்டத்திற்கும் பதிவை தமிழ்மணத்தில் இனைத்ததற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மணவை பொன்மாணிக்கம் அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே! அவரது இயக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! நிச்சய்மாகப் பேசப்படுவார். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. I am happy to know about Thiru Pon Manickam. As a old student passed out in 1967 (Ist batch) of Thiagesar Alai High School ,i am very proud. Congrads Thiru Manavai James for the wonderful article. Sorry to say in English. R.Chandramohan

    பதிலளிநீக்கு
  7. அருமையான நண்பரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தங்களது நண்பர் திரு. மணவை பொன்மாணிக்கம் அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே அவர் மென்மேலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
    தங்களது நண்பருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
    தங்களது தமிழ் மணத்திற்க்கு எமது மூன்றாவது வாக்கு முத்தாய்ப்பாய் இருக்கட்டும் இனி வாக்குகள் இடைவெளியின்றி கிடைக்கட்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,
      தைத்திங்கள்-
      தமிழர் திருநாள் பிறந்ததை...
      தமிழர் வாழ்வு மலர்ந்ததை...
      வாழ்வு சிறந்து இருந்ததை எண்ணியே
      பிறந்த ஆண்டு வளம்தர வேண்டியே
      வாழ்த்தி மகிழ்வோம்!

      நீக்கு
  10. மணவை பொன்.மாணிக்கம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. மணப்பாறை மாடு , மணப்பாறை முறுக்கு நல்ல பொருத்தம். ”ஐந்தாம் வேதம்” வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    தங்களின் வாழ்த்திற்கு நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. தைமகள் பிறந்து வந்தாள்
    தமிழன் வாழவே வந்தாள்
    தமிழினம் காக்கவே வந்தாள்
    தமிழ்மொழி செழிக்கவே வந்தாள்
    புதுமைகள் பூக்கவே செய்வாள்
    புதுவையை மகிழ்வித்தே மகிழ்வாள்
    சர்க்கரைப் பொங்கலுடன்
    தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு

  13. மணப்பாறையில் மேடை கட்டி...
    தமிழ்ப் பணி தழைக்கச் செய்த
    மணவை பொன் மாணிக்கம் அவர்கள்
    சிறப்பறிந்தேன்! சிறக்கட்டும் அவர்தம் சிறப்பு!
    அரிய போற்றுதலுக்குரிய பதிவு!
    வாழ்த்துக்கள்!
    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  14. மணவைப் பொன் மாணிக்கம் அவர் என்றால் நீங்களும் மணவைக்குப் பொன்னாயும் மாணிக்கமாயும் விளங்குபவர் தானே?
    சிறப்புப் பெயராய் அப்பெயர் தங்கட்கும் பொருந்துவதாயிற்றே!
    அருமையான ஒருவர் பற்றி நாங்கள் அறிய ஓர் செய்தியை இணையம் ஊடாகப் பகிர்ந்தமைக்கு நன்றி!
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மணவை என்ற அடைச்சொல், ஈரூர்களைக்குறிக்கும். 1. மணப்பாடு 2. மணப்பாறை.

    மணவை நேவிஸ் என்ற ஓர் எழுத்தாளர் இருந்தார். மணப்பாட்டுக்காரர். அங்கு கிருத்துவரைத்தவிர வேறெவரும் கிடையதென்பதால், மணவே ஜேம்ஸ் சும் அவ்வூர்க்காரர் என்று நினைத்திருந்தேன். இல்லை மணவே ஜேம்ஸ் என்றால், மணப்பாறை ஜேம்ஸ் என்று தெரிகிறது.

    மணப்பாட்டிற்கென்று ஒரு வலைதளமிருக்கிறது. manavai.com அவ்வூரைப்பற்றித்தெரியலாம். இல்லையென்றால், நீர்ப்பறவை படம் பார்க்கவும். மணப்பாட்டுக் கதை. அங்கேயே படமும் ஆக்கப்பட்டது. வெற்றிப்படம்.

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அய்யா,

    வணக்கம். முதன் முதலாக எனது வலைத்தளத்திற்கு வருகைபுரிந்து கருத்திட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் ‘மணவை ’ என்றால் அது மணப்பாறையைத்தான் குறிக்கும் என்று எண்ணியிருந்தேன். மணப்பாடு என்ற ஊரையும் மணவை என்றே அழைப்பார்கள் என்ற செய்தியைத் தந்திருந்தீர்கள்.

    manvai.com முன்பு பார்த்த ஞாபகம். அதில் கிறிஸ்தவப் பாடல்கள் இடம் பெற்றிருந்ததாக நினைக்கின்றேன். அவசியம் அந்த வலைத்தளத்தைப் பார்க்கின்றேன்.
    ‘நீர்ப்பறவை’ நன்றாக இருந்தது என்று நண்பர் சொல்லக் கேள்விப்பட்டேன். அந்தப் படத்தையும் அவசியம் பார்க்கிறேன்.

    கவிஞர் ‘மோசே’ என்ற நண்பரின் திருமணத்திற்காக... (எழுத்துச் சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் அண்ணன் மகன்) திரு. மோ.சேவியர் அவரின் ஊருக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் இராதபுரம் - வள்ளியூர் சென்றோம். அப்பொழுது உவரி சென்று எங்களை மீன்பிடிக்கும் கட்டுமரத்தில் கடலுக்கு அழைத்துச் சென்றார்கள்... முழுவதும் கடல் நீரில் நனைந்தோம். கடலுக்குள் வந்து குடிக்க ‘கூல்டிரிங்ஸ்’ கொடுத்தார்கள்... முட்டத்தில் ஒரு நண்பர் இருந்தார் அவர் பெயர் எட்மண்ட் பெர்ணான்டோ . அவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்று அறிய முடியவில்லை. அப்பொழுதே I.A.S. தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டிருந்தார்.
    மணப்பாட்டிற்கு சுற்றுலா சென்ற பொழுது சென்றிருக்கின்றேனா என்று தெரியவில்லை.

    தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...