நெருப்பு எரிவது எப்போது?
(மணவை ஜேம்ஸ்)
இந்த தேசநிலத்தில்
இரத்த வியர்வையை
நித்தம் சிந்தியே
தேகமிழைக்கும் இயேசுபிரான்கள்...
இவர்கள்-
வாழ்க்கைக் கல்வாரியில்
வறுமை ஆணியால்
ஏழ்மைச் சிலுவையில் அறையப்பட்டே
ஒவ்வொரு விடியலிலும்
உயிர்த்தெழுந்து
உலகை வாழவைக்கிறார்கள்...
பாட்டாளியான பாமரர்கள்...
குடிசைபோடக்கூட
சொந்தத்தில் நிலமில்லாமல்
தெருவோர மரத்தடியில் வாழும்
இக்காலத்து ஆதிவாசிகள்...
வானமே கூரையாகிவிட்ட பிறகு
மழைவேண்டாம் ...
மன்றாடுகிறார்கள்...
ஒண்டிக்கொள்ள ஒன்றுமில்லை.
பசியால்
வயிறு எரியும்போது
அடுப்பில்
நெருப்பு எரிவது எப்போது?
ஓட்டுப்போட காசுகொடுப்பதால்
எங்கள்
ஜனநாயத்திற்கே காசநோய்...
ஆமாம்... காசே நோய்...
மனிதனாக வாழாமல்
மனித உரிமையைப்பற்றி
எப்படி பேச முடியும்?
அதுவரை கொஞ்சம் பொறு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக