சனி, 18 ஜூலை, 2015

மெல்லிசை மன்னர் பற்றி அறிந்ததும் அறியாததும்


 ‘மெல்லிசை மன்னர் ’என்றழைக்கப்பட்ட எம். எஸ். விஸ்வநாதன்.



நெஞ்சம் மறப்பதில்லை...





தன் இறுதி மூச்சுவரை இசைக்காகவே வாழ்ந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் வாழ்க்கைக் குறிப்பு:
மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்கிற எம்.எஸ்.விஸ்வநாதன், கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) பிறந்தவர். சிறு வயதில் தந்தையை இழந்த அவர், கண்ணனூரில் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பை விட இசையில் அதிக நாட்டம் உடையவராக வளர்ந்தார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். அவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதனை 13 வது வயதில் மேடையில் எற்றி கச்சேரி செய்ய வைத்தார்.
நடிப்பில் அதிக ஆர்வம்கொண்ட எம்.எஸ்.வி, கோயம்புத்தூரில் இருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் சினிமா கம்பெனியில் சாதாரண ஊழியராக வேலை பார்த்தார். அங்கு பணியாற்றிய இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் முறையே இசை பயின்றார். அதன்பிறகு சென்னைக்கு வந்தவர், இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் சேர்ந்து 1948-ல் ‘அபிமன்யு’ படத்தில் ஆர்மோனியக் கலைஞராக பணியாற்றினார். இந்தக் குழுவில் டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராக சேர்ந்தார்.
சி.ஆர்.சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். பின்னர் ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர்.
1952 ல் வெளியான ‘பணம்’ திரைப்படம் தொடங்கி 1965-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை அவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தனர். 65- ல் பிரிந்த அவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எங்கிருந்தோ வந்தான்’ படத்துக்காக மீண்டும் இணைந்து பணியாற்றினர். எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்து இசையமைத்த படங்களில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘படகோட்டி’, ‘சிவந்த மண்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.
பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஸ்ரீதர், ப.நீலகண்டன், ஏ.சி.திருலோகசந்தர், கே.சங்கர், கே.பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் பல படங்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத் துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடித்து’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
வெளிநாட்டு இசைக்கருவிகளை தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தத் தொடங்கிய முதல் இசையமைப்பாளரும் இவரே. இசையமைப்பதுடன் பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு ஆகிய இசைக் கருவிகளையும் அவர் அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்த பெருமையும் அவரையே சேரும்.
கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.
கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.
ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களான எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையி லேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.
இளைய தலைமுறைக் கலை ஞர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்ளும் எம்.எஸ்.வி, இளைய ராஜாவோடு சேர்ந்து ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘செந்தமிழ்ப்பாட்டு’, ‘செந்தமிழ்ச்செல்வன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள் ளார். மேலும் பல இளம் இசையமைப்பாளர்கள் இசை யமைத்த பாடல்களைப் பாடி யுள்ளார். இசையமைப்பதுடன் ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க் கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட பாடலா சிரியர்களையும், பின்னணி பாடகர்களையும் அறிமுகப்படுத்தி யவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பின் னணிப் பாடகர்களைக்கொண்டு 1958- ல் இவர்தான் மெல்லிசை கச்சேரிகளை முதன்முதலில் மேடை யில் நடத்தியுள்ளார்.



விஸ்வ*  நாதம்!



தலைமுறைகளைத் தாண்டி நினைவில் நிற்கும் பாடல்களைத் தந்த மாபெரும் இசைக்கலைஞர் எம்.எஸ்.வி.

தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தைக் கண்ணதா சனுடன் இணைந்து ஆட்சிசெய்த மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் காலமானார் என்ற தகவல் வந்தததும், சமூக வலைதளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவியத் தொடங்கின. தங்களுக்குப் பிடித்தமான எம்.எஸ்.வி-யின் பாடல்களைப் பலரும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். தலைமுறைகளையும் காலத்தின் வீச்சையும் கடந்து அவரது படைப்புகள் நிலைபெற்றிருப்பதை உணர முடிந்தது. 1950-களின் தொடக்கத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சியவர் எம்.எஸ்.வி. உண்மையில், பழைய பாடல்கள் என்ற பொதுப் பெயரில் அடங்கியிருப்பவற்றில் பெரும்பாலானவை அவரது ஆயிரக் கணக்கான பாடல்கள்தானே!

தொடக்கத்தில் நாடகங்களின் திரைவடிவமாக இருந்த தமிழ்த் திரைப்படங்களில் நிரம்பித் ததும்பிய பாடல்கள், சாஸ்திரிய இசையின் அடிப்படையில் அமைந்தவையாகவே இருந்தன. 1950-களில்தான் ஜனரஞ்சகமான இசையில் அமைந்த பாடல்களுக்கு தமிழ்த் திரையிசையில் இடம் கிடைக்கத் தொடங்கியது. காலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புதுப்புது திறமைசாலிகளைத் தன் பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்துவது உண்டு. அப்படி, 1950-களில் தமிழ்த் திரையிசையின் போக்கை மாற்றியமைத்த இசைக் கலைஞராகக் காலத்தால் முன்னிறுத்தப்பட்டவர் எம்.எஸ்.வி. 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’ படத்தின் மூலம் திருப்புமுனையைக் கண்ட எம்.ஜி.ஆர்., 1952-ல் வெளியான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ்த் திரையின் வணிக வளர்ச்சிக்கும் தரத்துக்கும் தந்த பங்களிப்பைப் போல், தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியில் எம்.எஸ்.வி-யின் பங்கு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது. அதே காலகட்டத்தில்தான், அவரது ஆஸ்தான பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், பி.சுசீலாவின் சகாப்தமும் தொடங்குகிறது.
அறுபதுகளின் அரசன்!
சக இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் வழங்கத் தொடங்கிய பாடல்கள் பல தலைமுறைகளின் வாழ்வுடன் கலந்துவிட்டவை. 1950-களில் ‘பணம்’, ‘ஜெனோவா’, ‘குலேபகாவலி’, ‘மாலையிட்ட மங்கை’ போன்ற படங்களின் மூலம் சாம்ராஜ்ஜியத்தை விரிக்கத் தொடங்கிய ‘விஸ்வநாதன் - ராமமூர்த்தி’ ஜோடியின் இசை, 1960-களில் தனது படைப்பாற்றலின் உச்சத்தை அடைந்தது. பின்னாட்களில் டி.கே. ராமமூர்த்தியைப் பிரியும் சூழல் ஏற்பட்டாலும் அவரது பாடல்களின் வெற்றி பாதிக்கப்படவில்லை. டி.எம்.எஸ். பாடிய ‘யார் அந்த நிலவு’ (சாந்தி-1965), பி. சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’(புதிய பறவை) என்று மேற்கத்திய இசையின் அடிப்படையிலான பாடல்கள், ‘ஆறோடும் மண்ணில் எங்கும்’(பழனி-1965) என்று கிராமியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள், ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன்), ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன்) போன்ற சாஸ்திரிய இசை அடிப்படையிலான பாடல்கள் என்று அத்தனை வகைப் பாடல்களையும் தந்தவர் எம்.எஸ்.வி. காதல், சோகம், நகைச்சுவை, கிண்டல், சவால் என்று எத்தனையோ வகையான சூழல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு இசை வளமும், படைப்பாற்றலும், வேகமும் அவருக்குள் சுரந்துகொண்டே இருந்தன.அவரது சமகாலத்தில் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், வி. குமார் என்று புகழ்பெற்ற இசையமைப் பாளர்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் பெருவாரியான படங்கள் எம்.எஸ்.வி-யிடமே குவிந்தன. ‘மன்னாதி மன்னன்’, ‘பாசமலர்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ராமு’, ‘தெய்வ மகன்’ என்று அந்தக் காலகட்டத்தில் அவர் இசையமைத்த வெற்றிப்படங் களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. தனது வாழ்நாளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் அவர். சிவாஜி படங்களுக்கு உணர்ச்சிகரமான இசை, எம்.ஜி.ஆர். படங்களுக்கு உற்சாகமான சவால் இசை, பீம்சிங், தர், பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் படங்களுக்குப் பரீட்சார்த்த மான இசை என்று அவர் தொடாத இசை வகைமையே இல்லை. பாலியல் பலாத்காரக் காட்சிக்குக் கூடத் தன்னிடம் பாடல் கேட்ட கே. பாலசந்தரின் சவாலையும் ஏற்றுப் பாடல் தந்தவர் அவர்.
தாக்கம் தந்த இசை
எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடக்கும் இடங்கள், திருவிழாக்கள் முதல் துக்க வீடுகள் வரை என்று பல்வேறு இடங்களிலும் ஒலிக்கும் பாடல்கள் எம்.எஸ்.வி-யினுடையவைதான். அந்த அளவுக்கு அவரது பாடல்களின் தாக்கம், தலைமுறைகளையும் தாண்டி இன்றும் வியாபித்திருக்கிறது. அதேபோல், இசையமைப்பின்போது தனக்கு யோசனை சொல்பவர் யாராக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அபூர்வ குணம் அவரிடம் இருந்தது. திரையிசையில் ஜனரஞ்சக ரசனையைப் புரிந்துகொள்ளவும் அதை வளர்த்தெடுக்கவும் அது அவருக்கு உதவியது. அவரது இசையால் தாக்கம் பெற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவரது ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இளையராஜா பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என்ற பாடலின் தாக்கத்திலேயே ‘புது மாப்பிள்ளைக்கு’ பாடலை உருவாக்கியதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார். பாடகர் வாய்ப்புக்கான குரல் தேர்வின்போது எஸ்.பி.பி. பாடிக்காட்டியது எம்.எஸ்.வி-யின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைத்தான். எம்.எஸ்.வி-யின் ‘யார் அந்த நிலவு’ பாடல், இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் ‘யாத் ஆ ரஹி ஹை’ பாடலின் மூலம். இன்றும் பாடகர் களுக்கான போட்டிகளில் அதிகம் பாடப் படுபவை அவருடைய பாடல்கள்தான்.
1970-களின் மத்தியில் காலமாற்றத்தின் தாக்கத்தில் அவரது இசையும் வேறு பரிமாணம் எடுத்தது. 1960-களில் டி.எம்.எஸ்., பி. சுசீலா போன்ற கலைஞர் களின் கூட்டணியுடன் பாடல்களைத் தந்துவந்த எம்.எஸ்.வி., 70-களில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து அளித்த பாடல்கள் தனிரகம். ‘அவர்கள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பட்டினப் பிரவேசம்’ போன்ற படங்களில் இந்த ஜோடியின் பாடல்கள் ரசிகர்களின் சேமிப்புகளில் உயர்ந்த இடத்தை வகிப்பவை. ‘முத்தான முத்தல்லவோ’(1976) படத்தில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து எம்.எஸ்.வி. பாடும் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடல் இசை மீதான அவரது காதலைச் சொல்லிவிடும். ‘தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்’ எனும் வரியில் எம்.எஸ்.வி. குறிப்பிடும் ‘அவள்’ யாருமல்ல, இசை தேவதை தான்!தனது ஆன்மாவை இசையின் மூலமாகக் காற்றில் கலக்கவிட்டிருக்கும் எம்.எஸ்.வி-க்கு மரணம் என்பது உடல்ரீதியான ஒன்றுதான். அவரது இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை!


வெ.சந்திரமோகன்
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in


நன்றி:  தி இந்து. ஜுலை 15, 2015


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

21 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா,
    அருமையானதொரு கட்டுரை, அழகான தொகுப்பு,
    தாங்கள் சொன்னது போல், எம்.எஸ்.வி-க்கு மரணம் என்பது உடல்ரீதியான ஒன்றுதான். அவரது இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை!
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  2. அற்புதமான கட்டுரை... பல தகவல்கள் அறியாதவை... நன்றி ஐயா...

    இவ்வுலகம் உள்ளவரை அவரின் இசை இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. மெல்லிசை மன்னரை பற்றி அறியாத தகவல்கள் பல அறிந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. எம்.எஸ். வி அவர்களைப் பற்றி கடந்த சில நாட்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். எத்தனை முறை படித்தாலும் அலுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      உன்னை எத்தனை முறை பார்த்தாலும் (படித்தாலும்) சலிப்பதில்லை
      என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
      தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
      தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
      நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை

      -மிக்க நன்றி.

      நீக்கு
  6. msv, டி.எம்.எஸ்., பி. சுசீலா கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அளிக்க முடியாதவை !
    ஒரு அற்புதமான இசைக் கலைஞனை இழந்து விட்டோம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      உண்மைதான். இந்தக் கூட்டனியை யாராலும் வீழ்த்த முடியாது.

      ஓர் அற்புதம் அயர்ந்து உறங்குகிறது.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  7. மெல்லிசை மன்னர் பற்றிய அறியாத பல தகவல்கள் கொண்ட பதிவு. அந்த மாமனிதரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மெல்லிசை மன்னர் இசையுலகின் முடிசூடா மன்னாதி மன்னர்! அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  8. அறியாத தகவல்களுடன் அருமையான அஞ்சலி !

    காலம் எடுத்துக்கொண்ட மகாகலைஞனின் இசை சாகாவரம் பெற்றது ! காற்றுள்ளவரை நிலைத்திருக்கும்.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html#comment-form
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      இறவாத புகழுடைய மெல்லிசை மன்னரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
      " காலம் திருடிய கடுதாசிகள் ! " அவசியம் பார்க்கிறேன். எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தட்டச்சு செய்வதில் சிரமம். ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்., பொருத்தருள்க!
      -மிக்க நன்றி.

      நீக்கு
  9. அறியாத பல தகவல்களுடனும் புகைப்படங்களுடனும் நல்ல புகழஞ்சலி. அவருக்கு மரணமேது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
      எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தட்டச்சு செய்வதில் சிரமம். ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்., பொருத்தருள்க!
      -மிக்க நன்றி.

      நீக்கு
  10. மிக மிக அருமையான பதிவு நண்பரே! எப்படி இது விடுபட்டு போனது? மன்னரை மறக்க முடியுமா? அவரது மெல்லிசை காற்றோடு கலந்து னம் மனதிலும் செவியிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்...

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
    எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தட்டச்சு செய்வதில் சிரமம். ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்., பொருத்தருள்க!

    பதிலளிநீக்கு
  12. எப்படி ஒற்றைக்கையால் இத்துனை விபரங்களை தட்டச்சு செய்தீர்?

    ஆச்சரியமாய் இருக்கிறது.

    உடல் நலம் பேணிக்கொள்ளவும்.

    God bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. இடது கைதான் விபத்தில் பாதிப்பிற்குள்ளானது. வலது கையால் மட்டும் தட்டச்சு செய்பிறேன். இடது பக்கம் உள்ள விசைகள் தட்டச்சு செய்யும் சில விசை மாறும்... தற்பொழுது கொஞ்சம் பழகிவிட்டது... இருந்தாலும் வேகமாகத் தட்டச்சு செய்கின்ற பொழுது தவறுகள் நேர்ந்து விடுகின்றன.

      வெட்டிப்பேச்சு... தலைப்பை பார்த்ததும் ஞாபகம் வந்தது...

      விபத்துக்குள்ளாகி மருத்துவமனை சென்றவுடன் மருத்துவர் கையை பார்த்தவுடன் சொன்னது விரலை வெட்டிவிட வேண்டும்‘ என்றார். வெட்டிப் பேச்சு எல்லாம் வேண்டாம என்று தயவுடன் வேண்டிக் கொண்டதால் தப்பிப் பிழைத்தேன்.

      நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...