பாரதி கண்ட கனவு!
பாரதி-
பிறந்த பதினொன்றாம் தேதியிலே
இறந்தவன்...!
இறந்த சுதந்திர உணர்வை மீட்கப்
பிறந்தவன்...!
பாட்டில் மீட்டி - பண்
பாட்டில் வாழ்ந்தவன்...
ஏழு வயதில்
ஏட்டில் எழுதிய கவிஞனவன்.
பதினொன்றாம் வயதில்
எட்டப்ப நாயக்கரிடம்
‘பாரதி’ பட்டத்தை
எட்டிய எட்டயபுர
முண்டாசு கவிஞனவன்.
நினைத்தவுடனேயே
அனைத்தையும் பாடும்
மாசில்லா ஆசுகவிஞனவன்.
மீசை மீது-
ஆசை வைத்த அய்யனவன்...
பொன் பொருள் மீது
ஆசை வைக்காத மெய்யனவன்...
பூணூலைக் கழட்டி
சேரிக் குழந்தைக்கு மாட்டிய
புரட்சிக் கவிஞனவன்.
பதினைந்தாம் வயதில்-
பதிவிரதைச் சித்திரச்செல்லம்மாவை...
வாழ்க்கையில் பதியம் போட்ட
சித்திரக் கவிஞனவன்.
கன்னித் தமிழ் மீது-
கஞ்சத்தனமில்லாமல்...
கஞ்சாத்தனத்துடன்
கடற்கரையில் பாடிய
மதுர கவிஞனவன்.
யாருக்காகவும் காத்திராத-
காந்திக்காகக்கூடக் காத்திராத...
சுயமரியாதைக் கவிஞனவன்.
ஆனால்...
விடுதலைக்காகக் காத்திருந்த
தேசியக் கவிஞனவன்.
விடுதலைப் பாடலை-
வீறுகொண்டு பாடிய
வித்தாரக் கவிஞனவன்.
புதுவையில் மறைவாய்க் காத்திருந்தவன்...
புதுப்பாட்டுகள் பாடிப்பாடிக் களித்திருந்தவன்...
வறுமையில் வாடிவாடித் துடித்திருந்தவன்...
வாங்கிய அரிசியைக் குருவிக்கீந்து பசித்திருந்தவன்.
உனக்குப் பிடிக்காத(து) மதம்...
யானைக்கும் பிடிக்காதென்று
எண்ணிவிட்டாயோ?
வெள்ளையனை எதிர்த்த
உன்னை-
எதிர்க்க மனிதர்களால் முடியாதென்றா
ஏவினான் வெள்ளையன் மத யானையை ?
‘காலா என்னருகே வாடா...
உனைக் காலா லுதைப்பேன்’
-என்ற பாரதியை துவசம் செய்துவிட்டதே!
இன்னும் இரண்டு மாதம்
இருந்து நோயையும் பார்த்தாய்...!
நாற்பதுக்குள் நாடுகடத்த
மதம்பிடித்த யானையும்
ஒரு காரணம்தானே!
இப்பொழுதும்கூட
யானைகளுக்கு முகாம்கள் நடத்தப்பட்டு
மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுகிறது...!
மனிதர்கள்தான் அகதிகளாய் முகாம்களுக்குள்...
மதிப்பும் மரியாதையும் கெடுக்கப்படுகிறது.
’ஆனந்த சுதந்திரம்-
அடைந்து விட்டோமென்று’
அப்பொழுதே தீர்க்கதரிசனமாய்க்
கனவு கண்டாய்...!
உனது கனவு நனவானது உண்மைதான்...!
சுதந்திரம் அடைந்து விட்டோம்...
ஆனால்... ஆனந்தம்...?!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
((மாகவி பாரதி நினைவு நாளுக்காக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக