சனி, 7 மார்ச், 2015

கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!





கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது!




          கல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் பிறந்த குழந்தை

 

நாளிதழில் படித்ததும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய  செய்தி இதுதான்.

சேலத்தில் இருந்து


சுற்றுலா வந்த 21 வயது கல்லூரி மாணவிக்கு ‘திடீர்’ பிரசவம்


கழிப்பறையில் குழந்தை பிறந்தது


   சேலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இருந்து 300 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 5 பஸ்களில் கடந்த 22-ந்தேதி கேரளாவுக்குச் சுற்றுலா சென்றனர்.  அவர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு கோவை வழியாக சேலம் செல்வதற்காகப் பஸ்களில் வந்து கொண்டிருந்தனர்.  நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் வந்த பஸ் தமிழக – கேரள எல்லையில் உள்ள கந்தேகவுண்டன் சாவடியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

     அப்போது அந்த பஸ்சில் வந்த 21 வயது மாணவி ஒருவருக்குத் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது.  இதனால் அவர் வேதனையில் அலறித்துடித்தார்.  அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே பஸ் வந்து கொண்டிருந்த்தால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  ஆனால் அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமானதால் சக மாணவிகளும், ஆசிரியைகளும் செய்வதறியாது திகைத்தனர்.

     இதையடுத்து பஸ்சை க.க.சாவடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தினார்கள்.  அங்குள்ள கழிவறைக்கு செல்லுமாறு அந்த மாணவியிடம் ஆசிரியைகள் கூறினார்கள்.  உடனே அந்த மாணவி கழிவறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.  சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டது.  இதைக் கேட்டதும் சக மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     பின்னர் ஆசிரியைகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் உதவியுடன், கழிவறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.  கழிவறைக்குள் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.  அவர் அருகில் ஒரு பெண் குழந்தையும் கிடந்தது.  இதைப் பாத்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

     இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்சில் அந்த மாணவியையும், குழந்தையையும் மீட்டனர்.  ஆனால் அந்த பெண் குழந்தை இறந்தே பிறந்தது தெரிய வந்தது.  மாணவி மயங்கிய நிலையில் இருந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.  இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிதோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.


     இந்த சம்பவத்தால் சுற்றுலா வந்த மாணவிகளும், ஆசிரியைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.  சுற்றுலா வந்த இடத்தில் பிரசவமா? என்று அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  இதுகுறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

 

     மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியாமல் அவரை எப்படி சுற்றுலாவுக்கு அழைத்து வந்தீர்கள் என்று சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அதற்கு அவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பது எங்கள் யாருக்கும் தெரியாது.  அப்படி தெரிந்திருந்தால் அவரை சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருக்க மாட்டோம்.  திருமணமாகாத, அதுவும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிந்திருந்தால் நாங்கள் அந்த மாணவியின் பெற்றோரிடமே தெவித்திருப்போமே என்று கூறினார்கள்.  இது தொடர்பாகப் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

     இதைத்தொடர்ந்து விசாரணை பேரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.  போலீசார் இது பற்றி அந்த மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.  இதற்கிடையில் மயக்கம் தெளிந்த மாணவியிடம் நேற்று மதியம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  அந்த மாணவி யாரையாவது காதலித்தாரா?  கர்ப்பத்துக்கு யார் காரணம்?  என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    

   கண்பட்டு நகரும் ஆயிரம் செய்திகளில் இதுவுமொரு செய்தி என்று இதை அவ்வாறு எளிதாகக் கடந்து போக முடியவில்லை!

 


   வாழ்வியல் மதிப்பீடுகள், சமூகம், பண்பாடுடன் கூடிய உறவில் நாம் கட்டிவைத்திருக்கின்ற கோட்பாடுகள் கற்பனையாகிப் போய் கொண்டிருப்பதற்கான சாட்சிகளாகவே இந்த நிகழ்வு மனதை நெருடிக் கொண்டிருந்தது.

 

   கல்லூரி, படிப்பு, எதிர்காலக் கனவுகள், இலட்சியங்கள் என்றிருக்க வேண்டிய இந்த காலகட்டத்தில்,  இணையம், ஈ-மெயில், முகநூல், வாட்சப், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வந்து ஆக்கிரமித்து, தனக்குள்ள கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்னும் ஆயுதத்தைத் தனக்கெதிராகவே பயன்படுத்த நேர்ந்த செயலை என்ன  என்று சொல்ல?


   ‘பட்டிக்காடா...பட்டணமா’ திரைப்படத்தில் ‘மூக்கையாஎன்கின்ற சிவாஜி,  “கணவன் இல்லாமல் கர்ப்பமா...?  அதெப்படி?’’-என்று கேட்பதைப் போல கேட்க வேண்டியுள்ளது.


பகலில் ஓர் இரவு திரைப்படத்தில் வரும் பாடல்தான் நினைவிற்கு வந்தது



இளமை எனும் பூங்காற்றுபாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசைசுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை
அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை
மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை


    

     நிச்சயம் விசாரணையில் அவளின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தெரியவரும் என்றாலும்... இதற்குக் காரணம் யார் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

 


     இதற்குக் காரணம் ‘காமமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன!


 


            அவளின் பெற்றோருக்கு இந்த விசயம் தெரிகின்ற பொழுது எப்படித் துடித்துப் போவார்கள் என்பதை அந்தப் பெண் உணர்ந்திருப்பாளா? அவர்களின் சுற்றத்தார் இவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?  இவர்களின் குடும்பத்தைப் பற்றி சமுதாயம் எவ்வாறு பார்க்கும்?


 


கல்லூரியில் இவளைப்பற்றி எவ்வாறு இனி பார்ப்பார்கள்?  அந்தக் கல்லூரியில் பெண் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் இனி தயங்கமாட்டார்களா?

இவ்வாறு இவள் நடக்க பெற்றோர்களும் ஒருவேளை காரணமாக இருந்திருப்பார்களா?  பெற்றோர்களின் அன்பு, அரவணைப்பு,  பாசம், மனம் விட்டுப் பேசுவது இல்லாமல் இருக்கின்ற உளவியல் பிரச்சணைகள்கூட காரணமாக இருக்குமா?  என்ன இருந்தாலும் இறுதியில்  பெண்ணே பாதிக்கப்படுகிறாள்.

    

     பெண்ணின் உரிமைகளுக்கான குரல் உயர்த்தப்படும் அதே வேளையில் அதையே தூண்டிலாகக் கொண்டு பெண்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது.  நாம் மேற்கத்திய மண்ணில் வாழவில்லை.  இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது  அதை எளிதாக ஜீரணித்து இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை.

     செய்தியாகிப் போன அந்தப் பெண் அவள் வாழும் சமுதாயத்தால் எவ்வாறு பார்க்கப்படுவாள்?  அவள் குடும்பம், குறிப்பாக அவளது தாய் அடையும் மனவேதனை எப்படியெல்லாம் இருக்கும்?

 

    தெரியாமல் செய்யும் தவறுகள் தெரிந்துவிடும் போது குனிகின்ற தலைகள் இனியேனும்  அப்படிப்பட்ட தவற்றைச் செய்யும் முன் ஆலோசிக்கட்டும்.



-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

17 கருத்துகள்:

  1. கொடுமை...

    // மாணவி கர்ப்பமாக இருப்பது எங்கள் யாருக்கும் தெரியாது... // இது அதை விட கொடுமை...

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    கொடுமையிலும் கொடுமைதான்!
    தங்கள் வாக்கிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இவ்வாறு இவள் நடக்க பெற்றோர்களும் ஒருவேளை காரணமாக இருந்திருப்பார்களா? பெற்றோர்களின் அன்பு, அரவணைப்பு, பாசம், மனம் விட்டுப் பேசுவது இல்லாமல் இருக்கின்ற உளவியல் பிரச்சணைகள்கூட காரணமாக இருக்குமா? என்ன இருந்தாலும் இறுதியில் பெண்ணே பாதிக்கப்படுகிறாள்.//
    மிக மிக ச் சரியான வார்த்தைகள்! இப்போது ஒரு புறம் பெற்றோர் நண்பர்களைப் போல் குழந்தைகளை வளர்த்தாலும், மறு புறம் பெற்றோர் இன்னும் தங்கள் குழந்தைகளுடன் நட்புடன் பழகத் தெரியாமலும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

    மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம், அந்தப் பெண்ணிற்குத் தான் கர்பமானது கூடத் தெரியவில்லையா? அதற்கான அறிகுறிகள் ஒன்று கூடவா தெரியாமல் போகும்? ஆசிரியர்கள், அந்த மாணவியுடன் படிக்கும் பிற மாணவிகள் என்று யாருக்குமே எப்படித் தெரியாமல் போனது. அதுவும் முதல் குழந்தை எனும் போது, அந்தக் கரு வளர்ந்து வரும் போது பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமே.....எப்படி இது தெரியாமல் போனது? இதில் பல கேள்விகள் எழுகின்றன.

    ஆனால், ஒன்று இந்தச் சமூகம் செல்லும் திசை நல்ல திசையாகத் தெரியவில்லை. அதுதான் இந்தச் செய்தி சொல்லும் முக்கியமான விடயம். கொடுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தான் கர்பமாக இருப்பது அந்தப் பெண்ணிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கும். மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க ஏதாவது செய்திருக்கலாம்.
      ‘என்னமா தேவி ஜக்கமா... ஒலகம் தலைகீழாத் தொங்குது நியாயமா?’ என்ற பாடல் வரிதான் ஞாபகம் வருகிறது.

      நன்றி.

      நீக்கு
  4. வெட்கித் தலைகுனியப்பட வேண்டிய செய்தி. நாளிதழ்களில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ஆமாம். மனித இனத்திற்குத் தலைகுனிவானச் செயல்தான்.
      -நன்றி.

      நீக்கு
  5. நானும் இந்தச் செய்தியைப் படித்தேன். பெண்ணிற்கும், அவளின் தாய்க்கும் தெரியாமல் இது எப்படி நடந்திருக்கும் என்று புரியவில்லை?

    பதிலளிநீக்கு
  6. அய்யா வணக்கம்.
    ஒருபுறம் பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்கிற அடக்குமுறைகள்
    இன்னொருபுறம் கட்டற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி பண்பாட்டு எல்லைகளை மீறிப்போகின்ற இதுபோன்ற நிகழ்வுகள்.
    நிச்சயமாய்ப் பின்விளைவுகள் .... தங்கள் மேல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து துரத்துகின்ற அவதூற்றுக் குறைப்புகள் இவற்றை எண்ணிப் பார்ப்பார்களேயானால்....
    பெண்கள் மட்டுமல்ல....
    எதிர்பாராத ஒருதருணத்தில் அது நடந்துவிட்டது எனறு வாழ்நாள் முழுவதும் வருந்திக் கழிக்கும் மனச்சான்றுள்ள ஆண்களும் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்துவிட முடியும்.

    சமுதாயச் செய்திகளையும் பதிவிட ஆரம்பித்துவிட்டீர்கள்.

    பரவலாகப் படிக்கின்ற பதிவர்கள் நிச்சயம் உங்கள் தளத்திற்கு வருவார்கள்.

    தொடருங்கள் வாழ்த்துகள்.

    த ம .. வழக்கம் போல்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே’ என பெண்ணுரிமையை ஏத்தினார் பாரதியார்.
      மேலும் கற்பை பொதுவில் வைப்போம் என்று உரத்து சொன்னதோடல்லாமல்,கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் என்று பேசி வந்த காலத்திற்கிடையில், கற்பு தவறுகின்ற பெண்களாலேயே உலகம் சீரழிகின்றது எனப் பேசி வந்த சமூகத்திற்கிடையே , பெண் கற்பு நெறி தவறுவதற்கு ஆண் கற்பு நெறி தவறுவதும் தான் காரணம் என்று ஒழுக்கத்தை இருபாலாருக்கும் பொதுவில் வைத்தவன் பாரதி.
      ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
      அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?

      .......................................
      காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்து
      கற்பு கற்பு என்று கதைக்கின்றாரே -விடுதலைக் காதல்.

      அந்தக் காதல் படுத்தும் பாடுதானோ கழிப்பறையில் பிறந்தது? இறந்தது பெண்குழந்தையா? காதலா?


      நன்றி.

      நீக்கு
  7. காதல்-காமம் எல்லாம் ஒண்ணு தான், மேட்டருக்கான மீட்டர் தான் அது என்பதை குழப்பமில்லாமல் சொல்லி; கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பெண்கள்- உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருக்க பாலியல் கல்வி என்பது அவசியமாகிறது... கருவுற்ற பெண்ணின் பெற்றோர் அழுது புலம்புவதை தவிர்த்து அப்பெண்ணிற்கு மனதளவில் ஆறுதலாக இருப்பதும் அவசியமாகிறது... திருமணத்திற்கு முன் கருவுறுதலை ஏதோ கொலை, கடத்தல் ரேஞ்சிற்கு பாவித்து பெண்ணையும் பெற்றோரையும் கேவலமாகப் பேசும் கேடுகெட்ட சமூகத்தை உதாசீனப் படுத்தி ஆக வேண்டியதைப் பார்ப்பதும் அவசியமாகிறது...
    அக்குடும்பத்திற்கு இப்போதைய தேவை மன தைரியம் மட்டுமே, விடுத்து விசாரணை, பேட்டி என்ற பெயரில் கற்பு, கருமாந்திரம் என எவரும் உளறாதிருப்பாராக....

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    கல்லூரிகளில் பாலியல் சம்மந்தப்பட்டக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அப்பெண்ணிற்குப் பெற்றோர்கள் ஆறுதலாகவும் இருக்க வேண்டும். ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ போல அந்தப் பெண்ணிற்கு தைரியம் சொல்லி மனதிடத்துடன் இருக்க வைப்பதும் அவசியம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இநித சமூகம் எதைநோக்கி போய்க்கொண்டு இருக்கிறது வெட்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறது நிலைப்பாடு ஆனால்...
    யாருக்கும் வெட்கமில்லை...
    என எம்மெஸ்வி போல பாடத்தான் முடிகிறது.
    தமிழ் மனத்தில் நுளைப்பதற்காக 7

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள ஜி,

    வெட்கப்பட வேண்டிய நிலையில் சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

    தங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வெட்கப்பட வேண்டிய செய்தி! கட்டுப் பாட்டை மீறியது கூட சூழ்நிலைக் காரணமாக இருக்கலாம்! அதற்குப் பின் நடந்துள்ள நிகழ்வுகள் சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா!!!? இதுதான் பெண்ணுரிமையா!

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    கட்டுப்பாடுகளை மீறியதுதான்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. எப்படியாவது கரு கலையட்டும் என்றே அந்த பெண் சுற்றுலாவுக்கு வந்திருப்பாரோ :)

    பதிலளிநீக்கு
  14. கரு(ணை)க் கொலை என்கிறார்களோ...?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...