திங்கள், 3 நவம்பர், 2014

ஊனமா(க்)கிப் போனவன்!



ஊனமா(க்)கிப்  போனவன்!






          மணப்பாறை சந்தை வழக்கம் போல புதன்கிழமை கூட... வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை...இது பொங்கல் வாரம் என்பதுதான்.

          உச்சி வெயில் மண்டையைப் பிளக்க...வயது வித்தியாசமின்றிப் பலரும் பானையில் குடீநீரை வைத்துக்கொண்டு, அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.
                                                                                  
         ‘மல்லுவேட்டி மைனர்என்று அழைக்கப்படும் தரகர் தங்கசாமி, மாடு வாங்க வந்த ஆறுமுகத்தை உடன் அழைத்துக் கொண்டு மாட்டுச் சந்தையை நோக்கி நடந்தார்.

         “ஆறுமுகம் அண்ணே...மணப்பாறை மாடு கட்டி மயாவரம் ஏருபூட்டின்னு...தெரியாமலா பாடி வச்சாங்க...மணப்பாறைச் சந்தை மாட்டுக்கும் முறுக்குக்கும் பேர் போனது ஊரு ஒலகத்துக்கே தெரியுமே...நீங்க ஒன்னும் கவலையே படாதீங்க...நல்ல கறவமாடா வாங்கிடுவோம்.  நம்ப ஊர்க்காரங்க எல்லாம் மாடு வாங்கணுமுனா...நம்பளத் தேடி வந்துதான்... வாங்கிக் கொடுக்கச் சொல்லுவாங்க!

         “அதனாலதானே ஒங்களத் தேடி வர்றோம் ஆறுமுகம் சொல்லிக் கொண்டே முகத்தில் வழிந்த வியர்வையைத் துண்டால் துடைத்துக் கொண்டார்.
                                                                              
         “அதாவது ஆறுமுகம் அண்ணே...நமக்கெல்லாம் காசு பெரிசில்ல...மனுஷன்தான் பெரிசு...காச எப்ப வேணுனாலும் சம்பாதிக்கலாம்...மனுசன சம்பாதிக்க முடியுமா? என்ன நா சொல்றது.

         “வாஸ்தவமான பேச்சு...ஒங்கள மாதிரி ஒரு சிலபேரு இருக்கிறனாலதான் எப்பவாவது மழை பெய்யுது!

          “அண்ணே ஒங்க்கிட்ட நூறு ரூபா வேணுன்னு கேட்டா... நீங்க தரமாட்டீங்களா?

          ஆறுமுகத்தின் நாக்கு வறண்டு போக தண்ணித் தாகமா இருக்கு என்றார்.

          “தண்ணிதானே வாங்கிட்டா போச்சு... என்று சொன்ன தரகர் தங்கசாமி, எதிரே தண்ணீர்ப் பானையுடன் வந்த பெண்ணை அழைத்தார்.  வெயிலில் அலைந்து திரிந்து வியர்வையில் நனைந்திருந்த அந்தப் பெண் அருகில் வந்து ஒரு சொம்பு தண்ணீரை நீட்டினாள்.

          “எவ்ளோம்மா...? ஆறுமுகம் கேட்டார்.

          “அம்பது காசுதான்... சாமி...

          “ஒரு சொம்பு தண்ணீ அம்பது காசா...? என்னம்மா அநியாயம்? வியந்து போய்த்தான் கேட்டார்.

          “ம்...ம்...இதுல என்னங்க அநியாயம்...?குடிக்கிறதுக்குத்தண்ணீ இந்த ஊர்ல எங்க கெடைக்கிது...எல்லாம் உப்புத் தண்ணீதான்.. வாயில்ல வக்க முடியாது...நல்ல தண்ணீக்கு மைல் கண்ணா நடக்கனும்...இல்லேன்னா இரயிலு வர்ற நேரம் பாத்து... டேசன்ல்ல போயி... ரயிலு பொட்டியில ஏறி லட்டீன்ல்ல நல்ல தண்ணீய... கொடத்துல புடுச்சுட்டு... ரயிலு கௌம்பறத்துக்குள்ள உசிர கையில புடுச்சுட்டு இறங்கனும்... தெரியுமுல்ல...”

          “அவரு அசலூரும்மா...நெல்லைச் சீமக்காரு...இந்தாம்மா எனக்கும் ஒரு சொம்பு கொடு தரகர் தங்கசாமி ஒரு ரூபாய்க் காசைக் கொடுத்து அந்தப் பெண்ணிடமிருந்த சொம்பை வாங்கி ஆறுமுகத்திடம் கொடுத்துவிட்டு, தானும் தண்ணீரை வாங்கிக் குடித்தார்.

          மயிலாடும்பாறைக்கு எதிர்ப்புறம் உள்ள வழியாக மாடுகள் வருவதும் போவதுமாக இருந்தன.  ஆறுமுகத்துடன் சந்தைக்கு வந்திருந்த மாடுகளையெல்லாம் ஒரு முறை வலம் வந்து பார்த்தார், பார்த்ததில் அந்த ஜெர்சி கறவை மாடுகருப்பும் வெள்ளை கலந்திருக்க...தாயைப் போலவே கன்றும் அச்சு அசலாக இருக்கவே ஆறுமுகத்திற்கு ரொம்பப் பிடித்துப் போனது. 

          ஆறுமுகம் அந்த ஜெர்சி மாட்டை விலை பேசச் சொல்ல...ஆறுமுகத்தை அங்கேயே நிற்கச்சொல்லிவிட்டுத் தரகர் தங்கசாமி மாடு விற்க வந்திருந்தவரிடம் சென்று பேசினார்.
                                                                       
                           ஆமா...மாடு என்ன விலைன்னா கொடுக்கலாம்...?வழக்கம் போலவே கரம்பிடித்துத் தனது தோளில் கிடந்த துண்டைக் கைகளில் போட்டு மூடினார்.  தூரத்தில் நின்று பாத்த ஆறுமுகத்திற்கு ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வது போல்தான் இருந்தது என்றாலும் மாட்டிற்கு விரல்களாலேயே விலை பேசப்பட்ட சங்கேதமொழி அங்கு மௌனமாகவே இருந்தது தெரிந்தது.

           ஆனால் இந்தப் பேச்சு மட்டும் சப்தமாக கேட்டது.

           “ஜெர்சிங்க... பத்து லிட்டருக்கு மேல கறக்கும்... அவசரத்துக்குத்தான் விக்கிறேன்...

           “பத்து கறக்கிற மாடு எனக்குத் தெரியாதா...?

           “வேணுமுன்னா...இப்பவே...இங்கேயே கறந்து பாருங்க...!

           “ஆமா...ரெண்டு நாளாக் கறக்காம இருந்திருப்பீங்க...இது கூட இந்த தரகனக்குத் தெரியாதா என்ன...? சரி...முடிவா இதுக்குத் தர்ரியா...? மூடிய துண்டுக்குள்ளே விரல்கள் மட்டும் நெளிவது தெரிந்தாலும் ஒன்றும் ஆறுமுகத்திற்கு புரியவில்லை...!

                            நீண்ட போராட்டம் செய்து மாட்டு வியாபரியைச் சம்மதிக்க வைத்ததில் தரகர் தங்கசாமிக்கு மகிழ்ச்சி.  சிரித்துக் கொண்டே ஆறுமுகம் அருகில் தங்கசாமி வந்தார்.

           “ஒங்களுக்கு நல்ல நேரம்...இருபதாயிரத்துக்கு முடிச்சிட்டேன்... மாட்டுக்கார்ரு மசிய மாட்டேன்ட்டாரு...சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள அப்பப்பா...போதும்...போதுன்னு ஆயிடுச்சு..

           “நீங்க சொன்னா சரிங்க...நீங்க என்ன பொய்யா சொல்லப் போறீங்க... அய்நூறு ரூபாய் நோட்டு நாற்பதை  எண்ணிக் கொடுத்து, மேற்கொண்டு ஒரு அய்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து இதை நீங்க வச்சுக்குங்க என்று தங்கசாமியிடம் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு, “நீங்க இங்கேயே இருங்க... நீங்க பக்கத்தில வந்தா வெலைய விட்டுக் கொடுக்க மாட்டான்...என்று சொல்லியவாறே மாட்டின் சொந்தக்காரரை நோக்கிப் போன தங்கசாமி நடக்கும் பொழுதே அதில் நான்கு நோட்டைத் தனியாக எடுத்து யாரும் அறியாதபடி ஒதுக்கி வைத்துக் கொண்டார். 

          பதின்னெட்டாயிரம் மட்டும் மாடு விற்பவரின் கைக்குக் கிடைத்தது.  ஆறுமுகத்தை அருகில் அழைத்து, கிழக்கு பார்க்க நிற்கச் சொல்லி வாயார வாழ்த்தி கொடுக்கச் சொல்ல...  மாடு ஆறுமுகத்தின் கைக்கு மாறியது.
                                                                             
                                                    
           அங்கு இரு கால்களும் சூம்பிய நிலையில் நடக்க முடியாத பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்கச் சிறுவன் கையில் லாட்டரி சீட்டுகளுடன் தவழ்ந்து தவழ்ந்து வருவதைத்தரகர் தங்சாமி கவனித்தார். சாமர்த்தியமாகத் தனது திறமையால் சற்று நேரத்தில் இரண்டாயிரத்து ஐந்நூறு சம்பாதித்த மமதையில் ஐம்பது காசை அவனை நோக்கி வீசினார்.

          “சார்...சார்... ஊனமுற்ற சிறுவன் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார்.

          “என்ன...?“

          “நா பிச்சை எடுக்கலை...லாட்டரி டிக்கட் விக்கிறேன்...

          “ஓகோ...! என்ன...ஒரு டிக்கட் வித்தா... அம்பது காசு கிடைக்குமா? பாவம்...வச்சுக்க...

          “இந்த காச நீங்களே வச்சுக்கங்க... இடது கையில் லாட்டரி சீட்டை வைத்துக் கொண்டு வலது கையில் அந்தக் காசை நீட்டினான்.

          “இந்தக் காலத்தில் இரக்கப்படுறதுகூடத் தப்பாத் தெரியுது...நொண்டிக்கி முன்னூறு குசும்புங்கிறது சரியாத்தான் இருக்கு...

          “கோபப்படாதீங்க சார்...ஒடம்புள ஊனம் இருந்தாலும்...மனசுல ஒழச்சு சாப்புடனுங்கிற வைராக்கியம் இருக்கு...அதனால என்னால முடிஞ்ச இந்த தொழில செய்றேன்...ஒருத்தர ஏமாத்தியோ...திருடியோ தின்னாத்தானே தப்பு..?.

          தரகர் தங்கசாமியின் கையில அந்த அம்பது காசைத்திணித்துவிட்டு, அந்தச் சிறுவன் மனத்தில் ஊனமில்லாமல் தவழ்ந்து தவழ்ந்து சென்றான்.  அதைப் பார்த்துக் கொண்டே நின்ற தரகர் தங்கசாமியின் மனசு ஊனமாகிப் போகவே...கால்கள் நகர மறுத்தன.


         * (1994-ஆம் ஆண்டு எழுதப்பட்டது)   


                                                                                        -மாறாத அன்புடன்,

                                                                                          மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in 

19 கருத்துகள்:

  1. மதுரையில் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கதை! ஒரு சொம்பு தண்ணீர் அப்போதே 50 காசுக்கு விற்றிருக்கிறது! இப்போது கேன் வாட்டர் வந்துவிட்டது! இன்னும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை!

    பதிலளிநீக்கு
  3. மிக அ;ருமையான கதை! ஐயா! மாட்டுச் சந்தையில் இது போலத்தான் தரகர்கள் எத்தனைப் பேரை ஏமாற்றி பிழைக்கின்றார்கள். இதில் பணத்தில் மட்டுமல்ல, மாடு நல்ல மாடாக இல்லை என்றாலும்...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்ய,

      ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா
      எண்ணிப் பாருங்கள்’
      நல்லவர்போல் பேச்சு இருக்கும்...
      நடப்பு வேறு மாதரி இருக்கும் ...

      நன்றி.

      நீக்கு
  4. கதையின் முடிவு மிகவும் அருமை! அந்தப் பையானால் அந்தஹ் தரகர் திருந்துவது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மாற்றுத்திறனாளியாக இருந்தாலும்...
      மானம் இழந்து யாரிடமும் கேயேந்தாமல்
      மானமுடம் வாழ முனைபவர்கள் வாழ்கிறார்கள்!

      கருத்துப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் ஐயா!

    ஊனமாக்கிப் போனவன் மிக அருமை ஐயா!
    முதலில் தண்ணீர் வியாபாரம், பின்னர் மாட்டு வியாபாரம்...
    மிக அழகாகக் களைகட்டிய சந்தை உங்கள் வர்ணணையில் சிறப்பு.
    தண்ணீரை ஓடும் ரெயில் பெட்டி லட்டீனிலும் பிடிச்சு கொண்டுவந்து
    விற்பார்களா?... விக்கிப்போனது எனக்கு வார்த்தை..!
    தண்ணீர்ப் பஞ்சம் எவ்வளவு கொடுமையாக எப்படியெல்லாம்
    மனிதரை நடக்க வைக்கிறது எனக் காண்பித்தீர்கள்.

    மாடு வாங்கியவரிடம் பணத்தைச் சுருட்டிய தரகர் அந்த
    இயலாத சிறுவனிடம் வாங்கிக் கட்டியது உச்சம்!..

    பலருக்கு ஊனம் உடம்பிலில்லை மனசிற்தானென மிக அருமையான
    சிறுகதையால் வெளிப்படுத்தினீர்கள். மிகவும் ரசித்தேன்!
    படங்களும் அருமை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி,

      மணப்பாறை சந்தையில் இன்றைக்கும் இதுபோல தண்ணீர் வியாபாரம் ஒரு சில பேர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அன்றைக்கு வீட்டிற்கு குடிப்பதற்கே குடிநீரை புகைவண்டியில்தான்... பெண்கள் கூட்டமாக நின்று வண்டி வந்து நின்றவுடன் ஆளுக்கொரு பெட்டியில் ஏறி... கழிவறைப் பெட்டிகளில் பிடிக்கக்கூடிய அவல நிலை இருந்தது. சில பெண்கள் வண்டி புறப்பட்டவுடன் கீழே இறங்கத் தெரியாமல் குடத்துடன் கீழே விழுந்து காயம்பட்ட நிகழ்வுகூட நடந்துள்ளது. குடிதண்ணீருக்காக பல மைல்தூரம், பெண்கள் நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு சென்று குடீநீருக்காகப் பல மணி நேரத்தைச் சிலவு செய்ய வேண்டி இருந்தது. அதனால் எங்கள் ஊரிலுள்ளவர்களுக்கு... பெண்களை திருமணம் செய்து கொடுக்க முன்வர மாட்டார்கள்.

      ஆனால் தற்பொழுது காவிரி குடிநீர்த் திட்டத்தால் குளித்தலை என்ற ஊரிலிருந்து, நாற்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே குழாய் மூலமாக குடிநீர் வருவதால் அந்தத் தொல்லை தற்பொழுது இல்லை.

      தரகர்கள் எங்கள் ஊரில் இன்னும் இருக்கிறார்கள்...
      தாம் பேசும் பொழுது சர்கரையாக பேசுவார்கள்
      அதை நம்பி பலர் ஏமாந்து விடுவார்கள்...
      ஒருவர் ஒருவரை சந்திக்க விடாமல்
      தரகெடுப்பதோடு மட்டுமல்லாமல்
      ‘ உள்தரகும்‘ வைத்து விடுவார்கள்.

      மாற்றுத் திறனாளி கள்இன்னும் மானமுடன் வாழவே
      மாநிலத் தில்வாழ் கவே.

      வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  6. சார், தாங்கள் என் குறும் படம் பார்த்து தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் என் போன்றோரை தொடர்ந்து இயங்க வைக்கிறது மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. அடுத்தவரை ஏய்த்து பிழைக்கும் தொழில் சரியல்ல.
    உழைத்து பிழைக்கும் எண்ணம் கொண்டோரை வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. அய்யா,
    எனது தாமத வருகையைப் பொறுத்தருள வேண்டும்.
    அதற்கான காரணத்தை நீங்கள் அறிவீர்கள்.
    திண்டுக்கல்லுக்கான பயணத்தின் போது புகைவண்டிக் கழிவறைகளில் நீர்பிடிக்க மோதும் கூட்டத்தை நான் கண்டிருக்கிறேன்.
    அது விற்பதற்காய் இருக்கும் என்பது தெரியாது. என்ன இருந்தாலும் தண்ணீர்ப் பஞ்சம் கொடுமையானதுதான்.
    தரகர் தங்கசாமி பாத்திரப் படைப்பு அருமை. பொதுவாக இது போன்ற பாத்திரப் படைப்பில் கதைமாந்தர்கள் பற்றிய சித்திரிப்பு, இருந்தால் வாசகர் அவர்களது பிம்பத்தைத் தங்களின் பட்டறிவு கொண்டு ஊகித்தறிய உறுதுணையாய் இருக்கும். அது கதையைப் படிப்போர்க்கு இன்னும் ஒன்றிப்பை ஏற்படுத்தும். இது தாங்கள் அறியாததல்ல. தாங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்பதால் சொல்கிறேன்.
    உடல் ஊனத்தை விட மன ஊனம் வெளித்தெரியாமல் இருப்பது அதை இன்னும் அபாயகரமாய் ஆக்கக் கூடும்.
    அது உள்ளாறாமல் கனன்று கொண்டிருக்கும் வடு.
    தங்கசாமி திருந்தினானா அல்லது தன்னைப் பிச்சைக்காரனாக்கிவிட்ட அந்தச் சிறுவனைப் பழிவாங்கினானா..
    வாசிப்பவர்க்கே தெரியும்.
    நான் தங்களை வேண்டுவது தங்களின் பழைய படைப்புகளை மீளப்பதியும் அதேநேரம் புதிய பதிவுகளையும் எழுதத் தொடங்குங்கள் என்பதைத்தான்!
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. தலைப்பு மிகப்பொருத்தம் நண்பரே,,,, நல்லதொரு பாடம் தங்களை மதுரையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி எமது மதுரைப்பதிவு காண அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...