ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மழலை


                                                   மழலை


யாமறிந்த மொழிகளிலே...
மழலை மொழி போல
இனிதாவது எங்கும் காணோம்!
மழலைகள்-
இங்கு
மழலைகளாக இருக்கின்றார்களா?
இல்லை... நாம்தான்
இருக்கவிடுகின்றோமா?
இங்காவது-
மழலைகள் இருக்கிறார்கள்...!

கண்ணீர்த் துளிகளாக ஆகிப்போன
அண்டை தேசத்தின் மழலைகள்..?.
 முள்ளிவாய்க்கால்களுக்குள்
 முடங்கிக்கிடக்கிறார்கள்?



இங்கு-
நினைவு மண்டபம்கூட
 நிலைக்கவில்லையே?
மறக்க முடியுமா?
அல்லது மறைக்கத்தான் முடியுமா?
இராவண தேசத்தின்
இரத்தச் சரித்திரத்தை...!



பள்ளிக்கூடம்-
பால்முகம் மாறா பாலகர்களை
விலைக்கும் வாங்கும்                                  விசித்திர
 வியபாரக்கூடம்...!


பள்ளிக்கூடம்-
பணம் காய்க்கும் மரங்களாகிவிட்ட பிறகு
அந்தக் காய் பறிக்கத்தான்
அகிலத்தில் எத்தனை போட்டி?

காலத்தே பயிர் செய்யச் சொன்னால்
காலம் வருமுன்னே
இந்தச் சின்ன நாற்றங்கால்களைப்  பிடுங்கி
நடுவதென்ன நியாயம்?

                                               
குழந்தைக்கு-            
தாய்ப்பால் தரமறுக்கும் தாயைப்போல்
தாய்மொழியையும் தரமறுக்கும் அரசு
இது தவறென்று கொட்டு முரசு...!!



ஆங்கிலப் புட்டிப்பாலை
ஆர்வமுடன் ஊட்டும் அரசுத்தாய்...!
அசுரத்தாய்...!!
தன் சேய்க்கே நஞ்சான
கள்ளிப்பாலை   வார்க்கலாமா?                                          
கல்விச்சோலையை வனமாக்கலாமா?
    

வேற்றுமையாய்  இருந்த கல்வியை-
ஒற்றுமைப்படுத்திய
சமச்சீர்கல்வியை
சமூகம் மறக்குமா?


படைப்பாற்றலை வளர்க்கின்ற கல்வி-
படிப்பாற்றலை வளர்ப்பது எப்போது?
எல்லோரும் தேர்ச்சி
என்றாகிவிட்ட பிறகு...
எதற்குப் படிப்பது
என்றாகிவிட்டவர்களை...
என்ன செய்வது?

பள்ளிகளில்-
விலையில்லாமல் எல்லாம் கொடுத்து
விலைமதிப்பில்லா கல்வியும்
விலைமதிப்பில்லாமல் போனதே...!

பள்ளிகள்-
பகுத்தறிவை வளர்ப்பதைவிட்டு
மூடத்தனத்தையா வளர்ப்பது?
சரஸ்வதி வீணையிலிருந்து அபஸ்வரம்...!
எப்பொழுது சுபஸ்வரம் வரும்...?

                                                                                       - மாறாத அன்புடன்,

                                                                                         மணவை ஜேம்ஸ்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...