ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

சமாதானப்புறா!


                              சமாதானப்புறா!


விரிசலடைந்த இந்தியத்தில்
விதைத்துவைத்த சமாதானம்
கந்தகத்தின் மேல்
சந்தனத்தை பூசியல்லவா
வாழ்கிறது.

சுதந்திரத்தைப் பெற்ற பிறகும்
உனது-
பிள்ளைகள்
சும்மா இருக்கவில்லை...
சுகமாயும் இருக்கவில்லை...

வாழ்க்கை-
இருக்க வேண்டிய நிலைமைக்கும்...
இருக்கும் நிலைமைக்கும்...
இடையே நடக்கும்
இழுபரியே என்றாய்...
இன்றோ இழுத்துப்பறிப்பதே
வழக்கமாகிவிட்டது.

சாகாத சாதிகள்...
வேகாத நெருப்பாக
வெறும் மாநாடுகள் போட்டு
தனித்தனியே தங்களின்
பலத்தை பரிட்சித்துப் பார்க்கிறது.

உனது-
அணி சேராக்கொள்கையை
அனைவரும் கடைபிடிக்கின்றனர்...
ஆமாம்...
இந்தியரனைவரும்
ஓர்
அணியாக சேராமலே..!.

நீ-
பறக்கவிட்ட
சமாதானப் புறாவை...
சவப்பெட்டியில் வைத்து
பாதுகாத்து வருகின்றனர்...
பாவமன்று-
காத்து வருகின்றனர்.

உன்
நிழலில்தான் எத்தனை
இந்திய ஜுவன்கள்
வாழயெண்ணி
திருவோ(ட்)டையேந்தி...
தருமர்களின் வரவுக்காக
தவமிருக்கிறார்கள்.

வறுமையில்-
வாடுகின்ற ஏழையெல்லாம்
ஏன் உன்னடியை
அடையவே ஆசைப்படுகிறார்கள்?

அனாதையாக
அலைந்து திரியும் மானுடத்தை
மகிழ்விக்க...
அவனியில் அங்கிகரித்து
வாழ வழிவகுக்க வேண்டாமா?

இவையெல்லாம்...
நாளைய தீர்ப்புக்காக
காத்திருக்கின்ற வழக்குகள்..!
.
உண்மைக்காக
வழக்குரைஞர்களை
தேடி அலைகின்ற
ஊமைக் குற்றவாளிகள்.

                                                                             -மாறாத அன்புடன்,
                                                                               மணவை ஜேம்ஸ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...