திங்கள், 20 அக்டோபர், 2014

தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்!


                                தீபம் ஆவளி




அரக்கனின் அட்டூழியம்
அத்துமீறிப் போனதால்
அவனை அழித்தது சாமி...
ஆசாமி அல்ல;  மாசாமி...
கிருஷ்ண சாமி!

இறந்த நரகாசுரனே...                
இந்த விழா கொண்டாட
வேண்டிக் கொண்டதால்
தீபம் ஆவளியாக கொண்டாட்டமாம்.

ஒருவன் இறந்ததற்காக
ஒரு விழாவா?!

ஈழத்தில் தமிழன்
ஓலத்தில் இருக்கையில்...
கொத்துக் குண்டுகளைக்
கொடூரன் வீசிக் கொல்லும்
அந்நிய அரக்கன்
இன்னும் இருக்கையில்...
தமிழ்ச் சொந்தங்களின்
உயிர்த் துடியாய் துடிக்கையில்
நாம் வேடிக்கைதானே
பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
நாம் வெடிக்க... வெடிகுண்டெனும்  
அணுகுண்டும் தேவையோ?

ஆமாம்...யார் சொன்னது?
நரகாசுரன் இறந்தானென்று!
                                                                                 


கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு...
எச்சத்தில் மீன்பிடித்தே...
நம் தமிழன்...                           
சிறை பிடிக்கப்பட்டு
உச்சத்தீர்வை வேண்டி
நித்தம் நித்தம்
தூண்டில் மீனாய்
கண்ணீரில் கவலையுடன் அழுவதும் ஏனோ?
வாழ்வாதாரமின்றி வாழ்வதும் வீனே!
ஓலைக்குடிசையில் வாழ்க்கை வெடிக்கையில்...
ஓலைப்பட்டாசுதான் வேண்டுமோ?

ஆமாம்... யார் சொன்னது...?
நரகாசுரன் இறந்தான் என்று...!





அண்டை நாட்டுக்காரன்-
காஷ்மீரில்-
ராக்கெட் குண்டுகளை எறிந்து
மண்டையை உடைக்கும் போது
ராக்கெட் வெடியை...
நாம் விடுவதும் முறையோ?
ஆமாம்... யார் சொன்னது...?

நரகாசுரன் இறந்தான் என்று...!

இங்குள்ள குடிசைகள்...             
பற்றி எரிவதும் பற்றதா?
ஏழைக் குடிசைவாசிகளின்
வயிறு பற்றி எரியும் போது
அதை அணைக்க
உன்னால் ஆன
உதவி செய்து                     
அவனை வாழ வை.

காசை ஏன் கரியாய் ஆக்குகிறாய்...
வானத்தை வாங்கி இனி கொளுத்தாதே...
புகையாக்கி பூமியை கெடுக்காதே!
ஓசோனில் விழுந்த...
ஓட்டைகள் போதும்...!




காந்தியைக்கூட...
கோட்சே என்ற அரக்கன்
துப்பாக்கியால் சுட்டுக்கொன்றானே...!
மகாத்மா அகிம்சை
விட்டுச்சென்றானே...!
நமக்கு விளையாட                   
துப்பாக்கி எதற்கு?
விளையாட்டிற்காகக்கூட
துப்பாக்கி தூக்க வேண்டாமே!

மதுஅரக்கனை-
அரசே வளர்த்து...
வேலியே பயிரை மேயும்
விந்தையையான வேலையைச்
செய்யும் வேளையில்              
மந்தையான மனிதன்...
சுற்றிச் சுற்றித் திரிகையில்
சுற்றுவதற்குச் சங்குச் சக்கரம்
வாங்குவதும் எதற்கு?


திரைப்படங்கள்-
மனிதனைக் குருடாக்கிக்
கொண்டிருக்கும் பொழுது...
நடிக நரகாசுரன்களை
நல்ல படங்களில் நடிக்கச்சொல்லியே...
சாட்டை எடுப்போம்...!
பற்றவைத்து மகிழ...
நமக்கெதற்கு சாட்டை ?
புதுச் சட்டைவேண்டுமானால்...
போட்டு மகிழ்வோம்...!
வேட்டு எதற்கு?                          
வேட்டி வேண்டுமானால்...
கட்டி மகிழ்வோம்...!

நம்மைச்சுற்றி-
நாலாபுறமும் இருக்கும்...
‘எபோலா போல உயிர்க்கொல்லும்
நரகாசுரன்களின்
பகை விலக்கப் பார்ப்போம்...          
பகை விலக்கிப் பார்ப்போம்...
நாமே ஒழிக்கப் பார்ப்போம்...
தமிழன் விழிக்கப் பார்ப்போம்...
மனிதம் செழிக்கப் பார்ப்போம்...
                                                                                 
அப்பொழுது...
இடியாய் வெடிவைத்து..         
கொடிமின்னலாய் ஒளிவைத்து...
நட்சத்திரமாய் மத்தாப்பு வைத்து...
கித்தாய்ப்பாய் வைத்து...
புகையில்லா... பகையில்லா...
தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்!
                                         -மாறாத அன்புடன்,

                                          மணவை ஜேம்ஸ்.

                                         


14 கருத்துகள்:

  1. மத நல்லிணக்க உணர்வோடு தீபாவளி வாழ்த்துக்களைச் சொன்ன
    ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    வலைத் தளத்தின் புதிய வடிவமைப்பு கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் உள்ளன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பிற்கும் மேம்பாட்டிற்கும் உரியவர் தோழர் மது அவர்கள் .
      மணவையாரின் சார்பில் நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
      நன்றி தோழர்.

      நீக்கு
    2. அன்புள்ள நண்பர்,

      வலைப்பூவை அறிமுகப்படுத்தி அன்பின்
      வளையத்தில் ஆட்கொண்டருளிய அன்பரே!
      நன்றிமறப்பது நன்றன்று என்றே உரைத்த
      பொய்யாமொழி வழிமெய்யாகவே நிற்போம்.

      மதுகுடித்த வண்டாகநான் மெய்மறந்திருக்க...
      எதுகுடித்தாலும் இதயத்து நன்றியையுரைக்க
      என்றும்மறவாதே என்றுரைத் திட்டவரே!
      மலர்தரு மதுவுக்கும் மகிழ்ச்சி நிறைந்த
      தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

      நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.


      நீக்கு
  2. அன்புள்ள அய்யா திரு.தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
    வணக்கம். தங்களின் முதல் பின்னூட்டத்திற்கும்...கருத்திற்கும்...எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துகள்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா!

    போட்டுக் கொளுத்தினீர் பொல்லாப்பைச் சாடியே!
    வேட்டெனக் கேட்டது விண்வரை! - கூட்டாகக்
    கொள்கையை ஒன்றாக்கிக் கொள்வோம் விடுதலை!
    துள்ளுவோம் அன்றுவானம் தொட்டு!

    கொள்ளவில்லை நாமின்னும் சுதந்திரம் என்று
    கூறிய பாடலிற் கொட்டிய உணர்வுகள் அபாரம்!

    மிக அருமை! ஐயா!

    வாழ்த்திற்கு நன்றி கூறி நானும் வாழ்த்துகிறேன்
    எல்லோரையும் எப்போதும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி,

      போட்டுக் கொளுத்த எத்தனையோ இருக்கும் போது
      வேட்டும் வெடியும் வைத்தே பொழுதை வீணாய் கழிப்பது முறையாமோ?

      வாழ்த்திற்கு நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.

      நீக்கு
  4. மிக நல்ல ஒரு மதசார்பற்ர கவிதை!

    புகையில்லா... பகையில்லா...
    தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்!//

    உண்மையே! நல்ல கருத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மதம் பிடிக்கும் களிறுக்கும் பிடிக்கும் கூட...
      மனிதனின் மதம் பிடித்காதே...!
      மனிதனுக்கு மட்டும் பிடிப்பது எப்படி?
      மனிதம் மட்டும் பிடிக்காததும் எப்படி?

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. புராணத்தில் சமூகக் கவலையும்,
    சமூகக் கவலையில் புராணமும் நினைவுபடுத்தும் கவிதை!
    உரியோர்க்கும் உள்ளோர்க்கும்!
    நன்றி அய்யா!!

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதையுடன் தீபாவளி வாழ்த்துரைத்த மனவை ஜேம்ஸ் அய்யா அவர்களின் மதநல்லிணக்க மனம் வாழ்க !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமிகு.சாமானியன் அய்யா அவர்களுக்கு,

      வணக்கம்.
      மனம் வாழ வாழ்த்துரைத்த மனத்திற்கு
      இனம் வாழ வேண்டுமென எண்ணியே
      மதம் பேதமின்றியே மனிதநேயத்துடன்
      வாழ்த்துகளை வழங்கியே மகிழ்வோம்.

      நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  7. தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வாழ்த்துகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...